அரண்மனை குடும்பம்-45
மனதுக்குள் உருவான ஒருவகை பீதியோடு ரத்தி, தியாவைத் தூக்கிக் கொண்டாள். தியா, ரத்தியின் தாடையைப் பிடித்து “மம்மி... அப்பா அந்த ஆண்ட்டி கூட எங்க போறாரு?” என்று கேட்டாள்.
 கண்கள் கலங்கிட, “தெரியலையே கண்ணு...” என்றாள் ரத்தி. “நீ ஏன் அழறே?” “பயமா இருக்குடா...” “ஏன் பயப்பட்றே?” “உனக்கு சொன்னா புரியாது... நம்மள சுத்தி பெருசா ஒரு சதி நடக்கறமாதிரி தோணுது எனக்கு...” “சதின்னா?”
 “தியா... உனக்கு எதுவும் தெரிய வேண்டாம். உன் சின்ன மனசுக்குள்ள நான் ஒரு பயத்த உருவாக்க விரும்பல. நீ போய் விளையாடு... போ...” “யாரும் வரமாட்டேங்கறாங்களே மம்மி...” தியா அப்படிக் கேட்கவும், “கவலப்படாதே... நாம ஏற்காடு போய்டுவோம். அப்புறம் இங்க நாம வரவே மாட்டோம். அங்க பங்கஜம் இருக்கா... உன்ன ஏரிக் கரைக்கும், எஸ்டேட்டுக்கும் கூட்டிக்கிட்டு போவா. நீ ஜாலியா சந்தோஷமா இருக்கலாம்...” என்றாள்.
“ஸ்கூலுக்கு போகணுமே?” “அங்கயே மான்ஃபோர்ட் ஸ்கூல் இருக்கு. அப்பாகிட்ட சொல்லி சேத்துட்றேன்...” “அப்ப வா... இப்பவே போகலாம்...” “அப்பா வரட்டும். அவர் வந்த உடனேயே கிளம்பிட்றோம்...” தீர்மானமாக அழுத்தமாய் சொன்னாள் ரத்தி! காரில் இருந்து மூர்த்தியுடன் உள் நுழையும் போதே குலசேகர ராஜாவை சுந்தரவல்லி பிடித்துக் கொண்டு விட்டாள். “எங்க போய்ட்டீங்க?”
“நம்ம லேண்ட் வழியா புதுசா போடப்போற ஃபோர்வே லைன் வருது! கவர்மெண்ட் அதை எடுத்துக்கப் போறாங்க. கிட்டத்தட்ட 12 ஏக்கர் நிலம் நம்ம அரண்மனை குடும்பத்த விட்டு போகப் போகுது. அதான் டிஆர்ஓ, கலெக்டர்னு பாத்து பேசிட்டு வரேன்...”“அதெல்லாம் போனா போகட்டும்... நீங்க சாதிச்சிட்டீங்க...”“என்ன சுந்தரம் மருந்து வேலைய காட்டிடிச்சா?” அந்த கேள்விக்கு, நடந்த சகலத்தையும் சொல்லி முடித்தாள் சுந்தரவல்லி. குலசேகர ராஜா முகமும் பாதரசத்தைப் பூசிக்கொண்டது போல மாறிற்று.
“பாஸ் நான் சொல்லல... அந்த வாத்யார் பலே கில்லாடின்னு...”“யெஸ்... அவன் கில்லாடி மட்டுமில்ல, ஜித்தன்...”“இதோ பாருங்க... இந்த பிடியை விட்றாம இதை கல்யாணத்துல முடிக்கணும்...”“என்ன நீ... நாளைக்கே கல்யாணத்த பண்ணச் சொல்வே போலிருக்கே... பொறு சுந்தரம்...”“அதுவோ மாய மருந்து... எவ்வளவு நாள் வேலை செய்யும்னு யாருக்கு தெரியும். கணேசனுக்கு தெளியறதுக்குள்ள முடிக்க வேண்டாமா?”
“எனக்கும் தெரியும் சுந்தரம்... இனிதான் ஒவ்வொரு அடியையும் கவனமா வைக்கணும். கல்யாணம் மட்டும் மேட்டர் இல்ல... இந்த வடநாட்டுக்காரிய என்ன பண்ணப்போறோம்கறதும் முக்கியம்...”
“ஆமாம்... ஆமாம்... அவ ஒருத்தி இருக்கால்ல?”
