ஈடுபாடு, நம்பிக்கையின் ஆதாரத்தில் ஏற்படுவதல்ல!பகவத் கீதை

‘ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று கிருஷ்ணனே சொல்கிறான்! என்ன விசித்திரம் இது! ‘எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணிப்பாயாக’ என்று பகவானே சொல்கிறான் என்றால், அவன் ‘கிருஷ்ணனாகிய’ தன் உருவத்தைச் சொல்லவில்லை. தனக்குள்ளே இருக்கும் ஆன்மாவைத்தான் சொல்கிறான்! ஆன்மாவைப் புரிந்துகொண்டுவிட்டதன் அடையாளம் இது!

தன்னைப்போலவே அனைவரும் திகழவேண்டும் என்ற பெருந்தன்மையின் நேர்த்தி. ஆன்மாவை அடையாளம் காண, புரிந்துகொள்ள ஒருவன் பரந்தாமனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. யார்வேண்டுமானாலும் அதற்கு முயற்சிக்கலாம். அந்த முயற்சிக்கு உரிய பலன் நிச்சயம் கிட்டும்; ஒவ்வொருவருமே பரந்தாமனாகிவிட முடியும்! எல்லாவற்றையும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணிக்கும்போது ஒரு விடுதலை சுகம் ஏற்படுகிறது. அதுதான் ஆன்ம சுகம்.

அப்படி அர்ப்பணித்து விடுவதால், நாம் இயற்றும் கர்மாக்களில் பங்கம் ஏற்படுவதில்லை. மாறாக அவை பூரணத்துவம் அடைகின்றன. யே மே மதமிதம் நித்யமனுதிஷ்டந்தி மானவா ச்ரத்தாவந்தோ னஸூயந்தோ முச்யந்தே தேபி கர்மபி ‘‘அப்பழுக்கற்ற புத்தியுடன் யாரெல்லாம் என்னுடைய இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் அனைத்துக் கர்மங்களிலிருந்தும் விடுதலையாகிறார்கள்.’’

ஏதோ ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கவேண்டும். ஆனால் போகும் பாதை எது என்று தெரியவில்லை. எந்த வழியாகப் போனால் இலக்கை அடையலாம் என்றும் புரியவில்லை. அப்போது ஒருவர் வந்து வழி சொல்கிறார். அவர் அனுபவஸ்தர். அந்த வழியே போய்வந்தவர். அவருடைய வழிகாட்டலை நம்பி புதியவர் தைரியமாகப் பயணிக்கவேண்டும். வழிகாட்டியவரின் பேச்சில் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்மீது விசுவாசம் கொள்ளவேண்டும்.

அதாவது முற்றிலுமாக அவருடைய வழிநடத்துதலுக்கு அர்ப்பணித்துக்கொண்டுவிட வேண்டும். அப்படிச் செய்தால் நம் இலக்கை நம்மால் அடையமுடியும். அப்படிப் பயணிப்பதன் அடிப்படைத் தேவை என்ன? நம்முடைய சிரத்தைதான். அதாவது முழுமையான ஈடுபாடு. எதை நோக்கிச் செல்கிறோமோ அதுபற்றியதான முழு ஈடுபாடு. இப்படி ஒரு ஈடுபாட்டினை நம் பயணத்துக்கு முன்னாலேயே நாம் வளர்த்துக்கொண்டோமானால், நம்முடைய முதல் அடியே உறுதியானதாக இருக்கும்.

