பிரசாதங்கள்



திருவாதிரைக் களி

என்னென்ன தேவை?

பச்சரிசி நொய் - 1 கப்,
துருவிய வெல்லம் - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் அரிசியை சிவக்க வறுத்து நொய்யாக உடைக்கவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, வடித்து, மீண்டும் கொதிக்க வைக்கவும். இப்போது வறுத்த நொய்யை சிறிது நெய், தண்ணீருடன் வேக விடவும். அது வெந்து வரும்போது வெல்லப்பாகை சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி படைத்து பரிமாறவும்.

திருவாதிரை கூட்டு/கதம்ப கூட்டு

என்னென்ன தேவை?

நறுக்கிய காய்கறிகள் (முருங்கைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கத்தரிக்காய், வாழைக்காய் அனைத்தும் சேர்த்து) - 1 பெரிய கிண்ணம்,
வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்,
புளிக்கரைசல் - 1/2 கப்,
பச்சை மொச்சை (வேக வைத்தது) - சிறிது,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 6-8,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 2.

எப்படிச் செய்வது?

நறுக்கிய காய்கறிகளை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் போட்டு வறுத்து, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். வேகவைத்த காய்களுடன், புளிக்கரைசல், அரைத்த விழுது, துவரம்பருப்பு, மொச்சை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து காய்கறி கூட்டில் கொட்டி இறக்கி சூடாக பரிமாறவும்.

சாமை சர்க்கரைப் பொங்கல்

என்னென்ன தேவை?

சாமை அரிசி (புதியது) - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
தண்ணீர் - 2-3 டம்ளர்,
பால் - 1 கப்,
தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பல் பல்லாக நறுக்கியது - 1/2 கப்,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 1/2 கப்,
முந்திரி, திராட்சை - தலா 15.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். சாமை அரிசி, பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அரிசி, பருப்பு வெந்து குழைந்து வரும்போது வெல்லத்தை கரைத்து வடித்து சேர்க்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, தேங்காய்த்துருவலை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். அனைத்தும் சுருண்டு வரும் போது பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். அலங்கரித்து படைத்து பரிமாறவும். குறிப்பு : விரும்பினால் தினை, குதிரைவாலியிலும் ெசய்யலாம்.

தினை வெண் பொங்கல்

என்னென்ன தேவை?

தினை - 2 கப்,
பாசிப்பருப்பு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
பொடித்த இஞ்சி - சிறிது,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கரகரப்பாக பொடித்த மிளகு,
சீரகம் - தலா 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு,
நெய் - 1/4 கப்,
முந்திரி - 20.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தினை, பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின் இரண்டையும் சேர்த்து உப்பு, 6 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 முதல் 4 விசில்கள் வரை விட்டு வேகவிடவும்.
 
தாளிக்க: - கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி பொங்கலில் கொட்டி கலந்து இறக்கவும். அலங்கரித்து, படைத்து பரிமாறவும்.

குறிப்பு: பொங்கலை வெண்கல பாத்திரம் அல்லது பானையில் செய்யும் பொழுது, மேலும் 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் செய்யவும். சாமை, குதிரைவாலி தானியங்களிலும் செய்யலாம்.

நாட்டுக்காய் கதம்ப சாம்பார்

என்னென்ன தேவை?

காய்கறிகள் (கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், வெள்ளைப் பூசணி துண்டுகள், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு அனைத்தும் சேர்த்து ) - 2 பெரிய கப்,
தக்காளி - 2 (நறுக்கவும்),
புளிக்கரைசல் - 1/4 கப்,
வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்,
மஞ்சள்தூள் - சிறிது,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 1 கப்,
கடுகு, எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,
காய்ந்தமிளகாய் - 2,
கட்டி பெருங்காயம் வறுத்து பொடித்தது - சிறிது,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பை முக்கால் பதத்திற்கு ேவகவைத்து மசிக்கவும். காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்து, இத்துடன் சின்ன வெங்காயம், தக்காளியை சிறிது வதக்கி சேர்க்கவும். பின்பு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். துவரம்பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்தமிளகாய் சேர்த்து தாளித்து கொதிக்கும் சாம்பாரில் கொட்டி கலந்து இறக்கவும். பொங்கல் சாதத்துடன் படைத்து பரிமாறவும்.

லவங்க வடை

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1 கப்,
துவரம்பருப்பு - 1 கப்,
லவங்கம் - 6,
துருவிய கொப்பரை அல்லது தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4-5,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஒன்றாக சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து உப்பு, லவங்கம், காய்ந்தமிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும். இத்துடன் அரிசி மாவு, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து மாவை வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். கரகரப்பாக லவங்க வாசனையுடன் வித்தியாசமான மணத்துடன் இருக்கும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்

நீங்கள் ஏதோ எங்கோ இருக்கிறீர்கள், ஆன்ம மெய்யறிவு வேறெங்கோ தனித்துள்ளது; ஆகவே, அதனை அடைவதற்கு நீங்கள் ஏதோவொரு மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்பதாக யோசிக்கிறீர்கள்! உண்மை என்னவென்றால், ஆன்ம மெய்ம்மை இங்கேயே, இப்போதே இருக்கிறது.

இவ்வுலகும் பிற படைப்புகளும் எப்படித் தோற்றமாகின்றனவோ அப்படியே சுவர்க்கம், நரகம் முதலானவையும் வெறும் தோற்றங்களே என்றும், நிலையான ஆன்ம சொரூபமே நித்திய சத்தியம் என்றும் உணர்த்துவதே வேத சாஸ்திரங்களின் நோக்கம்.