மனித நேயம் போற்றும் ஆன்மிக அனுபவம்‘நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், சித்தர்களாகவும், முனிவர்களாகவும், மகான்களாகவும் பல ‘அவதாரங்கள்’ மேற்கொண்டு மக்களின் பிணிகளைத் தீர்க்க வந்திருப்பது இந்தக் கலியுகத்தின் வரமாகும். அந்த மகான்களின் அமைவிடங்கள் பொதுவாக கோயிலின் சாந்நித்தியத்தைக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது. 

அந்தவகையில் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகளை தலைவராக ஏற்று இயங்கிவரும் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், பொதுவாக இறைப்பணி மட்டுமே ஈடேற்றும் ஒரு கோயிலைவிட மேம்பட்டு விளங்குகிறது என்பது ஆன்மிக அன்பர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த சமரச சன்மார்க்க சங்கம், இறைப்பணியோடு, பல பொதுப்பணிகளையும் மேற்கொண்டு சமுதாயத் தொண்டாற்றுகிறது. அவற்றில் முக்கியமானது  அன்னதானம்.

தனியொருவன் உணவின்றி இருந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கம், ஒரு தாயின் பாச உணர்வாக இந்த சங்கத்தில் நிரவியிருப்பதைக் காணலாம். ஆம், தினமும் இங்கே வருகை தரும் அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் அளித்து அவர்களைப் பசியாற்றி, அவர்களுடைய மனதில் இதம் பரப்புகிறார்கள். தம்மை நாடி வருபவர்கள் என்று மட்டும் அல்ல, அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று ஆங்காங்கே வசிக்கும் மக்களின் பசியை விரட்டுவதிலும் முன்நிற்கிறது ஸ்ரீ அகத்தியர் சமரச சன்மார்க்க சங்கம்.

இந்த ஓங்காரக் குடிலில் விளக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த விளக்கின் ஒளி அந்தப் பூஜையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உலகுக்குமே நன்மைப் பேரொளியாகப் படருவதுதான் இந்த சங்கத்தின் தனிச் சிறப்பு. 

பசுவதையைத் தடுப்பது இச்சங்கத்தின் இன்னொரு முக்கிய குறிக்கோள். வெறும் இலை, தழைகளை மட்டுமே தான் உட்கொண்டு நமக்கு சக்திதரும் பாலை வழங்கும் அந்தப் பசுக்கள்தான் எப்படிப் போற்றப்படவேண்டியவை! அனைத்து தெய்வங்களும் உறையும் காமதேனுவின் வாரிசாகத் திகழும் பசுக்களைப் பேணிக் காப்பதிலும் இச்சங்கம் பெரும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறது.

தற்காலத்திய பிரதான நோயான மன அழுத்தம், மனிதருக்குப் பலவகை உடல் நோய்களை உருவாக்குகிறது. அந்த அழுத்தத்தைப் போக்க தியானம் பழகும் பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன. அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தி ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் அனைத்துவகையான பரிசோதனைகளும் பொதுமக்களுக்கு நடத்தப்படுகின்றன.

வெகுவிரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் கல்விக்கூடங்களை ஸ்ரீஅகத்தியர் சன்மார்க்க சங்கம் நிர்மாணிக்க இருக்கிறது. முக்கியமாக இப்போதைய இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. வாழ்க்கையில் முன்னேற்றம் வெறும் படிப்பால் ஏற்படலாம். ஆனால் வாழ்க்கைத் தரம், நல்லொழுக்கத்தால்தான் மேம்படுகிறது. இதை வலியுறுத்தத்தான் அந்தப் பயிற்சி வகுப்புகள். மனித நேயத்தோடும், அறிவியல் அணுகுதலோடும் ஆன்மிகத்தை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் பரப்பிவருகிறது என்பது முற்றிலும் உண்மை.

- நடேசன்