சிவஞான உபதேசத்தை தந்தருள்வாயாக!சித்ரா மூர்த்தி

பாண்டியன் கோபுர வாயிலைக் கடந்து செல்லும்போது, மாடத்தில் அரசன் வரகுணபாண்டியனின் திருவுருவம் தென்படுகிறது. அரசனது குதிரையால் மிதிக்கப்பட்டு அந்தணர் ஒருவர் இறந்ததால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பரிகாரம் நேடி திருவிடைமருதூர் வந்தான் அரசன். அவனைத் துரத்திவந்த பிரம்மஹத்தி, நடுநடுங்கி கோயிலுக்குள் வராமல் வெளியே நின்றுவிட்டது. தன்னை வணங்கியதால் தோஷம் நீங்கப்பெற்ற மன்னனை, வந்த வழியை விட்டு வேறு வழியே திரும்பச் செல்லும்படிப் பணித்தார், சுவாமி.

சந்நதி முன்னே உள்ள மிகப்பெரிய நந்தியின் அருகில் இரண்டாம் கோபுரவாயிலின் ஒரு மாடத்தருகில் காத்திருக்கிறது பிரம்மஹத்தி. அவ்விடத்திலேயே பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தலவிநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ (ஆக்ஞா கணபதி) எனப்படுகிறார். கல்வெட்டுகளில் புராண கணபதி எனக் குறிக்கப்பட்டுள்ளார். முதலில் செய்ய வேண்டிய பூஜைக்காக தர்ப்பையும், மாவிலையும் ஏந்தி ஆசார்ய பாவனையில் இவர் அமர்ந்துள்ளதால் மற்ற கோயில்களைப் போலன்றி மூலவருக்கு அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை எல்லாம் முடிந்தபின்தான் இவருக்குப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆண்ட விநாயகரை வணங்கி சந்நதிக்கு நேராக உள்ள வழியாக உள்ளே சென்று மூலவரைத் தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய சந்நதியில் சுயம்பு லிங்கமாக மகாலிங்கர் எழுந்தருளியுள்ளார். பெயருக்கேற்றாற்போல் மிகப்பெரிய திருமேனி! பிரணவப் பிராகாரத்திலிருந்து சிங்கமுகம் கொண்ட கிருஷ்ணகூபத்திற்குச் சென்று திருமஞ்சன நீர் எடுக்க படிகளில் கீழே செல்ல வேண்டும். வாமன மூர்த்திக்கு மூன்றடி மண் கொடுக்க உடன்பட்ட மகாபலியைக் ‘கொடாதே’ என்று தடுத்த அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் பார்வையை இழந்தார். பிறகு இங்கு ஸ்நானம் செய்து பார்வையைத் திரும்பப் பெற்றார்.

சிவபெருமானுக்கு அபிஷேகிக்கும்பொருட்டு கிருஷ்ணனால் உண்டாக்கப்பட்டதால் இத்தீர்த்தம் ‘கிருஷ்ண கூபம்’ எனப் பெயர் பெற்றது. இச்சிங்க முகக் கிணறுக்கு அருகில் தலவிருட்சமான மருத மரத்தடியில் காஸ்யப முனிவருக்கு காட்சி தந்த கண்ணன் சந்நதி உள்ளது. அர்த்த மண்டபத்தில் போக சக்தி அம்மன் உள்ளாள். மகா மண்டபத்தில் உள்ள பன்னிரு தூண்கள் பன்னிரு ராசிகளைக் குறிக்கின்றன.

பிராகார வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, அகத்தியர், சப்த கன்னிகையர், லிங்க வடிவிலுள்ள ஏகாதச ருத்ரர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். சோமாஸ்கந்தர் சந்நதியிலுள்ள இறைவனை ‘ஏகநாயகர்’ எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. (அருணகிரியாரும், பட்டினத்தாரும் தம் பாடல்களில் இறைவனை ‘ஏக நாயகா’ என்று விளித்துள்ளனர்.) லிங்கோத்பவருக்கு நேர் எதிரே வள்ளி - தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இத்தலத்தில் அருணகிரியார் நான்கு திருப்புகழ்ப் பாக்கள் பாடியுள்ளார்.

‘‘கலக அசுரர் கிளை மாள மேருகிரி
தவிடு பட, உதிர ஓல வாரி அலை
கதற, வரி அரவம் வாய்விடா பசி
தணிந்த, போக
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி
பரவும் அமரர்குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலைவிட
வந்தவாழ்வே!
அலகையுடன் நடனமதாடு தானத செவி
நிறைய மவுன உரையாடு நீப எழில்
அடவிதனிலுறையும் வேடர் பேதையை மணந்த கோவே அமணர் கழுவில் விளையாட
வாது படை
கருது குமர குருநாத நீதியுள
தருளும் இடைமருதில் மேவு மாமுனிவர்
தம்பிரானே!

