ரத்த மகுடம்-பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன்-5

சூரிய உதயத்துக்கு சில நாழிகைகளே இருந்த அந்தத் தருணத்திலும் மல்லை நகரத்தில் காவல் பலமாக இருந்தது. காவல் வீரர்கள் பெரும் வீதிகளில்  சதா நடமாடிக் கொண்டிருந்தனர். இதை சற்றுத் தொலைவிலிருந்தே காபாலிகன் கவனித்தான். பல்லவ மன்னருக்கும் பல்லவ இளவரசருக்கும்  குருவாக இருப்பவர் புலவர் தண்டி. அப்படிப்பட்டவர் பல்லவர்களின் பரம எதிரியான சாளுக்கிய மன்னரிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையைக்  கொடுக்கிறார்.

இது புரியாத புதிர் என்றால் சத்ரு நாட்டுக்குள், அதுவும் வீரர்கள் நடமாட்டம் மிகுந்த மல்லைத் துறைமுக நகரத்தில் சாளுக்கிய மன்னர்  விக்கிரமாதித்தர் எப்போது வந்தார்... எவர் கண்ணிலும் படாமல் அவரால் எப்படி ஆதிவராகக் குகைக்கோயிலில் இருக்க முடிகிறது என்பதெல்லாம்  விளங்காத விஷயங்கள். இக்கேள்விகளுக்கு பதில் தேடுவது ராஜ குற்றம். ஏனெனில் பல்லவ நாட்டின் குரு இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனவே,  வினவுவதை விட கட்டளைக்கு அடிபணிவது சாலச் சிறந்தது. இந்த முடிவுக்கு வந்த காபாலிகன், நேர் வழியைத் தவிர்த்தான். மலைப்பாறை  வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றிச் சென்று ஆதிவராகக் குகையை அடைந்தான்.

குகை திறந்திருந்தது. மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தவன் சிறு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த விளக்குக்கு  எதிரே தனித்த ஒரு மனிதர் மட்டும் நின்றிருந்தார். ராஜ தோரணை தென்பட்டாலும் அந்த மனிதரிடம் அரச குலத்துக்கான அடையாளங்கள் இல்லை  என்பதை அறிந்த காபாலிகன் எச்சரிக்கை அடைந்தான். ‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் இங்கு இருப்பார் என்றல்லவா புலவர் தண்டி கூறினார்...  இங்கு வந்தால் வேறு யாரோ இருக்கிறார்களே... ஒருவேளை சாளுக்கிய மன்னர் இன்னும் வரவில்லையோ...’  யோசனையுடன் ஆதிவராகன் குகை  என்று பிரசித்தி பெற்ற அந்தக் குடைவரைக் கோயிலுக்குள் நுழைவதை விடுத்து சிறிது பின்வாங்கி, குகை வாயிலின் ஒரு புறத்தில் காபாலிகன்  பதுங்கினான்.

அந்நேரத்திலும் விடாது எரிந்து கொண்டிருந்த தூங்கா விளக்கு, மலையைக் குகை போல் குடைந்து முதலாம் நரசிம்மவர்ம பல்லவரால்  நிர்மாணிக்கப்பட்ட அந்தக் கோயிலின் உட்புறம் நன்றாகத் துலங்கும்படி செய்திருந்தது. இதன் விளைவாக, வாயிற்படிக்கு நேர் எதிரில் மலையின்  உட்சுவரில் சிற்பி நிர்மாணித்திருந்த ஆதிவராகப் பெருமான் திருவுருவம் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் செதுக்கப்பட்டு உயிருள்ளவை போல்  காணப்பட்ட மற்ற பிம்பங்களும் தெள்ளெனத் தெரிந்தன. ஒரு கையால் அவனி தேவியை அணைத்து உயரத் தூக்கி வைத்துக் கொண்டும், இன்னொரு  கையால் அவள் பாதத்தைப் பிடித்துக் கொண்டும்; இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திக்கொண்டும் காட்சியளித்த பரந்தாமனான ஆதிவராகனின் சீரிய  பார்வையில் உக்கிரமும் சாந்தியும் கலந்து கிடந்தன.