அடுத்த அடி அதைவிட உறுதியாக இருக்கும். அடுத்தடுத்த அடிகள் அந்த உறுதியை வலுப்படுத்தும். பயணம் நிறைவடையும்போது வெற்றி, அதாவது இலக்கு எளிதாகக் கிட்டிவிடும். இந்த ஈடுபாட்டினை ஒட்டுமொத்த உணர்வுக் குவியலின் ஒரே புள்ளியாகக் கருதலாம். இந்தப் புள்ளிக்கு பிரதிபலிப்பு கிடையாது. இது ஒன்றுதான். மாற்று கிடையாது. இந்த ஈடுபாடு, நம்பிக்கையின் ஆதாரத்தில் ஏற்படுவதல்ல, அதற்கும் மேம்பட்டது. நம்பிக்கை என்றால் கூடவே அதன் எதிர்மறையான அவநம்பிக்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ஆழ்ந்த, முழுமையான ஈடுபாட்டில் எந்தக் களங்கமும் சேர வழியேயில்லை. அது அத்தனை தூய்மையானது. வழிகாட்டுபவனுடைய மகோன்னதத்தைப் பொறுத்தே வழிகேட்பவனின் மனோபாவமும் இயங்குகிறது. ‘இவனை நம்பிச் செல்லலாம்’ என்ற மனத்துணிவு ஏற்படுகிறது. ‘இவன் சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்’ என்ற அதீத உணர்வு உருவாகிறது.

இதற்கு குந்திதேவி - கிருஷ்ணன் உரையாடலை உதாரணமாகக் கூறலாம். ‘‘அம்மா, அதோ பசுமை போர்த்திய ஒரு மரம் தெரிகிறதே…’’ ‘‘ஆமாம் கிருஷ்ணா, முற்றிலும் பச்சைப் பசேலென்ற மரம் தெரிகிறது.’’ ‘‘அதில் ஒரு குரங்கு உட்கார்ந்திருக்கிறது.’’ ‘‘ஆமாம், குரங்குதான் உட்கார்ந்திருக்கிறது.’’ ‘‘ஆனால் அது குரங்கு போல இல்லையே, ஒரு மலைப்பாம்புபோல அல்லவோ தெரிகிறது?’’ ‘‘ஆமாம், நீ சொல்வது சரிதான். அது ஒரு மலைப்பாம்புதான்.’’

‘‘இல்லை இல்லை. கரடி என்று நினைக்கிறேன். கரடிதானோ?’’ ‘‘மிகவும் சரி. கரடிதான்.’’ ‘‘என்ன நீங்கள், நான் எதைச் சொன்னாலும் அதுதான், அதுதான் என்று ஆமோதித்துக்கொண்டே இருக்கிறீர்களே!’’ ‘‘நான் ஆமோதித்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை கிருஷ்ணா. அவற்றை நீ வர்ணிக்கும் அந்தந்தக் காட்சிகளாகவே காண்கிறேன். பச்சை மரம் என்றாய், குரங்கு என்றாய், மலைப்பாம்பு என்றாய், கரடி என்றாய்… ஒவ்வொரு முறையும் அப்படியே நான் கண்டேன். அங்கே ஒன்றுமே இல்லாதிருக்குமானாலும் நான் அப்படியே கண்டேன்.

காரணம், அவை பற்றிச் சொல்பவன் சாதாரணமானவனல்ல, பரமாத்மா… நீ…!’’ தன் மாய வித்தைகளால் தான் அடுத்தடுத்து சொல்வதுபோல அந்த உருவங்களையே கிருஷ்ணனால் மாற்றிவிட முடியும்தான். அதனாலேயே அவன் சொல்வதையெல்லாம் ஆமோதித்துவிடுவோம் என்று குந்தி கருதவில்லை - அவளுக்கு அவன்மீது அப்படி ஒரு சந்தேகம் எழவேயில்லை. அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற குருட்டுத்தனமான நம்பிக்கை கொள்ளவில்லை - சொல்பவன் கண்ணன். அவ்வளவுதான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை - அவன் மாற்றி மாற்றி கருத்து சொன்னாலும் சரி, அதுதான் சரி!

