Must Watch



ருத்ராங்கி

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘ருத்ராங்கி’. 1940களில் படத்தின் கதை நிகழ்கிறது. ருத்ராங்கியை ஆட்சி செய்து வருகிறான் பீம் ராவ் தேஷ்முக். இரக்கமற்றவன் பீம். தன் மக்களை அடிமை போல நடத்துகிறான். பெண்கள் விஷயத்திலும் ரொம்பவே மோசமானவன். அதனால் அவனை யாருக்குமே பிடிக்காது.
அவனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கும்போது மல்லேஷ் என்ற சிறுவன் காப்பாற்றுகிறான். அன்றிலிருந்து பீமின் நம்பிக்கைக்குரியவன் மல்லேஷ்
மட்டுமே.

மனைவி மீரா இருக்கும்போதே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து தனது மாளிகைக்கு அழைத்து வருகிறான் பீம். புதிதாக திருமணம் செய்தவள் பீமிடம் முரண்டு பிடிக்கிறாள். இது பீமிற்கு மன உளைச்சலைத் தருகிறது. இந்நிலையில் ருத்ராங்கி என்ற அழகியைச் சந்திக்கிறான். அவளின் அழகில் மயங்குகிறான். எப்படியாவது ருத்ராங்கியை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பெண்ணாசை பீமின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே மீதிக்கதை. எங்கேயும் சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாகச் செல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் அஜய் சாம்ராட்.

ஹார்ட் ஆஃப் ஸ்டோன்

பாலிவுட் நடிகை ஆலியா பட் அறிமுகமாகியிருக்கும் ஹாலிவுட் படம், ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’. ‘நெட்ஃபிளிக்ஸில்’ தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். ஒரு ஏஜென்சியில் ரகசிய உளவாளியாக இருக்கிறாள் ரேச்சல் ஸ்டோன். அமைதிதான் அந்த ஏஜென்சியின் முக்கிய குறிக்கோள். அந்த ஏஜென்சியில் ஹார்ட் என்ற அதீதமான சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம் இருக்கிறது. ஒரு வேளை அந்த ஆயுதம் திருடப்பட்டு, கெட்டவர்களின் கைகளுக்குப் போய்விட்டால் உலகமே அழிந்துவிடும். அந்தளவுக்கு வலிமை வாய்ந்தது அந்த ஆயுதம்.

அதனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறாள் ஸ்டோன். ஒரு மர்மமான ஹேக்கர் அந்த ஆயுதத்தை திருடும் முயற்சியில் இருக்கிறான். ஆயுதம் திருடப்பட்டதா... ஆயுதத்தை எப்படி பாதுகாக்கிறாள் ஸ்டோன்... போன்ற கேள்விகளுக்கு ஆக்‌ஷனில் பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை. லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஆக்‌ஷனை மட்டுமே நம்பி படம் பார்ப்பவர்களுக்கு ஏற்றது இந்தப் படம். ‘வொண்டர் வுமன்’ புகழ் கல் கடோட் ஸ்டோனாக கலக்கியிருக்கிறார். ஆலியா பட்டும் தன் பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். படத்தின் இயக்குநர் டாம் ஹார்பர்.

நெய்மர்

‘ஹாட் ஸ்டாரை’ கலக்கிக் கொண்டிருக்கும் மலையாளப் படம், ‘நெய்மர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. குஞ்சவாவும், ஷிண்டோவும் இணை பிரியாத நண்பர்கள். எப்போதுமே ஒன்றாகத்தான் இருப்பார்கள். குஞ்சவாவிற்கு டோனோவின் மீது காதல். டோனாவிற்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் ஒரு நாய்க்குட்டியை வாங்கி, டோனோவை கவர முயல்கிறான் குஞ்சவா. அம்மாவின் நண்பர் மூலம் நெய்மர் என்ற நாட்டு நாய் குஞ்சவாவிற்கு கிடைக்கிறது.

நெய்மரின் குறும்புகள்  மூலம் குஞ்சவாவிற்கும், அவனது குடும்பத்துக்கும் பல சிக்கல்கள் உருவாகின்றன. இருந்தாலும் குஞ்சவா நெய்மரின் மீதும், நெய்மர் குஞ்சவாவின் மீதும் தீராத அன்புடன் இருக்கின்றனர். நெய்மரின் குறும்பு அதிகமாக குஞ்சவாவின் அப்பா, நெய்மரைக் ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறார். நெய்மரை காணாமல் நிலைகுலைந்து போகிறான் குஞ்சவா. தன் நண்பன் ஷிண்டோவுடன் சேர்ந்து நெய்மரைத் தேடிப்போகிறான் குஞ்சவா.

நெய்மர் எப்படி கிடைக்கிறது என்பதை நெகிழ்வாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறது திரைக்கதை. படத்தில் நடித்த எல்லோருமே தங்களது பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்துள்ளனர். நாய்களும் நன்றாகவே செயல்பட்டுள்ளன. குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதி மேடிசன்.

புரோக்கர்

‘கான்’ திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், பாராட்டுகளையும் அள்ளிய  கொரியன் படம் ‘புரோக்கர்’. ‘சோனி லிவ்’வில் தமிழில் காணக்கிடைக்கிறது. ஒரு தேவாலயத்தில் வேலை செய்து வருகிறான் டோங் சோ. அவனுடைய நண்பன் ஹா சேங். கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரித்து வருகிறது தேவாலயத்தின் ஒரு பிரிவு. அவ்வப்போது டோங் சோவுடன் இணைந்து தேவாலயப் பணியில் ஈடுபடுகிறான் ஹா சேங்.

அந்த தேவாலயத்தில் குழந்தைகளுக்கான ஒரு பெட்டி உள்ளது. பிறந்த குழந்தையை வளர்க்க முடியாத அம்மாக்கள் அந்தப் பெட்டியில் குழந்தையை வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அனாதையாக விடப்பட்ட குழந்தைகளை தேவாலயம் பராமரிக்கும். இப்படி பெட்டியில் வைக்கப்படும் குழந்தைகளை திருடி விற்பது டோங் சோ மற்றும் ஹா சேங்கின் பிசினஸ்.

குழந்தைப் பெட்டிக்குள் வைக்கப்படுவது, அதை ஹா சேங் எடுப்பது போன்றவை சிசிடிவி கேமராவில் பதிவாகும். அப்படி பதிவாகும் சிசிடிவி காட்சிகளை அழிப்பதுதான் டோங் சோவின் வேலை. இந்த குழந்தை புரோக்கர்கள் அகப்பட்டார்களா... அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் வருகின்றன... என்பதே திரைக்கதை. ஜப்பானைச் சேர்ந்த கொரீடா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  

தொகுப்பு: த.சக்திவேல்