பீஸ்ட் , ஜெயிலர் படங்களுக்கு செட் போட்டிரு க்கேன்... வாரிசுல நடிச்சிருக்கேன்!



புன்னகைக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண்

சினிமா நட்சத்திரங்களுக்கு அவர்களுடைய தேர்ந்த நடிப்பு பெயர் வாங்கித் தருவதுபோல் ஆர்ட் டைரக்டர் எனும் கலை இயக்குநர்களுக்கு அவர்களுடைய கைவண்ணத்தில் உருவாகும் பிரம்மாண்ட அரங்குகள் பெயர் வாங்கிக் கொடுக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆர்ட் டைரக்டர் கிரண். ‘இரண்டாம் உலகம்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘நானும்
ரவுடிதான்’, ‘பீஸ்ட்’, ‘டாக்டர்’ என ஹிட் படங்களில் இவருடைய கை வண்ணம் ரசிகர்களின் மனங்களை மகிழ்ச் செய்துள்ளது.

நடிகராகவும் தன் சினிமா பயணத்தைத் தொடரும் கிரண் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப் பெரிய படமாக வெளிவரவுள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்துக்கும் இவர்தான் ஆர்ட் டைரக்‌ஷன்.

ஆர்ட் டைரக்‌ஷன் மீது ஆர்வம் எப்படி வந்தது?

டைரக்‌ஷன் பண்ணணும்னுதான் வந்தேன். கல்லூரி சமயத்தில் அதுவே என் ஆசை. ‘காதல்தேசம்’ கதிர் சாரின் வகுப்புத் தோழர் என்னுடைய பேராசிரியர். அவர் ‘கதிர் சாரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிடுகிறேன்’ என்று சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. அப்போது என் நண்பர், ராஜ்கபூர் இயக்கிய ‘சீமான்’ படத்தில் வேலை செய்தார். அதில் உதவி ஆர்ட் டைரக்டராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆர்ட் டைரக்‌ஷன் மீது ஆர்வம், பிடிப்பு ஏற்பட்டது.

ஜே.கே, சாபுசிரில், ராகவன், நாகராஜ் ஆகியோரிடம் உதவியாளராக ‘குருதிப்புனல்’, ‘அலைபாயுதே’, ‘நேருக்குநேர்’ உட்பட ஏராளமான படங்களில் வேலை செய்தேன். என்னுடைய முதல் படமாக கன்னடத்தில் ‘சயனைடு’ வெளிவந்தது. தமிழில் ‘திருதிரு துறுதுறு’. தெலுங்கில் ‘ஜெகடம்’ வந்தது.கல்லூரி முடித்து,  இண்டஸ்ட்ரியில் நுழைந்தபோது என்ன மாதிரியான ஆலோசனைகள் கிடைத்தது?

அரங்குகள் அமைப்பதில் முக்கிய பங்காற்றும் பெயிண்டர்ஸ், கார்ப்பென்டர்ஸ், மோல்டர்களிடமிருந்து நிறைய ஆலோசனைகள் கிடைத்தது. அனுபவசாலிகளிடம் பேசுவது எனக்கு பிடிக்கும்.

சாமிக்கண்ணு என்ற பெயிண்டர் மேஸ்திரி, ‘சினிமாவில் கரெக்ட்டாக இருந்தால் சரியான இடத்துக்கு எடுத்துச் செல்லும். இல்லையென்றால் யானை மாதிரி தூக்கி மிதிக்கும்’ என்றார். அப்புறம் சின்னத்தம்பி என்ற ஆர்ட்டிஸ்ட்... அவர்தான் பல திரைப்படங்களுக்கு வானம், மேகம் டிராயிங் போடுவார். அவருடைய அனுபவ ஆலோசனைகளும் யூஸ்ஃபுல்லாக இருந்தது.
‘சர்தார்’ கார்த்தியுடன் நடித்த அனுபவம் எப்படி?

