காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா-61

குஸ்டாவோ கொல்லப்பட்டது கொலம்பிய வரலாற்றில் வெறும் சம்பவம் அல்ல. சரித்திரம். அன்று தொடங்கி பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின்  கார்டெல், அரசாங்கத்துக்கு எதிரான வெறியாட்டத்தை முன்பைக் காட்டிலும் முனைப்பாக ஆடத்தொடங்கியது. அரசு அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் திடீர் திடீரென கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க கற்பனைக்கும் சாத்தியமில்லாத நிபந்தனைகள்  முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக முன்னாள் அதிபர் டயானா துர்பேவின் மகள் கடத்தப்பட்டது, நாடெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. அதிபராக இருந்தவரின்  குடும்பத்தையே கொலம்பிய அரசால் பாதுகாக்க முடியாது என்கிற யதார்த்தம் அனைவரையும் சுட்டது. இனியும் பாப்லோ எஸ்கோபாரிடம் மோதுவது  என்பது, அவரவர் குடும்பத்தையே பணயம் வைப்பதற்கு சமமென்று போலீஸ் அதிகாரிகள் கருதினார்கள். திரைமறைவில் மெதிலின் கார்டெல்லோடு  ‘வியாபாரம்’ பேசினார்கள். தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்கிற ஒற்றை நிபந்தனையோடு, கார்டெல்  முன்வைத்த நிபந்தனைகளை ரகசியமாக ஏற்றுக் கொண்டார்கள்.

பாப்லோவின் இந்த அதிரடி கடத்தல் நடவடிக்கைகளைத் தவிர்க்க அரசியல்வாதிகளும் இறங்கி வந்தார்கள். தங்கள் உயிரையும், குடும்பத்தையும்  காத்துக்கொள்ள கோடிக்கணக்கில் கப்பமும் கட்டினார்கள். அரசியல்வாதிகளும், அதிகார மட்டமும் பாப்லோவிடம் பணிந்துகொண்டிருந்த சூழலில்  புதியதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் சீஸர் கேவிரியாவும், கார்டெல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள  முடிவெடுத்தார். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளை அவர் பொருட்படுத்தவில்லை. “போதை கார்டெல் நடத்திக்  கொண்டிருப்பவர்கள் திருந்தி வாழ, கொலம்பிய அரசு ஒரு திட்டம் அறிவிக்கிறது.

அரசிடம் சரணடையும் கடத்தல்காரர்களுக்கு குறைந்தபட்ச சிறைத்தண்டனையே கிடைக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் சிறையிலிருந்து  வெளியே வந்து மற்ற கொலம்பியக் குடிமகன்களைப் போலவே வாழலாம். அவர்கள் இதுவரை சேர்த்த சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வேறு  புதிய வழக்குகள் போடுவது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். இது தொடர்பான அத்தனை நடவடிக்கைகளும் மக்கள்  முன்பாக வெளிப்படையாகவே நடக்கும்...” அதிபரின் இந்த அறிவிப்பு, பெரிய கார்டெல் முதலாளிகளிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அறிவிப்பு வந்த  மூன்று வாரங்களிலேயே ஓச்சா சகோதரர்கள், தங்கள் குழுவினரோடு அரசு அதிகாரிகள் முன்பாக சரணடைந்தார்கள்.

சிறப்பு நீதிமன்றம் மூலமாக விரைவான விசாரணை நடத்தி, அவர்களுக்கு சொற்பமான சிறைத்தண்டனை மட்டுமே கிடைக்க வழி செய்தார் அதிபர்.  இதைத் தொடர்ந்து மற்ற கார்டெல்களும் ஓச்சா சகோதரர்களின் வழியைப் பின்பற்றி, தங்கள் கார்டெல்களைக் கலைத்தார்கள். ஆனால், எஸ்கோபார்  மட்டும் அவசரப்படவில்லை. சிறிய மீன்களைப் போட்டு பெரிய மீனான தன்னைப் பிடிக்க அமெரிக்கா தந்திரமாகத் திட்டமிடுகிறது என்று நினைத்தார்.  தானும், தன்னுடைய குழுவினரும் சரணடைந்தால் கொலம்பியாவில் நீதிவிசாரணை நடைபெறுவதற்கு பதிலாக அமெரிக்காவிடம்  ஒப்படைக்கப்படுவோமோ என்று சந்தேகப்பட்டார்.

