விளம்பர உலகில் இது ரியலிஸ்டிக் காலம்!ராஜீவ் மேனன் மனைவி லதா மேனன் open  talk

சாட்டிலைட் சேனல்களின் தொடக்கக் காலங்களிலேயே விளம்பர உலகில் கொடிகட்டிப் பறந்தவர் லதா மேனன். இன்றோ நான்ஸ்டாப்பாக ஸ்கோரை  அள்ளுகிறார். இருநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், ஆவண, குறும்படங்கள் என தேசிய அளவில் கலக்கி வருபவர், இப்போது  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தன் கணவர் ராஜீவ் மேனன் இயக்கி வரும் ‘சர்வம் தாளமயம்’ படம் வழியாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரது  அலுவலக அறையில் பிரமாண்டமான கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றில் ஸ்டைலாக புகைபிடித்தபடி வரவேற்கிறார் அமெரிக்க ஹீரோ ஜேம்ஸ்  டீன்!

‘‘என் ஃபேவரிட் ஹீரோ. 1950கள்ல வாழ்ந்தவர். 25 வயசுலயே உலகத்திலிருந்து விடை பெற்றவர். ஜேம்ஸ் டீன் வாழ்ந்த காலங்கள் குறைவுதான்.  ஆனா, நெட்ல அவர் படத்தை தேடினா, அருவியா வந்து கொட்டும். இப்ப நாம எடுக்கிற செல்ஃபிக்கு எல்லாம் வித்திட்டவர் அவர்தான். தன் சொந்த  கேமராவுல தினமும் தன்னையே விதவிதமான கோணங்கள்ல படம் எடுத்துட்டு இருப்பார். இப்ப வர்ற டீ ஷர்ட், ஷர்ட் விளம்பர மாடல்களின் பல  போஸ், தன்னைத் தானே அவர் செல்ஃபி எடுத்துக்கிட்ட மாடல்தான். இந்த போட்டோ ரொம்பவே ஸ்பெஷல்.

குளிரும் தூறலுமான சாலைல ஹாயா புகைபிடிக்கிற ஜேம்ஸ் டீனைப் பார்த்தாலே டென்ஷன், ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்துடும்...’’கவிதையாக  வர்ணிக்கும் லதா மேனன், விளம்பர உலகில் அடியெடுத்து வைத்தது சுவாரஸ்யமானது. ‘‘அப்பா பி.ஆர்.நாயர், சதர்ன் ரெயில்வே ஆபீசர். அடிக்கடி அவர்  டிரான்ஸ்ஃபர் ஆனதால நாங்களும் ஊர் ஊரா சுத்தினோம். அக்கா, அண்ணா படிப்புக்காக இங்க வந்து செட்டிலானோம். அம்மா இந்திராவுக்கு பழைய  கிளாசிகல் இந்தி சினிமா ரொம்ப பிடிக்கும். அப்ப இந்திப் பட ஷூட்டிங் சென்னைல நடக்கும்.

அப்பாவுக்கு சினிமால நண்பர்கள் இருந்தாங்க. ஸோ, சில ஷூட்டை வேடிக்கை பார்க்க போயிருக்கோம். அம்மாவோட சினிமா கம்பேனியன் நான்தான்.  அவங்க தியேட்டருக்கு போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. வீட்ல டிவி வந்தப்ப ஞாயிறு உற்சாகமா இருக்கும். அன்னைக்குதான்  தூர்தர்ஷன்ல பிற மொழிப் படங்கள் போடுவாங்க. தவறாம அதைப் பார்த்து ரசிப்போம். அப்பா நல்ல ரைட்டர். மலையாளத்துல ஏராளமான பக்திப்  பாடல்கள் எழுதியிருக்கார். இப்படி நான் வளர்ந்த சூழலே ரசனையா இருந்ததால எத்திராஜ்ல பி.காம் படிக்கிறப்பவே அட்வர்டைஸிங் துறைல ஆர்வம்  வந்துடுச்சு. காலேஜ் முடிச்சதும், மும்பைல மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன்.

