மாயா...



காலேஜ் முடிச்சு ஐந்து வருஷம் ஆச்சு. எனக்கு ஏத்த வேலை கிடைக்கல. சரி, வெளியூர்ல முயற்சி செய்யலாம் என்று பிரபலமான அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பித்தேன்.
ஒரு வாரத்தில் ‘நேர்முகத் தேர்விற்கு உடன் வரவும்’ என்று மெயில் வந்தது.நேர்முகத் தேர்வுக்குப் போக அப்பாவிடம் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தைக் காட்டி, அனுமதி கேட்டேன்.
‘அனுப்பலாமா, வேண்டாமா..?’ என்று அப்பா யோசித்த அந்தச் சில நொடிகளில்... “உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன், அயலூரில் ஆனை பிடிக்கப் போறானாம்...” முணுமுணுத்தது என் பாட்டி.

“ஏம்மா, சும்மா இருக்க மாட்டே. ஏதோ அவனா கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சு இந்த வாய்ப்பு வந்திருக்கு. வாழ்த்தி அனுப்பாம, வசனம் பேசற..?”

மும்பை செல்ல சென்னை எக்ஸ்பிரசில் டிக்கெட் புக் செய்திருந்த நான், விடியற்காலை ஆறு மணிக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையமான சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து என் இருக்கையைத் தேடி, என் உடைமைகளைக் கீழே வைத்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அமர்ந்தேன்.

எனக்கு எதிரில் ஒரு பெண். தப்பு, தப்பு... ஒரு தேவதை! உட்கார்ந்து காதுகளில் இயர்போனில் கண்களை மூடியபடி எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள்.அவள் மெய்மறந்து கண் மூடியிருந்ததால், அவளை ஸ்கேன் செய்ய உதவியாக இருந்தது.

சில நிமிடங்களில் கண்களைத் திறந்து, குளிர்பானம் விற்றுக் கொண்டிருந்த பையனிடம், “ஹலோ, ஒரு கூல்டிரிங்ஸ் வேணும்... டூ தவுசண்டிற்கு சில்லறை இருக்கா..?”

“இந்தாம்மா... என் மொத்தச் சரக்கே எட்நூறு ரூபாய்தான்...” என்று கூறிக் கொண்டே அவன் இடம் நகர்ந்தான்.

‘என்ன இது... என் தேவதைக்கு இல்லையா..?’

“தம்பி... தம்பி... இங்க வாங்க. அவங்களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் கொடுங்க...”
“சார்... சார்... நோ சார். கேண்டின் கோச் போய் வாங்கிக்கறேன்...”
“பரவால்லீங்க, சில்லறை மாத்தி அந்தக் காசக் கொடுத்திருங்க...”
“சார், காசக் கொடு சார். அப்பறம் பேசு...”

“தேங்க்ஸ் சார், சேஞ்ச் மாத்தித் தந்துடறேன். ஆமா, நீங்க மும்பையா போறீங்க..?”

“இல்ல, திருச்சி மலைக்கோட்டைக்குப் போறேன்...” என்று சொல்ல வாய் திறந்தேன். மனச்சாட்சி மண்டையில் அடித்து, ‘மடையா... மடக்கு, மடக்கு’ என்றது.
“அட, சரியாக் கண்டுபிடிச்சுட்டீங்களே... ஆமா, ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போறேன்...”

“என்னது..?”

“நேர்முகத் தேர்வு. இன்டர்வியூ...”“ஓகே... ஓகே... ஆல் த பெஸ்ட். நான்கூட மடோனா ஏர்லைன்ஸ் என்ற ஒரு புது ஏர்லைன்ஸ்ல ஏர்ஹோஸ்டஸ் ஜாபுக்குத்தான் இன்டர்வியூ...”
“வாழ்த்துக்கள். உங்களுக்கு வெற்றி கிடைச்சு, வேலைல சேரணும். நான் அந்த விமானத்தில பயணியா வந்து உங்களப் பார்த்து ரசிக்கணும்...”“சார், நீங்க க்யூட்டாப் பேசறீங்க. ஐ லைக் இட்...”என் இதய மேடையில் நாற்பது ஐம்பது பெண்கள் வெள்ளை உடையில் சுற்றிவர, நானும் அவளும் நடந்து வருவது போல் ஒரு காட்சி ஓடியது.கடப்பால, சாப்பாடு என் கைங்கர்யம்.