இனிமையான பல பாடல்கள் பாடி, அதனால் வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாகி, செந்தமிழ் ஓசை பிறந்து, அறிவு மொழிகள் ஒளிவிடுகின்ற உயர்ந்த வழிபாட்டு நெறியில் கலக்கும்படியான அருளைத் தருவாயோ என்ற வேண்டுகோளையும் மருதூர் முருகன் முன் வைக்கிறார்.

‘‘மதுரகவி அடைவு பாடி வீடறிவு
முதிர அரிய தமிழோசையாக ஒளி
வசன முடைய வழிபாடு சேருமருள்
தந்திடாதே.’’

இப்பாடலில், மிகப்பொல்லாத வினைகள் வீழ்ந்தழிய வேலை விடுகின்ற என் செல்வமே என்று கொஞ்சுகிறார். சிவபிரான் பேய்களுடன் நடமாடுவது (அலகையுடன் நடனமதாடு தாதை), முருகன் அவருக்கு மவுனி உபதேசம் செய்தது (செவி நிறைய மவுன உரையாடு நீப!) சமணரைக் கழுவில் ஏற்றியது (அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர, குருநாதா) போன்ற பல குறிப்புகளும் வந்துள்ளன. ‘‘நீதியுளதருளும் இடைமருதில் மேவு மாமுனிவர் தம்பிரானே’’ எனும் வரிகள், நீதி அருளும் இறைவனை ‘நீதி’ என்றே குறிப்பிடும் சம்பந்தப் பெருமானை நினைவூட்டுகின்றன.

‘‘வெண்ணியில் நீதியை நினையவல்லார் வினை
நில்லாவே’’
‘‘நீதி நின்னையல்லால் நெறியாது நினைந்தறியேன்.’’ ‘அறுகு நுனி’

எனத்துவங்கும் இடை மருதூர்ப் பாடலில் (48 வரிகளடங்கியது) வாழ்க்கையின் நிலையாமையைப் பட்டினத்தாரின் கருத்துகளை ஒட்டி மிக விவரமாகப் பாடியுள்ளார். இப்பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்.

‘‘..............மனையுறுமவர்கள் நணுகு
நணுகெனுமளவில்
மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவுதனில் இரதமொடு குதிரைவர நெடிய சுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய உரை குழுறி விழி சொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் மனிதர்கள்
பலபேச
இறுதியொடறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனதுடைமை எனதடிமை எனும் அறிவு சிறிதுமற
ஈ மொலேலெனா, வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனிலிடும் வாழ்வே...’’

உடலெல்லாம் வியாதிகளின் காரணமாக கோரமடைந்துப் போகும்போது, அருகில் சென்று பார்க்காமல் மாதர்களும் குழந்தைகளும் சீ என வெறுத்து ஒதுக்குகின்றனர். தேர், குதிரைகள் இவை கனவில் வருகின்றன. சுடுகாடு வா என்கிறது, வீடு போ என்கிறது. உற்சாகமெல்லாம் குன்றி, பேச்சு குழறி, கண்கள் செருகி, மேல் மூச்சு எழ, உயிர் உடலை விட்டு கழிகிறது.

இவரது மரணத்தோடு, நமது சுகங்களும் அற்றுப்போய்விடுமே என்று சுற்றத்தாரும் மாதரும் கதறி அழுகின்றனர். என் பொருள், எனதடிமை எனும் நினைவு அற்றுவிட, ஈக்கள் மொய்க்கின்றன; வாய் ‘ஆ’ என்று திறந்து உயிர் வெளியேறுகிறது. மேள ஒலிகளுடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பேய்களால் சூழப்பட்டு தீயில் உடல் இடப்படும் வாழ்வு இது... உடற்கூற்று வண்ணத்தில் பட்டினத்தாரும் இதேபோன்று பாடுகிறார்.

‘‘மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்
 உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே.’’

‘புழுகொடு’ எனத்துவங்கும் இடை மருதூர்ப் பாடலில், அருணகிரியார் முருகனது கொடையாகச் சிவஞானோபதேசத்தை எழுந்தருளி வந்து உதவும்படிக் கேட்டுக்கொள்கிறார்.

‘‘செழுமதகரி நீல கோமள அபிநவ மயிலேறு
சேவக
செயசெய முருகா குகா வளர் கந்தவேளே
திரை பொருகரை மோது காவிரி வருபுனல்
வயல் வாவிசூழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய தம்பிரானே’’
 
‘‘மிடைபடு மலமாயையால் மிக கலவிய அறி
வேக சாமி நின்
விதரண சிவ ஞான போதகம் வந்து தாராய்.’’

