சீரியல் ஹீரோயினை லவ் பண்ணினேன்...அது ஃபெயிலியராகிடுச்சு..
40 சீரியல்ஸ்... 20 ஆயிரம் எபிசோட்ஸ்... இயக்கியிருக்கும் எம்.கே.அருந்தவராஜாவின் அனுபவங்கள்
பதிமூன்று வார தொடர்கள் பரபரப்பாக பேசப்பட்ட காலகட்டத்தில் சின்னத்திரையில் கோலோச்சிய இயக்குநர்களில் எம்.கே.அருந்தவராஜாவும் ஒருவர். பின்னர், சன் டிவியின் ‘பொன்னூஞ்சல்’, ‘மகாலட்சுமி’, ‘ஆதிரா’, ‘இளவரசி’, ‘தாமரை’ என ஹிட் சீரியல்ஸ் வழியே கவனிக்கப்பட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும் மொழிகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட சீரியல்ஸ், 20 ஆயிரம் எபிசோட்ஸ்... என பம்பரமாகச் சுற்றியவர். ஆழ்வார்திருநகரிலுள்ள அவரது சாதாரண வீட்டில் பக்தி மணம் கவழ்கிறது. ‘‘ஒரு காலத்துல எங்கிட்ட 27 அசிஸ்டென்ட்ஸ் இருந்தாங்க.
ஒரே நேரத்துல ரெண்டு, மூணு தொடர்கள், டாகுமென்ட்டரி, விளம்பரப் படங்கள்னு ஒர்க் போகும். முக்கியமான தொடர்கள் தவிர மத்த இடங்களுக்கு உதவியாளர்களை அனுப்பி வைப்பேன். இயக்குநர்களுக்கு அடுத்த இடத்துல கோ- டைரக்டர் உண்டு. இப்ப அப்படியொரு கேட்டகிரியே இல்ல. எத்தனை பக்க டயலாக்கையும் மனப்பாடம் செஞ்சு ஆர்ட்டிஸ்ட்ஸ் பேசி அசத்துவாங்க. பிராம்ப்டிங் என்கிற பின்னால இருந்து அசிஸ்டென்ட் டைரக்டர் வசனம் படிக்கறதை அப்படியே கேமரா ஓடும்போது சொல்ல விரும்ப மாட்டாங்க. சீரியல்களுக்கு கதை பண்றதுலயும் அப்ப நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது.
இப்ப மாதிரி சில விஷயங்களை அப்ப துணிச்சலா பேச முடியாது...’’ அசைபோட்டபடி புன்னகைக்கும் அருந்தவராஜா, சினிமாவில் நடிக்கும் ஆசையில்தான் சென்னைக்கே வந்தாராம். ‘‘அம்மாவோட பூர்வீகம் சிலோன். அவங்க பெயர் கே.அமராவதி. அப்பா, ஏ.கந்தையா. அவர் நாகர்கோவில்காரர். சின்னதா சலூன் வைச்சிருந்தார். எனக்கு முணு தங்கச்சிங்க, ஒரு தம்பி. நாகர்கோவில்ல பி.காம் முடிச்சேன். படிக்கிறப்பவே நடிப்புல ஆர்வம். சொந்தமா ‘குமரி ஆர்ட்ஸ் க்ளப்’னு ஒரு டிராமா ட்ரூப் வைச்சிருந்தேன். பக்கத்து ஊர்களுக்கு போய் நாடகம் போடுவோம். அப்ப நாகர்கோவில்ல போலீஸ் ஆபீசரா இருந்த கே.என்.முரளி சார், என் நடிப்பை பாராட்டி ஊக்குவிச்சார்.
திரைப்படக் கல்லூரில சேரச் சொல்லி என்னை என்கரேஜ் செய்தவர் அவர்தான். ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல ஆக்ட்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். அங்க என் சீனியர்ஸ் திருமுருகன், அழகம்பெருமாள், திருச்செல்வம் நட்பு கிடைச்சது. படிக்கிற காலத்துல சாப்பாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்ல. சந்தோஷமா திரிஞ்சேன். ஆனா, காலேஜ் விட்டு வெளிய வந்ததும் வாழ்க்கை தன் முகத்தை காட்டுச்சு. வாய்ப்பும் வருமானமும் தேடி வரல. பசி, பட்டினி, போராட்டங்கள்னு போச்சு...’’ சின்ன மவுனத்துக்குப் பின் தொடர்ந்தார். ‘‘இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் சார்கிட்ட ‘மறுபக்கம்’ படத்துல உதவியாளரா சேர்ந்தேன். முதல் நாள் ஷூட்டிங் கிளம்பறப்ப மும்பைல இருந்து தந்தி வந்தது.
அப்ப எங்க ஃபேமிலி மும்பைலதான் இருந்தாங்க. ‘அப்பா இறந்துவிட்டார்...’ தந்தியைப் படிச்சதும் கண்ணு கலங்கிடுச்சு. ஷூட்டிங்குல சொன்னா அபசகுனமா நினைச்சு வேலையை விட்டுத் தூக்கிடுவாங்களோனு பயந்து யார்கிட்டயும் சொல்லலை. ‘என்னால வரமுடியாத சூழல்’னு பதில் தந்தி அனுப்பிட்டு படப்பிடிப்புக்கு போயிட்டேன். அப்பாவோட இழப்பு ஈடுசெய்ய முடியாததுதான். அதுல சந்தேகமே இல்ல. ஆனா, அன்னிக்கி நான் உதவியாளரா ஸ்பாட்டுக்கு போனதாலதான் பின்னாடி அம்மா, தங்கச்சிங்க, தம்பினு மொத்த குடும்பத்தையும் சுமக்க முடிஞ்சுது. என் ஒருத்தர் சம்பாத்தியத்துல எல்லாருக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சேன்.
