தந்தையுமானவன் குருவுமானவன்!



சூர்யா பாலகுமாரன்

சென்ற இதழ் தொடர்ச்சி...


மே 15, 2018 காலை 3 மணி அளவில் உறக்கத்திலிருந்து அப்பா எழுந்து கொண்டார். சிரமம் குறைந்திருக்கிறது என்றார். நன்றி கூறும் வகையில்  ‘‘யோகி ராம்சுரத்குமார்...’’ என்னும் நாமத்தை ஜபித்தார். ‘‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்குப்பா. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்...’’ கால்களைப் பிடித்தபடி  நம்பிக்கை கொடுக்க, அவர் மெதுவாக எழுந்து அமர்ந்தார். உடம்பு  முழுவதும் வலிப்பதாகக் கூறினார். புதிதாக தோள் பட்டை மற்றும் பின்னங்கழுத்தை  பிடித்து விடச் சொன்னார். 4.30 மணிக்கு செவிலியரின் உதவியுடன் உடம்புக்கு டவல் பாத் கொடுத்தேன்.

பழைய துணிகளைக் களைந்து, புதிய துணிகளை அணிந்து, வாய் கொப்பளித்து, நெற்றிக்கு திருநீறு பூசி, குங்குமமிட்டு, சூடான காபியைக் கொடுத்து  விட்டு, அருகே அவர் கைகளை வருடியபடி நேரம் பார்க்க 6.30 மணி ஆகியிருந்தது. ‘‘அம்மா வாசல்லதான்பா இருக்கா. நான் வீட்டுக்கு போய்  குளிச்சுட்டு, டிபன் சாப்டுட்டு வந்துடறேன்...’’ என்று கூற, மீண்டும் அந்தக் கண்கள் கூர்மையாக என்னுள் பாய்ந்தது. என் கைகளைத் தடவி நெற்றியில்  சில கணங்கள் வைத்துக்கொண்டு விட்டு மெல்ல விடுவித்தது. ‘‘சரி...’’ என்று ஒரு வார்த்தை உதிர்த்தார்.

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு ஒருநாள் முழுவதும் உறங்காத அயர்ச்சியில் பத்து நிமிடம் தூங்குவோம் என்று  கட்டிலில் சாய, உறக்கம் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனது. சரியாக 11.30 மணிக்கு என் மனைவி என்னை எழுப்பி, ‘‘அப்பாவுக்கு  முடியலையாம். உடனே வரச் சொல்றாங்க...’’ என்றதும் தத்தித் தள்ளாடி முகம் கழுவி கமலா அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.  அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனையின் ஐசியூ வாசலில் அனுமதி மறுக்கப்பட்டு நானும், சாந்தா அம்மாவும், கமலா அம்மாவும், சுகன்யாவும்,  சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாத அயானும் நின்றிருந்தோம்.

அப்பாவின் உதவியாளரான பாக்கியலட்சுமியும், செளமியாவும் கண்கள் சிவந்து ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். ‘‘ஆக்சிஜன் இன்டேக் நின்னுடுச்சு.  அதனால ஹார்ட் பம்பிங் குறைஞ்சுகிட்டே வருதுனு டாக்டர் சொல்றார்...’’ சொல்லும்போதே அம்மாவின் குரல் உடைந்தது. ‘‘கான்ஷியஸாதானே  இருக்கார்?’’ ‘‘இல்ல. கான்ஷியஸ் போயிடுச்சுனு டாக்டர் சொல்லிட்டார்...’’ கமலா அம்மாவையும், சுகன்யாவையும், இடுப்பில் இருந்த அயானையும்  வேறொரு இடத்தில் அமர்த்திவிட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். அக்காவுக்கு போன் செய்து உடனே விமானத்தில் கிளம்பி வரச் சொன்னேன்.  நெருங்கிய நண்பர்களை வரவழைத்தேன். சத்சங்கத்தினர் சிலர் ஐசியூ வாசலில் அமர்ந்து தியானிக்கத் தொடங்கினார்கள்.

