பவுடர் பூசினால் புற்றுநோய்..?எச்சரிக்கிறார் டாக்டர்

‘‘உங்கள் நிறுவனத்தின் பவுடர் பூசியதால்தான் எனக்கு சினைப்பை புற்றுநோய் வந்தது. அதனால் ரூ.600 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்...’’ கடந்த வருடம் பிரபல பவுடர் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார் அமெரிக்கப் பெண்மணி ஒருவர். இந்த நிகழ்வு உலகளவில் பெரும்  அதிர்வை உண்டாக்கியது. மேற்குலக நாடுகள் பவுடரை புறக்கணிக்கத் தொடங்கியன. ஆனால், இந்தியாவில் இதுபற்றிய விவாதமே இல்லை.  இன்றைக்கும் முகம் முழுவதும் பவுடரை அப்பிக்கொண்டு தெருக்களில் உலாவிக் கொண்டிருப்பவர்களை நாம் காணலாம்.

‘‘நாம் முகத்தில் பூசும் பவுடரை சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கிறார்கள். பவுடரின் மூலப்பொருட்களில் 99% ‘டால்க்’ என்ற கனிமம் இருக்கும்.  இதனால்தான் பவுடரை டால்கம் பவுடர் என்கிறோம். டால்க்கில் மக்னீசியம், சிலிகான், சிறிதளவு கால்சியம் கார்பனேட்டுடன், ஆஸ்பெஸ்டாஸ்  என்னும் நச்சுப் பொருளும் சில விகிதத்தில் கலந்திருக்கும். இந்த ‘ஆஸ்பெஸ்டாஸ் துகள்களைச் சுவாசித்தால் அல்லது பூசினால் புற்றுநோய் வரும்’  என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த அடிப்படையில்தான் அந்த அமெரிக்கப் பெண் தன் சினைப்பையில் புற்றுநோய் வந்ததாக மருத்துவ ஆதாரங்களைச் சமர்ப்பித்து பவுடருக்கு  எதிரான வழக்கில் வாதாடி இழப்பீடும் வாங்கியிருக்கிறார்...’’ பவுடரைக் குறித்த அரிதான தகவல்களை வரிசைப்படுத்திய மருத்துவர் ஜெகதீசனிடம்,  ‘இந்தியாவில் கனஜோராக விற்பனையாகிக்கொண்டிருக்கும் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸின் அளவு என்ன? ஆஸ்பெஸ்டாஸ் இல்லாத பவுடர்களால்  ஆபத்து இல்லையா...?’ என்று கேட்டோம். ‘‘ஆஸ்பெஸ்டாஸ் இல்லாவிட்டாலும் டால்க்கில் கலந்திருக்கும் மற்ற வேதிப்பொருட்களால் நமக்கு  ஆபத்துதான்.

வியர்வையால் ஏற்படும் ஈரப்பசையைக் கட்டுப்படுத்துவற்காகவும், அந்த ஈரப்பசையால் நமக்கு தீங்கு வரக்கூடாது என்பதற்காகவும்தான் நாம்  பவுடர்களை பயன்படுத்துகிறோம். வியர்வை ஈரத்தைப் போக்க சரியான வழி பவுடர் அல்ல. வியர்வை உடலில் நிகழும் இயற்கையான ஒரு நிகழ்வு.  அதை துணியால் துடைத்து சரிசெய்யலாம் அல்லது குளித்து சரி செய்யலாமே தவிர, பவுடரைப் போட்டு வியர்வையைத் தடுத்து நிறுத்துவது நமது  உடலில் பலவித பிரச்னைகளைக் கொண்டுவரும்...’’ என்று எச்சரிக்கிற டாக்டர் ஜெகதீசன் அந்தப் பிரச்னைகளைப் பற்றி விளக்கினார்.

‘‘நமது உடலில் சுமார் 50 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. குழந்தைப் பருவத்தில் தலையிலிருந்து வளர்ச்சியடையும் இந்தச் சுரப்பிகள் நாம்  வளர, வளர மேலிருந்து கீழாக முகம், கழுத்து, நெஞ்சு, வயிறு என்று வளர்ந்து வயிற்றுக்குக் கீழ் வரை செல்லும். நமது இளமைப் பருவத்தில்  வியர்வைச் சுரப்பிகள் முகம், கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில்தான் அதிகமாக இருக்கும். இதனால்தான் வியர்க்கும்போது இந்தப் பகுதிகளில்  பவுடரை அதிகமாகப் பூசிக்கொள்கிறோம். வியர்வைச் சுரப்பிகள் என்பது நமது உடலின் இன்னொரு சிறுநீரகம் போன்றது. உடலின் தேவையில்லாத  கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிறுநீரகத்தின் முக்கிய பணி.

