ராமானுஜர் - 1000ராமானுஜரின் நீண்ட ஆயுட்காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் அமைந்தார்கள். அவர்களில் பலர் அவருடைய விக்கிரகங்களை உருவாக்கி பல்வேறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்தனர். மகான் ராமானுஜரின் ஜீவித காலத்திலேயே இது நடந்தது. நாடெங்குமுள்ள எண்ணற்ற வைணவத் திருத்தலங்களில் வைணவத்திற்குப் புத்துயிர் அளித்த ராமானுஜரின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாரத தேசத்திலேயே ராமானுஜரின் மூன்று மூர்த்திகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உடையவரின் விக்கிரகம் உயிருள்ள மூர்த்தியாக வணங்குவதால் அது ‘தான் உகந்த திருமேனி’ என்றும், மேல் கோட்டையில் அடியார்களின் விருப்பத்திற்கிணங்க, தாமே உகந்து, தம்மை அங்கு பிரதிஷ்டை செய்துகொண்ட திருமேனி,  ‘தமர் உகந்த திருமேனி’ என்றும், ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் பிருந்தாவனவாசியாக இருப்பதால் ‘தானான திருமேனி’ என்றும் போற்றி சிறப்பிக்கப்படுகிறார்.  

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கு ஏராளமான சீடர்களும் பாகவத கோஷ்டியும் உருவானார்கள். சிறிது காலத்தில் இளையாழ்வாரின் காஞ்சிபுர வாசம் ஆரம்பமாகியது. காஞ்சியில் வரதராஜப் பெருமாளின் பரம பக்தனாக இருந்து சேவை செய்து வந்தபோது ஆளவந்தாரைச் சந்திக்கும் பாக்கியம் ராமானுஜருக்குக் கிடைத்தது. இதற்கு அடையாளமாகவே, தமது இறுதிக் காலத்தில் ஆளவந்தார், சீடர்களை அனுப்பி, அவரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வரும்படி பணித்தார்.

இளையாழ்வார் விரைந்து சென்ற சமயம் ஆளவந்தார் பரகதி அடைந்து விடவே, அவர் மனத்திலிருந்த அபிலாஷைகளை ஊகித்து உணர்ந்து கொண்டு, அவர் விட்டுச்சென்ற புனித காரியங்களை இளையாழ்வார் தாமே மேற்கொண்டார். அப்போது வைணவப் பிரசாரம் தமிழகத்தில் தீவிரமாயிருந்தது. ஆழ்வாராதிகளின் திவ்யப் பிரபந்தம் தமிழ் வேதம் எனக் கருதப்பட்டது. பண்டிதர்களும் பரம பக்த சிகாமணிகளும் வைணவம் நாட்டில் பரவ வேண்டி அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள். ராமானுஜரின் திருவுள்ளத்திலும் அந்தக் காற்று வீசத் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் புறப்படுவதற்கு முன்பாக, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சியில் இருந்த உடையாரின் ஏராளமான சீடர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். சீடர்களில் ஒருவரான முதலியாண்டான் குமாரன் கந்தாடையாண்டான் தன் ஆசாரியரான ராமானுஜரை அணுகி, ‘‘சுவாமி, தங்களின் பிற்காலத்தில் வைஷ்ணவ உலகிற்கு தங்களைப்பற்றி நன்கு தெரிய தங்களின் திவ்ய மங்கள உருவத்தை விக்கிரகமாகச் செய்ய அனுக்கிரகிக்க வேண்டும்!’’ என வேண்டினார். அவ்வாறே உடையவரும் அவரது வேண்டுகோளை நிறைவேற்ற, ஓர் சிறந்த சிற்பியை அழைத்து தன்னுடைய திவ்ய மங்கள செப்புச் சிலையைச் செய்ய ஆணையிட்டார்.

சிலை பூர்த்தியாயிற்று. அந்த அழகிய தெய்வீகம் வாய்ந்த விக்கிரகத்தைக் கண்ட ராமானுஜர் தன் திருமேனியைப்போல் சிறிதும் வித்தியாசமில்லாமல் சகல விதத்திலும் பூரணமாக இருப்பதை அறிந்து பேரானந்தம் கொண்டு, அந்த அர்ச்சா திருமேனியை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து, தன்னுடைய பதினாறு கலைகளையும் அத்திருமேனியில் பிரகாசிக்கச் செய்து, அவ்விக்கிரகத்தை ஸ்ரீபெரும்புதூரிலேயே நிர்மாணித்தார்.

