எல்லா நலன்களையும் அருளவல்ல அற்புதன்!



பக்தித் தமிழ்

சிவநாமத்தைச் சொல்வதால் என்ன நன்மை? இந்தக் கேள்விக்கு மணிக்கணக்காகப் பதில் சொல்லலாம் அல்லது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய ‘சிவநாம மகிமை’ எனும் நூலை வாசிக்கலாம். குறிப்பாக, மகாசிவராத்திரியன்று பதினாறு முறை வாசிக்கவேண்டிய நூலாக இது சிறப்பித்துச் சொல்லப் படுகிறது. எளிய பாக்களில் சிவனின் பெருமையை ஆழமாக உணர்த்தியுள்ளார் சிவப்பிரகாச சுவாமிகள்:

வேதம், ஆகமம் வேறும் பலப்பல ஓதி நாளும் உளம் தடுமாறன்மின், சோதி காண் இருள்போலத் தொலைந்தி டும்தீது எலாமும், சிவசிவ என்மினே. வேதங்கள், ஆகமங்கள், இன்னும் பலப்பல புனித நூல்களெல்லாம் உள்ளன. இவற்றைத் தினந்தோறும் ஓதவேண்டுமா? எதை ஓதினால் என்ன பலன் கிடைக்கும்?

இத்தனையையும் ஓதி முடிக்க எத்தனை நாளாகுமோ! - இப்படியெல்லாம் யோசித்துத் தடுமாறவேண்டாம், சோதியைக் கண்ட இருள் எப்படி ஓடிப்போகுமோ அப்படிக் கெடுதல்களை விரட்டும் ஒரே ஒரு நாமம் உள்ளது. அதுதான் ‘சிவசிவ’ எனும் நாமம், அதைச் சொல்லுங்கள், எல்லாம் கிடைக்கும்! புல்லர்ஆயினும், போதகர்ஆயினும் சொல்வர் ஆயின் சுருதி விதித்திடும் நல்ல ஆகும், நவை என்று அகற்றியும் செல்லல் தீரும், சிவசிவ என்மினே ஆனால், நான் மிகவும் அற்பனாயிற்றே, நான் சிவநாமத்தைச் சொல்லலாமா?

சிலர் பிறருக்கு அறிவுரை சொல்வார்கள், அதன்படி நடக்கமாட்டார்கள். இவர்களைப்போன்ற போலி வேடதாரிகள் சிவநாமத்தைச் சொல்லலாமா? தாராளமாகச் சொல்லலாம். அப்படிச் சொன்ன மறுகணம், அவர்கள் பல நன்மைகளைக் காண்பார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்துத் துயரங்களும் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடும்!

நாக்கினாலும் நயனங்களாலும் இவ் ஆக்கையாலும் அரும்செவியாலும் நம் மூக்கினாலும் முயங்கிய தீவினை தீர்க்கல்ஆகும், சிவசிவ என்மினே. நாக்கினால் எத்தனையோ தீய விஷயங்களைப் பேசியிருப்போம். கண்களால் தீயவற்றைப் பார்த்திருப்போம். உடலால் தீயவற்றைச் செய்திருப்போம். செவிகளால் தீயவற்றைக் கேட்டிருப்போம். மூக்கினால் தீயவற்றை முகர்ந்திருப்போம்...

இப்படி எதனால் எத்தனை தீவினைகள் செய்திருந்தாலும் சரி, அவற்றைத் தீர்க்கக்கூடியவன் சிவபெருமான். சிவநாமத்தைச் சொல்லுங்கள்! சாந்திராயணம் ஆதி தவத்தினால் வாய்ந்த மேனி வருந்த இறந்திடாப் போந்த பாதகமேனும் பொருக் எனத் தீந்துபோகும், சிவசிவ என்மினே.

‘சாந்திராயணம்’ என்பது ஒருவகை விரதம். சுக்கிலபட்சத்தில் தொடங்கித் தினமும் ஒவ்வொரு பிடி உணவைக் குறைத்துக்கொண்டே வருவார்கள், பின்னர் கிருஷ்ணபட்சத்தில் தொடங்கித் தினமும் ஒவ்வொரு பிடி உணவை அதிகரித்துக்கொண்டே வருவார்கள். இதுபோல, இன்னும் பல தவங்கள் இருக்கின்றன. அவற்றால் உடலை வருத்தி வழிபட்டால், பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

ஆனால், அப்படி உடலை வருத்திய பிறகும் தீராத பாதகங்கள் இருக்கலாம். அவைகூட, சிவநாமத்தைச் சொன்னவுடன் மறைந்துவிடும்! வில் இது என்ன விளங்கும் திருநுதல் வல்லி பங்கன் மலர்அடி காணிய கல்வி நல்கும், கருத்து மகிழ்வுஉறும், செல்வம் நல்கும், சிவசிவ என்மினே.

