வடிவேலுதான் எங்கள் விளம்பரத் தூதர்! இது விக்னேஷ்காந்தின் கதை



அடுக்கி வைக்க இடம் இல்லாதளவுக்கு ஷீல்டுகள் நிறைந்த இடமாக இருக்கிறது நடிகர் விக்னேஷ்காந்தின் அலுவலகம். ரேடியோ ஜாக்கி, டிவி ஆங்கர், நடிகர் என பல பரிமாணங்களைக் கடந்து இப்போது சேட்டிலைட் சேனல் அதிபர் எனுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் விக்னேஷ்காந்த். சமீபத்தில் இவர் நடித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ வெளியானது. விரைவில் ‘கலகத் தலைவன்’, சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’, முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் வெளிவரவுள்ளன.

உங்களுக்கும் கேமராவுக்குமான பந்தம் எப்போது ஆரம்பமானது?

எனக்கும் கேமராவுக்குமான பந்தம் என்பதைவிட எனக்கும் மைக்குக்குமான பந்தம் எப்படி ஆரம்பமானது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். திருச்சியில் உள்ள ஒரு லோக்கல் சேனல் இண்டர்வியூவுக்கு சென்றபோது, அங்கிருந்த நண்பர், ‘உங்கள் குரல் நன்றாக இருக்கிறது.
ஆனால், உங்கள் உருவத்துக்கும், நிறத்துக்கும் டிவி செட்டாகாது, நீங்க ஏன் ரேடியோ ஸ்டேஷன் வேலையில் சேரக்கூடாது’ என்று கேட்டார். அவர் என்னை மட்டம்தட்டுகிறார் என்று எடுத்துக்கொள்ளாமல் அதில் உள்ள ரியாலிட்டியைப் புரிந்து கொள்ளமுடிந்தது. அப்படித்தான் ரேடியோவில் என்னுடைய லைஃப் ஆரம்பமானது.

ஸ்கூல் படிக்கும் காலத்தில் என்னுடைய பொழுதுபோக்கு ரேடியோ கேட்பது. அந்த சமயத்தில் நண்பர்கள் திருட்டுத்தனமாக வெவ்வேறு வேலைகள் செய்யும்போது நான் ரேடியோ கேட்பேன். தூங்காமல் ரேடியோ கேட்ட நாட்கள் அதிகம். அப்படித்தான் ரேடியோ ஜாக்கியாகணும் என்ற ஆரவம் பிறந்தது.
அதுக்காகவே சென்னை வந்தேன்.கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்ததிலிருந்து வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். என்னுடைய கல்லூரி மதுராந்தகம் பக்கத்தில் இருந்தது. தூரம் அதிகம் என்ற காரணத்தால் பிரபல ரேடியோ நிறுவனங்களின் வாய்ப்புகளை இழந்தேன். கடைசியாக, மூன்றாம் ஆண்டு படிக்கும்போது  இன்னொரு பிரபல நிறுவனத்துல வேலை கிடைத்தது. அந்த வகையில் மைக்குடன்தான் என்னுடைய கலை வாழ்க்கை ஆரம்பமானது.

சின்னத்திரைக்கு எப்போது வந்தீர்கள்?

சொல்லும்போது காமெடியாகத் தெரியும். டிவி நிகழ்ச்சிகள் அதிகம் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் எப்படியாவது டிவி ஆங்கராக வரணும் என்று ஆசைப்பட்டேன். அந்த சமயத்தில் அப்துல் ஹமீது, ஆனந்தக்கண்ணன், கோபிநாத் ஆகியோர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். இந்தியில் கபில் ஷர்மா, கரண் ஜோகருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த வரிசையில் நானும் ஒரு பெரிய ஆங்கராக வரணும்னு ஆசைப்பட்டேன்.

என்னுடைய ஆசை ஒரு நாள் நிறைவேறியது. பல்வேறு சேனல்களில் வேலை செய்தேன். திருப்புமுனையாக சன் தொலைக்காட்சியில் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது. ‘சன் குடும்ப விருது’, ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சும்மா கிழி’ நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் பொறுப்பையும் கொடுத்தார்கள்.

யூ டியூப் பக்கம் எப்போது கவனம் திரும்பியது?

டிஜிட்டல் வளர ஆரம்பித்தபோது கவனம் யூ டியூப் பக்கம் திரும்பியது. அப்படி ஆரம்பித்த சேனல் ‘ஸ்மைல் சேட்டை’. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை ஜியோவுக்கு முன்பு, ஜியோவுக்கு பின்பு என்று பிரித்துவிடலாம். ஜியோவுக்கு முன் நம்முடைய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு ரசிகர்கள் பார்த்து பாராட்டுவார்கள். ஜியோவுக்குப் பின் ஒன்றரை ஜிபி டேட்டாவை எப்படி தீர்ப்பது என்று மக்கள் யோசித்த நிலையில் எங்களுக்கு சந்தாதாரர்கள் அதிகமாகக் கிடைத்தார்கள். குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தோம்.

