துயரம் விலக்கும் தசாவதாரத் திருவுருவங்கள்



-விராலிமலை

மகாவிஷ்ணுவின் பத்து அவதார சுதை திருவுருவங்களை ஒரேஇடத்தில் கண்குளிர தரிசிக்க வேண்டுமா? வாருங்கள்.  விராலிமலை ஸ்ரீகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு. அழகிய இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிராகாரம். அடுத்து மகா மண்டபம்.  மகா மண்டபத்தின் இடதுபுறம் சக்கரத்தாழ்வார் சந்நதியும் வலதுபுறம் கருடாழ்வார் சந்நதியும் உள்ளன. எதிரே கருவறையில் ஸ்ரீகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருட்சேவை சாதிக்கிறார்ய.

பெருமாள் சந்நதியின் இடதுபுறம் ஜெயவீர ஆஞ்சநேயரின் தனி சந்நதி உள்ளது. அடுத்து ஆலயத்தின் தல விருட்சம் உள்ளது. பெருமாள் சந்நதியின் வலதுபுறம் 50 ஆண்டுகளாக தானாக வளர்ந்த பெரிய புற்று உள்ளது. புற்றுக்கருகே நாகர், விநாயகர் திருமேனிகள் உள்ளன. புற்றையொட்டி அரசு வேம்பு விருட்சங்கள் செழுமையாக வளர்ந்துள்ளன.

இந்த ஆலயத்திலுள்ள தூண்களில் பெருமாளின் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமனர் அவதாரம், பரசுராமர் அவதாரம், ராமர் அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், கல்கி அவதாரம் என பத்து அவதாரங்களின் அழகு திருமேனிகள் சுதையில் செய்யப்பட்டு தூண்களில் பதிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிப்பது  கண்கொள்ளாக்காட்சியாகும்.

அனுமத் ஜெயந்தி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுவதுடன் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை தோறும் வடைமாலை சாத்தப்படுகிறது. இங்குள்ள புற்றில் பெரிய நாகமொன்று குடியிருந்து வருகிறது. தோஷ நிவர்த்திக்கும், குழந்தைப் பேறு வேண்டியும் வேண்டிக் கொள்ளும் பெண்கள் புற்றுக்கு பால் நிவேதனம் செய்து அந்தப் பாலை புற்றுக்கருகிலேயே வைத்து விட்டுச் செல்கின்றனர். நாகராஜர் அவற்றை குடித்துவிட்டு செல்வதுண்டாம். சிலர் அந்த பெரிய நீண்ட நாகராஜாவை நேரில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த நாகராஜா எவருக்கும்  எந்த தீங்கும் இதுவரை செய்ததில்லை. புற்றுக் கருகே இருக்கும் நாகம்மாவுக்கு அனைத்து ஆடி மாத வெள்ளிக் கிழமைகளிலும் விளக்கு பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். மாங்கல்ய தோஷம் நாக தோஷம் போன்ற தோஷ நிவர்த்திக்கு இங்கு பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். புரட்டாசி மாத கடைசி வெள்ளியன்று பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான அன்னதான வைபவம் நடைபெறுகிறது. 

சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தில் பங்கு பெறுகின்றனர் என்பது வியக்க வைக்கும் செய்தி. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 8 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 1/2 முதல்  8 1/2 மணி வரையிலும் திறந்திருக்கும். ஸ்ரீசத்குரு சம்ஹார மூர்த்தி ஆசிரமத்தால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இந்த ஆலயம் ஆசிரமத்திற்குப் பக்கத்திலேயே அமைந்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கடைவீதியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

- ஜெயவண்ணன்

இறைவனை நோக்கிச் செய்யும் உங்களது பிரார்த்தனைகள் பலிக்கும். அவை நிறைவேறத்தான் செய்யும். எந்த ஒரு எண்ணமும் வீண் போவதில்லை. ஒவ்வொரு தீவிர நினைப்பும் ஏதாவது ஒரு சமயம் பலன் அளிக்கும். எண்ண சக்தி ஒருபோதும் வீணாகாது.

நமக்குள்ளே இடையறாது பெருகிக் கொண்டிருக்கும் ஞான கங்கையில் நீராட வேண்டும். அதில் குளிர், நடுக்கம் முதலிய உபத்திரவம் ஒன்றுமில்லை.