வாழ்வின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளாதவன் யார்?



மகாபாரதம்

உச்சிவேளை உணவுக்கு முன்பு அவரோடு வந்த அந்தணர்கள் வெவ்வேறு திக்கில் நகர்ந்து மௌனமாக ஜபம் செய்யத் துவங்கினார்கள். இருபது, இருபத்தைந்து அந்தணர்கள் அஸ்தினாபுரம் விட்டு கிளம்பிய நாளிலிருந்து இன்றுவரை அலுக்காமல் தொடர்கிறார்கள். ‘ஒரு அரசன் சேனை இல்லாமல் இருக்கலாம். அந்தணன் இல்லாது இருக்கக்கூடாது. என்ன செய்தல் தகும், எது தகாது என்று சொல்வதற்கு அந்தணர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவே, அரசனாகிய உங்களோடு நாங்கள் வருவது நல்லது. மறுக்காதீர்,’ என்று சொல்லி தொடர்ந்தார்கள். அதுவும் தவிர, ஒரு அரசன் துணைக்கு வர, பீமன், அர்ஜுனன் போன்ற வீரர்களும், நகுல சகாதேவரும் வர, பரத கண்டத்தின் பல வனங்களை கடந்து நல்ல க்ஷேத்திரங்களை தரிசிக்க இப்படி ஒரு வாய்ப்பு எவருக்கும் கிடைக்காது. அதை முன்னிட்டும் அந்தணர்கள் வந்தார்கள்.

க்ஷேத்திராடனம் என்று சொன்னதால் தருமபுத்திரர் அதை ஏற்று அவர்களை மறுக்காது வரச் சொன்னார். உணவுக்கு குறைவில்லை என்பதால், ஒருவேளை உணவு அவர்களுக்கு இட முடியும் என்பதால், அந்த ஒருவேளை நல்ல உணவு அவர்களுக்கு போதும் என்பதால் அவர் சந்தோஷமாக அவர்களோடு பேசி சிரித்த வண்ணம் வந்தார்.

அட்சய பாத்திரத்தில் உணவு கேட்க இன்னும் நேரம் இருந்தது. அந்த அந்தணன் எழுந்தான். சுற்றியும் கவனித்தான். தருமபுத்திரர் கண்கள் மூடி மரத்தில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் இருந்தார். நகுல, சகாதேவர் தாவரங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். திரௌபதி கூந்தலை இழைய பின்னி பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். மற்ற அந்தணர்கள் சற்றுத் தொலைவில் கூப்பிடும் தூரத்தில் ஜபத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

இதுதான் சமயம் என்று அந்த அந்தணனுக்கு தோன்றியது.எழுந்து நின்று கைகளையும், கால்களையும் உதறினான். சட்டென்று வேறொரு வடிவம் அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்டது. அடர்ந்த ரோமங்களும், பருமனான கைகளும், குறுகிய வயிறும், அகன்ற மார்பும், புதர் போன்ற மீசையும், பெரிய சடைமுடியும், ரோமம் நிறைந்த காலுமாய் ஒரு பெரிய கரடி போல அந்த அந்தணன் அரக்க வடிவம் எடுத்தான். அதுதான் அவனுடைய இயல்பான உருவம். அந்தணன் என்பது ஒரு வேடம்.

முகத்தை மாற்றிக் கொண்டும், அங்கங்களை மாற்றிக் கொண்டும், பெருக்கிக் கொண்டும், குறைத்துக் கொண்டும் இருக்கின்ற வித்தையை அப்போது இருந்த மனிதர்கள் தெளிவாக கற்றிருந்தார்கள். அது ஒரு பாடமாகவே பலருக்கு இருந்தது. மிகக் கவனமாக பயிற்சி செய்ய எளிதாக பலருக்கு வந்தது. உருமாறுதல், உரு எடுத்தல் என்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணமான விஷயங்கள்.