விளம்பரத் துறை பத்தி யாருக்கும் எந்த ஐடியாவும் இல்லாத காலம் அது. ஆறு மாதங்கள் தேடி அலைஞ்சதும்தான் வேலை கிடைச்சது. சரியா  அப்பதான் சேட்டிலைட் சேனல்ஸ் வர ஆரம்பிச்சது! விளம்பர ஏஜென்ஸிகள்ல கிளையன்ட் செக்‌ஷன், மீடியா, ஃபிலிம்ஸ் டிபார்ட்மென்ட், கிரியேட்டிவ்  செக்‌ஷன்னு... பல டிபார்ட்மென்ட்கள் உண்டு. இதுல நான் ஃபிலிம் டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்தேன். இங்கி லாந்துல இருந்து ஒளிப்பதிவாளர்களை  அழைச்சுட்டு வந்தெல்லாம் ஒர்க் பண்ணியிருக்கோம். அப்புறம், என்னைத் தேடியும் நிறைய விளம்பரங்கள் வர, ‘ஐரிஸ் ஃபிலிம்ஸ்’ கம்பெனியைத்  தொடங்கினேன்...’’ என்ற லதா மேனன், அட்வர்டைஸிங் துறையைப் பற்றி மனம் திறந்தார்.

‘‘முதன்முதலா ப்ரூ காபி விளம்பரத்தை ஷூட் பண்ணினேன். தொடர்ந்து ‘ஏர்செல்’ல சூர்யா, ‘ஃபேன்டா’ல சிம்ரன், ஹட்சன், ஆரோக்யா மில்க்னு  வரிசையா பெரிய கிளையன்ட்ஸ் அமைஞ்சாங்க. சினி ஸ்டார்ஸை வைச்சு எடுத்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் எங்களோட ஆரம்பத்துல இருந்து டிராவல்  ஆகறார். ‘ஆரோக்யா’ ஷூட்டுக்காக விவசாயிகளை சந்திச்சோம். அதை டாகுமென்ட்ரி + கமர்ஷியல் சேர்த்து ‘டாகுமெர்ஷியல்’ மாதிரி இயக்கினேன்.  அதே மாதிரி குளிர்பான விளம்பரங்கள்ல ட்ரெயின், பிளைவுட் விளம்பரத்துல யானைனு பிரமாண்டங்களைக் கொண்டு வந்தோம். அதே சமயம்  நடைமுறையில சில சிக்கல்களையும் சந்திச்சோம்.

ஒவ்வொரு பிராண்டுக்கும் நம்மை மாதிரியே வயசு உண்டு. இதை மீறி என்றும் இளமையா அந்த பிராண்டை காண்பிக்கணும். காண்டம்ல தொடங்கி  பல விளம்பரங்களை இயக்கியிருக்கேன். தமிழக அரசுக்காக ‘ஓர் இழையின் பயணம்’னு நெசவாளர் பத்தின ஆவணப்படத்தையும் டைரக்ட்  பண்ணியிருக்கேன். இந்தத் துறையைப் பொறுத்தவரை சில நேரம் வேலையா வந்து குவியும். சில நேரம் எந்த ஒர்க்கும் வராது. இந்த இரண்டு  எக்ஸ்ட்ரீம்லயும் மனசை கிரியேடிவ்வா வைச்சுக்கணும்...’’ என்று சொல்லும் லதா மேனன், இந்த வேலை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார்.  ‘‘ஆக்சுவலா நிறைவா இருக்குனு சொல்லணும்.

முன்னாடி விளம்பரங்கள்ல மாடல்ஸ் இல்லைனா நடிகர்கள் நடிச்சாதான் ரீச் ஆகும் என்கிற சூழல் இருந்தது. இப்ப ரியலிஸ்டிக் வந்தாச்சு. யார் வேணா  மாடலாகலாம். This is a big change... but good change!’’ புன்னகைத்தவரின் பேச்சு, ராஜீவ் மேனன் பக்கம் திரும்பியது. ‘‘ஒரே துறைல நாங்க  இருந்ததால நட்பு காதலாச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவரோட ‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ல நானும் சேர்ந்து  ஒர்க் பண்ணியிருக்கேன். அப்புறம் மணி சாரோட ‘தில் சே’ல (தமிழில் ‘உயிரே...’) ‘சைய்ய... சைய்ய...’ பாட்டுக்கு ஒர்க் பண்ணினேன்.