ராமானுஜர் திருவவதாரம் செய்த ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் கேசவப் பெருமாள் ஆலயத்தில்  இருக்கும் வடிவம், அடியார்கள் விரும்பிக் கேட்டதன் பேரில் செய்யப்பட்டதாகும். உடையவர் ஸ்ரீரங்கத்திற்குச் சென்றபோது, சிற்பி உடையவரின் சிலையில் கண்ணை சீர்திருத்தம் செய்துகொண்டிருந்தபோது, உளி தவறி கண்ணில் பட்டுவிட, அப்போது ஸ்ரீரங்கத்திலிருந்த உடையவரின் கண்ணில் ரத்தம் பெருகிற்றாம். அதனால்தான் உயிருள்ள அந்த மூர்த்திக்கு ‘தமர் உகந்த திருமேனி’ என்று பெயர். அவரை அண்டியவர்கள் செலுத்திய அன்பின் பிரதிபலிப்பாக அத்திருமேனி விளங்குகிறது.

தமர் உகந்த திருமேனியாக ராமானுஜர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பொன் வேய்ந்த விமானத்தின் கீழ் தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கிய திருக்கோலம். இந்த மூலவருக்கு இணையாழ்வார் என்ற திருப்பெயர். இந்த மூலவருக்கு முன் செப்புச்சிலை வடிவில் உற்சவ மூர்த்தியாக கூப்பிய கையுடன் திரி தண்டம் சாத்தியபடி ‘தமர் உகந்த திருமேனியாக’ விளங்கும் உடையவருக்குத்தான் முதலில் திருமஞ்சனப் பூஜைகள் விசேஷமாக நடைபெறுகின்றன.

அவர் ஆஜானுபாகுவாக இருந்திருப்பார் என்பதற்கு அவரது கம்பீரம், எடுப்பான நாசி, புன்னகை புரியும் வதனம், காண்பவரை வசீகரிக்கும் கருணையுள்ள கண்கள் என்று சர்வ லட்சணங்களுடன் கூடிய எம்பெருமானார் ராமானுஜரின் திருமேனியை வாழ்நாள் முழுவதும் தரிசித்துக்கொண்டேயிருக்கலாம். ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் தன் சீடர்களுடன் வைணவ நெறியைப் பரப்பி, புனிதத் தொண்டாற்றிக்கொண்டிருந்த காலம் அது.

அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த முதலாம் குலோத்துங்கள் ஒரு சிவபக்தன். தீவிரமான சைவ சமயத்தினன். இவனது அமைச்சனாக இருந்த நாலூரான் என்பவன் உடையவர் மீது இல்லாததையும், பொல்லாததையும் மன்னனிடம் எடுத்துக்கூறி, ‘அரசே, ராமானுஜர் வைணவ தத்துவத்தைப் பரப்பும் வேகத்தைப் பார்த்தால் சைவ சமயத்திற்குப் பேராபத்து வந்துவிடும் போலிருக்கிறது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!’’ என்று துர்போதனை செய்தான். இதைக்கேட்ட மன்னன் வெகுண்டு ராமானுஜருக்குப் பல தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தான்.

‘எம்பெருமானார் ராமானுஜர் இனியும் இங்கே இருந்தால் அவர் உயிருக்கே ஆபத்து’ என சீடர்களான கூரேசரும், பெரிய நம்பியும் வலியுறுத்திக்கூற, அவர்கள் விருப்பப்படி ராமானுஜரும், பெருமாள் எழுந்தருளியுள்ள பல புனிதத் தலங்களை தரிசித்து வர புறப்பட்டு விட்டார். ராமானுஜரின் ஸ்ரீரங்கவாசம் முற்றுப்பெற்று கர்நாடகா மாநிலத்தில் மைசூருக்கு அருகே உள்ள தொண்டனூர் மற்றும் மேல் கோட்டையில் அவரது பணி ஆரம்பமாயிற்று.

