ஒரு நதியின் மரணம் விஷமாகும் திருப்பூர்!



ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்
ஊருக்குள் வந்ததால் ஆறே பாழ்

என்று ஒரு கவிதை உள்ளது. இந்தக் கவிதை எங்கு பொருந்துமோ இல்லையோ திருப்பூருக்கும் நொய்யலுக்கும் அப்படிப் பொருந்தும். நொய்யல் ஆறு  தமிழ் இலக்கியங்களில் கொண்டாடப்படும் காவிரியின் தங்கை. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சிறு ஓடையாகத் தொடங்கி சுமார் 170 கி.மீ. ஓடி  காவிரியைத் தழுவும் நீர் மங்கை.

இந்த சிறு நதியை வழியில் உள்ள கோவை, திருப்பூர் என இரு மாநகரங்கள் உருத் தெரியாமல் சிதைத்துள்ளன. திருப்பூர் சென்ற நூற்றாண்டின்  கடைசி மூன்று தசமங்களில் ஒரு தொழில் நகரமாக உருப்பெறத் தொடங்கியது. தொழில் நகரான கோவையின் கிளை நகராக ஆடை உற்பத்தியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த திருப்பூருக்கு பனியன் கம்பெனிகள் வந்தபோது அதன் வளர்ச்சி நாலு கால் பாய்ச்சலில் சென்றது. இங்கு உற்பத்தியாகும்  பனியன்கள், டீ ஷர்ட்டுகள், பின்னலாடைகள் உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இப்போது ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நிகழும் தொழில் நகராக உயர்ந்திருக்கிறது. நமது அந்நியச் செலாவணி  வருவாயில் பெரும்பகுதியை திருப்பூர்தான் ஈட்டிவருகிறது. ஆனால், இதற்காக திருப்பூர் கொடுத்து வரும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல. அதில்  ஒன்றுதான் நொய்யலின் படுகொலை. ஆற்று நீரை சாக்கடையாக்கி, நிலத்தடி நீரைக் காணாமல் செய்து, நிலவளத்தை விஷமாக்கி, காற்று  மண்டலத்தைக் கபளீகரம் செய்து ஒட்டுமொத்த சூழலையும் மனிதர்கள் உயிர் வாழத் தகுதியற்றதாக்கி வைத்திருக்கிறது இந்தத் தொழில் நகரம்.

திருப்பூரில் பின்னலாடைத் தொழில் உருவான காலம்தொட்டே இதன் சாயப்பட்டறைக் கழிவுகள், சலவை மற்றும் ப்ரிண்டிங் யூனிட் கழிவுகள்  நொய்யலில்தான் கொட்டப்பட்டுவந்தன. இதன் தீமைகள் குறித்து தொண்ணூறுகள் வரை அரசோ, மக்களோ, நிறுவனங்களோ உணரவேயில்லை. இப்படி  ஆற்றில் சேரும் கழிவுகளால் ஆறே சாக்கடையாக மாறிப்போன பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு ‘சாயப்பட்டறை ஆலைகள் மாற்று ஏற்பாடு செய்ய  வேண்டும். இல்லையெனில் தொழிலை நிறுத்த வேண்டும்!’ என்று ஆணையிட்டது.

இது நடந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் ‘ஆலைகளில் எஞ்சும் கழிவு நீரை எல்லாம் மறுசுழற்சி  செய்து மீண்டும் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதை ஜீரோ டிஸ்சார்ஜ் யூனிட்ஸ் என்றார்கள். மேலும்,  முறையான அனுமதி இல்லாத 750க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. திருப்பூரில் சுமார் பத்தாயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்  இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அதன் வருவாய்க்கு ஏற்ப சாயப்பட்டறைகளை ஏற்பாடு செய்துள்ளன.

திருப்பூரில் இருந்த பெரிய பின்னலாடை நிறுவனங்கள் நீதி மன்றத்தின் இந்த ஆணையை ஏற்று கழிவுநீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டன.  இதற்கான வாய்ப்பில்லாத சிறு, குறு சாயப்பட்டறைகள் ஒன்று சேர்ந்து பதினெட்டு கூட்டு கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்களை அமைத்தன. இதை,  Common Effluent Treatment Plants (CETP) என்பார்கள். இதில் 380 சிறிய சாயப்பட்டறைகள் இணைந்துள்ளன. ஆனால், இத்தனை  ஏற்பாடுகளுக்குப் பிறகும் ஆறு சுத்தமாகவில்லை. நிலைமை சீராகவில்லை. இதற்குக் காரணங்கள் பல. திருப்பூரில் பல நிறுவனங்கள் முறையான  அரசு அனுமதி இல்லாமல்தான் இயங்கிவருகின்றன.