அரக்கன் முன்னேறினான். திரௌபதியை பார்த்தான். சிரித்தான். பூதாகரமான ஒரு விஷயத்தைப் பார்த்து அவள் அலற, தருமர் விழித்துக் கொண்டார். நகுல சகாதேவர் எகிறினார்கள். சட்டென்று திரௌபதியை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். இரண்டு கைகளாலும் நகுல, சகாதேவரைப் பிடித்துக் கொண்டான். அக்குள் இடுக்கில் தருமபுத்திரரை வைத்துக் கொண்டான்.

அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக ஓடத் துவங்கினான். அவன் காலடியில் குத்திய செடிகள்் நசுங்கின. முள் செடிகள் உடைந்தன. அவன் போகின்ற பாதை யானை போகின்ற பாதை போல ஒரு வழித்தடம் ஏற்பட்டது. திரௌபதி அலறினாள். நகுல, சகாதேவர் வீரத்துடன் திமிறினார்கள். ஆனால் அவன் பிடி உறுதியாக இருந்தது. தருமர் அவனைப் பார்த்து கேவலமாகச் சிரித்தார். ‘‘நீ அந்தணன் அல்லவோ. எதற்கு இந்த வேடம் பூண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டார்.

‘‘இதுதான் என் உண்மையான உருவம். நான் அந்தணன் இல்லை.’’ ‘‘அப்போது எதற்கு அந்தண வேடம் பூண்டாய்?’’ ‘‘எனக்கு திரௌபதி வேண்டும். திரௌபதி மீது வெகுநாளாக ஆசை.’’ ‘‘உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. எப்போதோ செத்திருக்க வேண்டிய நீ இந்த மானிடப் பெண்ணை தொட்டதால் நீ மரணமடையப் போகிறாய். உனக்கு இறப்பு வந்துவிட்டது என்று அக்குள் பக்கம் இருக்கின்ற உன் நாடி சொல்கிறது.

மரணம் நேரும்போது அந்த நாடி வேகமாகத் துடிக்கும். உன் நாடி துடிக்க ஆரம்பித்து விட்டது. உனக்கு மரணம் இன்னும் அரை நாழிகையில் ஏற்படும். அதற்குள் உன்னை காப்பாற்றிக் கொள். தயவு செய்து திரௌபதியையும், எங்களையும் இறக்கி விடு. இது அநீதி.’’ ‘‘எனக்கு நீதி போதிக்க வேண்டாம். இதைப்போல ஒரு நல்ல நேரம் எனக்குக் கிடைக்காது.’’ ‘‘இது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை நீ அனுபவித்துதான் அறிய வேண்டும். உனக்கு அப்போதுதான் புத்தி வரும்.

ஆனால், ஒரு அந்தணன்போல வேடம் பூண்டு, திரெளபதி கையால் உணவு உண்டுவிட்டு, அந்த திரௌபதியை தூக்கிக் கொண்டு எனக்கு வேண்டும் என்று சொல்கிறாயே இந்த துரோகத்தை நீ யாராக இருந்தாலும் செய்வது அபத்தம். நீ அந்தணனோ, அரக்கனோ அதைப்பற்றி எனக்கு முக்கியம் இல்லை.

ஆனால், இது முதுகில் குத்துவதுபோல் அல்லவா, தூங்கும் போது தலையில் கல்லை போடுவது போல் அல்லவா, பீமன் இல்லாத போது நீ இந்த காரியத்தை செய்கிறாய் என்றால் வெகு நாள் திட்டமிட்டிருக்கிறாய் அல்லவா? அப்போது நீ இங்கு சோறு உண்டிருக்கக் கூடாது. என்னிடம் அடைக்கலம் கேட்டிருக்கக் கூடாது. உரக்கக் கத்தி பீமனை அழைத்து, அவனோடு சண்டை புரிந்து அவன் கை, காலை உடைத்து விட்டு திரௌபதியை தூக்கிக்கொண்டு போகவேண்டும்.

அப்படிச் செய்யாமல் இந்த தந்திரம் செய்யும்போது இதைவிட ஆபாசம் எதுவும் இல்லை. உன்னை விட ஆபாசமானவன் எவரும் இல்லை. யார் வீரன் என்பது எல்லா வகையினருக்கும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நீ செய்வது வீரம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய். திருட்டுத்தனமாக ஒரு பெண்ணை கவர்ந்து போவது வீரம் என்றா சொல்கிறாய். உறங்கும் நேரத்தில் அவளை பலாத்காரம் செய்வது சரி என்றா நினைக்கிறாய்.’’

‘‘அவளுடைய மூன்று புருஷர்கள் இருக்கும்போது அவளை நான் கவர்ந்து போகிறேன். பெண்ணை கவருவது என்பது சாஸ்திரத்தில் உள்ளதுதானே. நீங்களெல்லாம் கவரவில்லையா?’’ அவன் எக்காளமாகப் பேசினான். ‘‘திரௌபதிக்கு மொத்தம் ஐந்து புருஷர்கள். ஐந்து புருஷர்களை கொன்று விட்டல்லவா நீ இதை செய்திருக்க வேண்டும். என்னை சண்டைக்கல்லவா கூப்பிட்டிருக்க வேண்டும். நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது தூக்கிக் கொண்டு போகிறாயே.

நான் ஆழ்ந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டிருக்கும்போது என்னை இறுக்கிக் கொண்டு ஓடுகிறாயே. இது எந்தவிதமான காந்தர்வத்தில் சேர்த்தி? அட முட்டாளே, உன்னைக் கொல்ல எங்களால் முடியும். ஆனாலும் அந்தணனாக வேடமிட்டிருக்கிறாய். எங்கள் சோறு தின்றிருக்கிறாய். அதனால் சொல்கிறேன். பிழைத்துப் போ. உனக்கு நான் ஒரு சிறிய இடைவெளி தருகிறேன்.’’

அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை. தருமபுத்திரர் மூச்சு அடக்கி தன் உருவத்தை பெரிதாக்கினார். அவன் அக்குள் விசாலமாயிற்று. இன்னும் பெரிதாயிற்று. அவரை இடுக்கிக் கொள்வது சிரமமாயிற்று. அவர் கனம் மிகுந்து காணப்பட்டார். அந்தக் கனத்தை தூக்க முடியாமல் அவன் மெல்ல தடுமாறினான். திசை தெரியாமல் நாலாபக்கமும் அலைந்தான். மரங்கள் மீது மோதினான். அந்தச் சலசலப்பு சத்தம் தொலைவிலிருந்த பீமனுக்கு கேட்டது.

யானைகள் வரும்போதுதான் இப்படி மரங்கள் முறியும்... அரக்கன் ஒருவன் தன் குடும்பத்தை இடுக்கிக்கொண்டு போவது தெளிவாகத் தெரிந்தது. மின்னலென ஓடிப்போய் அந்த அரக்கன் முன்பு நின்றான். ‘‘என் குடும்பத்தாரை இறக்கி விடு. என்னோடு சண்டை செய்துவிட்டு அதற்குப்பிறகு உன்னுடைய காரியத்தை பூர்த்திசெய்து கொள். என்னை கொன்று விட்டு இதற்குமேல் கடந்து போ. நீ என்னால் கொல்லப்படப் போகிறாய்,’’ என்று தெளிவாகச் சொன்னான்.

பாண்டவர்களுடைய கருணை மிகப் பெரியது. மோசமான, கேவலமான எதிரியானாலும் அவனை சிறிது தாமதிக்க வைத்து நல்ல வார்த்தை சொல்லி, சரியானபடி யுத்தத்திற்கு அழைப்பது அவர்கள் இயல்பாக இருந்தது. யுத்தம் என்று வந்துவிட்டால் பீமனுடைய குழந்தை சுபாவம், இளகிய மனோபாவம் முற்றிலும் மறைந்து வதைக்கிற வேகத்தோடு, இம்சைப்படுத்தி சாகடிக்கின்ற வெறியோடு மாறிவிடுவான்.

தொடை தட்டி பௌருஷத்தை வெளியே சொல்கிறவன் கண்டிக்கப்பட வேண்டியவன் என்பது பீமனுடைய எண்ணம்.சண்டைக்கு வா என்று முஷ்டியை மடக்கி அழைத்து விட்டால் குத்து வாங்க தைரியம் இருக்க வேண்டும். கன்னத்தில் அறைந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும். கால் இடறி கீழே விழுந்தால் எழுந்திருக்க வேண்டும். அதற்கு வலு இல்லாதவன் யுத்தத்திற்கு அழைக்கக் கூடாது.

எதிரே இருப்பவன் வலு தெரியாது தன் வலுவை பெரிதாக நினைத்துக் கொண்டு கொக்கரிக்கறவன் எந்தப் பாவமும் செய்ய வல்லவன். வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்ளாதவன் வெகு எளிதாக தவறு செய்யக்கூடிய சுபாவம் உள்ளவன். எனவே அடித்து, நசுக்கி விரல்களை பிழிந்து, உச்சகட்ட வலியில் அலற வைத்து உபதேசம் செய்வதுதான் சரி. அந்த நேரமும் உபதேசத்தை செவிமடுக்கவில்லையெனில் அவன் உயிரோடு இருந்து எந்தப் புண்ணியமும் இல்லை.

அவனுக்கு மரணம் தான் சரி. பீமன் கண்ணிடுக்கி மிகுந்த கோபத்தோடு அந்த ஜடாசுரனை பார்த்தான். ‘‘பெண் மீது ஆசைப்பட்டு திரௌபதியை தூக்கிக்கொண்டு போவது என்கிற விஷயத்தை எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், என் தமையனையும், என் இரண்டு தம்பிகளையும் கூட்டிக் கொண்டு போகிறாயே, உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எங்கேனும் கொண்டுபோய் நசுக்கி சாகடிக்கலாம் என்றா? எங்களை அவ்வளவு எளிதாக அடித்து விட முடியுமா? தருமபுத்திரர் அக்குளில் இருந்தபடியே உன்னை தள்ளாட வைக்கிறாரே.

இறங்கி நின்றால் உன்னை எப்படி வதை செய்வார் என்பது புரியவில்லையா. முட்டாள். அகங்காரமும், அசூயையும் உன் கண்களை மறைத்து விட்டன. உன் கத்தியை எனக்குக் கொடு. வித்தை காட்டுகிறேன் என்று வெட்கமில்லாமல் நீ கேட்டபோதே நீ அந்தணன் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதே நீ யார் என்று விசாரித்திருக்க வேண்டும். நான் சபையில் நிறுத்தி உன்னை விசாரிக்கத் துவங்கினால் உன் சுயரூபம் வெளிப்பட்டிருக்கும். ஆனால், தருமபுத்திரர் அதற்கு சம்மதித்திருக்க மாட்டார்.

அந்தணரை எப்படி விசாரிக்கலாம், அந்தணன் என்பவன் அந்தணன்தானே. அவன் குலத்தைப் பற்றி உனக்கு என்ன கவலை என்று நிறுத்தி விடுவார். அவன் சுயகுணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க தருமபுத்திரருக்கு மனம் ஒப்பாது. எதிரே நின்று பேசுபவனும் அத்தனை பேரும் உண்மையைத்தான் பேசுகிறார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார்.

‘‘ஆனால் நானோ, அர்ஜுனனோ அப்படிப்பட்டவர்கள் இல்லை. எவன் நெருங்கி வணங்குகின்றானோ அவனை நாங்கள் சந்தேகத்துடன்தான் பார்ப்போம். இது எங்கள் குணம். க்ஷத்ரிய குணம். யாரையும் எந்த நேரத்திலும், எதற்காகவும் நாங்கள் நம்புவதில்லை. துரியோதனனை நம்பியதுதான் இந்த சண்டைக்குக் காரணம். ஆனால், துரியோதனன் பகைவன் என்று தெரிந்ததுதான் இன்று எங்களுடைய வனவாசத்திற்கு காரணம். இந்த சந்தேகம் இல்லையெனில் நாங்கள் துரியோதனனை சகோதரனாகவே நினைத்திருப்போம்.

எதிரியாக பார்த்திருக்க மாட்டோம். எங்கள் க்ஷத்ரிய சந்தேக குணம் எங்களை காப்பாற்றியிருக்கிறது. உன்னையும் அப்படித்தான் நான் பார்த்தேன். ‘‘ஆயுதங்களைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னாயே, அப்பொழுதே சந்தேகப்பட்டேன். உன்னை விசாரித்தால் நீ என்ன செய்வாய். அரசர்களுடைய ஆயுதங்கள் மொத்தமும் அந்தணர்கள்தானே செய்திருக்கிறார்கள். அத்தனை அஸ்திரமும் அந்தணர்களும், ரிஷிகளும் செய்து கொடுத்ததுதானே என்று தந்திரம் பேசுவாய்.

அஸ்திரம் செய்தவனுக்கு அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியாதா என்று வாக்குவாதம் செய்வாய். தருமருக்கு அதில் கிஞ்சித்தும் விருப்பம் இருக்காது. எதற்கொரு அந்தணனை இம்சிக்கிறாய் என்று என்னை சீற்றத்துடன் பார்ப்பார். என் தமையனை நான் வருத்தப்பட வைக்க முடியாது. ‘‘ஆனால், இன்று உன் முகம் தெரிந்து விட்டது. நாய் சிங்கவேடம் போட்டாலும் அது குரைக்கும்போது கர்ஜனையா வரும், குரைப்புதானே வரும்! நாயின் குரைப்பு போல உன்னுடைய விகாரமான முகத்தை இதோ காட்டி விட்டாய்.

விடு என் குடும்பத்தை. இல்லையென்றால் உன் வலிவு மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் என்னை அடித்து நசுக்கி விட்டு என் மனைவியை எடுத்துப் போ. ஆனால், உனக்கு மரணம் நெருங்கி விட்டது. என்னுடைய ஒரு ரோமத்தைக் கூட உன்னால் அசைக்க முடியாது. நீ அடிபட்டு துடித்து சாகப் போகிறாய். உன் அங்கங்களை பிய்த்து எறியப் போகிறேன்.

‘‘இப்படி யுத்தம் செய்து நாளாயிற்று. பிரபஞ்ச சக்தி என்னுடைய பலத்தை புதுப்பித்துக் கொள்ள, என்னுடைய யுத்த தந்திரங்களை சீராக்கிக்கொள்ள உன்னை அனுப்பியிருக்கிறது. க்ஷத்ரியனுக்கு போர் மிகப்பெரிய விருந்து. சந்தோஷம், கொண்டாட்டம். ஆனந்த நடனம். வா... என் ஆட்டத்தைப்பார். அதன் ஆவேசத்தைப் பார்...’’ பீமன் பூமியை காலால் உதைத்து, புழுதியை எழுப்பி, கைகளால் தட்டி மேலும் பல கோப வார்த்தைகள் சொல்லி அரக்கனுக்கு வெறி ஏற்றினான்.

அரக்கன் சற்றுத் தடுமாற சகாதேவன் கீழே குதித்தான். கத்தியை உருவிக் கொண்டான். வெட்டத் துவங்கினான். ‘‘வேண்டாம் சகாதேவா. இவனை என்னிடம் விட்டுவிடு. நான் அடித்து நொறுக்குகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இவனைக் கொன்றதான பெருமை இவனுக்கு கிடைத்துவிட வேண்டாம். பீமனுடைய ஒற்றை அடியை இவனால் தாங்க முடியாது என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும். என் வெறிக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது.