நடிகராக எப்போது அவதாரம் எடுத்தீர்கள்?

சினிமா எப்போதும் என்னுடைய ஆசையாக இருந்ததில்லை. என்னை நடிகனாக்கிய பெருமை ‘ஹிப்ஹாப்’ ஆதி ப்ரோவுக்கே சேரும். அவர்தான் ‘மீசைய முறுக்கு’ படத்துல நடிக்க வைத்தார். சினிமாவை பெரிதாக எடுத்துக்கொள்ளாத எனக்கு அந்தப் பட ஹிட்டுக்குப் பிறகுதான் சினிமாவின் ரீச் எவ்வளவு பெரியது என்று தெரிந்தது.

இன்றைய தேதிக்கு நான் பத்து, இருபது படங்களில் நடித்திருந்தாலும் என்னைச் சந்திக்கும் ரசிகர்கள் ‘மீசைய முறுக்கு’ படத்தைப் பற்றி பேசாமல் இருந்ததில்லை. என்னுடைய அப்பா, அம்மாவும் படம் பார்த்துவிட்டு மகன் ஏதோ சாதனை புரிந்துவிட்டதாகக் கண் கலங்கினார்கள். சினிமாதான் மாஸ் என்று இப்போது முழு கவனத்தையும் சினிமா பக்கம் செலுத்தி வரு
கிறேன்.

சினிமாவில் உங்கள் பாதை எது என்று முடிவு செய்துவிட்டீர்களா?

சினிமாவுக்கு வருவதற்கு முன் ரேடியோ ஜாக்கியாகணும், டிவி ஆங்கராக வரணும்னு பல ஆசைகள் இருந்தது. இப்போது என்னைக் கேட்டால் நல்ல குணச்சித்திர நடிகராக வரணும் என்பதே என்னுடைய ஆசை. கலைவாணர் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா, மணிவண்ணன் இந்த மூன்று ஜாம்பவான்கள்தான் என்னுடைய ரோல்மாடல்கள், இன்ஸ்பிரேஷன்.

இவர்களுடைய நிழல்படங்கள்தான் என்னுடைய அலுவலகத்துக்கு அழகு சேர்த்துள்ளது. இந்த மூன்று ஜாம்பவான்கள் சிரிக்க வைத்தால் சிரிப்போம், பயமுறுத்தினால் பயந்துவிடுவோம், அரசியல் பேசினால் அரசியல் பேசுவோம். அப்படி மக்கள் மனதில் பதிந்துவிட்ட அவர்களைப்போல் பெயர் எடுக்கவில்லையென்றாலும் ஜூனியர் மணிவண்ணன் எனுமளவுக்காவது பெயர் எடுக்க வேண்டும்.

ஹீரோ வாய்ப்பு வருகிறதா?

கதையின் நாயகன் என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் சில வந்தது. ஹீரோவாக ஆசை இருக்கிறதா, இல்லையா என்று கேட்டால் ஆசை என்பதைத்தாண்டி சினிமாவை பிசினஸாக பார்க்கிறேன். என் போஸ்டரைப் பார்த்து நான் யார் என்று தெரியுமளவுக்கு வந்தபிறகுதான் ஹீரோவாக நடிக்கணும். இல்லையென்றால் ஓ.டி.டி.க்கு பண்ணலாம். ஒரு வெப் சீரீஸ்ல ஹீரோவாக பண்ணினேன். அதில் ஹர்பஜன்சிங் நடித்திருந்தார்.

ஒரு யூ டியூபராக நிறைய ப்ராங்க் கால் பண்ணியிருப்பீர்கள். அதுமாதிரி உங்களுக்கு மணிரத்னம், ஷங்கர் ஆபீஸிலிருந்து பேசுவதுபோல் ப்ராங்க் கால் வந்துள்ளதா?
இதுவரை அப்படியொரு கால் வரவில்லை. ஆனால், அந்த ஜாம்பவான்களைப் பேட்டி எடுத்துள்ளேன். அவர்களுடைய கால் வருமளவுக்கு நான் வளர வேண்டும் என்ற ஆர்வம், முயற்சி இருக்கிறது.

அதேமாதிரி ஹீரோக்களில் ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது ஒரு ஃபிரேமிலாவது நடிக்க வேண்டும் அல்லது அவரை பேட்டியாவது எடுக்க வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம்.உங்கள் டேபிள் மீது ‘ஜெயிக்கிற வரைக்கும் தோற்க்கணும்’ என்ற ஒரு வாசகம் அடங்கிய போட்டோ ஃபிரேம் வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எங்கு தோற்றுப்போனீர்கள்? எங்கு ஜெயித்தீர்கள்?