“ஒருத்தியா... ரெண்டு பேர்! அந்த தியாதான் சட்டபூர்வ வாரிசு. ரெண்டு பேருமே நம்ம எதிரிங்க.. எங்கியோ நாகலாந்துல பிறந்த ஒரு காட்டுவாசி... அவளோட நேரம் இந்த அரண்மனைக் குடும்ப மருமகளாயிட்டா. அவளை அழிக்கறது தெரியாம அழிக்கணும்...”“அழிச்சிடலாம் பாஸ்... அதுக்கும் வாத்யாரே எதாவது வழிய காட்டுவார்...” இடையில் புகுந்த மூர்த்தி சொன்ன கருத்து குலசேகரர் தாடையைத் தடவச் செய்தது.
“என்ன பாஸ்... வாத்யாரால முடியுமான்னு டவுட்டா இருக்கா?”
“இல்ல மூர்த்தி... இதுக்கே 20 கோடி கேட்டவன், அதுக்கு இன்னும் பல கோடிய இல்ல கேட்பான்...”“ஆமாம் பாஸ்... அதுல சந்தேகமில்ல...” “அவ்வளவு பணத்துக்கு நான் இப்ப எங்க போக? இங்க நாங்களே ஒட்டிக்கிட்டுல்ல கிடக்கறோம்?”“அப்ப இப்ப 20 கோடிய தரணுமே... அதுக்கு என்ன பண்ணப் போறீங்க பாஸ்..?”
“இப்போதைக்கு இங்க நடக்கற எதுவும் அந்த வாத்யாருக்கு தெரிய வேண்டாம் மூர்த்தி. நம்ம டார்கெட் இப்ப மஞ்சு கல்யாணம் மட்டும்தான். முதல்ல அதை முடிப்போம்...’’ “பாஸ்... அப்படி எல்லாம் அவனை நாம ஒதுக்கிட முடியாது. அவன் இப்ப கூட நம்பள கவனிக்கறது தெரியாம கவனிச்சுக்கிட்டே இருப்பான்...”‘‘பயமுறுத்தாதே மூர்த்தி... அவனை நீ கல்யாணம் வரை சமாளி...”“அது பெரிய விஷயமில்ல... ஆனா, கல்யாணத்தின்போது நாம பேசின மாதிரி பணத்தை கொடுத்துடணும் பாஸ்...”“பார்ப்போம்...” “அப்படி சொல்லாதீங்க... கட்டாயம் கொடுத்துடணும்... இல்ல விபரீதமாயிடும்...”“சரி... நீ போய் நம்ம லேண்ட் ஒர்க்கை பார். நான் பாத்துக்கறேன்...”குலசேகர ராஜா மூர்த்தியையே வேகமாகக் கத்தரிப்பது சுந்தரவல்லிக்குப் புரிந்தது. அது மூர்த்திக்குமே புரிந்தது.
மூர்த்தி விலகவுமே சுந்தரவல்லி குலசேகரரை ஒரு மாதிரி பார்த்தாள்.“என்ன சுந்தரம் அப்படி பாக்கறே?”“என்னங்க... அந்த வாத்யாருக்கு பணம் கொடுக்க உங்களுக்கு விருப்பமில்லையா?”
மிக நறுக்கலாக கேட்டாள் சுந்தரவல்லி.“நீ என்ன நல்லா புரிஞ்சி வெச்சிக்கிட்டிருக்கே சுந்தரம்... 20 கோடி ரூபாய ஒரு பங்கரப் பயலுக்கு தூக்கிக் கொடுக்க யாருக்கு சுந்தரம் மனசு வரும்?” “அது சரிங்க... ஆனா, அவனாலதான நமக்கு இப்ப நல்லது நடக்கத் தொடங்கியிருக்கு...”“அது வாஸ்தவம்தான்... அதுக்காக அவன் இழுப்புக்கு நான் இப்ப போயிட்டா அது நமக்குதான் பெரிய ஆபத்து...”“இதுல ஆபத்து எங்கங்க இருக்கு?”“பைத்தியக்காரி... மிளகு உருண்டை சைஸ்ல நாலு உருண்டைய கொடுத்து கணேச ராஜாவையே விழவெச்சவனுக்கு நானும் நீயும் எம்மாத்திரம்?” “அதனால..?”