கார்த்தி யை இண்டஸ்ட்ரிக்கு நடிக்க வருவதற்கு முன் தெரியும். ‘நேருக்கு நேர்’ படத்தில் நானும் சூர்யா சாரும் சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். அந்த நட்பு இப்போதும் தொடர்கிறது. ஃபேமிலியாகவும் சூர்யா சார் வீட்ல உள்ள எல்லோருக்கும் என்னைத் தெரியும். படத்தில் என்னை அடிக்கும் காட்சியில், ‘அண்ணே உங்களை நான் அடிக்கணுமா, நான் அடிக்கமாட்டேன்’ என்று பக்கத்துல இருக்கிறவரை அடிக்கிற மாதிரி காட்சி படமானது. அது ஃபன்னாக இருந்தது.

ஆர்ட் டைரக்டராக கதைக்கான உங்கள் பிராஸஸ் எப்படி இருக்கும்?

படம் கமிட்டாகும்போது இயக்குநர்கள் பவுண்ட் ஸ்கிரிப்ட் கொடுத்துவிடுவார்கள். விக்னேஷ் சிவன், நெல்சன் போன்ற ஃப்ரெண்ட்லியான இயக்குநர்கள் கதையைச் சொல்லி ஒப்பீனியன் கேட்பார்கள். மறைந்த கே.வி.ஆனந்த் சாரும் பவுண்ட் கொடுத்து படிக்கச் சொல்லி என்னுடைய ரியாக்‌ஷனை உன்னிப்பாக கவனிப்பார். அந்த வகையில் கதை, ஹீரோவுடைய குணாதிசயம் தெரிந்த பிறகு என்னுடைய பிராஸஸ் ஆரம்பமாகிவிடும்.

டாக்ஸி ஓட்டுநர் வீட்டை ஐடியில் வேலை செய்கிறவரின் வீடு மாதிரி செட் போட முடியாது. டாக்ஸி ஓட்டுநர் வாழ்க்கையில் இடம்பிடித்திருக்கும் விஷயங்களை மட்டுமே யூஸ் பண்ண வேண்டும். தண்ணி குடிக்கும் டம்ளர் முதல் கொண்டு  ஓட்டுநர் வாழ்க்கைக்கான மெட்டீரியல்தான் இருக்கும். அங்கிருந்து ஆர்ட் டைரக்‌ஷன் ஆரம்பிக்கும்.

‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான வரலாற்றுப் படங்கள் அல்லது ‘லவ் டுடே’ மாதிரியான படங்கள்... எந்த மாதிரியான படங்களில் ஆர்ட் டைரக்டருக்கான
ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகமாக இருக்கும்?

குறும்படம் பண்ணாலும் அதிக ரெஸ்பான்ஸிபிலிட்டியுடன்தான் ஒர்க் பண்ணவேண்டும். நாம் செய்யும் வேலைக்கு நாம் ரெஸ்பான்ஸிபிலிட்டியாக இருந்தாக வேண்டும். ஏனெனில், நாம் செய்யும் வேலைதான் நாம் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது. அதனால் சின்ன படம், பெரிய படம் என்று பிரித்துப் பார்க்க முடியாது.

பொதுவாக, ஒரு ஆர்ட் டைரக்டரிடம் கனவு படம் எது என்று கேட்டால், வரலாற்றுப் படங்களில் வேலை செய்வதைச் சொல்வார்கள். காரணம், அதில் வேலைக்கான சுதந்திரம் இருக்கும். சமகால படத்தில் ஒரு கார், பைக் வேண்டுமானால் என்னிடம் நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறது என்று பலருடைய தலையீடு இருக்கும். அப்போது கிரியேட்டிவிட்டி டிஸ்டர்ப் ஆகும்.

வரலாற்றுப் படம் எடுக்கும்போது கதையில் வரும் பொருட்கள் யாரிடமும் இருக்காது. அதை புதியதாகச் செய்தாக வேண்டும். அந்த இடத்தில் எல்லா வேலையும் ஆர்ட் டைரக்டருக்கான வேலையாக இருக்கும். அதனால் ஆர்ட் டைரக்டர்கள் சரித்திரப் படத்தில் வேலை செய்வதை லட்சியப் படமாகச் சொல்வார்கள்.