நான் என் குடும்ப விவரத்தைச் சொல்ல, அவளும் சொன்னாள். அவள் விமானப்படை உயர் அதிகாரியின் ஒரே மகள். அம்மா வீட்டில் வகை வகையா சமைத்துப் போடுவாளாம். வீடு கத்திப்பாரா மிலிட்டரி காலனியிலாம்.குல்பர்காவில் இரவுச் சாப்பாடு அவள் ஆர்டர் செய்தாள். நான்தான் காசு கொடுத்தேன்.நிறையப் பேசினோம்.

அவள் மும்பையில் கிங் சர்க்கிளில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்திருக்காளாம். என்னைப் போலவே மறுநாள் சென்னை திரும்புகிறாளாம். என்னையும் - நான் விரும்பினால் - அவளின் அறையிலேயே தங்கச் சொன்னாள்.பேசிக் கொண்டே இருக்கும்போது ஒரு போன் வந்தது. பதற்றத்துடன் பேசினாள் என் தேவதை.

“என்ன.... இன்டர்வியூவுக்கு லேப்டாப் வேணுமா..? என்னம்மா இப்ப சொல்ற..? நான் என்ன செய்வேன்..? இங்க யாருகிட்ட கேப்பேன்..? புல்ஷிட்!” என்று செல்ஃபோனை வைத்தாள்.

“என்னங்க பிரச்னை..? நான் தெரிந்து கொள்ளலாமா..?”

“சார், இன்டர்வியூவுக்கு லேப்டாப் எடுத்து வரணுமாம். இப்பப் போய் எங்க மம்மி சொல்றாங்க. நான் என்ன செய்வேன்..?”
“கவலப்படாதீங்க. என் லேப்டாப்பைத் தர்றேன். கூல்... கூல்...”“அப்ப, உங்களுக்கு..?”

“எனக்குத் தேவையில்ல...”“தேங்க்ஸ்... தேங்க்ஸ்...” என்று கூறியபடி என் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.பெட்டியைத் திறந்து லேப்டாப்பை எடுத்து அவளிடம் கொடுத்து, அதை எப்படி இயக்குவதென்று சொன்னேன்.“பேட்டரி லோவா இருக்கே...” என்றாள். மீண்டும் என் பெட்டியைத் திறந்து சார்ஜரை எடுத்துக் கொடுத்தேன். உடனே சார்ஜ் செய்ய, அவளின் பர்த்தில் இணைத்தாள்.இரவு பன்னிரண்டு மணி வரை பேசினோம், பேசினோம், அவ்வளவு பேசினோம்.

அவளும் மூன்று நான்கு முறை கொட்டாவி விட்டாள். எனக்கும் தூக்கம் கண்ணைச் சொக்கியது.இருவரும் ‘குட்நைட்’ சொல்லிக் கொண்டோம். படுத்தோம்.
காலை ஆறு மணிக்கு தாதர் வந்து நின்றதும்தான் எனக்கு முழிப்பு வந்தது.‘குட்மார்னிங்’ சொல்ல, அவள் படுக்கைக்குக் கண் போனது. பெட்டியில் அவள் இல்லை, அவளது பேக்கும் இல்லை.

பதற்றத்துடன், சக பயணியிடம் கேட்டேன். அவர் சொன்னார் - “அவள் பூனாவிலேயே இறங்கி விட்டாளே...”பேரதிர்ச்சி! ‘இப்படி ஏமாந்து விட்டோமே...’ என்று யோசித்தபடி டிடிஆரிடம் ஓடி, “என் அருகில் பயணம் செய்த பெண் முகவரி வேண்டும், எப்படிக் கண்டுபிடிப்பது..?” என்று கேட்டேன்.

“டேய் தம்பி... அவள் ஓப்பன் டிக்கெட் வாங்கி, இங்க வந்துதான் பர்த் வாங்கினாள். அவள் பெயர் மாயா. விலாசம் எல்லாம் இல்லியே... என்ன, ஏமாந்தியா..? நீ ராத்திரி பன்னிரண்டு மணி வரை கடலை போட்டியே... அவ செல் நம்பரக் கூடவா வாங்கலை..?”இருதயம் வேதனையில் லேப்டாப், லேப்டாப் என அடித்தது.  

 ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன்