போதை தலைநகரம்!தில்லியில் கஞ்சா பயன்பாடு இவ்வாண்டு பெருமளவு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் ஏப்.30 வரை 1,345 கிலோ கஞ்சா போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதன் அளவு 223 கிலோதான்!

தெற்கு தில்லி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துவருவது முக்கியக் காரணம். இதனையடுத்து  போதைப் பயன்பாடு இவ்வாண்டு 5 ஆயிரம் கிலோவைத் தாண்டும் என அஞ்சுகிறார்கள். இடுக்கி கோல்டு, ஆந்திரா ஸ்ட்ரெய்ன் வீட் ஆகியவை  மாணவர்கள் விரும்பிப் புகைக்கும் கஞ்சா வகைகள். ‘‘ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து தில்லிக்கு கஞ்சா  வருகிறது. மலைப்பாங்கான, பிறர் அணுகமுடியாத பகுதிகள் கஞ்சா வளருவதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன...’’ என்கிறார் குற்றப்பிரிவு டிசிபி  பிஷம்சிங்.          

சிரியாவில் பூனை டாக்டர்!

சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரினால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதோடு இடம்பெயர்ந்து அகதிகளான மக்களின்  எண்ணிக்கையும் அதிகம்.

இந்நிலையில் 24 நகரங்களில் மக்களால் கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகளை முகமது அலா அல் ஜலீல் என்பவர் தன் காப்பகம் மூலம் காப்பாற்றி  வருகிறார். ஆன்லைன் நிதியுதவிகள் மூலம் 170 பூனைகளைப் பராமரித்து காப்பாற்றிவரும் ஜலீலுக்கு, ஆலப்போவின் பூனை மனிதர் என்ற பெயரும்  உண்டு. 2011ம் ஆண்டு போர் தொடங்க, காயமுற்ற பூனைகளைக் காப்பாற்றி சிகிச்சையளிக்கத் தொடங்கியவர் இதற்காக தொடங்கிய க்ளினிக்குடன்  இணைந்த காப்பகத்தின் பெயர்தான் எர்னஸ்டோ. ‘‘பூனைகள் மட்டுமல்ல... குதிரைகள், பசுக்கள், ஏன் கோழிகளுக்குக் கூட இலவசமாக  சிகிச்சையளிக்கிறோம்!’’ என்கிறார் ஜலீல்.

மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் வேலை!

டெக் திறமைசாலிகள் பலரும் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில், இத்திறன்களற்ற, சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகும் மாற்றுப்
பாலினத்தவர்கள் நிலைமை என்ன?

அவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பை சென்னையைச் சேர்ந்த நீலம் ஜெயின் வழங்கிவருகிறார். பெரிஃபெரி எனும் ஸ்டார்ட்அப்  நிறுவனம் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு இலவச பயிற்சியளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறது நிறுவன இயக்குநரான  நீலம்ஜெயின் டீம். ‘‘பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்காமல் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு உதவும் எண்ணத்தில் உருவானதுதான் இம்முயற்சி.

இவர்களுக்கான சட்ட உரிமைகளுக்காகப் போராடும் உமாவைச் சந்தித்த பின்தான் இந்த பெரிஃபெரி ஐடியா தோன்றியது...’’ என்கிறார் நீலம் ஜெயின்.  பன்னாட்டு நிறுவனத்தில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தை நடத்தி  வருகிறார் நீலம் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: ரோனி