ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க... இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளானு நிச்சயமா விமர்சனம் வரும்!



ஆண்ட்ரியா Open Talk

பாடகி, பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை... என எப்போதும் தனக்கென தனிப் பாதையில் பயணிக்கும் நாயகிகளில் முக்கியமானவர் ஆண்ட்ரியா ஜெரிமியா.
கதைத் தேர்வுகளில் கூட எப்போதும் தனித்துவமாக செயல்படுபவர் இப்போது ஓடிடி வெளியீடான ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் சவாலான கேரக்டரில் டிரெய்லரிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்.

எங்கே இந்தக் கதை உங்களை ஈர்த்தது?

படத்தின் ஹீரோ ஆதவ். அவர்தான் இந்தக் கதையை 2019லே கொண்டு வந்தார். அப்ப நானும் அவரும் ஒரு புராஜெக்ட்ல சேர்ந்து வேலை செய்துட்டு இருந்தோம். இப்ப, இந்தக் காலத்துக்கு இந்தக் கதை சமூகத்துக்குத் தேவையான ஒண்ணா தோணுச்சு. கதை கேட்ட உடனேயே மனசுக்குள்ள ஏதோ செய்யும்னு சொல்லுவாங்களே... அப்படி இருந்துச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன். நிச்சயமா ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஒரு பிரச்னை நடந்துருச்சுன்னா என்ன செய்யணும் அப்படிங்கறதுக்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கும்!

படத்தின் கதைக்களம் என்ன?

கிராமத்தில் இருந்து ஒரு பொண்ணு நகரத்துக்கு வருகிறாள். கூடிய சீக்கிரம் அவளுக்கு திருமணம். இப்படியான பாஸிட்டிவ்வான சூழல். இப்படி சந்தோஷமா அமைதியா போகிற வாழ்க்கைல அவ எதிர்பாராத விதமா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுறா. அதை எப்படி அவ சமாளிக்கிறா, அதற்கு அப்புறம் அவளுக்கு என்ன நடக்குது, சமூகம் அவளை எப்படி பார்க்குது... இதுதான் படத்தினுடைய கதை.

இப்ப இருக்கிற சமூகத்தில் ஒரு பெண் குற்றவாளியா இருக்கணும்னா கூட அதற்கும் சில தகுதிகள் இங்கே வரையறுக்கப்பட்டிருக்கே... இதை எப்படி பார்க்கிறீங்க?

அதுக்குதான் இந்தக் கதை. என்னைப் பொறுத்த வரைக்கும் கிராமத்துப் பெண்ணாக இருந்தா அல்லது அவ உடை நாகரீகமா இருந்தா அவளுக்கு தவறு நடந்தால் அதை நாங்க தட்டிக் கேட்போம். ஒருவேளை அந்தப் பெண் பப்புக்கு போகிற பெண்ணா இருந்தால், அல்லது இரவு 10 மணிக்கு மேல வெளியில இருக்கற பொண்ணா இருந்தா அவளுக்கு அநியாயம் நடக்கும்போது நடந்துட்டு போகட்டும் அப்படிங்கற மனநிலை இருக்கு.

என்னைப் பொறுத்தவரை விலைமாதுவாய் இருந்தா கூட அவ இஷ்டம் இல்லைனா தொடாதே... கட்டின மனைவியா இருந்தாகூட அவ அனுமதி இல்லாமல் அவமேல கை வைக்காதே... அவ்வளவுதான். ‘இந்த உலகமே ஆம்பளைங்களுக்கு சாதகமானது... இங்க ஜெயிக்க புத்திசாலித்தனம் தேவை...’ இது டிரெய்லர் டயலாக்... எப்படிப்பட்ட புத்திசாலித்தனம் தேவைன்னு நினைக்கிறீங்க?

அதைத்தான் இந்தப் படம் சொல்லும். தனக்கு நடக்கற அநியாயத்தை தைரியமா வெளியே சொல்றதுக்கான மனநிலைதான் முதல் தைரியமா பார்க்கறேன். குறிப்பா பெண்களுக்கு மட்டும் ஒரு கொடுமை நடக்குதுன்னா  ‘நீ என்ன அப்படி செய்த...’, இல்ல ‘உன் உடை எப்படி இருந்துச்சு...’ அப்படிங்கிறதுதான் முதலில் வருது. இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கற தைரியமே முதல் புத்திசாலித்தனம்.

பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் மாற சமூகத்தில் எப்படிப்பட்ட மாற்றம் வரணும்னு நினைக்கிறீங்க?

ஒரு பொண்ணுக்கு குற்றம் நடந்தா அவ என்ன செய்தா அப்படிங்கற கேள்வி... ஆண்களை விடுங்க, பெண்கள் கிட்டயே இருக்கு. உதாரணத்துக்கு சமீபத்தில் வெளியான ‘அம்மு’. படத்தில் ஒரு வசனம் கேட்டேன்... ‘என்னை அவர் அடிச்சிட்டார்...’னு ஐஸ்வர்யா லட்சுமி சொன்னதும் அவங்க அம்மா கேரக்டர் ‘நீ அப்படி என்ன செய்த’னு கேட்பாங்க. இது பொதுவா பெரும்பாலான அம்மாக்கள் கேட்கும் கேள்வி. அதனால முதல்ல பெண்கள்கிட்ட இதற்கான மாற்றம் வரணும்னு நினைக்கிறேன்.