“இப்ப என்ன எதுவும் கேக்காதே... எதை எப்ப எப்படி செய்யணும்னு எனக்கு நல்லா தெரியும்...”குலசேகர ராஜா சொல்லி விட்டு மைத்துனரான கைலாச ராஜாவையும் சகோதரியான கஸ்தூரியையும் நோக்கிச் சென்றார்.இருவரும் தங்கள் தனியறையில் புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய திரையில் மிதமான ஏசிக்கு நடுவில் சோபாவில் புதைந்த நிலையில் பழைய ‘அன்பே வா’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
குலசேகரர் வரவும் காட்சி ஃப்ரீஸ் ஆனது.“வாய்யா... டிஆர்ஓ, கலெக்டர்லாம் பொறுப்பா நடந்துகிட்டாங்களா?”“அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்ல அத்தான். அது முடிஞ்ச மாதிரிதான். நம்ம நிலத்துக்குள்ள ரோடு போறதால நமக்கு பெரிய லாபமும் கூட. ரோடு போக மீதி உள்ள இடத்துல ஹோட்டல், பெட்ரோல் பங்க்குன்னு வாடகைக்கு விட முடியும்.
இடத்து மதிப்பும் ரோடால கிட்டத்தட்ட இருபது மடங்கு கூடிடிச்சு...”“நினைச்சேன்...”“அப்றம் நம்ம கணேச கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்...”“கவனிச்சோம்... மஞ்சுவோட எங்கயோ கிளம்பிப் போனான். சந்தோஷமா போனாங்க. எங்களுக்கே ஒண்ணும் புரியல...”“இதுல புரிய என்ன இருக்கு அத்தான். கணேசுக்கு மஞ்சு மேல இப்பதான் ஒரு காதல் உண்டாகி யிருக்கு...”“காதலா?” விதிர்த்தார் கைலாச ராஜா.
“ஆமா அத்தான்... கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் கொடுத்தா... அப்ப அதானே?” அளந்து விடவும் தொடங்கினார் குலசேகரர். “என்னய்யா சொல்றே... நாங்க பேசினப்ப நெருப்பா கக்குன கணேசனா முத்தமெல்லாம் கொடுத்தாங்கறே..?” “ஆமாம் அத்தான். நாங்க கண்ணாலல்ல பாத்தோம்...” “எப்படிய்யா... அப்படி என்ன சொக்குப்பொடி போட்டா மஞ்சு...” “அவ போடல... நான் போட்டேன்...”“நீ போட்டியா?”
“அத்தான் ரொம்ப நோண்டாதீங்க. மஞ்சுவுக்கும் கணேசுக்கும் கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா?”
“அதான் கனவாப் போச்சே...”“கனவுல்ல... நனவாகப் போகுது. நீங்க கொஞ்சம் ஒத்துழைச்சா போதும்...”“நாங்கதான் எப்பவுமே தயாரா இருக்கோமே... ஆமா நீ சொல்றதெல்லாம் நிஜம்தானே... எதுவும் கண்கட்டு இல்லையே..?”“கொஞ்சம் கண்கட்டும்தான் அத்தான். ஆனா, அது அவிழ்றதுக்குள்ள காரியங்கள நாம முடிக்கணும்...”“பூடகமாவே பேசறியே... புரியும்படி சொல்லுய்யா...” கைலாசராஜா கேட்டிட, குலசேகரரும் மாரப்ப வாத்யார் சந்திப்பை அப்படியே சொல்லத் தொடங்கினார்.
(தொடரும்)
தனக்குள் எற்பட்ட திகைப்பை முடிந்தவரை அடக்கிக் கொண்டு “எப்படி... இப்படி நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்றீங்க?” என்று கேள்வியைத் தொடர்ந்தார் அசோகமித்திரன். “நினைப்புங்கறதும் ஒரு சப்தம்தான்... அதை பிறர் கேட்கணும்னு நினைக்கும்போது அநிச்சையா பேசிச் சொல்றோம். அப்ப தொண்டை சதைல இருந்து நரம்புகள் வரை ஒண்ணாகி காற்றோட துணையோட குரல்னு ஒண்ணு உருவாகி அந்த குரலே கூட பேசறவருக்கான ஒரு தனி அடையாளமா மாறிடுது.
அந்தக் குரலை ஒரு காது கேட்கறது பெருசில்ல... மனக்குரலையும் கேக்கணும். அப்படி கேட்க யோக சக்தி வேணும். அது என்கிட்ட இருக்கு. அந்த யோக சக்தியால ஒரு செடில பூ பூக்கற ஓசையைக் கூட கேட்க முடியும். அப்படி இருக்கும்போது நீ மனசுல நினைச்சததானா கேட்டு சொல்ல முடியாது..?”“நீங்க சொல்ற அந்த யோக சக்தி உங்களுக்கு எப்படி கிடைச்சது... அது எல்லாருக்கும் கிடைக்குமா?”“தாராளமா... அது வெளில எங்கயோ இல்ல... இந்த உடம்புக்குள்றதான் இருக்கு. அதை நீதான் முயற்சி செய்து அடையணும்...”“முயற்சி செய்துன்னா... யோகாசனப் பயிற்சிகள் மூலமாவா?”
