பாஸ்தா கார்னர்!



குழந்தைகள் முதல் டீன் ஏஜில் உள்ளவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவு என்றால் அது நூடுல்சும் பாஸ்தாவும்தான். காரணம், நண்பர்களுடன் பேசிக்கொண்டே சுவைத்துச் சாப்பிடக்கூடிய உணவாக இவையே இருக்கின்றன. அந்த பல்சினை மிகவும் அழகாகப் புரிந்துகொண்ட ஜனக் தவே, சென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் பாஸ்தாவுக்காகவே ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார். ‘ஃபுசிலி ரீசன்ஸ்’ என்று அழைக்கப்படும் இவரது உணவகத்துக்குப் பின்னால் இருக்கும் அவரது பயணம் சுவாரஸ்யமானது.
‘‘நான் சென்னைவாசி. கல்லூரிப் படிப்பு முடிச்சிட்டு எங்க குடும்பத் தொழிலான ஃபார்மா துறையில் ஈடுபட்டேன். என்னால் இரண்டு வருடங்களுக்கு மேல் அந்தத் தொழிலில் ஈடுபட முடியவில்லை.

அப்பாவிடம் ஒரு லட்ச ரூபாய் கடனாகப் பெற்று பாஸ்தா ஜாய்ன்ட்டை ஆரம்பித்தேன். உணவு என் மனசுக்கு நெருங்கிய விஷயம். சின்ன வயசிலிருந்தே நான் கிச்சனில் அம்மாவுக்கு உதவி செய்வேன். அவங்க சமையல் குறித்து அனைத்தும் சொல்லிக் கொடுத்தாங்க. அதுதான் எனக்கு சமையல் மேல் ஈடுபாடு ஏற்படக் காரணம். அதுவேதான் ‘ஃபுசிலி ரீசன்ஸ்’ ஆரம்பிக்கவும் ரீசன்.
அப்ப ஏழாம் வகுப்பு படிச்சுட்டிருந்தேன். முதன்முதலில் எனக்கான மேகியை நானே சமைத்தது அப்போதுதான். அதன் பிறகு அதில் கேரட், பீன்ஸ் மட்டுமில்லாமல், ப்ரொக்கோலி, ஆலிவ்ஸ் போன்ற காய்கறிகளைச் சேர்த்து பல ஃபிளேவர்களில் செய்ய  ஆரம்பிச்சேன்.

அப்பதான் யூடியூபில் பாஸ்தா சமைப்பது பற்றிய வீடியோ பார்த்தேன். ரொம்ப சிம்பிளா இருந்தது. டிரை செய்தேன். நன்றாக இருந்தது. வீட்ல இருப்பவர்களும் விரும்பிச் சாப்பிட்டாங்க. அது எனக்குள் ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன்பிறகு நினைக்கும் போதெல்லாம் பாஸ்தா செய்து சாப்பிடுவேன்...’’ புன்னகைத்தபடியே தொடர்ந்தார் ஜனக் தவே.
‘‘ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்த சமயம். என் உறவுக்காரப் பையன் தன் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடப்பதாகவும், அதில் பாஸ்தா ஸ்டால் வைச்சா நல்லா இருக்கும் என்றும் சொன்னான். செய்து பார்க்கலாம்னு தோணுச்சு. முதல் முறையா என்னுடைய பாஸ்தா ஸ்டாலை வச்சேன்.

ஆனா, யாரும் எதிர்பார்க்காத விதமா திடீர்னு மழை. அங்க நிறைய ஃபுட் ஸ்டால் இருந்தாலும், என்னுடைய பாஸ்தா சாப்பிட ஒரு பெரிய கூட்டமே க்யூவில் நின்னது. எனக்குள்ள பெரிய நம்பிக்கை வந்தது அப்பதான். என்னாலும் செய்ய முடியும்... என் சமையல் எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னு புரிந்தது. ஆனா, அந்த வயசில் என் எதிர்காலம் இதுவாகத்தான் இருக்கும்னு எனக்குத் தெரியல. அப்புறம் பள்ளி, கல்லூரி, குடும்பத் தொழில்னு என் வாழ்க்கை நகர ஆரம்பிச்சது.