அதைப் பார்த்த மணி சார், ‘நீ ஏன் முழுப்படமும் ஒர்க் பண்ணக்கூடாது?’னு சொல்லி ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ல வேலை பார்க்க வைச்சார். அப்ப  ரெண்டாவது பொண்ணு லட்சுமி பிறந்திருந்தா. சில நாட்கள் லட்சுமியையும் படப்பிடிப்புக்கு கூட்டிட்டு போயிருக்கேன். இதுக்கு அப்புறம் மால்குடி  சுபாவோட ‘வால்பாறை வட்டப்பாறை’ ஆல்பம் பண்ணினேன். அதோட ஹிட்டுக்குப் பிறகு சினிமால டைரக்‌ஷன் வாய்ப்புகள் தேடி வந்தது.  குழந்தைகளோட நேரம் செலவழிக்கவே விரும்பினேன். விளம்பரங்கள்ல ப்ரீ புரொடக்‌ஷனுக்கு ஒரு மாசமானாலும் வீட்ல உட்கார்ந்து ஒர்க் பண்ண  முடியும். சினிமா அப்படியில்ல! லொக்கேஷன் தேடணும்.

அவுட்டோர் ஒர்க் ஜாஸ்தி. ஸோ, பிறகு பார்த்துக்கலாம்னு இருந்துட்டேன். இப்ப நேரம் கைகூடியிருக்கு. தயாரிப்பாளராகிட்டேன். பிள்ளைங்க  வளர்ந்துட்டாங்க. விரைவில் படம் டைரக்டும் பண்ணுவேன். கைல ரெண்டு கதைகள் இருக்கு!’’ கண்சிமிட்டும் லதா மேனன், தன் மகள்களைப் பற்றிச்  சொல்லும்போது உற்சாகமாகிறார். ‘‘பெரியவ சரஸ்வதி, இந்தில சஞ்சய் லீலா பன்சாலி இயக்கின ‘பத்மாவத்’ல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணியிருக்கா.  இப்ப எங்க படமான ‘சர்வம் தாளமயம்’ல சரஸ்வதிதான் காஸ்ட்யூமர். சின்னவ லட்சுமி காலேஜ் படிக்கறா.

விளம்பரப் படங்கள் தவிர, வைல்ட் போட்டோகிராஃபில இவளுக்கும் ஆர்வம் உண்டு. ராஜீவைப் பார்த்து வந்திருக்கணும்! அவரோட சேர்ந்து பந்திப்பூர்  புலிகள் சரணாலயம், காசிரங்கா காண்டாமிருக சரணாலயம்னு சுத்தறா; சுத்தறோம்! பந்திப்பூர்ல நான் ஷூட் பண்ணின புலிகளோட போட்டோஸை  ‘காலண்டர் 2016’னு ரெடி பண்ணினேன். அதுல வந்த வருமானத்தை சென்னைல வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுத்தோம். ஒவ்வொரு  வருஷமும் ஒவ்வொரு கான்செப்ட்ல காலண்டர் ஷூட் பண்ணிட்டிருக்கேன். எங்க ‘மைண்ட் ஸ்கிரீன்’ ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தொடங்கி பத்து  வருஷங்களாகுது.

இன்ஸ்டிடியூட் நல்லா போகுது. உண்மைல நான் தயாரிப்பாளரானது எதிர்பாராம நடந்தது. 18 வருஷங்களுக்குப் பிறகு ராஜீவ் இயக்கறதா பலரும்  நினைக்கறாங்க. ஆக்சுலவா ‘கண்டுகொண்டேன்...’ முடிச்சதுமே பாலிவுட்ல அவர் படம் டைரக்ட் பண்றதா இருந்தது. அப்ப சூழல் சரியா அமையலை.  இப்ப நாங்களே தயாரிக்கறதால சுதந்திரமா இயங்கறார். அது அவர் முகத்துலயும் பிரதிபலிக்குது! ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான்னு குட்  காம்பினேஷன். மியூசிகல் சப்ஜெக்ட். மொத்த ஷூட்டும் முடிச்சாச்சு. இனி ரிலீஸ் வேலைகளை ஆரம்பிக்கணும்!’’ சொல்லும்போதே லதா மேனனின்  முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்