அற்புதமான ஆன்மிகத் தொகுப்புஅனுமன் சிறப்பிதழ் ஏ-ஒன். சபரிமலைக்கு பத்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதற்கு ஹரிப்ரசாத் சர்மா அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்திருப்பது சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கர்வத்தை விட்டு மறுபரிசீலனை செய்வது நல்லது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

‘ஆஞ்சநேய வீரா, அனுமந்த சூரா’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த அனுமன் சுப்ரபாதமும் அதற்கான விளக்கங்களும் அருமை. மாருதி மைந்தனை மனமுருகி வழிபட வைத்த அற்புதமான ஆன்மிகத் தொகுப்பு.
- இரா.வளையாபதி. தோட்டக்குறிச்சி.

பக்திப் பரவசம் மிக்க சொக்கனின் பக்தித்தமிழ் படித்தேன். பார்க்கும் இடமெல்லாம் அந்த பரந்தாமனையும் அவனைப் பார்த்த பெண்ணும் அவள் தாயும் போல நாங்களும் உன்மத்தமானோம் என்பது உண்மை.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

உடல்நலம் பேண எங்கெங்கெல்லாமோ எப்படியெல்லாமோ சுற்றித்திரியும் நாம், மனநலம் காக்க மனதாற மனமுருகி வேண்டினால், பிரபஞ்ச டாக்டர் நம்மைத் தேடி வந்து மனதை செம்மைப்படுத்த அதனால் உடல் நலமும் சீராகும் என்கிற அற்புத கருத்தை அழகாக தெளிவாக தெரியப்படுத்திய பொறுப்பாசிரியருக்கு கோடி வந்தனம். அனுமனைக் கொண்டாடிய ஆறு கட்டுரைகளும் தேனாய் இனித்தன. ஆசானாய், அமைச்சனாய் விஸ்வரூபமெடுத்த அனுமன் நெஞ்சில் நிறைந்தார்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

உடல் நோய் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு எளிதில் தீர வழி எதிர்பார்க்கும் நாம் நம் உள்ள நோயைப் பகிர்ந்து கொள்ளாததற்கு ஈகோதான் காரணம் என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டியது, இறைவன் என்ற பிரபஞ்ச டாக்டரை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பாசிரியரின் தலையங்க கட்டுரை அருமை. வீணை வாசிக்கும் அனுமனுக்குப் பின்னாலிருக்கும் புராண தொடர்புகளை மிக அற்புதமாக ‘இசையில் வசமான சொல்லின் செல்வன்’ என்ற கட்டுரையில் மிகத் தெளிவாக ஓர் ஆய்வுக் கட்டுரையாக விளக்கியிருந்தார் கட்டுரை ஆசிரியர்.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

அனுமன் பக்தி ஸ்பெஷலில் அனுமனைப் பற்றிய விரிவான செய்திகள் ஆனந்தக் கூத்தாட வைத்தன. மார்கழி மாத ஸ்பெஷல் பிரசாதங்களை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூடிக்கொடுத்தவள் பாடி மகிழ்ந்தாள்; நானும் அவள் பாடலைப் பாடி மகிழ்கிறேன்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் அவதாரத் திருநாளுக்கு மகத்துவம் சேர்க்கும் வண்ணம் அனுமனின் சிறப்புகளை பறைசாற்றும் கட்டுரைகளை, படங்களைத் தந்து பிரமிக்கவைத்து விட்டீர்கள். அனுமன் சிறப்பிதழாகத் திகழ்ந்த ஆன்மிகம் பலன் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்படவல்லது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பிரபஞ்ச டாக்டர் கட்டுரை மனதிற்கு உடனடி நிவாரணம் தந்தது. அனுமன் ஸ்பெஷல் ஆன்மிக மழை பொழிந்தது. ஹரிபிரசாத் சர்மா தெளிவு பெற வைக்கிறார். பாராட்டுகள். ராசிபலன்கள் உள்ளதை உள்ளபடியே சொல்கின்றன. ஆன்மிக விருந்து படைத்த தங்கள் புத்தகத்திற்கு கோடி மலர்களைத் தூவி வாழ்த்துகிறேன்.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

அனுமன் சிறப்பிதழ் ஓர் அற்புத சிறப்பிதழ். யாரும் அறிந்திராத அனுமன் சுப்ரபாதம் எனும் ஸ்லோகத்தை பொருளுடன் கூறியிருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மார்கழி மாத பிரசாதங்களைப் படிக்கும் போதே நாவூறியது.
- கே.சிவகுமார், சீர்காழி.

உண்மை நிலையுணர்ந்தோர் அனைவரின் அனுபவமும் ஒரு தன்மையதே ஆகும். அதன் விளக்கங்கள் உண்மையை அபேக்ஷிக்கிற (நாடுகிற) ஆன்மிகரின் பக்குவ பேதத்தை அனுசரித்து மாறுபடக்கூடும்.