எழுபது வயதில் கிணறு வெட்டியவர்!
மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள ஹதுவா கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் லோதிக்கு வயது 71. தண்ணீர் பிரச்னைக்காக தனியொருவராக உழைத்து இவர் கிணறு வெட்டியுள்ளார்! மூன்று ஆண்டுகளாக நிலவிய தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க 40 அடியில் கிணற்றைத் தோண்டியுள்ளார்! ‘‘கிணறு தோண்ட முயற்சித்தபோது குடும்பமும், ஊராரும் என்னை பைத்தியக்காரன் என்றார்கள். ஆனால் பாருங்கள்... இந்தக் கோடையிலும் கிணற்றில் நீர் வற்றாமலிருக்கிறது!’’ என புன்னகைக்கிறார் சீதாராம் லோதி. பக்கத்து வீட்டுக்காரர் நோயுற்ற குழந்தைக்கு குடிநீர் தேடி அலைந்த பரிதாபக் காட்சி தான் லோதியை கிணறு வெட்டத் தூண்டியதாம்!
பிணம் தூக்கிய எம்எல்ஏ!
தொகுதியில் ஜெயித்தபிறகு எம்எல்ஏ, எம்பியை பைனாகுலரில் தேடினாலும் பார்ப்பதே கஷ்டம் என்கிற நிலையில் அவர் மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது அரிய நிகழ்வல்லவா? அசாம் மாநிலம் ஜோர்கட் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, ஆதரவற்று இறந்தவரின் பிணத்தை தூக்கிச் சென்று இறுதி மரியாதை செய்துள்ளார். குடும்பமின்றி வாழ்ந்த திலீப் டேக்கு மாற்றுத் திறனாளி தம்பி மட்டுமே துணை.
திடீரென இறந்த திலீப்பின் சவத்தை தூக்கக் கூட உறவினர்கள் இல்லாத நிலையில் எம்எல்ஏ குர்மி, திலீப்பின் உடலை சுடுகாட்டுக்கு தூக்கிச் சென்று தகனம் செய்துள்ளார். ‘‘எம்எல்ஏ என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான பதவி. எளிய மனிதருக்கு இறுதிமரியாதை செய்த திருப்தி போதும்!’’ என தன்னடக்கமாக பேசும் குர்மி மூன்றாவது முறையாக எம்எல்ஏ பதவி வகிக்கிறார்.
குடைக்குள் நம்பிக்கை!
கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள தாஹா, தன்னம்பிக்கை இழந்த பலருக்கும் ஊக்கம் தருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் படுக்கையில் இருந்தபடியே ஐந்து ஆண்டுகளாக குடை தயாரித்து விற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல் செயலிழந்து போக படுக்கையில் வீழ்ந்தார் தாஹா.
தந்தை கற்றுத்தந்த குடை தயாரிக்கும் தொழில் அவரை மீட்டெடுக்க, நண்பர்கள் மனோஜ் பிள்ளை, உன்னி ஆகியோரின் உதவியால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் குடைகளை விற்று வருகிறார். ‘‘நோயால் வாழ்க்கையையே இழந்துவிட்டேன் என நினைக்கவில்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார். செய்ய முடிந்ததை செய்கிறேன்!’’ எனும் தாஹா, தனக்கென ஸ்பெஷலாக உருவாக்கிய காரில் வலம் வந்து தன் தேவைகளைத் தானே கவனித்துக் கொள்கிறார்!
தொகுப்பு:ரோனி
|