தரையில் ஊன்றிய நாரணனின் இடது திருவடியும், ஆதிசேஷன் தலையைப் பீடமாக்கிக் கொண்ட வலது கழலிணையும் அசுரனிடம் பொருது மீண்ட  புராண நிகழ்ச்சிக்குச் சான்று கூறும் தோரணையில் காட்சியளித்தன. ஆதிவராகனின் சீறிய தோற்றத்துக்கு அணை போடும் ஆற்றலுடையவளாக,  அசுரனுடன் பொருது மீண்ட சீற்றத்தைத் தணிக்கும் கருணை சொரூபமாக அருள் சுரக்கும் வெட்கக் கண்களுடன் பெருமானின் கரங்களில் வளைந்து  கிடந்தாள் பூமிப் பிராட்டி. எம்பெருமான் திருவடிக்குத் தலை கொடுத்திருந்த ஆதிசேடனும் அவனருகில் இருந்த நாக கன்னிகையும் தங்களுக்குக்  கிடைத்த திருவடியில் மெய் மறந்திருந்தார்கள்.

ஆதிவராகன் அருள் தோற்றத்தின் விளைவாக மெய்மறந்தது ஆதிசேடன் மட்டுமல்ல, அந்தக் கோயிலுக்குள் ஆதிவராகன் முன்பு அந்த மனிதரும்தான்  என்பதை காபாலிகனால் உணர முடிந்தது. மார்பில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, கால்கள் இரண்டையும் லேசாக அகற்றிக் கொண்டு  ஆஜானுபாகுவாக நின்றிருந்த அம்மனிதரின் தலை நிமிர்ந்திருந்ததால் அவர் எம்பெருமான் உருவத்தை அணு அணுவாக ஆராய்வதை உணர்ந்தான்  வாயிற்படியின் மூலையிலிருந்த காபாலிகன். அளவோடு சிறுத்த இடுப்பும், அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத  யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின.

கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவர் திடத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. நெற்றியில் சூரணம்.  தலையில் பட்டு தலைப்பாகை. மார்பில் போர்த்திய நிலையில் பட்டு வஸ்திரத்துடன் காணப்பட்ட அந்த மனிதரின் கன்னத்தில் லேசாகப் புலப்பட்ட  முதிர்ச்சி, அவர் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை உணர்த்தியது. இந்நிலையில் அந்த மனிதர் லேசாகத் திரும்பி உட்பாறையின் வலது  பக்கத்திலிருந்த மூன்று சிற்பங்களைக் கவனிக்கத் தொடங்கினார். இப்படி அவர் அரைவாசி திரும்பியதால், அவர் முகம் தூங்கா விளக்கில் நன்றாகத்  தெரிந்தது.

நன்றாகத் தீட்டப்பட்ட ஈட்டிகளின் முனைகளைவிடப் பிரகாசித்த கண்கள், அந்தச் சிற்பங்களை வியப்புடனும் ஓரளவு சீற்றத்துடனும் நோக்கின. எதிரே  தெரிந்த மூன்று சிற்பங்களை நோக்கியபோது, அந்த இதழ்களில் வெறுப்பு கலந்த பயங்கரப் புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது. சிற்பங்களை அமைத்திருந்த  லாவகத்தால் சிற்பங்கள் அந்த மனிதரை நோக்குகின்றனவா அல்லது அந்த மனிதர் சிற்பங்களை நோக்குகிறாரா என்று புரியவில்லை.  மலைப்பாறையில் குடையப்பட்டிருந்த மூன்று சிற்பங்களில் ஆண் சிற்பம் மகேந்திர பல்லவர் என்பதை அந்த மனிதர் உணர்ந்து கொண்டிருக்க  வேண்டுமென்பதை அவர் விட்ட பெருமூச்சு உணர்த்தியது.

தலையில் கவிழ்க்கப்பட்ட கிரீடத்துடனும், அக்கம் பக்கத் தோள்களைச் சடை போல் தொட்ட முடியுடனும், எதிரே குச்சு போல் இடுப்பிலிருந்து  இறங்கிய ஆடையின் பட்டைக் கச்சத்துடனும் காணப்பட்ட மகேந்திர பல்லவரின் முகத்தில் தெரிந்த கம்பீரம், அந்த மனிதரை வியக்க வைத்ததா  அல்லது கொதிக்க வைத்ததா என்பதை அவரது முகபாவத்திலிருந்து காபாலிகனால் உணர முடியவில்லை. பாறையின் ஒரு பகுதியாக கம்பீரத்தின்  அடையாளமாக மகிஷியொருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த மகேந்திர பல்லவரின் இடையில் சற்றுப் பின்புறமாக இருந்த  கத்தியையும் அந்த மனிதர் கவனிக்கத் தவறவில்லை.