அதே வேலையைத்தான் வியர்வைச் சுரப்பிகளும் செய்கின்றன. வியர்வைச் சுரப்பிகள் வியர்வை மூலம் கழிவுகளை வெளியேற்றும்போது  சிறுநீரகத்தின் சுமை குறையும். இதனால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். வியர்வைச் சுரப்பிகளை பவுடரைக் கொண்டு அடைத்தால் சிறுநீரகம்  தன் ஆற்றலுக்கும் மேலாக உழைக்க வேண்டி வரும். இது சிறுநீரகத்தைப் பாதிக்கும். ஒரு வியர்வைச் சுரப்பியின் விட்ட அளவு ஒரு மில்லி மீட்டரில்  ஆயிரத்தில் ஒரு பங்குதான். ஆனால், பவுடரில் இருக்கும் டால்கம் துகளின் அளவு அதிலும் பாதி.

ஆகவே, நம் தோலின் அடியில் உள்ள வியர்வை நாளங்கள் மூலமாக இந்தத் துகள்கள் சென்று வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.  அடைப்புகள் மூலமாகத்தான் நம் தோல்களில் வேர்க்குருக்கள் உண்டாகின்றன. அது பெரிதானால் வேனல் கட்டிகளாகவும் மாறுகின்றன. ஆனால்,  வேர்க்குருவுக்கும் பவுடர் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். பவுடர்தான் வேர்க்குருவைக் கொண்டுவருகிறது என்று சொல்வதற்கு இந்த பவுடர்  கம்பெனிகள் மறுக்கின்றன. இது ஒரு வியாபாரத் தந்திரம்...’’ என்கிற மருத்துவர் மேலும் பவுடர் தொடர்பான தப்பான பழக்கங்களைப் பட்டியலிட்டார்.

‘‘தாய்மார்கள் குழந்தைகள் இரவில் தூங்கும்போது தலையில் பவுடர்களை அதிகமாகத் தேய்த்து விடுகிறார்கள். இது தவறு. வேர்க்குரு பவுடர்களில்  டால்க்கைத் தவிர மென்தால், விக்ஸ் போன்றவற்றையும் கலக்கின்றனர். இவை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டவை. ஆனால், இந்தியாவில்  இவற்றை சுலபமாக விற்பனை செய்கின்றனர். இதுவும் வியர்வைச் சுரப்பி களை அடைபடச் செய்வற்கான ஒரு தீங்கான பழக்கம்தான். பல  குழந்தைகளுக்கு பவுடரால் அலர்ஜி மற்றும் நிமோனியா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பவுடரை முகரும்போது அது நாசித் துவாரத்தின் மூலம் நுரையீரலுக்குச் சென்று இந்தப் பிரச்னைகளுக்கு காரணமாகின்றன. இன்று குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை உள்ளாடைக்குள்ளும் பவுடரைக் கொட்டும் வழக்கம் பெருவாரியாக இருக்கிறது. இதனால் நிறைய ஆபத்துகள் உண்டு. இதற்கு அந்த  அமெரிக்கப் பெண்மணி சரியான சான்று. இதுகுறித்து மக்கள் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டும். வியர்வையானது கழிவை  வெளியேற்றுவதன் மூலம் நம் உடலில் உள்ள சூட்டையும் வெளியேற்றுகிறது. இது நமது உடலின் வெப்பத்தை ஒரு சம நிலையில் வைக்க  உதவுகிறது.

ஆகவே வேர்ப்பது நல்லதுதான். வியர்வைச் சுரப்பிகளை பவுடர்கள்கொண்டு அடைப்பதன் மூலம் வியர்வைச் சுரப்பிகள் சுருங்க ஆரம்பிக்கும்.  இதனால்தான் குளிர்ப்பிரதேசங்களில் சரும சுருக்கம் உள்ளவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. தோல் சுருக்கம் சீக்கிரத்தில் முதுமைத்  தோற்றத்தைக் கொண்டுவரும். வியர்வைச் சுரப்பிகள் அடைபடாமல், தொடர்ச்சியாக வியர்வை வெளியேறும்போதுதான் நம் தோல் பளபளப்பாகவும்,  மிருதுவாகவும் பொலிவு பெறும். நமது சருமமும் பளிச்சென்று இருக்கும். இதற்கு பவுடரைத் தூக்கி எறிவதே நலம் ...’’ அழுத்தம் திருத்தமாகச்  சொல்கிறார் டாக்டர் ஜெகதீசன்.  

டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்