வில்லைப்போலத் திகழும் திருநுதலைக் கொண்டவள் மலையன்னை, அவளைத் தன் உடலில் ஒரு பாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அப்பெருமானின் திருவடிகளைக் கண்ட பக்தர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும், அதுபோல, சிவநாமத்தைச் சொன்னவர்களுக்கும் கல்வி கிடைக்கும், அவர்கள் எண்ணியதெல்லாம் நிகழும், செல்வங்கள் கிடைக்கும்!

தீயநாளொடு கோளின் செயிர் தபும் நோய் அகன்றிடும், நூறு எனக்கூறிய ஆயுள் பல்கும், அறம் வளர்ந்து ஓங்குறும் தீய தீரும், சிவசிவ என்மினே. சில நாட்களைத் தீயவை என்பார்கள். சில கோள்கள் நமக்குக் கெடுதல் செய்வதாகச் சொல்வார்கள். சிவநாமத்தைச் சொல்லும்போது அவையெல்லாம் ஒரு பொருட்டா? அவற்றின் கெடுதல்களெல்லாம் உடனே கெடும்.
திருஞானசம்பந்தரும் இதையே சொல்கிறார், கோளறுதிருப்பதிகத்தில்:

வேயுறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி,
மாசுஅறு திங்கள், கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும்உடனே
ஆசுஅறு நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

மூங்கிலைப்போன்ற தோள்களைக்கொண்ட அன்னையை உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன், விஷம் உண்ட கழுத்தைக்கொண்டவன், இனிதாக வீணை இசைக்கிறவன், குற்றமில்லாத நிலவையும் கங்கையையும் முடியிலே அணிந்தவன், என் உள்ளத்திலே புகுந்திருக்கிறவன், சிவபெருமான். அதனால், ஒன்பது கோள்களும் (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்கிற பாம்புகள்) என்போன்ற அடியவர்களுக்கு நல்லவற்றையே செய்யும், எந்தக் குற்றமும் செய்யாது!

‘சிவனின் அருளிருந்தால் நாளென் செய்யும்? கோளென் செய்யும்?’ என்பது திருஞானசம்பந்தரின் நம்பிக்கை. ‘சிவநாமம் சொன்னால், நாளும் கோளும் நல்லதே செய்யும், நோய்களைத் தீர்க்கும், நூறாண்டு வாழவைக்கும். அறம் வளரும், தீயவை தீரும்’ என்பது சிவப்பிரகாச சுவாமிகளின் வாக்கு.

வருந்தி ஆற்றி வளர்த்த கதிர்த்தனை
பொருந்து வான்பயிர் போற்றுநர்போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடி பின்
திரிந்து காப்பன், சிவசிவ என்மினே.

ஓர் உழவன், சிரமப்பட்டு விவசாயம் செய்கிறான், பயிரைப் போற்றி வளர்க்கிறான். அந்தப் பயிர் கதிர்விடும் நேரம் வருகிறது, அப்போது அந்த விவசாயி அதனை எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்வான்! அதுபோல, விரிந்த சடையிலே வெண்மதியைச் சூடிய சிவபெருமானும் நம்மைக் காப்பான், அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் செய்வான். அதற்கு நாம் செய்யவேண்டியது, ‘சிவசிவ’ என்று சொல்வதுதான்!

முந்தை ஓர் சொல் மொழிந்து சிவன்என
நிந்தைதான் அச் சிவனை நிகழ்த்திலும்
வந்த தீவினை மாற்றுவன், ஆதலால்
சிந்தையோடு சிவசிவ என்மினே.

ஒருவன் சிவனை இழிவாகப் பேசிவிட்டான். அதனால் கொடிய வினையில் சிக்கிக்கொண்டுவிட்டான். அப்படிப்பட்டவனும், சிவனுடைய பெயரைச் சிந்தையில் எண்ணிச் சொன்னால் போதும், வந்த தீவினையை அடியோடு மாற்றிவிடுவான் அப்பெருமான்!

