காட்டுக்குள்ளிருந்து விண்வெளிக்கு ஒரு பயணம்...



ராக்கெட் செய்ய இஸ்ரோ சென்று வந்த தமிழக பழங்குடி மாணவர்கள்

 ‘‘நாங்கள் யாரும் கோத்தகிரியைத் தாண்டி ஒரு ஊரைப் பார்த்ததில்லை. அதிலும் நகரம் என்றால் ஊட்டி நகரத்தைக் கூட தெரியாது. இப்போது முதன்முதலாக நகரத்தைப் பார்த்தோம். மைசூர் பேலஸைப் பார்த்தோம். விமானத்தை, ஹெலிகாப்டரை எல்லாம் பார்த்தோம். அட அவ்வளவு ஏன்... இஸ்ரோவுக்குப் போய் விண்வெளிக்கு விடும் ராக்கெட் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொண்டதோடு, ராக்கெட் செய்வதிலும் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம்.

ஒரே நாளில் இதுவெல்லாம் நடந்திருக்கிறது. அது கனவா நினைவா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்கிறோம்..!’’இப்படியொரு குதூகலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி மாணவ - மாணவியர் ஐவர்.  குறிப்பாக கரிக்கையூர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜி.ராஜனும், பி.ரேவதியும் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஆம், நிஜமாகவே இவர்கள் பெங்களூர் ராக்கெட் ஏவுதளமான இஸ்ரோவுக்குச் சென்று நான்கு நாட்கள் விண்வெளிக்கு ஏவும் ராக்கெட் செய்வதில் தம் பங்களிப்பைச் செய்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை என்பவர்கள் இவர்கள் வசிப்பிடத்தைத் தெரிந்துகொண்டால்தான் அதன் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.யாருக்கும் லேண்ட்மார்க் சொல்வதென்றால்... பலரும் அறிந்திருக்கும் ஓர் இடத்தைச் சொல்வதென்பது அவர்கள் அவ்வழியை சுலபமாக அறிய ஏதுவாக இருக்கும். அதிலும் பிரபலப்பட்ட இடம் என்றால் சொல்லவே வேண்டாம்.

அப்படிப் பார்த்தால் இங்கே கோடநாடு என்ற வார்த்தையைச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ‘ஜெயலலிதா சசிகலா மாளிகையா சொல்லுங்க, சொல்லுங்க’ என எதிர்பார்ப்பு மேலோங்கி விடும்.
இங்கே செய்தி அதுவல்ல. இந்த கோடநாடு செல்வதற்கு கோத்தகிரி சென்று அங்கிருந்து ஒரு யு டர்ன் அடித்து ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து கைகாட்டி என்ற இடத்தை அடையவேண்டும். அங்கே பிரியும் இரண்டு சாலைகளில் மேல்சாலையில் பயணித்தால் 17 கிலோமீட்டர் தொலைவில் கோடநாடு. அதுவே கீழ்சாலையில் 26 கிலோமீட்டர் பயணம் செய்தால் எட்டுவது கரிக்கையூர்.

ரொம்ப மோசமான மலைக் காட்டுப்பாதை. யானை, சிறுத்தை, புலி, கரடி என மனிதனை அச்சுறுத்தும் 90 சதவீத வன மிருகங்கள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களே  இந்த ஊரை மையப்படுத்தி இருக்கின்றன. அதில் பங்களாமேடு, சாமக்கோடல், வக்னமரம், கொக்கோடு, முடியூர்... என 18 கிராமங்களைச் சேர்ந்த 131 குழந்தைகள் இந்த கரிக்கையூரில் உள்ள பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில்தான் தங்கிப் படிக்கின்றனர்.

இவர்களில் கொக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். முடியூரைச் சேர்ந்தவர் ரேவதி. இவர்கள் இருவரும்தான் கடந்த 2, 3, 4 மற்றும் 5 தேதிகளில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவும் பயிற்சிக்குச் சென்று திரும்பியுள்ளார்கள். இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே வித்தியாசமான அனுபவம்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு 75 செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களைக் கொண்டு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் பெயர் அகஸ்தியர்.

அதன் பொருட்டு அரசு பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்யும் விதமாக தமிழகம் எங்கும் தேர்வு நடைபெற்றது. அதில் நீலகிரி மலை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் ஐந்து பேரைப் பங்கேற்க வைக்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. மற்ற மாவட்டங்களில் தேர்வு வைத்து தேர்ந்தெடுத்தது போல் அல்லாமல், இந்த மாவட்டத்திலேயே ரொம்பவும் உள்ளடங்கி இருக்கும் பழங்குடியின பள்ளிகளில் நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேர்வு செய்வது என முடிவு செய்துள்ளனர்.