ஏற்கனவே அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட கார்லோஸ் லேதர் என்கிற கார்டெல்காரருக்கு 135 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை  வழங்கப்பட்டிருந்த சம்பவம் வேறு அவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தது. “அமெரிக்காவில் சிறைக்கைதியாகக் கம்பி எண்ணுவதைக் காட்டிலும்,  சொந்த மண்ணான கொலம்பியாவின் மண்ணுக்குள் புதைந்து போவதே மேல்...” என்று அடிக்கடி அவர் சொல்லும் பஞ்ச் டயலாக்கையே அப்போதும்,  தன் கார்டெல் சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அரசாங்கம் அவசரப்படவில்லை. பாப்லோ எஸ்கோபாருடன் பேச்சுவார்த்தை நடத்த  சம்மதித்தது.

எஸ்கோபாரை நம்பவைக்க டி-20 கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடிப்பதைப் போல ஒரு அதிரடி நடவடிக்கையை  முன்னெடுத்தது. யெஸ். கொலம்பிய அரசை அச்சுறுத்திக் கொண்டிருந்த இடது கொரில்லா படையினரான எம்-19 குழுவினருக்கும் கார்டெல்களுக்குக்  கொடுத்த அதே சலுகையைக் கொடுத்தது. “ஆயுதங்களை மவுனித்துவிட்டு சரணடையுங்கள். நீங்களும் எங்களைப் போலவே மக்கள் நலனுக்காகத்தான்  பாடுபடுகிறீர்கள். ஆயுதப் புரட்சி வேண்டாம். அரசியல் புரட்சிக்கு தயாராகுங்கள். அமைதியான கொலம்பியாவை நாம் கரம் சேர்த்து அமைப்போம்.

அரசு, உங்கள் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கும்...” என்று கொரில்லாக்களுக்கு அதிபர் வைத்த உருக்கமான வேண்டுகோளுக்கு பலன் இருந்தது.  எம்-19 கொரில்லாக்கள் தங்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் செய்த குற்றம், குறைகள் அத்தனையும் மன்னிக்கப்பட்டன.  அதுநாள்வரை வன்முறைப் பாதையில் புரட்சியை உண்டாக்கிவிட முடியுமென்று செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள், ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி  மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்தார்கள். “ஆனானப்பட்ட எம்-19 கொரில்லாக்களுக்கே மன்னிப்பு வழங்கிய அரசாங்கம் நம்மை மன்னிக்காதா?”  என்று மெதிலின் கார்டெல் முக்கியத் தலைகள், பாப்லோ எஸ்கோபாரை நச்சரிக்கத் தொடங்கின.

தங்கள் தளபதி குஸ்டாவோவை அநியாயமாக இழந்ததில் இருந்தே, தாங்களும் அதுபோல சுட்டுக் கொல்லப்பட்டு நடுவீதியில் பிணமாக வீழக்கூடாது  என்கிற எண்ணம் அவர்களுக்கு முளை விட்டிருந்தது. ஒருவழியாக பாப்லோ எஸ்கோபார் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார். அரசு சார்பாக தன்னோடு  யார் யார் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாப்லோவே தீர்மானித்தார். அவர் குறிப்பிட்ட நீதித்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சியின் முக்கியப்  பொறுப்பில் இருந்தவர்களுமே பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றனர். நள்ளிரவு வேளையில் மெதிலின் கார்டெல் ஆட்கள் சன்னல்களே இல்லாத  ஒரு வேனை ஓட்டி வருவார்கள்.

அரசு சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் குழுவினர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த வேனில் ஏறியதுமே, வேன் எங்கெங்கோ சுற்றும்.  ஒருவழியாக அதிகாலையில் ஒரு பண்ணை வீட்டைச் சென்றடையும். பாப்லோவே நேரடியாகக் குழுவினரை வரவேற்று உபசரிப்பார். அடுத்த இரண்டு  மூன்று நாட்களுக்கு அவர்கள், பாப்லோவின் விருந்தினர்களாக அந்த பண்ணை வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அரசாங்கம் தன்னிடம் என்ன  எதிர்பார்க்கிறது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பாப்லோ, தன்னால் எந்தெந்த நிபந்தனைகளை ஏற்க முடியுமென்று கறாராகப்  பேசினார். பாப்லோவின் கருத்துகளைக் கேட்டுவிட்டுத் திரும்பும் பேச்சுவார்த்தைக் குழுவினர் அதிபர் அலுவலகத்தில் கூடி விவாதிப்பார்கள்.

