பயோடேட்டா-இந்தியா Vs பாகிஸ்தான்



உலகில் நடக்கும் அனைத்துவிதமான விளையாட்டுப் போட்டிகளிலும் குறிப்பிட்ட இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பும். பரபரப்பும் இருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர், எல்லைப் பிரச்னைகள் கிரிக்கெட்டிலும் பிரதிபலிக்கிறது. இரு அணிகளும் மோதும்போது எப்போதுமே மைதானம் நிறைந்திருக்கும். தொலைக்காட்சி சேனல்களிலும் பார்வைகள் கோடிகளில் எகிறும்.
ஐம்பது வருடங்களாக தொடர்கிறது இந்த கிரிக்கெட் யுத்தம்.

டெஸ்ட் : தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில், 1952ம் வருடம் அக்டோபர் 16ம் தேதியன்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. நான்கு நாட்கள் கொண்ட போட்டி இது. இந்தியாவை லாலா அமர்நாத்தும், பாகிஸ்தானை அப்துல் காதரும் தலைமை தாங்கினார்கள். டாஸ் வென்ற அமர்நாத் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் 372 ரன்களைக் குவித்தது இந்தியா. அடுத்து விளையாடிய பாகிஸ்தான், முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டு, ஃபாலோயிங் ஆனைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான், 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 2007ம் வருடம், டிசம்பர் 8 முதல் 12ம் தேதி வரை நடந்த போட்டிதான் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொண்ட கடைசி டெஸ்ட் போட்டி. இந்தப்போட்டி டிராவில் முடிந்தது. இதற்குப்பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் விளையாடவே இல்லை. இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 59 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் பாகிஸ்தான் 12 போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வென்றுள்ளன. 38 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

ஒரு நாள் போட்டி : பாகிஸ்தானின் உள்ள குவெட்டா நகரில் வீற்றிருக்கும் ஆயுப் தேசிய மைதானத்தில், 1978ம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. 40 ஓவர்கள் கொண்ட  போட்டி இது. இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த கபில் தேவ் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியும் இதுவே.

இந்தியாவை பிஷன் பேடியும், பாகிஸ்தானை முஸ்தாக் முகமதுவும் வழிநடத்தினர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைக் குவித்தது.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 166 ரன்களை மட்டுமே எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இந்தப் போட்டியிலிருந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான கிரிக்கெட் யுத்தம் ஆரம்பித்தது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில், 2019ம் வருடம் ஜூன் 16ம் தேதியன்று விளையாடியதுதான் இதுவரை இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட கடைசி ஒருநாள் போட்டி. இதுவொரு உலகக்கோப்பைக்கான லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 336 ரன்களைக் குவித்தது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான். இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டது. அதனால் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 40 ஓவர்களில் 302 ரன்களை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானால் வெற்றி பெற முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

212 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இந்த டக்வொர்த் லிவீஸ் முடிவு பெரும் பிரச்னையைக் கிளப்பியது. இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 132 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் பாகிஸ்தான் 73 போட்டிகளிலும், இந்தியா 55 போட்டிகளும் வென்றுள்ளன. 4 போட்டிகளுக்கு ரிசல்ட் தெரியவில்லை.

உலகக்கோப்பை : இதுவரை நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் ஏழு முறை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியுள்ளன. இதில் ஏழு போட்டிகளிலும் இந்தியாதான் வென்றது. டி20 உலக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளிலும் ஏழு முறை இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தியுள்ளன. இதில் 5 போட்டிகளில் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.

டி20 : தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மியட் மைதானத்தில், 2007ம் வருடம், செப்டம்பர் 14ம் தேதியன்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. இதுதான் டி20க்கான முதல் உலக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைத் தோனியும், பாகிஸ்தானை சோயிப் மாலிக்கும் தலைமை தாங்கினார்கள். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தானும் 20 ஓவர்களில் 7 விக்கெடுகளை இழந்து 141 ரன்களை எடுத்தது. இந்தப்போட்டி டையில் முடிவடைய, பவுல் - அவுட் முறையில் இந்தியா வென்றது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் 2022ம் வருடம், அக்டோபர் 23ம் தேதியன்று இரு அணிகளும் மோதிக்கொண்டன. இதுவும் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  

சமீபத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொண்ட டி20 போட்டியும் இதுவே. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 159 ரன்களைக் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா, 20வது ஓவரின் கடைசிப்பந்தில் 160 ரன்களை எட்டி வெற்றியைச் சுவைத்தது. இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 12 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.

ரன் அவுட் : தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் 1999ம் வருடம், பிப்ரவரி 4 முதல் 7ம் தேதி வரை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் டெஸ்ட் போட்டி நடந்தது.
இந்தப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானி அணி தடுமாறி விளையாடிக் கொண்டிருந்தது. இந்தியாவின் சுழல் மன்னன் அனில் கும்பிளே 9 விக்கெட்டுகளைச் சாய்த்துவிட்டார். ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்பில் அவர் பந்து வீசிக்கொண்டிருந்தார்.

கும்பிளேவுக்கு விக்கெட்டை பறிகொடுக்கக்கூடாது என்று வக்கார் யூனிஸும், வாசிம் அக்ரமும் விளையாடினர். ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை கும்பிளே எடுக்கக்கூடாது என்று வக்காரை ரன் அவுட் ஆகச்சொல்லியிருக்கிறார் அக்ரம். இந்த ரன் அவுட் நிகழ்வை பின்னாட்களில் அக்ரமே வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், நடந்ததே வேறு. ஆம்; வாசிம் அக்ரமின் விக்கெட்டைச் சாய்த்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார் கும்பிளே.ஆச்சர்யம் : அமீர் எலாஹி, கல் முகமது, அப்துல் காதர் ஆகிய வீரர்கள் இந்தியாவுக்காகவும், பாகிஸ்தானுக்காகவும் விளையாடியிருக்கின்றனர்.


த.சக்திவேல்