நீசரேனும் ஈசன் நிகழ்த்தில், வான்
ஈசரேனும் சிவசிவ என்கிலார்
நீசரே என்று இயம்புறு நின்று உப
தேச நூல்கள், சிவசிவ என்மினே.

உபதேச நூல்கள் என்ன சொல்கின்றன, தெரியுமா? ஒருவன் நீசனாகவே இருந்தாலும் சரி, சிவனின் பெயரைச்சொன்னால் விண்ணோரின் நிலையை அடைவான். அதேசமயம், விண்ணோர்கூட, ‘சிவசிவ’ என்று சொல்ல மறந்துவிட்டால், அவர்கள் நீசர்களாகிவிடுவார்கள், அது பெரும் பாவம். இதை மனத்தில் வையுங்கள், சிவசிவ என்று சொல்லுங்கள்.

எண்ணி நெஞ்சில் சிவசிவ என்பவர்
வண்ண மென்பதம் கிட்டி வணங்கவும்
உள் நடுங்குவன் ஒண்திறல் கூற்றுவன்
திண்ணம் ஈது, சிவசிவ என்மினே.

ஒருவர் மனத்தால் சிவனை எண்ணி சிவநாமத்தைச் சொன்னால் போதும், அவர் நல்ல ஆரோக்கியத்தோடு நெடுநாள் வாழ்வார். ஒளிநிறைந்த, திறன்நிறைந்த எமன் அவரை நெருங்க அஞ்சுவான், அவருடைய அழகிய, மென்மையான பாதங்களைத் தொட்டு வணங்குவதற்குக்கூட உள்ளே நடுங்குவான், இதுவே உண்மை. சிவநாமம் சொல்லுங்கள்! இவ்வளவு சிறப்புகள் நிறைந்த சிவநாமத்தை ஒருவர் சொல்லாவிட்டால் என்ன ஆகும்? இதற்குத் திருஞானசம்பந்தர் பதில்சொல்கிறார்:

கைம்மாவின் தோல்போர்த்த காபாலி,
வானுலகில்மும் மாமதில் எய்தான்,
முக்கணான் பேர் பாடிஅம் மாமலர்ச்
சோலை ஆமாத்தூர் அம்மான், எம் பெம்
மான் என்று ஏத்தாதார் பேயரில் பேயரே.

யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டவன், கபாலத்தை ஏந்தியவன், வானுலகில் சுற்றிவந்த முப்புரங்களை எரித்தவன், முக்கண்ணன். அந்தச் சிவபெருமானின் பெயரைச் சொல்லி, ‘அழகிய, பெரிய மலர்ச்சோலைகள் நிறைந்த திருவாமாத்தூர் அம்மானே என் தலைவன்’ என்று போற்றாதவர்கள், பேய்களிலேயே மோசமான பேய்களாவார்கள்!

மாறாத வெம்கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவு எல்லாம், கூறாத நாக்களே.

யாராலும் வெல்லப்பட முடியாதவன் என்று எமனைச் சொல்வார்கள், அத்தகைய வெம்மையான எமனைக்கூடச் சிவபெருமான் வென்றுவிட்டான். மலைமகளைத் தனித்து இன்னொரு வடிவமாகக் காணாமல், தன்னில் ஒரு பகுதியாகவே அவளை ஆக்கிக்கொண்டான் அந்த அர்த்த நாரீஸ்வரன். ஆறாத தீயிலே நின்று ஆடுகிறவன், திருவாமாத்தூர் அம்மான். அவனைப் போற்றிப் பாடாத நாக்கு இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

அதாவது, சிவபெருமானைப் போற்றாதவர்கள் பேச்சிழந்தவர்களாகவே கருதப்படுவார்கள்! ஆனால் பேச்சிழந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குச் செவிகள் உண்டு, குறைந்தபட்சம் சிவநாமத்தை, சிவனின் புகழைக் கேட்கலாம். ஆனால், சிலர் அதையும் செய்வதில்லை. வேறு விஷயங்களில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது?

தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரைஎன்றே நம்பன்தன் நாமத்தால்
ஆளானார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவிஎல்லாம் கேளாச் செவிகளே.