அடுத்த முறை பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போது பாப்லோவின் சில கோரிக்கைகளை நிராகரித்து, சில புதிய சலுகைகளை அறிவிப்பார்கள்.  இப்படியாக இரண்டு மூன்று முறை பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே பாப்லோவை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க  அமெரிக்காவின் கூலிப்படை போல இயங்கிக் கொண்டிருந்த காலி கார்டெல்லைச் சேர்ந்தவர்கள், மெதிலின் நகர் முழுவதும் வலைவீசித்  தேடிக்கொண்டிருந்தார்கள். பாப்லோவின் குடும்ப உறுப்பினர்களைக் கொன்றால், அவர்களுக்கு கணிசமாகக் கூலி வழங்கப்படும் என்றும் அமெரிக்காவின்  சிஐஏ அதிகாரிகள் ஆசை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

மேலும் நேரடி நடவடிக்கையாக அமெரிக்காவின் உளவு விமானங்களும் மெதிலின் வானில் அடிக்கடி பறந்து கொண்டிருந்தன. பாப்லோ குழுவினரின்  தொலைபேசியும், அமெரிக்க உளவுத்துறையினரால் ஒட்டுக் கேட்கப்பட்டு  கொண்டிருந்தது. இதெல்லாம் அதிபரே அறியாமல் நடந்துகொண்டிருந்தவை.  மற்ற கார்டெல்களைப் பற்றி அமெரிக்காவுக்குக் கவலையில்லை. பாப்லோ எஸ்கோபாரை மட்டுமாவது அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை  வாங்கிக் கொடுக்க வேண்டும், அல்லது அவரது பிணத்தையாவது அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் அமெரிக்க அதிகாரிகள்  வெறித்தனமாக இருந்தார்கள்.

இல்லையேல் அமெரிக்காவில் தன்னுடைய இமேஜ் ஆட்டம் கண்டுவிடுமென அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருதினார். இதற்கிடையே சர்ச்,  கொலம்பிய அரசுக்கும் பாப்லோவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவேண்டும் என்று தன்னிச்சையான சில நடவடிக்கைகளை  முன்னெடுத்தது. மத நம்பிக்கை நிரம்பியவரான பாப்லோ மீது சர்ச்சுக்கு அனுதாபம் இருந்தது. கொலம்பியாவில் புகழ்பெற்ற ஃபாதர் கார்சியா என்பவர்  அப்போது ‘கடவுளின் நிமிடங்கள்’ என்கிற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அந்த நிகச்சியில் பலமுறை வெளிப்படையாகவே, “பாப்லோவுடன் நான்  பேச விரும்புகிறேன். அவர் சராசரி மனிதராக, இயேசு கிறிஸ்துவின் குழந்தையாக இந்த மண்ணில் வாழவேண்டும்...” என்று அறிவித்தார்.

பாப்லோ விரும்பிப் பார்க்கும் டிவி நிகழ்ச்சி இது. இம்மாதிரி பாப்லோ தொடர்பான அறிவிப்பை ஃபாதர் சொல்லும்போதெல்லாம், மறுநாள் சர்ச்சுக்கு  லம்பான தொகை உண்டியலில் விழுவது வாடிக்கை. கொலம்பியாவில் எல்லாத் தரப்புமே பாப்லோ எஸ்கோபாரின் அனுதாபிகள்தான். அவர் ஓர்  அரசியல் தலைவராகவோ, தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியாகவோ நிம்மதியான வாழ்வை எல்லோரையும் போல வாழவேண்டும் என்று  விரும்பினார்கள். வன்முறை போதுமென்ற மனநிலையில் இருந்த நாட்டின் அதிபருக்கும் அதே எண்ணம்தான் இருந்தது. காலம் கைகூடி வந்தது.  எனினும், விதி வேறு கதை எழுதத் தொடங்கியது. விதியின் விளையாட்டை யார்தான் மாற்ற முடியும்?

(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்