இன்றளவும் அது நடக்கிறது. ஒவ்வொரு கட்டத்துல அது வெவ்வெறு விதமாக மாறியுள்ளது. யூ டியூப் ஆரம்பித்தபோது சிவசுப்ரமணியம் என்ற தம்பி என்னுடன் சேர்ந்து பணியாற்றினார். திடீர் என்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதுதான் என்னுடைய மிகப் பெரிய வீழ்ச்சி. அந்த சமயத்தில் ‘சுட்டி’ அரவிந்தன் அண்ணன் எனக்கு தோள் கொடுத்தார். அவர்தான் என்னுடைய காட்
ஃபாதர். இப்போது என் நிறுவனத்துல நூற்றுக்கணக்கில் சிவசுப்ரமணியம்கள் இருக்கிறார்கள்.

அடுத்து, ஸ்மைல் சேட்டையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம். கடுமையான உழைப்பு மூலம் எட்டு லட்சம் சந்தாதாரர்கள் இருந்த நிலையில் வெளியே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மறுபடியும் ஜீரோவிலிருந்து ஆரம்பித்தேன். அப்போது  ஆரம்பித்ததுதான் ‘பிளாக்‌ஷிப்’. இப்போது எங்கள் ‘பிளாக் ஷிப்’ குடும்பத்தில் முந்நூறு பேர் வேலை செய்கிறார்கள். வெற்றி, தோல்வி சமயங்களில் ஒரே மனநிலையில் இருந்துவிடுவேன். மேடு, பள்ளங்கள் இருப்பது பிடித்திருக்கிறது. எனக்கு கிடைத்ததைவிட கிடைக்காமல் போன விஷயங்களால் நல்லா இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் காமெடிக்கான வெற்றிடம் இருக்கிறதாக நினைக்கிறீர்களா?

இப்போது மிக்ஸ்டு ஆடியன்ஸுக்கு படம் பண்ண வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. முன்பு ஒரு காமெடி படத்தை எல்லாரும் ரசிப்பார்கள். இப்போது 90ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ், பொதுவான ஆடியன்ஸ்களின் ரசனை வேறுவிதமாக இருக்கிறது. இந்த மூன்று வகை ஆடியன்ஸை திருப்திப்படுத்துகிறோமா என்பதுதான் கேள்விக்குறி. இது வெற்றிடம் என்று சொல்லமுடியாது. காமெடியைவிட ஹீரோவுக்கு தட்டுப்பாடு இருக்கிறது என்று தோன்றுகிறது.

விக்னேஷ்காந்த் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் யார்?

எஸ்.கே. அண்ணன் என்னுடைய வாழ்க்கையில் கலங்கரை விளக்கம். கல்லூரி சமயத்திலிருந்து அவருக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது. நான் முதன் முதலாக பேட்டி கண்ட ரேடியோ, டிவி செலிபிரிட்டி அவர்தான். முதன் முதலாக ஸ்டூடியோ ஆரம்பித்தேன். அவர்தான் திறந்துவைத்தார். என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டவர். எங்களுடைய முதல் படமான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தையும் அவர்தான் தயாரித்தார். பி.எஸ். வேல்யூ ஓ.டி.டி.யை அவர்தான் லாஞ்ச் பண்ணினார். சேட்டிலைட் சேனல் ஆரம்பிக்கணும் என்று சொன்னதும் அவர்தான்.

இப்படி என்னுடைய எல்லா முதல் நிகழ்வுகளிலும் அவர் இருக்கிறார். என்னுடைய கல்யாணத்துக்கு வரவேற்பு, திருமணம் என்று இரண்டு வேளயும் வந்து கூடவே இருந்து வாழ்த்தியது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள். என் மீது மற்றவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்பே என் மீது நம்பிக்கை வைத்தவர் சிவகார்த்திகேயன்.

கோடி கோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிக்காதவர் வடிவேலு. அவர் உங்கள் நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக மாறியது எப்படி?

அது ஒரு அதிசயம். சில நேரங்களில் சில முயற்சிகள் எடுக்கும்போது கைகொடுக்கிறது. நாங்கள் ‘டிஜிட்டல் நட்சத்திரங்கள்’ விருது முதன் முறையாகக் கொடுத்தபோது கமல் சார் சிறப்பு விருந்தினராக வந்தார்.

இப்போது ‘ஸ்கூல்’ படம் பண்றோம். பி.சி.சார் கேமரா. இது ஒரு அதிசயம்.வடிவேலு அண்ணனிடம் பல நிகழ்ச்சிகளுக்காக முயற்சி எடுத்தோம். இப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. நாங்கள் அப்ரோச் பண்ணியபோது ‘சின்ன பசங்க நல்லா வரணும்’னு வாழ்த்தினார். முதல் முறையாக அவர் விளம்பர தூதராக நடிப்பது இதுதான் முதன் முறை.

எஸ்.ராஜா