மேல் கோட்டையை திருநாராயணபுரம் என்றும் தென்பதரிகாச்ரமம் என்றும் அழைக்கிறார்கள். இங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வந்து, வைணவ சித்தாந்தத்தைப் பரப்பிய ராமானுஜர் சுமார் இருபது ஆண்டுகள் தொண்டனூர் மற்றும் மேல்கோட்டையில் தங்கியிருந்து பல அரிய சாதனைகளை நிகழ்த்தினார். அவர் தொண்டனூரில் ஆற்றிய அருந்தொண்டுகள் பலவாகும். தொன்மைச் சிறப்புகள் நிறைந்த தொண்டனூர் ஆலயங்களைச் செப்பனிட்டார்.

அங்குள்ள யோக நரசிம்மரின் திருக்கோயிலை சீரமைத்தார். அந்தக் கோயிலில் உறையும் ‘சிங்கப் பெருமாள்’ ராமானுஜருக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கினார். அப்போது அந்தப் பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்த பிட்டி தேவன் என்றும் விட்டல தேவராயன் என்றும் அழைக்கப்பட்ட அந்த ஜைன மன்னன், போரில் ஈடுபட்டபோது உடலுறுப்பை இழந்தான். அதன் காரணமாக ஜைன ஆசார்யார்கள் அவனை ஒதுக்கி வைத்திருந்தனர். அதனால் மனவேதனையுற்றிருந்த மன்னனை ராமானுஜர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மன ஆறுதலைக் கொடுத்தார்.

அதுமட்டுமல்ல, பிட்டி தேவன் மகளான இளவரசிக்குப் பேய் பிடித்திருந்ததால் அந்த அரச குடும்பமே வேதனையால் கலங்கிக் கொண்டிருந்தது. சிங்கப் பெருமாள் அருளால் ராமானுஜர் அந்தப் பெண்ணை குணமாக்கினார். மன்னன் மனம் மகிழ்ந்தான். உடையவரின் வேண்டுகோளின்படி ஜைன சமயத்தைத் துறந்து வைணவ மதத்தில் சேர்ந்தான். விஷ்ணுவர்த்தன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டான். வைணவ நெறியைப் பரப்ப உடையவருக்கு உறுதுணையாக இருந்தான்.

ஆயிரக்கணக்கான ஜைனர்கள், வைணவ மதத்தைப்பற்றி ஓராயிரம் கேள்விகள் எழுப்ப, ராமானுஜர் தமது வாதத் திறமையால் அவர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்தார். மேல் கோட்டையில் வாசம் செய்தபோது, செல்லப்பிள்ளை என்ற உற்சவ மூர்த்தியை டில்லி பேரரசனிடமிருந்து மீட்டு வந்து ஆலயத்தில்  சேர்ப்பித்தார் கர்நாடகப் பகுதியில் பஞ்ச நாராயணர்களுக்கு திருக்கோயில்கள் எழுப்பி வைணவ நெறியைப் பரப்பினார்.

தெய்வ கட்டளைக்கு இணங்க, சோழ மன்னனின் கோபத்திலிருந்து தப்பிக்க, ராமானுஜர் கர்நாடகம் வந்ததும் பேரருளின் திட்டங்களில் ஒன்றாகும். திருநாராயணபுரத்தில் லட்சுமி நாராயணருக்குக் கோயில் கட்டி, ஆகமரீதியாக ஆராதனைக்கு வழி வகுக்கவும், பல மடங்களை நிறுவி தொடர்ந்து, நாராயண சேவை செய்ய ஐம்பத்திரண்டு பேரை நியமித்தும் பல சாதனைகள் புரிந்தார்.

மேல்கோட்டையில் உலகப் பிரசித்தி பெற்ற ‘ராஜமுடி உற்சவம்’ ‘வைரமுடி உற்சவம்’ ஆகிய இரண்டு அற்புதமான வைபவங்கள் இன்றுவரை சீரும் சிறப்புமாக மிக விமரிசையாக நடைபெறக் காரண கர்த்தாவே ராமானுஜர்தான். அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ‘திருக்குலத்தார்’ என அழைத்திடவும், அவர்கள் மற்ற எல்லோரையும்போல கோயில் உற்சவங்களில் பங்கு கொள்ளவும் பல உரிமைகள் வழங்கினார். சமயம் மற்றும் கோயில் வழிபாடு சார்ந்த பல சீர்திருத்தங் களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தினார்.