இவனை என்னிடம் விடு’’ என்று சொல்ல, தருமபுத்திரர் சைகை செய்ய, நகுலனும், சகாதேவனும் பின்னடைந்தார்கள். இடுப்பில் சொருகியிருந்த திரௌபதியை அரக்கன் இறக்கி விட்டான். திரௌபதி துள்ளி குதித்து தருமருக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். தன் புருஷனான பீமனை வியப்புடன் பார்த்தாள். அரக்கன் நெருங்க பீமனுடைய கோபம் தலைக்கு ஏறியது. ‘‘அந்தணன் வேடமா. அசிங்கமாக இல்லை. உன்னுடைய இயல்பான குணத்தை விட்டு எங்கள் சோறை கையேந்தி தின்றாயே வெட்கமாக இல்லை? திரௌபதி உணவு போட்டபோதெல்லாம் அவளை தவறாகத்தானே நீ பார்த்திருப்பாய். அது ஆபாசமாக இல்லை...’’

பீமனுடைய பேச்சு அந்த ஜடாசுரனுக்கு கோபமூட்டியது. அந்தணனாக தன்னை மறைத்துக்கொண்டு பெரும் காம மயக்கத்தில் துருபத தேசத்திலிருந்து அவன் திரௌபதியை பின்தொடர்ந்து வருகிறான். தன்னை அடக்க முடியாதவனாய் அவளை அபகரிக்கவே அமைதியான அந்தணனாக இருந்தான். பேராசையும், கெட்டிக்காரத்தனமும் கொண்டவர்கள் தங்களுக்கான நேரம் வரும்வரை எல்லோரோடும் இனிமையாக இருப்பார்கள். உண்மையான குணத்தை மறைத்துக் கொண்டிருப்பார்கள். பீமனை ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததால்தான் இந்த திருட்டுத்தனத்தை கைக்கொண்டான்.

இப்போது வேறு வழியில்லை. யுத்தம் செய்துதான் ஆகவேண்டும். இழிபிறப்பு என்று சொன்னது கோபம் வந்தது. அசுரர்கள் பலம் பொருந்தியவர்கள். அவர்கள் நீதி வேறு. வன்முறை, இயல்பு. வழிப்பறி, சுபாவம். அசுரபலத்திற்கு முன்னால் மானுடர்கள் பூச்சியைப் போன்றவர்கள். ஆனால், இந்த பீமன் மானிடரில் சிறந்தவன். பயிற்சியினாலும், தவத்தினாலும் தன் பலத்தை பெருக்கியவன். எகிறி ஓடி பீமனை தாக்க முயற்சிக்க, பீமன் நகர்ந்து ஜடாசுரனின் பிடரியில் அறைந்தான்.

சிகையை இழுத்து திருப்பி முகத்தில் குத்தினான். தோள்களை தாக்கினான். நெஞ்சில் குத்தினான். விலா எலும்புகளை உடைத்தான். காலால் காலை அடித்து நெஞ்சைப் பிடித்து தள்ளினான். தரையில் மோதிய தலையை தூக்கி மறுபடியும் தரையில் அடித்தான். கைகளை இழுத்து சுழற்றி வானத்தில் வீசினான். மல்லாந்து கிடந்தவனின் தொடைகளை மிதித்தான். முறித்தான்.

சகோதரர்கள் ஆனந்த களியாட்டம் செய்தனர். திரௌபதி திகைத்து நின்றிருந்தாள். அமைதியான பசுவைப்போல குணம் கொண்ட பீமன் ரௌத்திரமாக சண்டையிடுவதைப் பார்த்து வியந்தாள். தான் தலைமுடியை விரித்து செய்த சபதம் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்று நம்பினாள். தன் மனம் குழம்பும்போதெல்லாம், வெற்றி கிடைக்காதோ என்று வேதனைப்படும்போதெல்லாம் அவள் புருஷர்களுடைய பராக்கிரமம் அவளுக்குத் தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட புருஷர்கள் இருக்கும்போது, அன்பும், அரவணைப்பும் அற்புதமான வீரமும் அவர்கள் கொண்டிருக்கும்பொழுது ஒரு பெண்ணுக்கு எது குறித்தும் கவலையில்லை. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அச்சமில்லை. இன்னும் பல நூறு வனங்களுக்கு போவதாக இருந்தாலும் அவள் மனம் அதற்குத் தயாராயிற்று. படுத்துக் கிடந்தவனை உதைத்து எழுப்பி அவன் தலையை திருகி தனியே பிய்த்து பீமன் தொலைவே வீசினான். அசுரன் உடம்பிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்து பீமனை நனைத்தது.