செழுமை வாய்ந்த பிணிமுகம் எனும் யானை, நீலமயில் இவற்றின் மீது ஏறுகின்ற வீரனே! ஜெயஜெய முருகா! குகா! புகழ்மிகு கந்தவேளே! அலைகள் ஒன்றொடொன்று மோதிக் கரையில் வந்து மோதுகின்ற காவிரி நீர் பாயும் வயல்களும் குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் தம்பிரானே! நெருங்கிவரும் மும்மலங்களின் மாயை வசத்தால் கலங்கிய என் அறிவு அழிந்துபோக, சுவாமீ! உனது கொடையாகச் சிவஞான உபதேசத்தைத் தந்தருள்வாயாக! ‘படியை அளவிடு’ எனவரும் பாடலில் சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ள விதம் மிக அருமையாக அமைந்துள்ளது.

‘‘படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும்
தமர சதுமறை அமரர் சங்கமும்
சம்புவும்
பரவரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனிப்
பரமன், எழில் புனையும் அரவங்க
ளும் கங்கையும்
திருவளரு முளரியொடு திங்களும்
கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பை
யும் துன்றுமூலச்
சடைமுடியிலணிய நல சங்கரன்.’’
- என்பது பாடல்.

பூமியைத் தனது காலால் அளந்த திருமால், யமன், வேதங்களும் தேவர்களும் பிரம்மனும் போற்றுதற்கரிய அரசன், சாமர்த்தியசாலி, அழித்தல் தொழிலைச் செய்பவன், செம்பொன் மேனியன், பரமன், பாம்பு, கங்கை, லட்சுமி தேவி வாசம் செய்யும் தாமரை, நிலவு, கொன்றை, பருத்த குமிழம்பூ, அறுகம்புல், தும்பை, சிற்றகத்தி மலர் இவற்றை சடைமுடியில் நெருங்க அணிந்திருக்கும் நல்ல சங்கரன்’’ என்று போற்றுகிறது பாடல்.

‘‘அடல் புனையும் இடை மருதில் வந்திணங்கும்
குணம்
பெரிய குருபர, குமர, சிந்துரம் சென்றடங்கு
அடவிதனில் உறை குமரி, சந்திலங்கும் தனம் தங்குமார்பா.
அருணமணி வெயிலிலகு தண்டையம், பங்கயம்
கருணைபொழிவன கழலில் அந்தமும் தம்பம்
என்றழகு பெற நெறி வருடி அண்டரும்
தொண்டுறும் தம்பிரானே!’’

வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில் வந்து பொருந்தி இருக்கும் குணத்திற் சிறந்த குருபனே! குமரா! யானை உறங்கும் வள்ளிமலையில் வாசம் செய்யும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படிபவனே! ரத்னங்கள் ஒளிரும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான உன் திருவடிகளே முடிவான பற்றுக்கோடு என்று உறுதி பூண்ட தேவர்கள் தொழும் தம்பிரானே! தொடர்ந்து, சிவகுமரன், அறுமுகன், செஞ்சொலன், சரவணத்தில் உதித்த முதல்வன், தேவசேனாபதி கந்தன் என்றெல்லாம் பாடி, தண்மையான சொற்களைச் சொல்லும் வழியில் போகின்றேன் இல்லை, திைன அளவு ஈகைக் குணமும் அற்றவன், அப்படிப்பட்ட எனக்குத் தவவழியில் ஒழுகிச் சீர் பெற ஒரு பிடிப்பான எண்ணம் உதிக்க உன் திருவுளம் நினைக்காதா என்று முருகனிடம் கேட்கிறார்.

‘‘குமரன் அறுமுகவன் மதுரம்
தரும் சொலன்
சரவணையில் வரு முதலி, கொந்தகன், கந்தன் என்றுய்ந்து பாடித்
தணிய ஒலி புகலும் விதமொன்றி
லும் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்பு‘
கொண்டண்டிலன்
தவநெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ?’’
-  என்பது பாடல்.

மருதவனப்புராணம் எனும் நூலில், முருகன், வசிட்டர் முதலாேனாருக்குத் திருவிடைமருதூர்த் தலத்தின் பெருமையைப் பின்வருமாறு எடுத்துரைப்பதாக ஒரு பாடல் வருகிறது.