அதில்தான் இந்த கரிக்கையூர் பள்ளியும் இந்த இரண்டு மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர செங்கரையைச் சேர்ந்த மஞ்சுளா, ஏ.சரவணன், கீழ்கோத்தகிரி அரசுப்பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கும் மாணவன் எம்.சரவணன் ஆகியோரும் இதற்குள் வந்துள்ளனர்.

இவர்கள் இஸ்ரோவுக்கு வரும் முன்னர், அதைப்பற்றி அறிந்துகொள்ள முறையான பயிற்சி வகுப்புகளும் இஸ்ரோவே ஆன்லைன் மூலம் நடத்தியிருக்கின்றது. இப்படி நடந்த எட்டு வகுப்புகளில் பயிற்சிகள் பெறுவதற்கு இந்த மாணவர்களிடம் செல்ஃபோன் இல்லாததால் தன் செல்ஃபோனையே அவர்களுக்கு பயன்படுத்தத் தந்திருக்கிறார் இவர்களை வழிநடத்திய இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்.

அது மட்டுமல்லாது, இவர்கள் இருக்கும் இடத்தில் ஆன்லைன் இணைப்புக்கு டவர் கிடைக்காது. எனவே, டவர் கிடைக்கும் இடத்திற்குச் சென்று பாடங்களை, தானே கேட்டு, அதை மாணவர்களுக்கு விரிவாக பாடம் எடுத்து உதவியிருக்கிறார். இஸ்ரோவுக்குப் போய் வரும் செலவுகளை ஆசிரியரே ஒரு பகுதி ஏற்றிருக்கிறார். தவிர இவர்கள் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் தலா ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கியிருக்கிறார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டு ஆசிரியர்கள் துணையோடு இஸ்ரோவுக்குப் பயணமாகியிருக்கிறார்கள்.

போகும் வழியில் இவர்கள் மைசூர் அரண்மனைக்குச் சென்றுள்ளார்கள். வெறும் பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்த மைசூர் அரண்மனையை நேரில் பார்த்து வியந்திருக்கிறார்கள். பெங்களூரின் பெரிய பெரிய கட்டடங்களைப் பார்த்து அதிசயித்திருக்கின்றனர். விமான நிலையத்தின் அருகிலேயே சென்றதால் அங்கு விமானங்களும், ஹெலிகாப்டரும் நெருக்கமாக பறப்பதைக் கண்டு பரவச எல்லைக்கே சென்றுவிட்டனர்.

இதுவே இப்படி என்றால் இஸ்ரோ வளாகத்தில் கண்ட காட்சிகள், செய்யப்பட்ட செய்முறைகள், விஞ்ஞானிகள் பேசிய பேச்சுக்கள் எல்லாமே எப்படி இருந்திருக்கும்? அதைப் பற்றி இந்தப் பயிற்சிக்குச் சென்று வந்த மாணவி ரேவதி, ராஜனிடம் பேசினோம். கண்கள் இன்னமும் விரிய வியப்பு மாறாமலே பேசினர். ‘‘எங்க ஸ்கூலே காட்டுக்குள்ளே இருக்கு. அங்கிருந்து நாங்க குடியிருக்கிற வீடு பெருங்காட்டுக்குள்ளேதான் இருக்கு. ரோடு கிடையாது, லைட்டு கிடையாது. எல்லோரும் மண் வீட்லதான் வசிப்பாங்க.

சிறுத்தை, புலி, கரடி, யானை எல்லாம் பார்த்து பயத்துல நடுங்கியிருக்கோம். விமானம், ஹெலிகாப்டர் பார்த்ததில்லை. பெரிய, பெரிய கட்டடங்கள் பார்த்ததில்லை. கோத்தகிரி தாண்டி எங்கியும் போனதில்லை. இப்ப நாங்க போய்ப் பார்த்த உலகமே வேற. ராக்கெட் செய்யறது எப்படி, அதை விண்ணில் ஏவறது எப்படி, அது எந்த மாதிரியான எரிபொருள்ள இயங்குதுன்னு எல்லாமே அங்கே போய் கத்துக்கிட்டோம். எங்க பாஷை மலைநாட்டு பாஷை. அது எங்க வாத்தியாருக்கு நல்லா புரியும்.

அந்த ராக்கெட் தளத்துல எல்லோரும் தமிழ்லதான் பேசினாங்க. அது இங்கிலீஷ் கலந்து கலந்து வந்தது. அதை தெளிவா எங்க வாத்தியார் கூட வந்ததால விளக்கிச் சொல்ல முடிஞ்சுது.
அதுலயும் வேற பள்ளிக்கூட மாணவர்களைக் கூட நாங்க இங்கேதான் சந்திக்கிறோம். அவங்க கூடவும் எங்களை குழுக்குழுவா பிரிச்சு விட்டுட்டாங்க. அதனால எங்களுக்கு அவங்க கூடவும் பழகற வாய்ப்பு கிடைச்சுது.