சினிமா துறையில் ஆண் - பெண் சமநிலை எப்படி இருக்கு?

சமீப காலமா ரொம்ப சிறப்பா இருக்கு. தொடர்ந்து ‘கார்கி’, ‘அம்மு’, ‘டிரைவர் ஜமுனா’... இப்ப ‘அனல் மேலே பனித்துளி’... இப்படி நிறைய பெண்கள் சார்ந்த படங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. இதை மிகப்பெரிய மாற்றமா பார்க்கறேன். இன்னமும் நிறைய படங்கள் வரணும். ஆண் பெண் சமநிலை எப்படி இருக்கு என்கிற கேள்வியே இல்லாத காலமா மாறணும்.

ஆங்கிலத்தில் ‘ஃப்ளேவர்ஸ்’ ஆல்பம் வெளியிட்டீங்க... எப்ப தமிழில் முழுமையான இசை ஆல்பம் வெளியாகும்?

என்னவோ தெரியலை... தமிழுக்கு இன்னும் பெரிய அளவில் சிந்திக்கணும்ன்னு தோணுது. இன்னமும் தமிழில் எழுதி பாடுகிற அளவுக்கு திறமையை வளர்த்துக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனா, இப்படியான ஆல்பம் வெளியாகும்போதுதான் எனக்காக நான் வேலை செய்கிறேன்னு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

பாடகி, இசையமைப்பாளர், நடிகை... எந்த ஆண்ட்ரியா ரொம்ப பிசியா இருக்காங்க?

போன வருஷம் முழுக்க நடிகை ஆண்ட்ரியா பிஸியா இருந்தா. இப்ப பாடகி ஆண்ட்ரியா பிஸியா இருக்கா.

சமூக வலைத்தளங்களில் வருகிற விமர்சனங்களுக்கு உங்க பதில்கள் என்ன?

ஏன் இப்ப நான் நடிச்சிருக்கேனே... ‘அனல் மேலே பனித்துளி’ இதைப் பார்த்துட்டே கூட ‘ஆண்ட்ரியாவுக்கே அத்தனை பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க... இவ சமூகத்துக்கு கருத்து சொல்றாளா’ன்னு  நிச்சயமா விமர்சனம் வரத்தான் போகுது. அதையெல்லாம் நான் பொருட்டா கருதுறது இல்ல. உண்மையா என்னுடைய நடிப்புக்கு, வேலைக்கு விமர்சனம் வரும்போது அதை ஏத்துக்குவேன். அவ்வளவுதான்.

ராம், வெற்றிமாறன், மிஷ்கின்... இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ்டர் இயக்குநர்களுடன் வேலை செய்ததில் கிடைத்தது என்ன?

ஒரு உதாரணம்- ‘வடசென்னை’ படத்தின்போது ஒரு குடிசையில் நான் இருக்கிற மாதிரி காட்சிகள் இருக்கும். பட ஷூட்டிங் ஆரம்பிச்சு ரொம்ப நாளுக்குப் பிறகுதான் அந்தக் குடிசை செட்ன்னு மத்தவங்களுக்குத் தெரிய வந்தது. அந்த அளவுக்கு தத்ரூபமா ஒரு செட்டு போட அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் வெற்றிமாறன் சார்.

ராம் சார், பெண் கேரக்டர்களுக்கு ரொம்ப அழுத்தம் கொடுப்பார். மிஷ்கின் சாரும் அப்படித்தான். ஒரு கதையை சைக்கலாஜிக்கலா டீல் செய்கிற முறையே வித்தியாசமா இருக்கும். இவங்க கூட வேலை செய்யும்போது எனக்குள்ள மத்த படங்கள்ல நடிக்கவும் கதை கேட்கவும் ஒரு பக்குவநிலை வருது. சர்வநிச்சயமா இதுக்கு காரணம் இந்த இயக்குநர்கள் கூட நான் வேலை செய்ததுதான்.

‘பிசாசு 2’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கலாம்னு மிஷ்கின் சொல்லியிருக்கிறாரே?

ரிலீசுக்கு நானும் காத்திருக்கிறேன். நிஜமாவே அவர் சொன்ன வார்த்தைகள் சந்தோஷமா இருக்கு. அப்பேர்ப்பட்ட இயக்குநர் என் நடிப்பு பத்தி சொல்றதே பெரிய விருதுதானே!
இந்தப் படம் இல்லாமல் இன்னும் ரெண்டு மூணு ப்ராஜெக்ட் வெளியீட்டுக்கு ரெடியா இருக்கு. கூடவே பாடல்களும் என்னுடைய குரலில் இந்த வருஷம் நிறைய லைன்அப்ல இருக்கு. ஒவ்வொன்றா அறிவிப்பு வரும்.

ஷாலினி நியூட்டன்