சிரத்தை, அதாவது ஆழ்ந்த ஈடுபாடு ஸ்திரமானது. அது முளைக்கும்போதே மரத்தின் வலிமையைக் கொண்டுவிடுகிறது. நம்பிக்கை இதனின்று மாறுபட்டது. நம்பிக்கைக்கு ஸ்திரத்தன்மை கிடையாது. அது அவநம்பிக்கைக்கும் தாவலாம். நம்பிக்கையில் ஆதாய எதிர்பார்ப்பு இருக்கும். அது நஷ்டப்படுவதில் விருப்பம் இல்லாதிருக்கும். நல்லதாகவே முடியவேண்டும் என்ற வேட்கை கொண்டிருக்கும். முடிவைப் பொறுத்து சந்தோஷமோ-கோபமோ, பெருமையோ-பொறாமையோ, சிரிப்போ-அழுகையோ கொள்ளவைக்கும்.

ஆனால் சிரத்தைக்கு இந்தப் பலாபலன்களைப் பற்றிய அக்கறை இல்லை. செயல் புரியவேண்டும் என்பதுதான் அதன் ஒரே நோக்கம். இத்தகைய சிரத்தையை, முழுமன ஈடுபாட்டை அர்ஜுனன் கைக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறான் கிருஷ்ணன். யே த்வேததப்யஸூயந்தோ நானுத்ஷ்டந்தி மே மதம் ஸர்வக்ஞான விமூடான்ஸ்தான் வித்தி நஷ்டானசேதஸ ‘‘என்னுடைய இந்தக் கொள்கையை  ஏற்காதவர்கள், இகழ்ந்து ஒதுக்குபவர்கள், பின்பற்றாதவர்கள் எல்லாம் மூடர்களே.

அவர்கள் எந்த ஞானமும் அடையாதவர்களாக, விவேகம் இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் கல்வியறிவு கொண்டவர்களேயானாலும் அனைவருக்கும் நலமளிக்கும் வழியினின்று விலகியவர்களே!’’ பகவான் கிருஷ்ணன் அறிவுறுத்துவதெல்லாம் என்ன? என்றென்றும் நமக்கென்று உள்ள கர்மாக்களை எந்தப் பிரதிபலனும் பாராமல் நாம் நிறைவேற்றவேண்டும் என்பதுதானே? அதிலிருந்து ஏன் முரண்படவேண்டும்? ‘என்னதான் நடக்கும், நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான், மயங்காதே’ என்று சினிமாப் பாடல் ஒன்று உண்டு.

அது இருட்டாக இருக்கட்டும், வெளிச்சமாகவே இருக்கட்டும், நம் பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருப்போம், நம்மை அந்தத் தலைவன் வழிநடத்துவான், அவன் நம் பணிகளின் முடிவைத் தீர்மானித்திருக்கிறான், அதன்படி நாம் முடிவைச் சந்திக்கிறோம். இதில் நம் விருப்பம் என்று எதுவும் கிடையாது. ஆனால் துரதிருஷ்டவசமாக நம் எதிர்பார்ப்பு என்று உண்டு. விருப்பம் இல்லாத நிலையில் வலி இல்லை. ஆனால் எதிர்பார்ப்பில் வலி உண்டு. அந்த வலி சந்தோஷ வலியாக இருக்கலாம், சோக வலியாகவும் இருக்கலாம்.

மழை பெய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பெய்தால் சந்தோஷம். (‘இந்த மழை காலத்தில் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, எங்கேனும் ஒதுங்கிக்கொண்டு, மழை விட்டபிறகுதான் தொடர முடிகிறது’ என்ற அங்கலாய்ப்புகளும் உண்டு!). பெய்யாவிட்டால் ‘என்னவாகுமோ!’ என்ற கலக்கம். துன்பம் நிகழுமோ, நஷ்டம் ஏற்படுமோ என்ற பயம். இத்தகைய எதிர்பார்ப்பு நம் மனதை பாதிக்கிறது.