முன்னாடியே சொன்ன மாதிரி குடும்பத் தொழிலில் இரண்டு வருஷம் இருந்தேன். ஒவ்வொரு இடத்துக்கும்  மருந்துகளை டெலிவரி செய்யணும். அது எனக்கு பெரிய டிப்ரஷனைக் கொடுத்தது. அதனால அப்பாவிடம் ‘என்னால் குடும்பத் தொழிலில் ஈடுபட முடியாது’னு சொல்லிட்டேன். ஒரு வருடம் என்ன செய்வதுன்னு தெரியல. வெறுமையா உணர்ந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் நல்ல நிறுவனத்தில் வேலையில் இருந்தார்கள். நான் மட்டும் எந்த இலக்கும் இல்லாம இருந்தேன்.

அப்பதான் ஏன் நமக்கு பிடித்த சமையல் துறையில் ஈடுபடக் கூடாதுனு தோணிச்சு. ஏற்கனவே உணவு ஸ்டால் போட்ட அனுபவம் இருந்ததால், அதையே செய்யலாம் என  முடிவு செய்து அப்பாவிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றேன். கடையைத் திறந்தேன்...’’ என்று கூறிய ஜனக், தன்னுடைய உணவகத்தை எவ்வாறு ஒரு சக்சஸ் பிசினசாக மாற்றினார் என்பதைப் பகிர்ந்தார்.‘‘சாப்பாட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைக்கக்கூடாது. ஆர்டர் கொடுத்தவுடன் சூடா, அதுவும் உடனடியா பரிமாறணும். அடுத்து விலை. இது அவங்களைக் கடிக்காம இருக்கணும். முக்கியமாக சுகாதாரமா இருக்கணும்.

இந்த மூன்று விஷயங்களிலும் கவனமா இருந்தேன். அப்பா கொடுத்த காசில் எனக்கான ஸ்டால் மற்றும் பாஸ்தாவிற்குத் தேவையான பொருட்களை வாங்கினேன். அண்ணாநகரில் நான் படிச்ச பள்ளிக்கு அருகே ஸ்டால் அமைத்தேன். பள்ளிக் குழந்தைகள் என்பதால், கடையில் உணவின் அதிக பட்ச விலை ரூ.50னு நிர்ணயித்தேன்.

சமைக்க சமைக்க பாஸ்தா காலியாச்சு. அம்மாவும் பாட்டியும் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க. பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாம அங்கு வேலை பார்த்த ஆசிரியர்கள்... அந்த வழியா சென்றவர்கள்னு எல்லாரும் வந்தாங்க.

ஒரு நாளைக்கு 900 பாஸ்தாக்களை செய்திருக்கேன்! நம்ப முடியாத ஆச்சர்யம். என் மேல் ஏற்கனவே இருந்த நம்பிக்கை பலமாச்சு...’’ என்றவர் இந்தக் காலகட்டத்தில் சிக்கலைச்
சந்தித்திருக்கிறார்.

‘‘நான் ஸ்டால் வைத்திருந்த இடத்தின் உரிமையாளருக்கு வங்கி சார்ந்த பிரச்னை ஏற்பட்டதால், அவரால் அந்த இடத்தை எனக்குத் தர முடியாத சூழல் உருவாச்சு. கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆனா, துவண்டு போகாம வேறு என்ன ஆப்ஷன் இருக்குனு யோசித்தேன். பெரிய அளவில் உணவகம் திறக்க பணமில்லை.

அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சியின் போது ஸ்டால் அமைக்க திட்டமிட்டேன். அது எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

அப்பாவுக்கு முதல்ல நான் இதுபோன்ற வேலை செய்வதில் அவ்வளவு விருப்பமில்லை. ஆனா, என்னுடைய கடுமையான உழைப்பைப் பார்த்ததும் அவருக்கு நம்பிக்கை வந்தது. தன் நண்பருக்கு சொந்தமான இடத்தில் உணவகம் அமைக்கச் சொன்னார்.