அரக்கனான ராவணன் ஆணவத்தோடு திரிந்தான். சிவபெருமானோ தன்னுடைய காலாலே அவனை அழுத்தி, அவனுடைய தோள்வலிமையைச் சாய்த்துவிட்டான். அத்தகைய தலைமகனுக்கு உரிய சிறந்த நாள், திருவாதிரை. அந்த நாளிலே பக்தர்கள் சிவநாமத்தை ஓதுவார்கள், ஆலயம் சென்று இறைவனைத் தரிசித்து வணங்குவார்கள்.

அப்படிப்பட்ட திருவாமாத்தூர் அம்மானின் புகழைக் கேட்காத செவிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். அதாவது, சிவநாமத்தைக் கேட்காதவர்கள் செவிடர்களாகக் கருதப்படுவார்கள். வாயில்லை, காதில்லை, நெஞ்சாவது இருக்குமில்லையா? இறைவனை நினைக்கவேனும் செய்யலாமே:

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோ சாரக்
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம்தன் மாதேவிக்கு ஈந்தான்தன் ஆமாத்தூர்
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.

சிவபெருமான் பிச்சை பெறும் திருக்கோலத்தில் வந்தபோது, அவனுக்குப் பிச்சையிடுவதற்காகப் பெண்கள் பின்னாலேயே வந்தார்கள். அவர்களுடைய தலைவனாகத் திகழ்ந்தான் அவன். தன்னிடம் வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்ந்தான் அப்பெருமான். அதனால் அவனைச் சுற்றி மாமிச நாற்றம் வீசியது, அவனது மாதேவியான மலைமகள் இக்காட்சியைக் கண்டு அஞ்சினாள்.

திருவாமாத்தூர் இறைவனான, இத்தகைய சிவபெருமானை ஒவ்வொரு நாளும் நினைக்காத நெஞ்சம், நெஞ்சமே அல்ல! ஆக, வாய், செவி, நெஞ்சம் என அனைத்தும் சிவநாமத்தையே எண்ணவேண்டும். மலையே இடிந்து மேலே விழுந்தாலும், நமசிவாய என்று சிவநாமத்தைச் சொன்னால் நடுக்கம் தீரும், நலம் பிறக்கும் என்கிறார் திருநாவுக்கரசர்:

இடுக்கண்பட்டு இருக்கினும், இரந்து யாரையும்
விடுக்கின் பிரான் என்று வினவுவோம் அல்லோம்,
அடுக்கல்கீழ்க் கிடக்கினும் அருளி நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமசிவாயவே.

எப்பேர்ப்பட்ட துன்பம் வந்தாலும் சரி, இன்னொருவரிடம் சென்று, ‘இந்தத் துன்பத்தை நீக்கிவிட்டால் உன்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்கிறோம்’ என்று நாங்கள் சொல்லமாட்டோம். எங்களுக்கு எப்போதும் ஒரே இறைவன்தான். மலையின்கீழ் கிடந்தாலும், நமசிவாய என்றுதான் சொல்வோம், அவர் எல்லா நலன்களையும் அருள்வார்!

(தொடரும்)

என். சொக்கன்


மலையாள மொழியிலேயுள்ள அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற நூலில் நடுமார்பிற்கு இருவிரல் வலத்தே இதயம் இருக்கிறதென்றும், அதுவே அகந்தையின் பிறப்பிடமென்றும், சகலநாடிகள், பிராணன், மனம், ஒளி என்பனவற்றின் மூலஸ்தானம் அதுவே என்றும்
கூறப்பட்டிருக்கிறது.

சுகம், துக்கம் என்பதெல்லாம் மனத்தின் தோற்றங்களே. பரம சுகமே நமது அடிப்படை இயல்பு. ஆயினும், நாமோ ஆன்மாவை மறந்து, உடலும் உள்ளமுமே நாம் என்கிற மதிமயக்கத்தில் ஆழ்ந்துகிடக்கிறோம்.

கஷ்டம் தோன்றுவதாலேயே கஷ்டமில்லாத நிலையை நாடுகிறோம். அத்தகைய நாட்டமின்றி, ஆத்ம விசாரணையும் ஆத்மானுபூதியும் எவ்வாறு சித்திக்கும்?

எல்லையற்ற பரிபூரணம் பாகுபாடுறாது; பாகுபாடுகளுக்கு உட்பட்டதென்றால் அது அகண்ட பரிபூரணமாகாது. வரையறையுள்ள ஜீவன், வரையறைகளற்ற பரிபூரணத்திலிருந்து தனித்த ஒன்று என்னும்போது பரிபூரணம் பாழ்படுகிறது.