அனைத்துமே என் தந்தை என்னை விட்டு தள்ளிப்போகப் போகிறார் என்பதற்குரிய அறிகுறிகளாகவே இருந்தன. மிச்சமிருந்த தைரியத்தை  வரவழைத்தபடி நின்றேன். ஒவ்வொரு டாக்டராக தொங்கிய முகத்துடன் வெளியே வந்தார்கள். நாற்பது நிமிட கடுமையான போராட்டத்துக்குப் பிறகு,  என்னையும் அம்மாவையும் மட்டும் உள்ளே அழைத்துச் சென்று முறையாக அறிவித்தனர். எத்தனை முறை அவரைப் பார்த்துச் சிரித்தாலும்,  அழுதாலும், உலுக்கினாலும், அவர் இனி கண்கள் திறக்கப் போவதில்லை என்று புரிவதற்கு சில மணி நேரங்களானது. சக எழுத்தாளர்கள், சினிமா  பிரபலங்கள், சத்சங்க உறுப்பினர்கள், வாசக விசிறிகள் என்று வீட்டுக்கு வந்த கூட்டம் என்னையும், எங்கள் வீட்டையும் பிரமிப்படைய வைத்தன.

விடியற்காலை மூன்று மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனின் பி.சி. உதவியுடன் வந்த வேலூர் வாசகர் முதல், இறுதி யாத்திரையில் பெசன்ட்  நகர் சுடுகாடு வரை கத்திரி வெய்யிலில் நடந்தே வந்த பொன்னேரி விவசாயி வரை அனைவருமே அவர் சம்பாதித்த சொத்துக்கள். எத்தனை உயர்ந்த  மனிதர்களை இந்த ஆன்மா சம்பாதித்திருக்கிறது, எத்தனை உயர்ந்த மனிதர்களை இந்த ஆன்மா உருவாக்கியிருக்கிறது என்பதை எங்களுக்கு  நிமிடத்துக்கு நிமிடம் நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. அனைத்துக் காரியங்களும் முடிந்து, மனைவி மற்றும் நண்பர்களோடு பானைக்குள் அஸ்தியை  தோளில் ஏந்தியபடி கடற்கரை மணலில் ஊர்ந்து நடக்க நடக்க... அங்கு அப்பாவோடு தலைகுப்புற விழுந்து அலையில் அடித்துப் புரண்டு விளையாடி  சிதறி ஓடிய அத்தனை நினைவுகளும் அலை அலையாக மேலெழுந்து வந்தபடி இருந்தது.

பிடரியில் மண் தெறிக்க ஓடிக் கீழே விழுந்தது நினைவுக்கு வந்தது; ஒரு நாவலுக்காக குதிரையேற்றம் பயின்றது நினைவுக்கு வந்தது. இடுப்பளவு  ஆழத்தில் கரையைப் பார்த்து நின்று, ஒரு பெரிய அலை வரும்பொழுது மண் பானையைத் தலைக்குமேல் தூக்கி பின்னால் எறிந்து விட்டு திரும்பிப்  பார்க்காமல் நடக்க, எதிரே சற்றே மேடான கரையில் நூறு பேர் வரிசையாக நின்று கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் எங்கள்  குடும்பத்துக்குமே உரிய நேரமாக நான் இதை நினைத்துக் கொண்டிருக்க, அங்கேயும் அவரால் வளர்ந்தவர்கள் வரிசையாக ரிஷிகளைப் போல் நின்று  கொண்டிருந்தார்கள். மன எழுச்சியில் தத்தளித்தேன். மனதில் ஒரு விஷயம் தோன்றியது.

பாலகுமாரன் எனக்கு மட்டும் சொந்தமல்ல, எனக்கு மட்டும் தந்தையல்ல, என்னை மட்டும் வளர்த்தவர் அல்ல, எனக்கு மட்டும் வாழ்க்கையை  சொல்லிக் கொடுத்தவர் அல்ல. என்னைப் போல் பல்லாயிரம் பேர்களுக்கு அவர் குருவாக இருந்திருக்கிறார்; பல நூறு பேர்களுக்கு தகப்பனாக அருகில்  அமர்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். நண்பனுக்கு நண்பனாக நின்றிருக்கிறார். அவர் தனி உடைமை அல்ல. பொது உடைமை! ஏனோ  தெரியவில்லை, நின்றுகொண்டிருந்த அத்தனை பேர் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.  உடைந்து போய், விக்கி விக்கி அழுது கண்களில் நீர் வழிய வழிய கைகூப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

மெதுவாக வீட்டுக்குத் திரும்பி இயல்பு வாழ்க்கையில் ஈடுபட மனமில்லாமல் முடங்கிக் கொண்டிருக்க, ஒரு விஷயம் மட்டும் மனதுக்குள் உறுத்திக்  கொண்டேயிருந்தது. இத்தனை சொல்லிக் கொடுத்த குருவை, முப்பத்தைந்து வருட நண்பனை, தலை தடவி வளர்த்த தகப்பனை கடற்கரையிலேயே  தனியாக விட்டுவிட்டு வந்து விட்டோமே..? மனம் பதறிக் கொண்டே இருந்தது. எல்லாம் முடிந்து அவரது அறைக்கு வந்து அக்கடா என்று உட்கார,  அந்த அறை ஒரு புது வடிவமாக, புது டைமென்ஷனாக விரிந்து நின்றது. சென்ற வாரம் வரை அவருடன் விளையாடிக் கொண்டிருந்த இடம்,  கட்டிப்பிடித்து கொஞ்சித் தீர்த்த இடம், இப்பொழுது அமைதியாக மங்கலான வெளிச்சத்தில் இருந்தது.