“அதுவும் ஒண்ணு. சொல்லப் போனா யோகாசனப் பயிற்சிங்கறது ஆரம்பப் பள்ளிக்கூடத்துல படிக்கற மாதிரி! அதனால உடல் உறுப்புகள் பலப்படும். ரத்த ஓட்டமும் சீராகும். ஆரோக்யம் வசப்படும். ஆனா, யோக சக்தி உடல் உறுப்பு சார்ந்தது மட்டுமில்ல... அது மனம் சார்ந்த ஒண்ணும் கூட. திரேக சக்தியும் மனோசக்தியும் கலந்த ஒண்ணுதான் யோக சக்தி...”“அப்ப அந்த மனோ சக்திங்கறது எப்படிப்பட்டது?”
“உனக்கு நான் வார்த்தைல சொல்லி புரியவைக்கறதவிட செயல் மூலமா புரிய வைக்கறது சிறப்புன்னு நினைக்கறேன்...’’என்ற மண்ணாங்கட்டிச் சித்தர் அருகில் சற்று தொலைவில் குவிக்கப்பட்டிருந்த ஒரு குப்பை கூளத்தை சிலபல வினாடிகள் உற்றுப் பார்க்கத் தொடங்கினார். அதுவும் உடனேயே தீப்பிடித்து எரியத் தொடங்கியது! அசோகமித்திரன் பதில் வியப்போடு மண்ணாங்கட்டியாரைப் பார்த்தார்.
“என்ன பாக்கறே... ஒரு தீக்குச்சியை உரசும்போது வெளிப்பட்ற நெருப்பு இப்ப அப்படிச் செய்யாமலே எப்படி வந்துச்சுன்னா..?”
“ஆமாம்...”“அதுக்கு நீ முதல்ல பஞ்ச பூதங்கள புரிஞ்சிக்கணும். நீர், நிலம், வான், காற்று, நெருப்புங்கற ஐந்துல நெருப்புங்கறது மட்டும் ஒளிஞ்சிருக்கற ஒண்ணுங்கறது உனக்கு முதல்ல புரியணும்...” “ஒளிஞ்சிருக்கற ஒண்ணா?”“ஆமா... நல்லா யோசி! நீர், கண் எதிர்ல ஏரி, குளம், ஆறு, கடல்னு நிரம்பிக் கிடந்து நம் கண்ணுக்கும் படுது. கண் பார்வையற்றவன் கூட தனக்கு வியர்ப்பதன் மூலம் வியர்வை வடிவத்துல நீரை சுலபமா உணர முடியும்.
காற்றும் எப்பவும் இருக்கு. இது இல்லேன்னா நமக்கு சுவாசமில்லை. நாம உயிரோடயும் இருக்க முடியாது. நிலத்து மேலதான் நாம இருக்கோம். எனவே அதுவும் மறைவா இல்லை. வான்கற வெளிலதான் கை காலை வீசி நடமாட்றோம். ஆக, நான்கும் மிக வெளிப்படையா இருக்கு. இதுல நெருப்பு மட்டும் மனிதன் உண்டாக்கினாதான் அது வெளிப்படும். அது இந்த நான்கு பூதத்துக்குள்ளதான் ஒளிஞ்சிருக்கு. ஒளிஞ்சிருக்கறதைத்தான் நாம தீக்குச்சி கொண்டு பிடிக்கறோம். சரிதானே?”
மண்ணாங்கட்டியார் புதிதாக எதையும் பேசிவிடவில்லை. ஆனால், அசோகமித்திரனுக்கு அந்த பழைய விஷயம் அவர் சொன்ன விதத்தில் புதிதாக இருந்தது மட்டுமல்ல, நெருப்பு மறைந்தே உள்ளது என்கிற ஒரு நிஜமும் அப்போதுதான் உறைத்தது.“ஆமாம் சாமி... அது எப்பவும் மறைஞ்சுதான் இருக்கு. நம் தேவைக்கு நாம அதை உருவாக்கிக்கறோம்கறதுதான் உண்மை. இங்க நீங்க சும்மா பார்த்தே எப்படி நெருப்பை உருவாக்கினீங்க?”