லாபம், நஷ்டம் இரண்டு வகையாலும் பாதிக்கப்படும் மனது, மேற்கொண்டு நம் கர்மாக்களை முறையாக இயற்றவிடாமல் தடுக்கிறது. ஆனால் மழை பெய்யவேண்டும் என்ற நம் எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் இயற்கை எப்படித் தீர்மானிக்கிறதோ அதற்கேற்பதான் மழை பெய்கிறது. இயற்கையின் விருப்பப்படி சில இடங்களில் குறைவாக மழை பெய்கிறது, சில இடங்களில் வெகு நிறைவாகப் பெய்கிறது. வறட்சியும், அபிரிமித வளர்ச்சியும் அதன் விருப்பமாகவே அமைந்துவிடுகின்றன.

ஆகவே நாம் எதிர்பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதையும் மீறி மழை பெய்யவேண்டும் என்று யாகம் நடத்துவதும், இறைவனை வழிபாடு செய்வதும், ‘மழை பெய்துவிடும்’ என்ற எதிர்பார்ப்பை நம்மிடம் விதைக்கின்றன. ஆனால் யாகத்துக்குப் பிறகும் மழை பெய்யவில்லை என்றால், ஏமாற்றம் நம் மனதை மூழ்கடிக்கிறது.

வேடிக்கையாகச் சொல்வார்கள்: ‘மழை பெய்யவேண்டும் என்று யாகம் செய்பவர்கள், அவர்கள் எதிர்பார்த்ததுபடி மழை பெய்துவிட்டால், இப்படி மழை பெய்ததற்காக, நன்றி செலுத்தும் விதமாக மறுபடியும் ஒரு யாகம் செய்கிறோமோ, இல்லையே! மழை பெய்துவிட்டால் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவும் தோன்றாமல் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிடுகிறோம். இப்படி நன்றிக் கடன் செலுத்தத் தெரியாத நம் மீது இயற்கை இரக்கம் கொள்ளுமா என்ன? அதனால்தான் மழையே பெய்யாமல் இயற்கை பழிவாங்குகிறது!’

தன் கருத்தை அனுசரிக்காதவர்களை களங்க புத்தி கொண்ட மூர்க்கர்கள் என்று வர்ணிக்கிறான் கிருஷ்ணன். அதாவது, தாம் செய்யும் எந்த கர்மாவிலும் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்கள்! அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமானது. ஏமாற்றத்திலும், துன்பத்திலுமே உழலக்கூடியவர்கள் அவர்கள். வெளிறிய வானம் போல நிர்மலமாக இருக்க முடியாதவர்கள்! ஆகாயம் தன்னை மேகம் மூடினாலும் வருத்தப்படுவதில்லை; தன்னைவிட்டு விலகினாலும் சந்தோஷப்படுவதில்லை. இந்த பவித்திரமான உணர்வை எதிர்பார்ப்பாளர்களால் அடைய முடிவதில்லை!

(தொடரும்)   

ஸ்வாமி ஸ்ரீதேஜானந்த மகராஜ்


முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும் என்றே எந்த நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், மனோ நிக்ரகமே சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்டபின் நூல்களை அளவின்றி படிப்பதால் பயனில்லை.

தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால்தானே அறிய வேண்டும்? ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிய நிலைக் கண்ணாடி வேண்டுமா? ‘தான்’ என்பது பஞ்சகோசங்களுக்குள் இருப்பது; நூல்களோ அவற்றிற்கு வெளியே இருப்பவை. ஆகவே பஞ்சகோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை, நூல்களில் விசாரிப்பது வீணே.

பந்தத்தில் இருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்து கொள்வதே முக்தி. சதாகாலமும் மனத்தை ஆன்மாவில் வைத்திருப்பதற்குத்தான் ‘ஆன்ம விசாரம்’ என்று பெயர். தியானமோ தன்னை சத்-சித்-ஆனந்த பிரம்மமாகப் பாவிப்பது கற்றவை அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்.