எம்பெருமானாருக்கு ஏராளமான சீடர்கள் உருவானார்கள். அவரையே பெருமாளாகவும், குருவாகவும் போற்றி வழிபட்டார்கள். ராமானுஜருக்கு அப்போது தொண்ணூறு வயதுக்கு மேலாகி விட்டிருந்தது. கர்நாடகப் பகுதியில் அவர் ஆற்ற வேண்டியிருந்த தெய்வப் பணிகளெல்லாம் முடிந்துவிட்டதால் மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள ரங்கத்திற்குப் புறப்பட்டுச் செல்லத் தயாரானார். ஆனால், அது அவரது சீடர்களுக்கும் பாகவத கோஷ்டிக்கும் மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது.

அங்கிருந்த அடியவர்கள் அனைவரும் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே என வருந்தினார்கள். ‘‘சுவாமி, நீங்கள்தான் எங்களுக்குப் பெருமாள். உங்களை விட்டு நாங்கள் பிரிந்திருக்கவே முடியாது. தேவரீர் வேறெங்கும் போகாமல் இங்கேயே எழுந்தருளியிருக்க வேண்டும். நித்ய தரிசனம் தந்தருள வேண்டும்!’’ என்று அன்பின் மிகுதியால் கண்களில் கண்ணீர் மல்க விண்ணப்பித்துக்கொண்டார்கள்.

அதைக்கேட்ட எம்பெருமானார், ‘‘அப்படியே செய்கிறேன்’’ என்று கூறி, சிற்பக்கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு சிற்பியை வரவழைத்து, தம்மைப்போலவே அமர்ந்த நிலையில், ஒரு மூர்த்தியைச் செய்யச் சொன்னார். அதை ஆரத்தழுவி அதில் தம் சக்தியை ஆவாகனம் செய்து ஆலயத்தில் தனி சந்நதி அமைத்து அதிலே பிரதிஷ்டை செய்தார். சீடர்களை அழைத்து அதை அவர்களிடம் ஒப்படைத்து, ‘‘நானே உங்களுடன் எப்போதும் இருப்பதாக எண்ணி இந்த விக்ரகத்தைக்கண்டு மனஅமைதி பெறுங்கள்!’’ என்றார் ராமானுஜர்.

அப்படியும் சீடர்கள் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. அப்போது உடையவர் தமது சந்நதிக்கு திரையிட்டு விட்டு, வெளியே வந்து நின்று எல்லோரும் காண ‘ராமானுஜா’ என்று உரக்கக்குரல் கொடுக்க, சந்நதிக்குள் இருந்து அதே குரலில், ‘‘நாயிந்தே, நாயிந்தே!’’ என்று அந்த விக்ரகம் பதில் குரல் கொடுத்ததைக்கண்டு அத்தனை பேரும் அதிசயித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

‘‘பார்த்தீர்களா? நான் என்றும் இங்கே இருக்கிறேன் என்பதற்கு இது அடையாளம். இந்த மூர்த்தியே இனிமேல் ‘பேசும் யதிராஜர்’ என்றே அழைக்கப்படுவார். அண்டியவர்களுக்கெல்லாம் அனைத்து நலன்களையும் நல்கி, ஆனந்தமாய் வழங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சந்நதியில் முறை தவறாமல் சிரத்தையுடன் ஆராதித்துக் கொண்டிருங்கள். எல்லா நன்மைகளும் விளையும்!’’ என்றார் எம்பெருமானார்.

இப்படி மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்தில் அடியவர்களின் விருப்பத்திற்கிணங்க, தாமே உகந்து தம் உருவத்தையே அங்கு பிரதிஷ்டை செய்த திருமேனி அவருடையது. அதனால் அத்திருமேனி ‘தான் உகந்த திருமேனி’ ஆயிற்று. இங்கு ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் உடையவரின் மூர்த்தி ‘பேசும் யதிராஜர்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றிருக்கிறார். அங்கு அவர் பெருமாளை தரிசித்துக்கொண்டு, நித்தமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியா முழுவதும் சமயப்பணி செய்த புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யார்களுள் முதன்மையானவர் ராமானுஜர். கி.பி.1017-ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். 120 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி.1138-ல் பரமபதம் அடைந்தார். அவர் வாழ்ந்தது கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாகும். அவர் வாழ்நாளிலேயே அடியார்களும் பக்தர்களும் ‘தெய்வம்’ என்றே கொண்டாடினார்கள்.