ஜடாசுரன் இறந்து போனான். அசுரர்கள் மனிதர்களே ஆயினும் பிறப்பாலும், பழக்கத்தாலும் மிகுந்த பலம் கொண்டவர்கள். அதிகமான மாமிசம் உண்டு கொழுத்துப் போனவர்கள். அந்தக் குலமே இருக்கக்கூடாது என்பதுதான் இயற்கையின் அன்றைய முடிவாக இருந்தது. பாண்டவர்கள் அதை முன்னின்று நடத்தினார்கள். உடம்பெல்லாம் புழுதியும், ரத்தமுமான பீமனை சிறிய ஓடைக்கு நகுல, சகாதேவர் குளிக்க அழைத்துப் போனார்கள். தலை முழுக வைத்து உடம்பு தேய்த்துவிட்டார்கள்.

கணுக்கால் தண்ணீரில் நின்றபடி தருமபுத்திரர் அவர்களோடு பேசினார். ‘‘அருகே இருப்பவர்கள்தான் எதிரி. நம்மை அறிந்தவர்கள்தான் நமக்கு துரோகம் செய்கின்றனர். அமைதியானவர்களை முற்றிலும் நம்ப முடியாது. எவர்மீதும் எப்போதும் சந்தேகம் இருப்பது க்ஷத்ரியர்களுக்கு நல்லது. போர்வீரன் அலட்சியமாய் இருந்துவிடக் கூடாது. எவரையும் முற்றிலும் நம்பிவிடக் கூடாது. ஆனால், க்ஷத்ரியன் அவசரமான விசாரணையிலும் இறங்கிவிடக் கூடாது. அது நல்லவர்களை காயப்படுத்தும். இரண்டு நல்லவர்களுக்காக நூறு அயோக்கியர்களை பொறுத்துக் கொள்ளலாம். நல்லவர் களுக்கு துணையாக இருக்கும் க்ஷத்ரியனுக்கு கடவுள் உதவியாக இருப்பார்.’’

(தொடரும்)

எப்போதும் உள்ள சர்வசாதாரண உண்மையைச் சொன்னால் மக்கள் அதை உணர்வதில்லை. தங்கள் நிஜ சொரூபமே மெய்ம்மை என்பதை அஞ்ஞானத்தால் அசட்டை செய்து கவனியாமல் விட்டுவிடுகிறார்கள். ‘தான்’ இருப்பதை உணராதவர் உண்டோ? ஆயினும் அதை எடுத்துக் கூறினால் அவ்வுண்மையைக் கேட்பாரில்லை.

சுவர்க்கம், நரகம், மறுபிறவி முதலிய இதர விஷயங்களை ஆராய்வதிலேயே பெரும்பாலும் ஆர்வம் கொள்கின்றனர். வெட்ட வெளிச்ச உண்மையை நாடுவாரில்லை. விந்தைகள், வாழ்க்கை மர்மம் மீதே நாட்டமெல்லாம். அவர்கள் மனப்பான்மை அப்படியிருப்பதால், வேத சாஸ்திரங்களும் அவர்கள் வழியிலேயே சென்று, முடிவில் ஆன்ம சத்தியத்திற்கு அவர்களைத் திருப்ப முனைகின்றன.

வெளிமுக நாட்டம் நீங்கி மூல சொரூபத்தை உணர்தல் வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் அனைத்தின் உட்கருத்து. புதிதாய் எதனையும் அடைய வேண்டியதில்லை. அஞ்ஞானம் அகல வேண்டும். விபரீதப் பிரமைகள் ஒழிய வேண்டும்.

அமைதியும் ஆனந்தமும் தன்னைவிட்டு வேறெங்கோ இருப்பதாக எண்ணி அலையாமல், அயலேதுமில்லாத தன் பரிபூரண நிலையில் அமர வேண்டும். தான் தானாயிருத்தலே பரமானந்தம். அவ்வமைதியே ஆனந்த மயம்.