பொங்கல் கொண்டாடும் பெருமைமிகு தலங்கள்* மதுைரயில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தரர் சித்தராக வந்து அங்குள்ள கல் யானைக்குக் கரும்பு கொடுத்து உண்ண வைத்தது பொங்கல் நாளன்றுதான். இன்றும் இவ்விழா நடைபெற்று வருகிறது.

* நவதிருப்பதிகளில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டத்தில் பொங்கலன்று கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடிமரத்தை வலம் வந்தபின் ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள். இது 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களையும் கள்ளபிரான் வடிவில் தரிசிப்பதாக ஐதீகம்.

* போகியன்று புதுவை அருகேயுள்ள நல்லாத்தூர் நாராயணன் ஆலயத்தில் ஆண்டாளுக்கு திருமணவிழா நடத்துவர். அன்று ஆண்டாளுக்கு திருமணத்துக்காக சூட்டிய மாலைகளை திருமணத்துக்கு காத்திருப்போருக்கு பிரசாதமாகத் தருவார்கள். இதைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

* திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தைப் பொங்கலன்று 5008 கரும்புகளால் அலங்காரம் செய்வார்கள்.

* தஞ்சை பங்காரு காமாட்சியம்மன் ஆலயத்தில் உற்சவமூர்த்தியான காமகோடி அம்மன் தை மாதம் கணு நாளில் சகல அலங்காரங்களுடன் மண்டபத்தில் கொலுவிருப்பாள். அன்று மட்டும் தேங்காய் நிவேதனம் செய்வதுண்டு. பிற நாட்களில் தேங்காய் உடைப்பது இல்லை.

* திருவாரூர் மாவட்டம் திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் தை முதல் நாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் அன்று இங்குள்ள அம்ச தீர்த்தத்தில் நீராடி மகாகாள நாதரையும் அக்கோயிலில் குழந்தை வடிவில் உள்ள முருகனையும், விநாயகரையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை காரணமாக தை முதல் நாள் இக்கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி வருவோர் ஏராளம்.

* பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சியருகே உள்ள பழைய சீவரத்தில் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். அன்றைய தினம் ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருவார். அங்கு அவருடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாத் தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒரு சேர வருவார்கள்.

* இமாசலத்தில் உள்ள காக்ரா வஜ்ரேஸ்வரி ஆலயத்தில் வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு சங்கராந்தி அன்று மருந்து வழிபாடு செய்வர். அம்மன் அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்தபோது ஏற்பட்ட காயத்தை மருந்திட்டு ஆற்றிக் கொண்டதன் நினைவாக இதை சங்கராந்தியில் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

500 கிலோ நெய்யை தண்ணீரில் 100 முறை கழுவி அதை அம்மனுக்கு காப்பிட்டு அதன்மீது பற்பல பழங்களை பதித்து அலங்காரம் செய்வார்கள். இது ஒரு வாரம் அப்படியே இருக்கும். பின் அதை பிரித்தெடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். இது சகல வியாதிகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது.

- நெ. இராமன்

சிருஷ்டி என்பது நிலைக்கண்டி முதலில் உம்மைக் காணுங்கள். அதன்பின் ஆன்ம ஸ்வரூபமாக உலகம் முழுவதையும் காணப் பெறலாம்.