சென்னை கீழ்ப்பாக்கம்  குடியிருப்புப் பகுதியில் ஆரம்பித்தேன். 15 பேர் உணவகத்துக்குள் அமர்ந்து சாப்பிடலாம். பத்து பேர் கடையின் வாசலில் நின்று சாப்பிடலாம்.
ஆனா, அங்கும் பெரிய பிரச்னையை சந்தித்தேன். அது குடியிருப்புப் பகுதி. எப்போதும் அமைதியா இருக்கும். அப்படிப்பட்ட அந்தத் தெருவில் திடீர்னு ஒரு 60 பேர் சூழ்ந்தால், எப்படி இருக்கும்..? அதுவும் அனைவரும் இளைஞர்கள். பேச்சு சத்தம், வண்டிச் சத்தம்னு அந்த தெருவே சந்தைக்கடையா மாறியது.

எனக்கு நல்ல பிசினஸ் கிடைச்சாலும், அங்குள்ள மக்களுக்கு அது தொந்தரவா அமைந்தது. அவங்க போலீஸ்ல புகார் செய்ய... அந்தக் கடையையும் மூடினேன்.
அடுத்து வேறு இடம் பார்த்தேன். அதுவும் சிக்கலானதால், அங்கிருந்து இப்ப இருக்கும் இடத்துக்கு வந்தேன். இப்ப வேளச்சேரியில் ஆறு மாசம் முன்பு ஒரு கிளை திறந்திருக்கேன்...’’ என்றவர் தன் உணவகத்தில் உள்ள பாஸ்தா வகைகளைப் பற்றி விவரித்தார்.

‘‘என்னுடையது மிகவும் சிம்பிளான மெனு. என்னைப் பொறுத்தவரை ‘வாங்க... சாப்பிடுங்க... போங்க...’ விலை குறைவு என்பதால், பெரும்பாலான இளைய தலைமுறைகள்தான் வருவாங்க. ஆரம்பத்தில் ரூ.50க்கு கொடுத்தேன். இப்ப ரூ.200க்கு தர திட்டமிட்டிருக்கிறேன். இங்க கூட்டம் எப்போதும் இருக்கும். காத்திருந்து சாப்பிடறாங்க. என் கடையின் ஒரு ஸ்பெஷாலிட்டி, ஆர்டர் செய்த பத்து நிமிடத்தில் உணவைப் பரிமாறிடுவோம்.

இங்கு சிறப்பு செஃப் கிடையாது. இங்குள்ளவர்களுக்கு எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுத்திட்டேன். எவ்வளவு பாஸ்தாவிற்கு, எவ்வளவு சாஸ், உப்பு, சீஸ் எல்லாம் சேர்க்கணும் என்கிற ஃபார்முலா அவங்களுக்கு அத்துப்படி. நான் முதன் முதலில் ஆரம்பித்தபோது கார்லிக் பிரடுடன் கார்ன் ஸ்பினாச் சாஸ் மற்றும் பீட்ரூட் மேயோ சாஸ், வைட் சாஸ் பாஸ்தா, ரெட் சாஸ் பாஸ்தா, மிக்சட் பாஸ்தா மற்றும் ஹெர்ப் பாஸ்தா... ஒரு ஐஸ் டீ மட்டுமே கொடுத்து வந்தேன்.

இப்போது ஹம்மஸ், சில்லி சீஸ் டோஸ்ட், பெஸ்தோ பாஸ்தா, பெல்பெப்பர் சாஸ் பாஸ்தா, ஸ்பினாச் பாஸ்தா, ஆக்லியோ ஈ ஓலியோ பாஸ்தா, சால்சா நாச்சோஸ், ரெகுலர் நாச்சோஸ், வெஜிடபிள் ஆகிரேட்டின் கொடுக்கறேன். டெசர்ட் வகையில் பிரவுனி ஃபுசிலி வென்னிலா பாட், சாக்கோ டார்ட் இருக்கு. பாஸ்தாவுக்கு சாஸ்தான் முக்கியம். ஒவ்வொரு சாஸும் தனிப்பட்ட சுவையில் தயாரிக்கணும்.