நாங்க கத்துக்கிட்டதை எங்க ஃபிரண்ட்ஸ்கிட்டவும் பகிர்ந்துக்கிட்டிருக்கோம். உலகத்தில் இப்படியெல்லாம் இருக்குங்கறது எங்களுக்கு மட்டுமல்ல, எங்க ஃபிரண்ட்ஸ்களும் ஆச்சர்யமாத்தான் கேட்டுக்கிட்டாங்க!’’ என்றனர்.இவர்களை அழைத்துச் சென்ற கரிக்கையூர் பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் உற்சாகமாகப் பேசுகிறார்: ‘‘நாங்க ஆசிரியரா, மாணவரான்னு நாலு நாள் மறந்து போனோம். அந்த அளவுக்கு இந்த மாணவர்களால் நாங்களும் இஸ்ரோவுக்குப் போய் கத்துக்கிற வாய்ப்பு கிடைச்சது பெருமகிழ்ச்சி.

அதுக்கு இந்தப் பயிற்சிக்கு வாய்ப்பளித்த அகஸ்தியர் அறக்கட்டளைக்கும், அரசுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்!’’ என்றவர், தொடர்ந்து இஸ்ரோவினுள்  தாமும், மாணவர்களும் சேர்ந்து கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாகச் சொன்னார்:   ‘‘இஸ்ரோவுக்குள் எங்களை மிரட்டின இடமே க்ளீன் ரூம்தான்.

இது எவ்வளவு சுத்தம்ன்னா 99.999 சதவீதம் சுத்தம். இங்கேதான் ராக்கெட்டுக்கு மல்டி லெவல் கேமரா ஃபிக்ஸ் செய்கிறார்கள். அதாவது விண்ணில் ஏவப்படும் செயற்கைக் கோள் அங்கே சிறு தூசியைக்கூட நுண்ணியஅளவில் படம் எடுக்கும். அப்படி படம் எடுக்கும்போது இங்கே ஒரு தூசி ஒட்டிக்கொண்டுவிட்டால் அது விண்ணில் படம் பிடித்து அனுப்பும்போது அதன் அத்தனை கண்டுபிடிப்புகளையும் தவறாக்கி விடும் என்று விஞ்ஞானிகள் விளக்கும்போது ஆசிரியர்களான நாங்களே ஆச்சர்யப்பட்டுப்போனோம்.

அதேபோல் ராக்கெட்டுக்கு நிரப்பும் எரிபொருள் மிகவும் வித்தியாசமானது. நைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த மூன்று விதமான எரிபொருள். லிக்விஃபைடு செய்து அதிகபட்ச அழுத்தத்தில் வைக்கிறார்கள். காற்று நிரப்பிய பலூன் காற்றை வெளியேற்றும்போது எப்படி வேகமாகச் செல்கிறதோ அந்த மாதிரிதான் இதுவும். அடுத்ததாக சேட்டிலைட்டின் மெட்டீரியல் பெரும்பாலும் எடைகுறைவான அலுமினியமே. நாங்கள் போனதும் மாணவர்களை டீம் பிரித்து விட்டார்கள். ஒவ்வொரு டீமுக்கும் ஆரியபட்டா, கலாம், கல்பனா என ஒவ்வொரு பெயர் இருந்தது. அதனால் வெவ்வேறு மாவட்ட,ஊர், பள்ளி மாணவர்கள் இரண்டறக் கலந்தனர்.

மாணவர்களுக்கு ராக்கெட் செய்முறை கற்றுக் கொடுக்க வந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தவிர மற்றவர்கள் தமிழிலேயே பேசினர். இரண்டாம் நாள் மயில்சாமி அண்ணாதுரை வந்தார். மூன்றாம் நாள் விஞ்ஞானி சிவன் இருந்தார். இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்கள் பற்றியெல்லாம் சொன்னார்கள். அதிலும் கடைசியாக போன மாதம் ஏவப்பட்ட மார்க் - 3 சேட்டிலைட், இப்போது எப்படி அதன் ஆர்பிட்டில் இயங்குகிறது என்பதை  மானிட்டரில் காட்டும்போது எங்களை நாங்களே மறந்துவிட்டோம்.

குறிப்பிட்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு அது இலக்கில் சுற்றாமல் ஆர்பிட் மாறிடுச்சுன்னா, அதை சுற்றுவழிப்பாதைக்குக் கொண்டு வர என்ன செய்வோம், எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று விளக்கியது, விண்வெளியிலேயே பயணம் செய்த அனுபவத்தை ஏற்படுத்தியது.இன்னுமொரு முறை இஸ்ரோவுக்குள் போக மாட்டோமா, அங்கேயே வாழ மாட்டோமா என்றும் கூட ஏங்குது மனம்!’’ என்று உணர்ச்சி பொங்கக் கூறி முடித்தார் பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியரான சமுத்திர பாண்டியன்.

கா.சு.வேலாயுதன்