திருப்பூர் நகரம் முழுதுமே பெரும்பாலும் ரொக்கப் பட்டுவாடா முறையில்தான் தொழில் நடக்கிறது என்பதால் இங்கு கறுப்புப் பணம் கட்டற்றுப்  புழங்குகிறது. இந்நிலையில் இப்படியான நிறுவனங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்காமல் அதை தொடர்ந்து ஆற்றில்தான் விடுகின்றன. மறுபுறம்  தொடர்ந்து நிகழும் மூலப்பொருள் விலையேற்றம், பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பல சிறிய  சாயப்பட்டறை நிறுவனங்களை மூடச் செய்துள்ளன. இதனால், இவர்களை நம்பி CETP அமைத்தவர்கள் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான கட்டணத்தை  அதிகரிக்க நேர்கிறது. இதனாலும் பல நிறுவனங்கள் கழிவுநீரை ஆற்றிலேயே கலக்கின்றன.

ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் அமைக்க ஒன்றரைக் கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை தேவைப்படும். இது பல சிறு நிறுவனங்களுக்குக்  கட்டுப்படியாவதில்லை. அதே சமயம் வெளியே எங்காவது இதைச் செய்து கொள்ளலாம் என்றால் அதற்கு மாதம் பதினைந்து லட்சம் வரை  செலவாகும் என்கிறார்கள். சரி, இப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தால் பிரச்னை முழுதுமாகத் தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை  என்கிறார்கள் நிபுணர்கள். மறுசுழற்சி முறையில் சாயப்பட்டறை நீரைச் சுத்திகரித்த பிறகு சாயக்கழிவு சகதிகள் மிச்சமாகின்றன. இந்த சாயக்  கழிவுகளை ஆங்காங்கே அப்படியே கொட்டுகிறார்கள். சிலர் ஆற்றில் விடுகிறார்கள்.

சிலர் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் கொட்டுகிறார்கள். சிலர், தொட்டி அமைத்துச் சேகரிக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் நீரையும்  நிலத்தையும் மாசுபடுத்தும் செயல் இது. இந்தக் கழிவுகளில் இருந்து குளோரைடு, சல்பேட், சல்பைடு போன்ற வேதிப்பொருட்கள் நீரிலும் நிலத்திலும்  கலக்கின்றன. இவை உடலுக்குப் பல கேடுகளை உருவாக்கும். மறுசுழற்சி நிலையங்களில் எஞ்சும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த போதுமான  தீர்வுகளை, வழிமுறைகளை அரசும் சொல்லவில்லை; தொழில் நிறுவனங்களும் உருவாக்கவில்லை.

இப்படி ஆற்று நீரில் கலக்கும் சாயக் கழிவுகள் ஆற்றின் போக்கில் ஒரத்துப்பாளையம் அணையை அடைகின்றன. பயன்படுத்தவே தகுதியற்ற இந்த நீர்த்  தேக்கத்தை திறந்துவிட வேண்டாம் என்று அந்தப் பகுதியின் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆற்றில் ஏற்பட்ட அதீத வெள்ளப்பெருக்கைக்  காரணம் காட்டி கடந்த 2005ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. சுமார் அரை மில்லியன் சதுர அடி அளவுள்ள வேதி விஷங்கள் காவிரியில் கலந்ததால்  மொத்த ஆறும் விஷமாக மாறியது. சுமார், நானூறு டன் மீன்கள் செத்து மிதந்தன.

அந்தப் படுகை முழுதும் பல அடி தடிமனான விஷக் கழிவு படிந்தது. திருப்பூர் மாவட்டம் முழுதுமே நிலத்தடி நீர் வேகமாகக் காலியாகி வருகிறது. சில  பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் அடி வரை போர் போட்டாலும் நீர் கிடைப்பதில்லை. மேல் மட்ட நிலத்தடி நீர் ஆயிரம் அடிகள் வரை இருக்கும்.  அதற்கும் கீழே கடினமான பாறைகளில் அடிமட்ட நிலத்தடி நீர் இருக்கும். இதுவும் வேகமாகக் காலியாகி வருவது ஒரு பிரச்னை என்றால் இப்படிக்  கிடைக்கும் நீரில் சுமார் நாற்பது சதவீதத்துக்கும் மேல் வேதி நச்சுக்கள் கலந்த மாசு நீராக இருப்பது அடுத்த சிக்கல்.

ஆய்வு செய்யப்பட்ட 2607 மாதிரிகளில் மாநிலத்திலேயே அதிக அளவாக 781 மாதிரிகளில் நைட்ரேட் மாசு உள்ளது திருப்பூரில்தான். ஒன்றில் மூன்று  பங்கு நீர் மாசுபட்டிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது. மலட்டுத்தன்மை, ப்ளூ பேபி எனப்படும் பிறவிக் குறைபாடுகள் ஆகியவை நைட்ரேட்  கலப்பால் வரும் என்கிறார்கள். நிலம், நீர், காற்று என பஞ்சபூதங்களும் பாழ்பட்டுக் கிடக்கும் மாவட்டமாக திருப்பூர் இருக்கிறது. நிலைமை கைமீறிப்  போவதற்கு முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் குடிகளின் எதிர்பார்ப்பு.  

இளங்கோ கிருஷ்ணன்