“ஒரு பூதக்கண்ணாடி வழியாக பாயற சூரிய ஒளி ஒரு சருகை பற்றவைக்கற மாதிரியான ஒரு விஷயம்தான் இது. என் பார்வையை குவிச்சு எனக்குள்ள இருக்கற வெப்பத்
தைக் கடத்தி தீப்பிடிக்க வைச்சேன்...”“பார்க்கறது மூலமா வெப்பத்தைக் கடத்த முடியுமா... அது எப்படி?”“பார்வைய நீ என்னன்னு நினைச்சே? அது ஒருத்தர் மனநிலையை மட்டும் சொல்றதில்ல... அதுக்குள்ற பல விசேஷ சக்திகள் இருக்கு. பாக்கறதாலதான் திருஷ்டியே உருவாகுது. இப்பவும் ஆயிரத்துல ஒருத்தர் அப்படி ஒரு ஆற்றலோடு உன்னைச் சுத்தியே இருக்காங்க. அந்த ஒருவர் உன்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டாலே போதும்... உனக்கு உடம்பு வலி, காய்ச்சல் வந்துடும்.
அந்த ஒருவர் கறந்த பாலைப் பார்த்தா போதும் அது திரிஞ்சிடும்! அப்படி ஒரு பார்வை சக்தி யார்கிட்ட இருக்குன்னும் நமக்குத் தெரியாது. அது யார்கிட்ட வேணும்னா இருக்கலாம். அதனால அப்படி ஒருவரால நமக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னுதான் விபூதி, திருமண், குங்குமத்தை நெற்றிக்கு தரிக்கிறோம்.
இதுல குங்குமத்துல படிகாரம்கற பொருள் இருக்கு. அதுக்கு திருஷ்டியை முறிச்சு திசை திருப்பற ஆற்றல் உண்டு. விபூதி முடிவான ஒண்ணு. அதாவது எல்லாமே எரிஞ்ச பிறகு சாம்பலாவதுதானே இயற்கை! அதுதானே முடிவு? அந்த முடிவான ஒண்ணையும் திருஷ்டியால எதுவும் செய்ய முடியாது. இந்த திருஷ்டியால வெறும் மண்ணையும் ஒண்ணும் பண்ண முடியாது. மண்ணும் முடிவான ஒன்றுதானே?
இதனாலதான் இவைகளைத், தரிக்கற ஒரு பழக்கம் ஒரு கலாசாரமா நம்ம முன்னோர்களால உண்டாக்கப்பட்டது. ஆனா, அது கடைசில இந்துக்களுக்கு மட்டுமேன்னு மாறிப்போச்சு...” “நீங்க சொல்ற இந்த விஷயங்கள விஞ்ஞானபூர்வமா நிரூபிக்க முடியுமா?”“ஏன் நிரூபிக்கணும்?”“அப்படி நிரூபிச்சிட்டா யாரும் கேள்வி கேட்க மாட்டாங்களே..?” “நிரூபணங்கள் இரண்டு விதம். ஒண்ணு அனுபவம் - இன்னொண்ணு நிதர்சனம். இதை நீ முதல்ல தெரிஞ்சிக்கணும் - புரிஞ்சிக்கணும்...” “அனுபவம் - நிதர்சனம்னா?”
“நீ இந்த ஊருக்கு வந்து ஒரு நாலஞ்சு நாள் இருக்குமா?” “உம்...”“இங்க உனக்கு பலவித அனுபவங்கள் ஏற்பட்டதா?” “நிச்சயமா...” “இந்த அனுபவங்கள் பொய் இல்லையே?” “நிச்சயமா இல்லை...”
“இதை நீ அப்படியே போய் வெளிய சொல்லும் போது அதை அப்படியே எல்லோரும் ஏத்துப்பாங்களா?” “அப்படி சொல்ல முடியாது...”“ஏன்?” “என் அனுபவம்கறது எனக்கு மட்டுமேயானது. அதை ஒருத்தர் நம்பி ஏத்துக்கறதுங்கறது என்மேல அவருக்கிருக்கற நம்பிக்கையைப் பொறுத்தது...” “அப்ப நம்பாத ஒருத்தரும் இருப்பார்தானே?”
“நிச்சயமா...” “அப்படி ஒருத்தர் நம்பாததால உனக்கு இங்க ஏற்பட்ட அனுபவங்கள் பொய்யாகிடுமா?” மண்ணாங்கட்டியார் ஆணி அடித்தது போல் கேட்ட கேள்வி அசோகமித்திரனை மேற்கொண்டு பேச முடியாதபடி கட்டிப் போட்டது.
இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|