உதைக்கப் போறாங்க!
 உலகக் கோப்பை கால்பந்து 2022
உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போடும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன.நவம்பர் 20ம் தேதியிலிருந்து டிசம்பர் 18ம் தேதி வரை இனி ஒவ்வொரு நாளும் கோலாகலம்தான். 32 அணிகள், 64 போட்டிகள் என களைகட்டவிருக்கும் இந்தப் போட்டிகளில் ரசிகர்களின் நட்சத்திர வீரர்கள் பற்றிய குறிப்பு இதோ...
 கிறிஸ்டியானோ ரொனால்டோ
கடந்த 2003ல் இருந்து போர்ச்சுகல் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் போர்ச்சுகல் அணியை பெயர் சொல்ல வைத்தவர். 1966ல் உலகக் கோப்பையில் மூன்றாம் இடம் பிடித்த போர்ச்சுகல், அதன்பிறகு பல உலகக் கோப்பைகளுக்குக் கூடத் தகுதி பெறவில்லை. 2002க்குப் பிறகு இந்நிலை மாறியது. 2006ல் அரையிறுதியில் தோற்று நான்காம் இடம் பிடித்தது. அடுத்தடுத்த உலகக் கோப்பைகளில் ரவுண்ட் 16, குரூப் ஸ்டேஜ் வரை வந்தது. இதற்கு ரொனால்டோ முக்கிய காரணம். இதுவரை அணிக்காக 117 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ உலகின் சிறந்த நம்பர் ஒன் வீரர் என்ற பெயரைப் பெற்றவர். அணியின் கேப்டனாக இருக்கும் ரொனால்டோ இந்தமுறை போர்ச்சுகலுக்காக எத்தனை கோல்கள் அடிப்பார் என்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது.
 லியோனல் மெஸ்சி
அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சிதான் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட். 2005ல் அர்ஜென்டினாவின் தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்த மெஸ்சி 2006, 2010, 2014, 2018 என நான்கு உலகக் கோப்பையில் பங்கெடுத்தவர். இதில், 2014ல் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். 2018ல் ரவுண்ட் 16 சுற்றிலேயே வெளியேறியதால் பலரும் மெஸ்சியை விமர்சிக்க, அணியிலிருந்து சிறிது காலம் விலகினார். மீண்டும் அணியுடன் இணைந்த மெஸ்சி 2021ல் கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினாவிற்காகப் பெற்றுத் தந்தார்.
இதன்பிறகு ஐரோப்பிய சாம்பியனும், கோபா அமெரிக்கா சாம்பியனும் மோதும் கிராண்ட் ஃபைனலில் இத்தாலி அணியை வென்று அர்ஜென்டினாவை உலகின் தலைசிறந்த அணி எனப் பெயரெடுக்கச் செய்தார். இதேபோல உலகக் கோப்பையையும் அர்ஜென்டினாவிற்காக பெற்றுத் தருவார் என மெஸ்சி பெயரை மந்திரச் சொல்லாக உச்சரித்து வருகின்றனர் ரசிகர்கள். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 164 போட்டிகளில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்சி!
சன் ஹியுங் மின்
இந்த உலகக் கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆசிய வீரர் தென்கொரியாவைச் சேர்ந்த சன் ஹியுங் மின். முன்கள வீரரான இவர் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கிளப்பிற்கு ஆடி வருகிறார். இந்த ஆண்டு பிரீமியர் லீக் ‘கோல்டன் பூட்’ விருதை எகிப்தின் முகமது சாலாவுடன் பகிர்ந்து கொண்டார். 2014, 2018 ஆண்டுகளில் தென்கொரிய அணிக்காக கோல்கள் அடித்தவர். அப்போது குரூப் ஸ்டேஜிலே வெளியேறினாலும் இப்போது ரசிகர்கள் சன் ஹியுங் மின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.