கத்தியைக் கவனித்த அந்த மனிதரின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. அவர் கையொன்று அவரது இடைக் கச்சையில் நீண்டு  தொங்கிக்கொண்டிருந்த கத்தியின் முகப்பைத் தடவியது. மகேந்திரபல்லவர் பாறையிலிருந்து சிறிது நகர்ந்தாலும் வாளை உருவ அந்த மனிதர்  தயாராயிருந்ததாகத் தோன்றியது வாயிலின் மூலையில் நின்றிருந்த காபாலிகனுக்கு. மகேந்திரபல்லவர் மகிஷிகள் இருவரும் மகுடம் அணிந்து  அழகின் அடையாளமாகத் திகழ்ந்தனர். இருவரின் ஒடிந்த இடைகளும், உருட்டி விடப்பட்ட மார்புகளும், காலில் துலங்கிய சிலம்புகளும் அவர்கள்  இருவரையும் இரட்டைப் பிறப்புகளைப் போல் காட்டின.

அந்தக் காலத்துச் சிற்பங்கள் பலவற்றைப் போல் அந்த மகிஷிகள் இருவரில் ஒருத்தியே ஆடை அணிந்திருந்தாள். அவ்விரு சிற்பங்களையும் அந்த  மனிதர் நீண்ட நேரம் பார்க்கவில்லை. குகையில் நின்றிருந்தவர், இடப்புறப் பாறைச் சுவரில் செதுக்கப்பட்டிருந்த சிம்ம விஷ்ணுவின் சிலையையோ,  கஜலட்சுமி யின் சிலையையோ கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆதிவராகப் பெருமானை வணங்கிய பிறகு மீண்டும் மீண்டும் பல்லவ  சக்கரவர்த்தியையும் மகிஷிகள் இருவரையுமே கவனித்தார். அந்த சமயத்தில் காபாலிகனின் கையில் இருந்த மண்டையோடு வாயிலின் மூலையில்  லேசாக உராயவே அந்த மனிதர் மெல்ல வாயிலை நோக்கித் திரும்பினார்.

அப்படித் திரும்பியபோது விளக்குக்கு முன்னிருந்து அவர் அகன்றுவிடவே விளக்கு வெளிச்சம் காபாலிகன் மீது நன்றாக விழுந்தது. ஏற இறங்க  அவனை ஆராய்ந்தவரின் முகத்தில் புன்னகை பூத்தது. தொடர்ந்து அவர் உதட்டிலிருந்து, ‘‘ஏதேது... பல்லவ நாட்டில் சைவர்கள் எல்லோரும் தீவிர  வைஷ்ணவர்களாக மாறுவது போல் தெரிகிறதே...’’ என்று வந்து விழுந்த சொற்கள் காபாலிகனை சங்கடப்படுத்தியது. ‘‘ஈசனைத் தவிர வேறு எவரையும்  வணங்கேன்...’’ என்றான் கம்பீரமாக. ‘‘அப்படியானால் எதற்கு ஆதிவராகர் கோயிலுக்கு சூர்யோதய சமயத்தில் வருகை தந்தாய்? ஒருவேளை போரில்  வெற்றியடைய விரும்பி பெருமானை தரிசிக்க வந்தாயா? என்ன விழிக்கிறாய்?

பல்லவர்களின் வழக்கம் அப்படித்தானே? சற்று முன்பு நான் கூர்ந்து நோக்கிய சிற்பம் மகேந்திரபல்லவருடையது! அவரது திருக்குமாரர் நரசிம்ம  பல்லவன் வாதாபி மீது படையெடுக்கும் முன் ஆதிவராகனைத் தரிசித்து விட்டுச் சென்றான் என பல்லவர் வம்ச வரலாறு கூறுவதை அடியேன்  படித்திருக்கிறேன்...’’ இதைச் சொன்ன மனிதரை வைத்த விழியை எடுக்காமல் காபாலிகன் பார்த்தான். முக்கியமாக ‘மகேந்திர பல்லவர்’ என்று ‘ர்’  போட்டு மரியாதையுடன் அழைத்தவர், நரசிம்ம பல்லவரை மட்டும் ‘நரசிம்ம பல்லவன்’ என ஒருமையில் அழைத்ததை! எனவே காபாலிகன் மெல்லக்  கேட்டான்.