அந்த அறையை ஓர் எழுத்தாளன் வாழ்ந்த அறையாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சட்டென்று எழுந்து வெளிச்சத்தைக் கூட்டிப்  பார்க்கையில், அந்த இடம் ஓர் அதிசயமாக மாறியது. எதற்காக இங்கு ஒரு சிங்க பொம்மை? எதற்காக இத்தனை பெரிய உலக வரைபடம்? எதற்காக  இந்தச் சிலையின் படம்? யார் இந்த கைக்குழந்தையுடன் நிற்கும் ராஜா? ஏன் இத்தனை ஜப்பானியர்களின் பெயர்கள், ஏன் இங்கு அமெரிக்கப் படையின்  விவரங்கள் ஒட்டப்பட்டிருக்கிறது? ஐ லவ் யூ தாத்தா என்று பேரன் எழுதி வைத்திருந்த வெள்ளை போர்டை ஏன் ஃப்ரேம் செய்து மாட்டி வைக்க  வேண்டும்? என்ன பெர்ஃப்யூம்கள் இவை? ஏன் ஆளுயரக் கண்ணாடி? பால்கனியில் ஏன் அத்தனை செடி?

துளசி, கற்பூரவல்லி, அறுகம்புல் என்று அடுக்கடுக்காக ஏன்? எதற்கு அதன் மேல் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கு? எந்தக்  கதவு திறந்தாலும் புத்தகங்கள் மலை மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதே, அத்தனையும் படித்திருக்கிறாயா? அத்தனையும் அத்துப்படியா?  கேள்விக்கு மேல் கேள்வியாக அந்த அறை என்னை தினமும் அதிசயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த இடத்தை அவரது வாசகர்களின்  பார்வைக்கு வைக்க வேண்டும் என்று சட்டென்று மனதுக்குள் தோன்றியது. இந்த அறையில்தான் ‘உடையார்’ பிறந்தது, இந்த அறையில்தான்  ‘கங்கைகொண்ட சோழன்’ வாழ்ந்தான், இதில்தான் ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே’ பறக்கத் தொடங்கியது.

இந்த அறை முழுவதும் லட்சோப லட்சம் வார்த்தைகள் காற்றில் மிதந்துகொண்டே இருக்கின்றன. வா, வந்து சிறிது நேரம் நின்று விட்டு சுவாசித்துச்  செல். வீட்டில் சென்று பேப்பர் பேனாவுடன் உட்கார், நீ சுவாசித்த வார்த்தைகள் அனைத்தும் கோர்வையாக விழும்; அதில் பாலகுமாரன் என்றும்  உயிருடன் இருப்பார். என் மகனுக்கு நான் ஒரு நல்ல தந்தையாக இருப்பேன். இது சத்தியம். பாலகுமாரனை விட நல்ல தகப்பனாக இருக்க  முயற்சிப்பேன். அவனுக்கும் ஓர் அப்பனின் பொறுப்பை சொல்லிக் கொடுப்பேன். அதன் முக்கியத்துவத்தை விளக்கி வைப்பேன்.

என்னுள் எழுந்த அதே கேள்விகள், அதே குழப்பங்கள் அவனுக்கும் பிற்காலத்தில் எழலாம். தந்தையை, தந்தையாகப் பார்ப்பதா, இல்லை குருவாகப்  பார்ப்பதா என்று அவனுக்கும் சந்தேகம் வரலாம். கண்கட்டி காட்டில் விட்டது போல் எங்கெங்கோ முட்டிக்கொண்டு முகவாயில் அடிபட்டு நிற்கலாம்.  உடலால் நீ என்னைப் பிரிந்த பிறகு எப்படி எனக்கு அதை அழகாகப் புரியவைத்தாயோ, அதே போல் நான் சென்றபிறகு, நாம் இருவரும் சேர்ந்து என்  மகனுக்கு - உங்கள் பேரனுக்கு - தலை தடவி புரிய வைப்போம். அதுவரை காத்திரு. யோகி ராம்சுரத்குமார். ஜெய் விஜயீ பவ!