ஒரு மாபெரும் நாட்டையே பரிபாலிப்பதுபோல் திருவரங்கனின் சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்தவர். அரங்கன் ஆலயத்துக்கு வந்து, ‘கோயிலொழுகு’ ஏற்படுத்தி, ஓர் மன்னர்போல விளங்கி ‘யதிராஜர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். ராமானுஜருக்கு தொண்ணூறு வயதாகும்போது, மீண்டும் ஸ்ரீரங்கத்தில் அவரது வாழ்க்கை தொடர்ந்தது. சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் சம்வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார்.

தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிரம்ம சூத்திரத்திற்கும், கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி, திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சீடரால் உருவாக்கப்பட்டு, ராமானுஜர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு அவர் ஆக்ஞையையொட்டி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது.

வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார். நாராயண சேவைக்கென எழுபத்தைந்து தலைவர்களை நியமித்தார். செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செவ்வனே செய்து முடித்த பிறகு, தமது சீடர் பராசரரிடம் தம்மிடமிருந்த அனைத்துப் பொறுப்புக்களையும் கொடுத்துவிட்டு திவ்ய சமாதியடைந்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலிலேயே விசேஷம் உடையவர் ராமானுஜரின் சந்நதிதான். அவர் தம் திருமேனியுடன் இன்றும் இங்கு காட்சி தருகிறார். இவரை மற்ற சந்நியாசிகளைப்போல ஆற்றங்கரை ஓரமாக சமாதிப்படுத்த சீடர்கள் விரும்பவில்லை. திருவரங்க நகரத்துக்குள்ளேயே சமாதிப்படுத்த விரும்பினார்கள். திருவரங்கம் ஏழு மதில்கள் கொண்ட அழகிய நகரம். கோயிலுக்குள் நகரம் உள்ளது ஓர் அதிசயம்.

முதல் மூன்று பிராகாரம் வரை கோயில். அதிலிருந்து மற்றதெல்லாம் வெளிப்பிரதேசம். இதில் நாலாவது பிராகாரத்தில் அக்கினி மூலையில், ராமானுஜர் மறைந்த பிறகு அவர் மேனியைப் பள்ளிப்படுத்திய தலம் இருக்கிறது. சந்நியாசிகளுக்கு உண்டான கிரமப்படி அவரது திருமேனியைப் புதைத்துவிட்டு, அதன்மேல் அவருக்குக் கோயில் கட்டினார்கள். அவர் திருவுருவத்தை எக்காலமும் கண்டுகளிக்குமாறு சிறந்த சிற்பிகளைக் கொண்டு திருமேனி அமைத்து, ‘பிரும்மாந்த்ரம் சமாக்ராய ஸ்வயக்தம் தத்தவான்’ என்றவாறு அதில் பிரதிஷ்டை இட்டு விளங்கும் திருச்சந்நதியே உடையவர் சந்நதி.

இவருடைய பூத உடம்பு திருப்பள்ளி கொண்டுள்ள சந்நதியே ‘வசந்த மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. நான்காவது பிராகாரத்தில் இன்றும் அந்தக் கோயிலைக் காணலாம். ஓர் அறை கொண்ட சந்நதி அது. அதில் ராமானுஜரது திருவுரு காணப்படுகிறது. இத்திருவுருவம் பற்றிப் பலர் பல கூறுவார்கள். சிலர் இதுதான் ராமானுஜரின் உண்மையான திருமேனி என்பார்கள். அந்தத் திருமேனி மீது சாந்து அல்லது மண் பூசப்பட்டிருக்கிறது என்பார்கள். இந்தத் திருஉருவத்தின் கையில் நகங்கள் தெரிகின்றன.