‘‘தாங்கள் யார்?’’ ‘‘ஸ்ரீராமபுண்யவல்லபர்!’’ நிதானமாக அந்த மனிதர் பதிலளித்தார். எந்தப் பெயரை எதிர்பார்த்தாலும் இந்த நாமகரணத்தை காபாலிகன்  எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்திலிருந்தே ஸ்ரீராமபுண்யவல்லபர் புரிந்து கொண்டார். ‘‘இந்தச் சிறியவனை அறிவாய் போலிருக்கிறதே?’’  என்றார் முன் எப்போதும் இல்லாத வாஞ்சையுடன். ‘‘கேள்விப்பட்டிருக்கிறேன்...’’ காபாலிகன் இழுத்தான். ‘‘என்னவென்று?’’ ‘‘சாளுக்கிய மன்னர்  விக்கிரமாதித்தருக்கு போரையும் அமைதியையும் நிர்ணயிக்கும் அமைச்சர் என்று!’’ ‘‘அது அடியவனாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறாய்?’’ ‘‘  ஸ்ரீராமபுண்யவல்லபர் என்ற பெயரில் ஒருவர்தான் இருக்கிறார்!’’ காபாலிகன் உறுதியுடன் சொன்னான்.

‘‘அப்படியானால் எங்கள் மன்னருக்குத் தர வேண்டிய ஓலையை அவரது அமைச்சரான என்னிடம் தர ஏன் யோசிக்கிறாய்?!’’ பெரும் அலையொன்று  முகத்தில் மோதியது போல் காபாலிகன் நிலைகுலைந்தான். ‘‘ஓலையா? எந்த ஓலை..?’’ தட்டுத் தடுமாறி சொற்களைச் சிதறவிட்டான். ‘‘புலவர் தண்டி  உன்னிடம் கொடுத்து அனுப்பிய ஓலை!’’ கம்பீரமாக பதில் சொன்னார் ஸ்ரீராமபுண்யவல்லபர். இதற்கு மேலும் தாமதிப்பதிலோ, வார்த்தை விளையாட்டில்  இறங்குவதிலோ, தப்பிக்க முயற்சிப்பதிலோ பயனில்லை என்பது காபாலிகனுக்கு தெளிவாகப் புரிந்தது. தன் இடையில் மறைத்து வைத்திருந்த  ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனுக்கு...’ என்றிருந்த விலாசத்தை அலட்சியம் செய்துவிட்டு ஓலையைப் பிரித்த ஸ்ரீராம புண்யவல்லபரின் புருவங்கள்  சுருங்கின. ஏனெனில் ஓலையின் தொடக்கமே ‘கரிகாலனையும் சிவகாமியையும் பின்தொடர ஆட்களை அனுப்பிவிட்டு இந்த ஓலையைப் படிக்கும்  மரியாதைக்குரிய சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராம புண்யவல்லபருக்கு...’ என்றுதான் இருந்தது! வாய்விட்டு இதைப் படித்தவர் அதன்பிறகு வந்த  வாக்கியங்களைத் தனக்குள் வாசிக்கத் தொடங்கினார். காபாலிகன் அவரையே கவனித்துக் கொண்டிருந்தான்.

அவரது நெற்றியில் முத்து முத்தாக வியர்வைகள் பூத்தன. அடிக்கடி அவரது கண்கள் சுருங்கின. முகம் கடுமையாவதும் பிரிவதுமாக நர்த்தனமாடியது.  அப்படியானால் ஸ்ரீராம புண்யவல்லபர்தான் ஆதிவராகர் கோயிலில் இருக்க வேண்டும் என்பதை புலவர் தண்டி அறிந்திருக்க வேண்டும். சாளுக்கிய  நாட்டின் அறிவிக்கப்பட்ட போர் அமைச்சரின் வியூகத்தை பல்லவ நாட்டின் அறிவிக்கப்படாத போர் அமைச்சரான புலவர் உடைக்கிறார். அதற்கான  விதை அந்த ஓலையில் இருக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீராம புண்யவல்லபரின் வதனம் ஓலையைப் படிக்கப் படிக்க மாறுகிறது... ‘‘கொடுக்க  மட்டுமே உத்தரவு.

கிளம்புகிறேன்...’’ பதிலை எதிர்பார்க்காமல் வெளியில் வந்த காபாலிகன் பாறைக்கு மறுபுறம் சென்றான். தாமதிக்காமல் புலவர் தண்டியின்  கட்டளைப்படி தன் இடுப்பிலிருந்து மூங்கில் குழலை எடுத்து ஊத முற்பட்டான். அதற்குள் அவனுக்கு அருகில் இருந்து யாரோ ஒருவர் அதே  போன்றதொரு மூங்கில் குழலை எடுத்து ஊதினார். அடுத்த கணம் நூறு வராகங்கள் சேர்ந்து சத்தமிட்டால் என்ன ஒலி எழும்புமோ அப்படியொரு ஒலி  எட்டுத் திசையிலும் ஒலித்தது! ஊதியவர் யாரென்று பார்த்த காபாலிகன் அதிர்ந்தான். காரணம், அங்கு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர்  நின்றிருந்தார்!

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்