பொதுவா பாஸ்தா என்றால் மைதா, சீஸ், பால், இத்தாலியன் ஹர்ப்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் வைட் சாஸ் மற்றும் தக்காளி, சிகப்பு குடைமிளகாய், காய்ந்த மிளகாய் துகள்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ரெட் சாஸ் கொண்டுதான் வரும். நாங்க பீட்ரூட் மேயோ சாஸ், குடைமிளகாய் மற்றும் பாலக்கீரை சாஸ்கள் கொண்டு கார்லிக் பிரட் மற்றும் பாஸ்தாக்களை கொடுக்கிறோம்.
பீட்ரூட் சாஸைப் பொறுத்தவரை இனிப்பு, புளிப்பு மற்றும் கொஞ்சம் காரம் கலந்திருக்கும். இது என்னுடைய அம்மாவின் ரெசிபி. இதில் பீட்ரூட், மேயோனீஸ், வெங்காயம், தக்காளி, சில்லி பிளேக்ஸ்னு எல்லாவற்றையும் பிளண்ட் செய்யணும்.

பலர் பீட்ரூட்ன்னு சொன்னப்ப ‘பீட்ரூட்டா’ன்னு கேட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் என் வாடிக்கையாளர்களை சாப்பிடச் சொல்லி கன்வின்ஸ் செய்திருக்கேன். ஒரு முறை சாப்பிட்டவர்கள் அதை சாப்பிடவே மறுபடி வர்றாங்க. இத்தாலியன் ஹெர்ப். காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து வருவது ஹெர்ப் பாஸ்தா. இதில் சாஸ் சேர்க்கப்படாது.

மசாலா மேக் என்பது பேக் செய்யப்பட்ட பாஸ்தா. மேக் என்றால் மேக்ரோனி வகை பாஸ்தா. இதில் வைட் சாஸ் மற்றும் சீஸ் சேர்த்து பேக் செய்து லசானியா வடிவில் கொடுப்போம்.
ஸ்பினாச் பாஸ்தா - கீரை மற்றும் வைட் சாஸ் சேர்த்து செய்யப்படும் பாஸ்தா. மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாம் கிரில் செய்து அதை சாசாக தயாரிச்சு, பாஸ்தாவுடன் சேர்த்து பரிமாறுவது பெல்பெப்பர் பாஸ்தா.

என்னுடைய தோழி, பெஸ்தோ சாஸ் செய்யக் கற்றுக் கொடுத்தாள். அப்படித்தான் பெஸ்தோ பாஸ்தா என்னுடைய மெனுவில் இடம் பெற்றது. பேசில் (ஒரு வகையான துளசி), பூண்டு, ஆலிவ் எண்ணெய் மற்றும் சீஸ் சேர்த்து செய்யப்படும் சாஸ்தான் பெஸ்தோ சாஸ்.

டெசர்ட் வகையில் ஃபுசிலி வென்னிலா பாட் மற்றும் பிரவுனி எங்களின் ஸ்பெஷல். இப்ப வேளச்சேரியில் திறந்திருக்கிறோம். அடுத்து தி.நகர், சவுகார்பேட்டையில் கிளை திறக்கும் ஐடியா இருக்கு. அதேபோல பள்ளி - கல்லூரி வாசலில் ஸ்டால் அமைக்கும் திட்டமும் உள்ளது...’’ என்று கூறும் ஜனக்கிற்கு வீட்டு உணவு, தென்னிந்திய மீல்ஸ் மற்றும் முட்டை பிரியாணிதான் பிடித்தமான உணவாம்.
                    
செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்