கிசுகிசுல உண்மையும் இருக்கு பொய்யும் இருக்கு!
‘செல்லக்குட்டி ராசாத்தி போறதென்ன் சூடேத்தி...’ என தமிழ் ரசிகர்களை ஆட விட்டவர் மீண்டும் ‘கலகத் தலைவன்’ மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக க்கண்சிமிட்டி ஹாய் சொல்கிறார் நிதி அகர்வால்.‘‘வெயிட்... தமிழ்லயே கேள்வி கேளுங்க. எனக்கு நல்லா தமிழ் தெரியும். இப்படித்தான் நான் எல்லா மொழியும் கத்துக்கறேன்...’’ என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசுகிறார்.
 தமிழ் நல்லா பேசுறீங்களே?
பெங்களூரில் பிறந்ததுனால கன்னடம் தெரியும். முதல் படமே இந்தியில் அமைஞ்சதால இந்தியும் தெரியும். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் இப்படி நடிச்சுக்கிட்டு இருக்கற காரணத்தால் இந்த ரெண்டு மொழிகளும் கூட ஓரளவு வரும். எனக்கு மொழிகள் கத்துக்க ரொம்ப பிடிக்கும். எப்படி எல்லாம் கத்துக்க முடியுமோ அப்படி எல்லாம் கத்துக்க முயற்சி செய்துட்டே இருப்பேன்.
 நிதி அகர்வால் நிதிக்கு யாரு?
மனசுல பட்டதை ஓப்பனா சொல்லிடுவேன். எப்பவுமே. எதையும் மறைத்து ஒளித்து பேசவே தெரியாது. வேலைன்னு வந்துட்டா எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடின உழைப்பை கொடுக்க தயாராக இருப்பேன். எல்லா விஷயத்தையும் எந்த அளவுக்கு பாசிட்டிவா எடுத்துக்க முடியுமோ அந்த அளவுக்கு பாசிட்டிவா எடுத்துக்குவேன்.
 எதையுமே ஓப்பனா வெளிப்படையா பேசுகிற நபர்களை சமூகம் ஒரு கட்டத்தில் வில்லியாகப் பார்க்குமே?
ஆனா, அதே சமூகம் என்னைக்காவது ஒரு நாள் நான் செய்தது சரி, இதுதான் பிராக்டிகல் அப்படின்னு நம்மை ஏத்துக்குவாங்க. சமூகம் என்ன நினைக்கும் அப்படிங்கறத காட்டிலும் நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன் அப்படிங்கறது தானே முக்கியம். பளிச்சுன்னு நினைச்சதை சொல்லிட்டாலே அல்லது உண்மையை பேசிட்டாலே நாம நிம்மதியா தூங்கலாம் இல்லையா.
காஸ்மெட்டிக் விளம்பரங்களை வேண்டாம் என நீங்க சொல்ல இதுதான் காரணமா?
என்னவோ தெரியல... இந்த தோல் நிறம்... சிவப்பா மாத்துறதுக்கு கிரீம்கள்... இந்த மாதிரியான பிசினஸோ கமர்சியலோ எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல. சரும நிறம் ஒரு பெரிய பிசினஸா இந்தியாவிலே மாறிட்டு இருக்கோனு தோணுச்சு. அதனால்தான் கிரீம் விளம்பரங்களுக்கு நோ சொல்லிட்டு வரேன். என்னைக் கேட்டா ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தாலே முகத்தில் வசீகரமும் பளபளப்பும் வரும். கருப்போ, சிவப்போ மாநிறமோ முகத்திலே பளபளப்பு இருந்தாலே நீங்க ஆரோக்கியமா இருக்கீங்கனு அர்த்தம்.
‘கலகத் தலைவன்’ படத்திற்குள் நீங்கள் வந்தது எப்படி?
‘ஈஸ்வரன்’, ‘பூமி’ படத்திலே நடிச்சுட்டு இருக்கும்போதே இந்த பட வாய்ப்பு எனக்கு வந்துருச்சு. இயக்குநர் மகிழ்திருமேனி சார் என்கிட்ட கதை சொல்ல வந்தார். ‘நல்லா முகத்தை கழுவிட்டு வாங்க... ஐலேஷ் கூட இருக்கக் கூடாது’னு சொல்லிட்டார். இந்தப் படத்தில் என்னுடைய கெட்டப் அப்படித்தான். சொன்னால் நம்ப மாட்டீங்க... எனக்கு படத்துல காஸ்டியூம் டிசைனர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கூட கிடையாது. நேச்சுரல் லுக்தான் வேணும்னு டைரக்டர் சார் சொல்லிட்டார்.
உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க!
செம டைரக்டர் அவர். அவருடைய பிளானிங் எல்லாமே கிட்டத்தட்ட ஹாலிவுட் லெவலுக்கு இருக்கும். என் கேரக்டர் செம நேச்சுரலா இருக்கும். மூணாவது படத்தில் நான் திரும்பவும் மெடிக்கல் ஸ்டுடண்டா நடிச்சிருக்கேன். ஹீரோயின்னாலே சிரிச்சுட்டு, விளையாடிட்டு, லூசு மாதிரி சுத்திக்கிட்டு இருக்குற இந்த டெம்ப்ளேட் எதுவும் இல்லாம சீரியஸான மைதிலி என்கிற கேரக்டர். கதைக்கும் ரொம்ப தேவையான ஒரு கேரக்டர் என்னுடையது.
உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்துச்சு?!
அவர் ஒரு தயாரிப்பாளர், அரசியல்வாதி, எம்எல்ஏ, குறிப்பா தமிழ்நாடு சி.எம் மகன்... இப்படி எதுவுமே அவரை நேரில் பார்க்கும் பொழுது காட்டிக்கவே மாட்டார். அவர்கிட்ட அவ்வளவு பணிவும் அமைதியும் இருக்கும். பந்தாவே கொஞ்சம் கூட இருக்காது. அதேபோல ஸ்பாட்டில் ரொம்ப கலகலன்னு எல்லார்கிட்டயும் பேசுவார்.
இயக்குநர் என்ன சொல்றாரோ அதற்கு மறுபேச்சே கிடையாது. அடுத்த நிமிஷம் தனக்குத்தானே ரிகர்சல் பார்த்துட்டு போய் கேமரா முன்னாடி நின்னுடுவார். பேசிக்கலி நான் டான்சிங் கேர்ள். ஆனா, இந்தப் படத்தில் எனக்கு அவர் கூட டான்சிங் மொமெண்ட் கிடையாது. படம் பரபரப்பாக போய்க்கிட்டே இருக்கும். கே.எல்.ராகுல், சிம்பு... இப்படி உங்களைப் பத்தின வதந்தி மட்டும் விதவிதமா வந்துகிட்டே இருக்கே?
நானும் நிறைய படிப்பேன்; தெரிஞ்சுக்குவேன். அதுல சில விஷயங்கள் உண்மை; சில விஷயங்கள் பொய். நாம ஒருதுறையில் இருக்கறோம்னா நம்மைப் பத்தி செய்தி வர்றது நல்லதுதானே! என்னைப் பொறுத்தவரை நான் யார்னு முழுமையா என்னுடைய பெற்றோருக்கு தெரிஞ்சாலே போதும். மத்தபடி என் வேலைதான் இப்போதைக்கு எனக்கு முக்கியம். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு. நிறையபடங்கள்... நிறைய கேரக்டர்கள் செய்ய வேண்டியது இருக்கு.
நாலு மொழிகளில் ரவுண்டு கட்டி நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க... எந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து டூயட் பாட ஆசை?
எந்த ஹீரோவுடன் அப்படிங்கறது தாண்டி எந்த ஹீரோ மாதிரி நடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. சமீபத்தில் ரிலீஸ் ஆன ‘கேஜிஎஃப்’ யாஷ் நடிச்ச கேரக்டரில் லேடி யாஷ் மாதிரி ஒரு கேரக்டர் செய்யணும். அப்பறம் இந்தியில் ரன்பீர் கபூர், தமிழ்ல நிறைய பேர் இருக்காங்க. விஜய் சார், அஜித் சார்... ஹையோ இங்கே லிஸ்ட் நீளம். படம் முழுக்க ஆக்ஷன் மோடில் நடிக்கணும்னு ஒரு ஆசையும் இருக்கு.
உங்க அடுத்த படம் பத்தி சொல்லுங்க?
பவன் கல்யாண் சார் கூட ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். அதுல நான் இளவரசி!
ஷாலினி நியூட்டன்
|