‘‘இடைமருதீசனைப் பணிதற்கு ஒருவன்
எண்ணுற்று
எழுந்திடில் அங்கு அவர் வினையும் எழுந்து
நிற்கும்,
நடையுறில் அவ்வூர் நோக்கி, புறவூர் நோக்கி
நடக்கும் அது; சொல்லாமல் அவர்கள் ஏகத்
திடன் இலராய் உடன் ஒருகாற் திரும்பினாலும்
திரும்பாது; சென்றவினை சென்றதேயாம்;
புடவிபுகழ் காசியினுற்று இலகு கங்கைப்
புனல் படிந்து வரு பலன் மற்று அவரக்கு
எய்தும்’’
(தலவிசேஷச் சருக்கம், பாடல்-20)

இடைமருதீசராம் மகாலிங்கரை ஒருவர் வணங்க எண்ணி எழுந்தால், அவர் வினையும் அவருடன் எழும்; நடந்து சென்றால் அவ்வினையும் வெளியே நடந்து செல்லும். நடக்கத் திறனின்றி அவர் ஊர் திரும்பினாலும் அவ்வினை திரும்பாது. சென்றவினை சென்றதேயாம்! தவிர, காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பயனையும் அவருக்கு அளிக்கும் என்பது கருத்து.

சுப்ரமண்யரை வணங்கி, பின் பிரம்மா, சேர, சோழ, பாண்டிய லிங்கங்கள், அன்பிற்பிரியாளுடன் காட்சி அளிக்கும் மருதவாணர், கஜலட்சுமி ஆகியோரைத் தரிசிக்கிறோம். அம்மன் கோயிலை நோக்கிச் செல்லும் வழியில் சட்டை நாதரை வணங்கலாம். வெளி மண்டபத்தில் ஆறுமுகர், ஆடிப்பூர அம்மன், பள்ளியறை அம்மன் ஆகியோரைத் தரிசித்து, பின் பெரு நலமா முலையம்மையை வணங்குகிறோம் மங்கள சனீஸ்வரருக்குத் தனிச் சந்நதி உள்ளது.

அடுத்ததாக நாம் தரிசிப்பது அன்னை மூகாம்பிகை சந்நதி. 1865ம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பில் கட்டப்பட்ட திருக்கோயில் இது. இங்கு மிகவும் சக்தி வாய்ந்த மகாமேரு அமைக்கப்பட்டு, பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இடைமருதூரில் கந்தசஷ்டி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்களும் சிறப்பு அபிஷேகம் உண்டு. ஆறாம் நாள் மாலை மகாலிங்கப் பெருமானிடம் வேல் வாங்கி, ஷண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும்போது, தாரகாசுரன், கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன் சூரபத்மன் ஆகியோர் சம்ஹாரம் செய்யப்படுகின்றனர்.

தன்னால் வீழ்த்தப்பட்ட சூரபத்மன், மாமரமாகத் தோன்ற அதனையும் சம்ஹாரம் செய்து, மயிலாகவும் சேவலாகவும் மாற்றி அவற்றை ஏற்றுக்கொண்டு முருகன் கோயிலை அடைகிறான். ஏழாம் நாள் அம்மன் சந்நதியில் காலை சிறப்பு ஹோமமும், மாலை ஷண்முகார்ச்சனையும் நடைபெறும்.

மூவர் தேவாரம், திருப்புகழ் தவிரவும், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் திருவிடைமருதூர் உலா, திரிபந்தாதி மற்றும் மருதவாணர் தோத்திரப் பதிகம் ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன. தமிழ்த்தாத்தா அவர்களும், ஏகநாயகர் ஊசல் மற்றும் ஏகநாயகர் தாலாட்டு ஆகிய இரு நூல்கள் இயற்றியுள்ளார். ராகு-கேது தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற மக்கள் பெரிதும் நாடிச் செல்லும் திருத்தலமாகிய திருநாகேஸ்வரம் நமது அடுத்த தரிசனமாகும்.

(உலா தொடரும்)

ஜபமாவது மற்ற எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி, ஒரே எண்ணத்தைப் பற்றி நிற்றல். அதுவே ஜபத்தின் கருத்து. ஜபம் தியானத்திற்கு வழி, தியானம் ஞானத்தில் முடியும்.

பக்தி இல்லாமல் மேலெழுந்தவாரியாக நாமத்தை வெறுமனே உச்சரிக்கக்கூடாது. கடவுள் பெயரை உபயோகிப்பதானால், நாம் நம்மை முழுதும் அவருக்கு அர்ப்பணம் செய்து அவரை அழைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் நாமம் எப்ெபாழுதும் நம்முடன் இருக்கும்.

ஆரம்ப கட்டங்களில் மந்திர உச்சாடனத்தின்போது ஒரு குருவின் உருவையோ அல்லது புராணங்களில் வரும் கடவுள் வடிவையோ மனத்திரையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

ஜபம் இடைவிடாது தொடரும்போது மற்ற எண்ணங்கள் யாவும் ஓய்ந்துபோய், ஜபிப்பவர் தனது உண்மை இயல்பான ஆன்ம லயிப்பில் நிலைகொள்வார்.