அப்பாவோட ஆசிதான் இதுக்கெல்லாம் காரணம்...’’ என்று நெகிழ்ந்த அருந்தவராஜா, மீண்டும் தொடங்கிய டாபிக்குக்கு வந்தார். ‘‘‘மறுபக்கம்’ முடிஞ்சதும் சேதுமாதவன் சார் இயக்கிய டிவி சீரியல்கள்ல வேலை பார்த்தேன். அப்ப ‘சிட்டாடல் வீடியோஸ்’ சூரி சார், முரளி சார் நட்பு கிடைச்சது. அவங்க ஆபீஸ் எனக்கு ஒரு தாய்வீடு மாதிரி. எந்த நேரமும் உரிமையா போவேன், வருவேன். அப்ப எழுத்தாளர்களோட நாவல்களைத்தான் தூர்தர்ஷன்ல திரைக்கதையாக்கம் பண்ணுவாங்க. அறிஞர் அண்ணா, புதுமைப்பித்தன்னு பலரோட சிறுகதைகள், நாவல்களை இயக்கற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. நான் முதல்ல இயக்கின 13 வாரத் தொடர் ‘அம்மாவுக்கு கல்யாணம்’.
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அதுக்கு கதை எழுதியிருந்தாங்க. அப்புறம் அய்க்கண் எழுதின நாவலை, ‘ஜல்லிக்கட்டில் பசுமாடுகள்’ என்ற பெயர்ல டைரக்ட் பண்ணினேன். இதுக்கு அப்புறம் சன் டிவிக்காக ‘நிஷாகந்தி’ இயக்கினேன். அது ஒரு பேய்க்கதை. அதற்கடுத்து ‘புதியவாசல்’, ரேவதி தயாரிச்ச ‘நிறங்கள் நிஜங்கள்’னு நான் டைரக்ட் பண்ணின தொடர்கள் பேசப்பட... மத்த சேனல்ஸ்ல இருந்தும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘சைக்கோ 95’, ‘தாம்பத்யம்’, ‘பைரவி’, ‘காஞ்சனை’, ‘ரோஜா’, ‘தர்மயுத்தம்’னு நிறைய தொடர்கள் இயக்கினேன்.
என் கேரியர்ல சின்ன தொய்வு ஏற்பட்டாலும் அதை முரளிராமன் சார் சரி செய்துடுவார். அவராலதான் ‘ரோஜா’, ‘இளவரசி’னு பல வாய்ப்புகள் கிடைச்சது. ‘இளவரசி’க்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை வாங்கினேன்...’’ என்று சொல்லும் அருந்தவராஜா, விக்ரம்குமாரின் ‘யாவரும் நலம்’ படத்தில் துணை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார். ‘‘நடிகர், நடிகைகளால சீரியல்ல இருந்து சினிமாவுக்கு ஈசியா போக முடியும். பெரிய ஆளாவும் வளருவாங்க. ஆனா, டெக்னீஷியன்ஸ், இயக்குநர்கள் அப்படியில்ல.
சினிமா கதவுகள் இவங்களுக்கு எளிதா திறக்காது. அதுக்கு பல காரணங்கள். ‘யாவரும் நலம்’ படத்துக்குள்ள நான் வந்தது எதிர்பாராத ஒண்ணு. டிவி சீரியல் போர்ஷன் அதுல வரும். அதுக்காக நட்சத்திரங்களை செலக்ட் பண்ற பொறுப்பை என்கிட்ட டைரக்டர் விக்ரம்குமார் ஒப்படைச்சார். என் ஒர்க் அவருக்கு பிடிச்சுப் போச்சு. ‘கூட இருங்க’னு அசோசியேட்டா வேலை பார்க்கச் சொன்னார். இதுக்கு அடுத்து அவர் தெலுங்குல ‘இஷ்க்’ இயக்கினப்பவும் நான் கூட இருந்தேன். இந்த இரண்டு படங்கள் வழியா பி.சி.ஸ்ரீராம் சார் நட்பு கிடைச்சது...’’ என்று சொல்லும் அருந்தவ ராஜா, இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
‘‘ஒரு பெண்ணை லவ் பண்ணினேன். அவங்க சீரியல் ஹீரோயின். ஒன் சைடு லவ். ஃபெயிலியராகிடுச்சு. இனி கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆன்மிகத்துல ஆர்வம் அதிகமாகிடுச்சு. அம்மா என் கூட இருக்காங்க. படம் இயக்கும் முயற்சில இருக்கேன். ஃப்ரெஷ்ஷா ஒரு பேய்க்கதையும், பிரமாதமான சயன்ஸ் ஃபிக்ஷன் கதையும் வைச்சிருக்கேன்...’’ கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையைச் சரிசெய்து கொண்டே சொல்லும் அருந்தவராஜா, இப்போது சின்னத்திரை இயக்குநர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
மை.பாரதிராஜா படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|