பலி கேட்கும் நீட்
நியூஸ் வியூஸ்
தமிழகத்தின் இன்னொரு இளம் மொட்டு, பூப்பதற்கு முன்பே கருகியிருக்கிறது. கடந்த வருடம் அனிதா. இந்த ஆண்டு பிரதீபா. ‘நீட்’ நுழைவுத் தேர்வு, இன்னும் எத்தனை இளம் மாணவர்களின் உயிரைக் குடிக்குமோ தெரியவில்லை.
இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. பிரும்மாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் படம். அப்படத்தில் உயர்வகுப்பைச் சார்ந்த ஏழை மாணவன், மருத்துவம் படிக்கக்கூடிய லட்சியத்தோடு இருக்கிறான். +2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும்கூட, லஞ்சம் கொடுக்க முடியாமல், அவனுக்கு டாக்டருக்கு படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் சுண்டல் விற்றுப் பிழைக்கும் அவன், மனவுளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறான் என்பதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்ததைப் போன்ற மரணங்கள், நிஜத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் நடந்திருக்கும் அடுத்தடுத்த ஆண்டு தொடர் தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமாகியிருக்கின்றன. மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருக்கும் மருத்துவக் கல்லூரி அட்மிஷன் பெறுவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு, போதுமான எதிர்ப்பினை இப்போதைய மாநில அரசு கொடுக்கவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு கோரி மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவதற்கான அழுத்தத்தை இப்போதைய ஆட்சியாளர்கள் வலியுறுத்தவில்லை.
இதனாலேயே இரண்டு இளம் உயிர்களை அநியாயமாக இழந்திருக்கிறோம். இந்த வாரம் ‘நீட்’ பறித்த உயிர், மாணவி பிரதீபாவுடையது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா சண்முகம், கட்டடத் தொழிலாளி. மருத்துவம் படிப்பதே தன்னுடைய லட்சியமென்று, இரவும் பகலுமாகப் படித்து வந்த பிரதீபா, கடந்த ஆண்டு +2வில் 1125 மதிப்பெண்கள் எடுத்தார். தன்னுடைய கனவு நனவாகி விடும் என்கிற அவரது நம்பிக்கையில் இடியாக இறங்கியது ‘நீட்’. மதிப்பெண் அடிப்படையில் சுலபமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் கனவுக்கு தடையாக முளைத்தது ‘நீட்’.
கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில், அவர் 155 மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருந்தாலும், தனியார் கல்லூரியில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்கக்கூடிய வாய்ப்புதான் இருந்தது. பிரதீபாவின் குடும்பத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டாத இலக்கு அது. எனவே, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அரசுக் கல்லூரியிலேயே இடம் பிடிக்கலாம் என்று திட்டமிட்டார். எனினும், இம்முறை அவரே எதிர்பாராவிதமாக வெறும் 39 மதிப்பெண்களே பெற்று தோல்வி யுற்றார். தன்னுடைய கனவு நொறுங்கியதைப் பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டார்.
முன்பெல்லாம் பத்தாம் வகுப்பிலோ, பன்னிரெண்டாம் வகுப்பிலோ தோல்வியடையும் மாணவ, மாணவிகள்தான் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகளில் வாசித்திருக்கிறோம். மிகச்சாதாரண குடும்பங்களில் பிறந்து, கடுமையாக உழைத்துப் படித்து +2வில் 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவோ, 1125 மதிப்பெண் பெற்ற பிரதீபாவோகூட தற்கொலை செய்து கொள்வார்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்தாவது பார்த்திருப்போமா? நல்ல மதிப்பெண் எடுத்த குழந்தைகளே தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றால், தவறு எங்கே இருக்கிறது? தேசிய அளவில் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைகளில் சமச்சீர்வு கொண்டு வருகிறோம் என்று சொல்லித்தான் ‘நீட்’டை நமக்கு திணித்திருக்கிறார்கள்.
போதிக்கப்படும் கல்வியில் சமச்சீர் என்றால் ஒப்புக் கொள்ளலாம். கல்லூரிக்கு நுழையவே எப்படி சமச்சீர்வு கொண்டுவர முடியும்? குழுமூர், பெரவளூர் போன்ற குக்கிராமப்புறங்களில் அடித்தட்டு குடும்பங்களில் பாமரப் பெற்றோருக்கு பிறந்து, சொந்த முயற்சியால் +2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்கள் அனிதாக்களும், பிரதீபாக்களும். சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் நல்ல வசதியான குடும்பங்களில் உயர்வகுப்பில் பிறந்து, பெற்றோரின் வழிகாட்டுதலோடு, லட்சக்கணக்கில் செலவு செய்து ‘கோச்சிங் சென்டர்’களில் பயிற்சி பெற்றவர்களோடு இவர்கள் போட்டியிடுவது எப்படி சமச்சீர் ஆகும்?
பன்னிரெண்டு ஆண்டுகள் இவர்கள் உழைத்துப் படித்த படிப்பெல்லாம் வீண்தானா? ‘நீட்’ என்கிற ஒரே ஒரு நுழைவுத் தேர்வு மட்டுமே இவர்கள் மருத்துவர்கள் ஆகலாமா என்கிற தகுதியினை உறுதி செய்கிறது என்றால், இத்தனை ஆண்டுகளாக இவர்கள் போராடி வென்றதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா? இந்தியத் திருநாட்டின் பெருமையாக ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற கோஷத்தை முன்வைக்கிறோம்.
எனினும், அவரவர் மண் சார்ந்த மாநிலக் கல்வியை மட்டம் தட்டும் விதமாக, மத்திய கல்விமுறையான சிபிஎஸ்ஈ அடிப்படையில் ‘நீட்’ என்கிற பொதுத்தேர்வைக் கட்டாயமாக்கி, தொடர்ந்து நம் கிராமப்புற மாணவிகளைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். “எங்களை வாழக்கூட விடமாட்டீர்களா பாவிகளா…” என்று அரசுகளை நோக்கி, இந்திய கிராமப்புற மக்கள் கதறுகிறார்கள். அரசு அந்தந்த ஆண்டே தேர்வு நடத்தி மாணவர்களைக் கொல்கிறது. இந்த அநியாயப் பலிகளுக்குக் காரணமானவர்களை ஒருநாள் தெய்வம் நின்று கொல்லும்.
யுவகிருஷ்ணா
|