அது உடையவரின் மேனியில் உள்ள நகங்கள்தான் என்பார்கள். இப்படிப் பலரும் பலவிதமாகச் சொல்ல, அங்கே இருப்பது வெறும் சுதை உருவம்தான். இந்த உருவம் அமைத்த விதத்தைப்பற்றி ஒரு பழைய காலப் புத்தகம் கூறும் செய்தி ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால், ராமானுஜர் உயிரோடு இருந்த காலத்திலேயே அவர் உபயோகித்து வந்த காஷாய வஸ்திரங்களைக் கொண்டே உருவம் செய்து, ஒவ்வொரு வஸ்திரத்துக்கும் இடையில் மண்ணினால் மெழுகி அந்தத் திருவுருவத்தை உண்டாக்கினார்கள் என்ற விபரத்தை அந்நூல் தெரிவிக்கிறது. இது கவனிக்க வேண்டிய அதிசயமே என்றும் கூறுகிறது.

ராமானுஜர் நூற்றிருபது ஆண்டுகள் இந்த மண்ணுலகில் எல்லோரும் தோன்ற வாழ்ந்தார். அவர் வாழையடி வாழையாக வந்த மாபெரும் சித்தர். அவர் இன்றும் இங்கு தன் திருமேனியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். இங்கே சந்நதியில் ராமானுஜர் ஒரு காலின்மீது இன்னொரு காலைப் போட்டுக்கொண்டு பத்மாசன நிலையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போது நேற்றுதான் தியானத்தில் அமர்ந்த திருமேனிபோல் இருக்கிறது.

கமல மலர்கள் போன்று கண்கள் திறந்தே இருக்கின்றன. கால்கள் நன்றாகத் தெரிகின்றன. திருக்கரங்களில் ரோமங்கள்கூட இருப்பதைக் காணலாம். இங்கு உடையவர் திருமேனியை பச்சை கற்பூரமும் குங்குமப் பூவும் கொண்டு அமைந்த கலவையினால் மூடி வைத்திருக்கிறார்கள். உடையவரின் திருமேனி ஆயிரம் ஆண்டுகளாக ஞான யோகத்தின் மூலமாகத் தோன்றும், அந்த உஷ்ணத்தின் மூலமாக இறுகி அப்படியே உரு குறையாமல் இருக்கிறது என்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாராகிய ராமானுஜர் பிருந்தாவன வாசியாக இருப்பதால் அங்கு ‘தானான திருமேனி’யாக விளங்குகிறார்.

- T.M. ரத்தினவேல்

சாதகனின் ஆன்மிக வளர்ச்சிக்குத் தக்கவாறு தியான முறைகளும் மாறுபடும். அகமுக தியானத்திற்கு அருகதையுள்ள ஒரு நபர் தியானத்தை நேரடியாக ஆன்ம விசாரணையில் செலுத்தலாம். நினைப்பவன் இவ்வாறு தன் மூலத்தை நாடினால் வேறு நினைப்புக்கள் எழா.

நீ விரும்புவதை எல்லாம் ஈசன் உனக்காகச் செய்வார் என்று நம்பினால், நீ உன்னை அவரிடம் சம்பூர்ணமாக ஒப்புக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் அவரை சும்மா விட்டுவிடு! உன்னை நீ அறிந்துகொள்.

ஆண்டவனை சரணடைந்தோமெனில், நடப்பதெல்லாம் அவர் திருவுளமே என்று அமைதியாக இருக்க வேண்டும். எதானாலும் அதிருப்தியுறக் கூடாது. நமக்கென்ன தெரியும்? கஷ்டம் போலத் தோன்றினாலும், முடிவில் நன்மை உண்டாகலாம்.

ஈசனிடம் நம்மை முற்றிலும் ஒப்புவித்து, தொடர்ந்து ஈஸ்வர ஸ்மரணையுடன் இழைந்திருக்க வேண்டும். ஈசன் எவ்வாறு தன்னை நமக்கு உணர்த்துவாரோ அவ்வாறே நிகழ்விக்கப்படும் இவ்வாறு அவ்வாறென்று அவரைக் கேட்க நமக்கோர் உரிமை இல்லை.

தியானம் என்றால் என்ன? நினைப்பு ஏதுமற்று இருத்தலே தியானம் எனப்படுவது. ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடிவரும் எண்ணங்களே உமது மனத்தைக் கலக்குகின்றன. ஒரே ஒரு நினைப்பை மட்டும் விடாப்பிடியாய் எண்ணத்தில் இறுத்தி, அவ்வாறே ஒரே சிந்தனையுடன் தியானத்தில் ஈடுபட்டால் மற்ற நினைப்புக்கள் அகன்றுவிடும்.