கரீம் பென்ஷிமா
கிலியான் பாப்பேவுடன் அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்றொரு முக்கிய ஃபிரான்ஸ் முன்கள வீரர் கரீம் பென்ஷிமா. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் இவர். ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்காக வழங்கப்படும் கோல்டன் பால் (Ballon d’or) விருதையும் இந்த ஆண்டு பெற்றவர் பென்ஷிமாதான். 2007ல் இருந்தே ஃபிரான்ஸ் தேசிய அணியில் விளையாடி வருபவர். கடந்த முறை ஃபிரான்ஸ் அணி உலகக் கோப்பை வெல்ல பென்ஷிமாவும் முக்கிய காரணம். இந்த முறையும் அணியுடன் இணைந்திருக்கும் பென்ஷிமா, நட்சத்திர வீரர்கள் பட்டியலில் மிளிர்கிறார்.
கிலியான் பாப்பே
பெயரிலேயே கிலி இருக்கிறதல்லவா! ஃபிரான்சின் முன்கள வீரரான கிலியான் பாப்பே, 2018 உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். குறிப்பாக, ரவுண்ட் 16 சுற்றில் அர்ஜென்டினாவிற்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்து அணியை முன்னேற்றியவர். இறுதிப்போட்டியிலும் குரோஷியாவிற்கு எதிராக ஒரு கோல் அடித்து உலகக் கோப்பையை வெல்ல உதவினார்.
அப்போது பிபாவின் சிறந்த இளம் வீரர் விருது பெற்றார். இப்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அணிக்காக விளையாடும் பாப்பே 128 போட்டிகளில் 117 கோல்கள் அடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் ஃபிரான்சின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார் கிலியான் பாப்பே.
நெய்மார், வினிசியஸ்
பிரேசிலின் தேசிய விளையாட்டே கால்பந்துதான். ஐந்துமுறை உலகக் கோப்பையை வென்று, அதிகமுறை வென்ற நாடு என்கிற சிறப்புப் பெயரை தக்க வைத்துள்ளது. எப்போதும்போல் இந்தமுறையும் உலக ரசிகர்களின் கவனம் பிரேசில் மீதுதான். அதிலும் முன்கள வீரரான நெய்மார் நிகழ்த்தும் ஆச்சரியங்களைப் பார்க்கக் காத்திருக்கின்றனர். இதுவரை பிரேசில் அணிக்காக 75 கோல்கள் அடித்துள்ளார். கத்தாரில் இன்னும் இரண்டு கோல்கள் அடித்தால் பீலேவின் கோல் கணக்கை சமம் செய்வார் நெய்மார்.
நெய்மாரை மட்டுமல்ல, வினிசியஸ் ஜூனியர் என பிரேசிலின் இன்னொரு முன்கள வீரரையும் சுட்டிக்காட்டுகின்றனர் கால்பந்து நிபுணர்கள். 2019ல் இருந்து பிரேசில் அணிக்காக ஆடிவரும் வினிசியஸ், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் அணியிலும் இருக்கிறார். இந்தக் கிளப் அணிக்காக பிரான்ஸின் பென்ஷிமாவுடன் சேர்ந்து ஸ்பானிஷ் கால்பந்து போட்டிகளில் கலக்கி, நட்சத்திர வீரராகக் கவனம் ஈர்த்துள்ளார் வினிசியஸ் ஜூனியர்.
விர்ஜில் வான் டிஜ்க்
நெதர்லாந்து அணியின் கேப்டன்தான் விர்ஜில் வான் டிஜ்க். வழக்கமாக முன்கள வீரர்களை மட்டுமே பாராட்டும் ரசிகர்கள் பின்களத்தில் ஜொலிக்கும் விர்ஜில் வான் டிஜ்க்கையும் ரசிக்கிறார்கள் என்றால் காரணம் அவரின் வலிமையும், தலைமையும்தான். சிறந்த பின்கள தடுப்பு வீரர் எனப் பல முன்னணி வீரர்களாலேயே பாராட்டு பெற்றவர் விர்ஜில். கடந்தமுறை நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை. ஆனால், முன்பு 2010ல் இரண்டாமிடமும், 2014ல் மூன்றாம் இடமும் பெற்ற அணி அது. இந்தமுறை மீண்டு வந்திருக்கிறது. விர்ஜில் வான் டிஜ்க்கின் தடுப்பாட்டத்தைப்பார்க்க பலரும் ஆவலுடன் உள்ளனர்.
பேராச்சி கண்ணன்
|