அதேபோல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் எடுக்கும்போது கதைக்களம் முழுவதும் செட் ஒர்க்காக இருக்கும். அங்கு ஆர்ட் டைரக்டருக்கான வேலைகள் அதிகமாக இருக்கும். மற்றபடி எந்தப் படம் பண்ணாலும் சிறப்பாகப் பண்ண முடியும்.உங்கள் சினிமா கரியரில் பெரிய சவால் நிறைந்த படம் எது?

சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘பீஸ்ட்’. அந்தப் படத்துக்கு அமைத்த ஷாப்பிங் மால் செட். ஒரு மால் கட்ட வேண்டும் என்றால் சில வருடங்கள் ஆகும். நாங்கள் மூன்றரை மாதத்தில் அந்த மால் வேலையை முடித்தோம். ஒரு ஷாப்பிங் மாலில் என்னவெல்லாம் இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்தோம்.

படம் பார்த்த அனைவரும் இந்த மால் மும்பையில் இருக்கிறதா, துபாயில் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார்கள். அதிகளவில் கண்ணாடியாலான மால் அது. எந்த இடத்திலும் பட்ஜெட்டில் சமரசம் செய்யாமல் பண்ணிய வேலை அது.

‘பீஸ்ட்’ படத்துல வர்ற மால் செட்தான் இந்திய சினிமாவில் போட்ட உயரமான செட். நான் பண்ணியதற்காக சொல்லவில்லை. வழக்கமாக இருபது அடிக்கு வெளிப்புறம் செட் போடுவார்கள். இன்டோர் காட்சிகளை ஸ்டூடியோவில் எடுப்பார்கள். ‘பீஸ்ட்’ல  உட்புறம், வெளிப்புறம் என எல்லாமே நாற்பத்தைந்து அடி உயரத்துக்கு செட் போடப்பட்டது. பால்கனியில் கார் ஓட்ட இடம், மேல் தளங்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் நிற்க இடம் என்று பிரம்மாண்டமாக அமைத்த செட் அது.

ஒரு கட்டடம் எப்படி அடித்தளம் அமைத்து கட்டப்படுகிறதோ அதே மாதிரி அடித்தளம் அமைத்து கட்டிய செட் அது. வழக்கமாக, சினிமா செட் தரைத்தளத்திலிருந்து ஆரம்பமாகும். நாங்கள் முறைப்படி மண் மாதிரி எடுத்து, அரசாங்கத்தின் அனுமதி வாங்கி ஆர்க்கிடெக்ட் என்ஜினியர்களை உடன் வைத்துக்கொண்டு கட்டினோம்.

அந்த வகையில் அது முழுமையான கட்டடம் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு புயலைத் தாங்கிய செட் அது. சன் குழும தலைவர் கலாநிதிமாறன் சார் செட் ஒர்க் பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார்.பேப்பரில் இருப்பதைத்தான் நடிகர் செய்ய வேண்டும். அதுபோன்ற இடத்தில்தான் கீ டெக்னீஷியன்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நூறு சதவீதம் கதைக்கு தேவையானதை மட்டுமே செய்ய வேண்டும். எனக்கு வித்தை தெரியும் என்று நம்முடைய அறிவாற்றலை வெளிப்படுத்தக் கூடாது. தயாரிப்பாளர் செலவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாலும் இஷ்டத்துக்கு பண்ண முடியாது. கதை, இயக்குநரின் விஷனுக்குத்தான் செட் ஒர்க் இருக்க வேண்டும்.

மலைகளுக்கு பெயிண்ட் அடித்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது ஷங்கர் சாரின் விஷன். அதனால் அப்படி எடுத்தார்கள். ஃப்ளைட் மேல் நடனம் ஆடுவது மாதிரி எடுத்திருந்தால் அது இயக்குநரின் விஷன். இயக்குநரும் ஆர்ட் டைரக்டரும் டிஸ்கஸ் பண்ணும்போது சில ஐடியா கிடைக்கும். அது நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

உங்க டீம்ல அதிகபட்சம் எத்தனைபேர் வேலை செய்கிறார்கள்?

மகேஷ், கரிகாலன், பவதாரிணி, லக் ஷ்மிநாராயணன் உட்பட சுமார் நூறு பேர் இருக்கிறார்கள். பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் முந்நூறு, நானூறு பேர் வேலை செய்வார்கள்.
ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநருக்கு இருக்கும் அதே பார்வை ஆர்ட் டைரக்டருக்கும் இருக்கிறது என்று சொல்லலாமா?

கண்டிப்பாக. ஆர்ட் ஃபார்ம் தெரிந்தவர்களுக்கு லைட் அண்ட் ஷேட் சென்ஸ், கலர் சென்ஸ் நாலெட்ஜ் இருக்கும். அதனால் விஷுவல் பண்ணிப்பார்க்கத் தெரியும். ஓவியம் போடத் தெரிந்தவர்கள் கேமராமேனாக இருந்தால் காட்சிகள் வெகு சிறப்பாக இருக்கும். கேமராமேன் - ஆர்ட் டைரக்டர் கெமிஸ்ட்ரி பொருந்தினால் அப்படங்கள் செமையாக வரும்.
‘பீஸ்ட்’, ‘டாக்டர்’ படம் அந்த மாதிரி சிறந்த அவுட்புட் கொண்டதாக இருந்தது. அந்த வகையில் ஆர்ட் டைரக்டருக்கு பெயர் வாங்கித் தருவதில் கேமராமேனின் பங்கும் இருக்கிறது.

கறுப்பு, வெள்ளை படங்களில் ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும். அதிலிருந்து நீங்கள் எதையாவது அடாப்ட் பண்ணியுள்ளீர்களா?

‘பூலோக ரம்பை’, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’  உட்பட ஏராளமான படங்களின் செட் ஒர்க் என்னை ஈர்த்துள்ளது. ‘ராமு’ படத்தில் ‘நிலவே என்னிடம் நெருங்காதே...’ பாடல். அதன் லைட், ஓட்டு வீடு, தென்னை மரம் என்று மனதைக் கொள்ளையடிக்கும். ‘எங்கிருந்தாலும் வாழ்க...’ பாடலில் மருத்துவமனை செட். அந்த மாதிரியான மருத்துவமனை நவீன சென்னையில் கூட இல்லை. அந்தக் காலத்தில் எப்படி ஆர்ட் டைரக்டரால் யோசிக்க முடிந்தது என்பது வியப்பாக இருந்தது.

அந்தக் காலத்திலேயே கலைவேலைப்பாடுள்ள ஃபோட்டோ பிரேம், லேம்ப் போஸ்ட் செய்திருக்கிறார்கள். அந்த ஜாம்பவான்கள் எங்கு ரெஃபரன்ஸ் எடுத்தார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும்.

‘அன்னை ஒரு ஆலயம்’ படத்தில் யானை காலில் பில்லர் இருக்கும். அதைப் பிடுங்கி ரஜினி சார் சண்டை போடுவார். ‘உன்னை கண் தேடுதே...’ பாடலில் ஐந்து தலை பாம்பு, அதன் கண்ணில் லைட் எரிகிற மாதிரி செட் இருக்கும். அந்த படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதோடு அந்த மாதிரி படங்கள் பண்ண ஆசை.

நடிகராகவும் கலக்குகிறீர்கள்?

நான் ஆர்ட் டைரக்‌ஷனில் பிஸியாக இருப்பேன் என்று அழைப்பதில்லை. நானும் யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை. என்னத்தேடி வரும் படங்களில் நடிக்கிறேன். விஜய் சாரின்
‘வாரிசு’ படத்தில் பியூட்டிஃபுல் கேரக்டர் பண்ணியிருக்கிறேன்.

‘ஜெயிலர்’ சீக்ரெட் ஒண்ணு சொல்லுங்க?

பிரதர், அப்படி எதுவும் சொல்ல முடியாது! படம் பாருங்க... கொண்டாடுவீங்க. 2022 எனக்கு சந்தோஷமான வருடம். நான், ரஜினி சாரின் வெறிபிடித்த ரசிகன். நான்  முதன் முறையாக வரைந்த முதல் ஓவியம் ரஜினி சார் முகம்தான்.  இன்னொரு சந்தோஷம்... தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவை எனக்கு பிடிக்கும். அவருடன் ‘ராவணசுரா’ பண்றேன்.

எஸ்.ராஜா