விரும்பாதவனும், முடியாதவனும்!



அர்த்தமுள்ள இந்து மதம் - 24

‘முடியாதவனை மன்னித்துவிடு; விரும்பாதவனைத் தண்டித்துவிடு’ என்கிறது இந்துதர்மம். தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவனை சமுதாய விரோதி. ஆனால், அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்திற்குரியவன். நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன? ‘குறைந்தபட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள்’ என்பதுதான். செய்ய முடியாதா துரியோதனனால்? முடியும்; ஆனால், விரும்பவில்லை. அதன் விளைவே பாரதயுத்தம்.

அனுமனும், விபீஷணனும் உரைத்தபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க  முடியாதா, ராவணனால்? முடியும்; ஆனால், விரும்பவில்லை. அதன்விளைவே ராம-ராவண யுத்தம். ‘உன்னால் முடிந்ததைச் செய்’ என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்? ‘‘பெரிய விஷயத்தைச் செய்ய நினைத்தேன். முடியவில்லை’’ என்று வருந்திக் கொண்டிருக்காதே; ‘‘எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்’’ என்பது அதன் பொருளாகும்.

என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறதென்றால், எறும்பின் உடம்பு அதன் கையளவில் எட்டுச்சாண்தான். உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக் காவடிக்கோ, பிச்சைக்காரனுக்கோ போட்டுவிட்டுச் சாப்பிடுவது என்ற பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்குச் சொர்க்க வாசலைத் திறப்பான். இவரால் முடியும்; ஆனால் விரும்பவில்லை.

இந்து தர்மத்தில் இவருக்குரிய தண்டனை என்ன? வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தாரல்லவா? அதனால் இவர் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்குக் கல்யாணம் செய்திருப்பார். அது மலடியாகப் போய்விடும் அல்லது வாழா வெட்டியாகப் போய்விடும். ‘அறஞ்செய விரும்பு’ என்றார் ஒளவைப்பாட்டி.‘செய்’ என்று அவர் ஆணையிடவில்லை ‘விரும்பு’ என்றுதான் சொன்னார்.

காரணம், செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா! அவன் விரும்பினால்கூட போதும்; அதுவே கருணையின் பரப்பளவாகும். யூதர்களை மன்னித்திருக்க முடியாதா ஹிட்லரால்? போரின் நாசத்தைத் தடுத்திருக்க முடியாதா ஹிட்லரால்? முடிந்தும் அவன் விரும்பவில்லை. விளைவு...? மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ? அப்படியே இறைவன் அவனை நடத்தினான். வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால்கூட, அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கிறது.

வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைம்மாறாக ஒரு கவளச்சோறு உனக்குக் கிடைக்கிறது. ஆகவே விரும்பு; முடிந்தால் செய்; முடியாவிட்டால் விரும்பு. ‘விரும்பு’ என்ற உடனேயே தஞ்சாவூரைப் பார்த்து, இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக்கூடாதா என்று விரும்பாதே! அதன் பெயர் விருப்பமல்ல; ஆசை! விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக்கொண்டு அடுத்தவனுக்கு அரை ஏக்கர்கூடக் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்? வெறும் ஆறடிதான்! இந்து சம்பிரதாயத்தில் அதுகூடக் கிடையாது. ஆறடி நிலத்தில் மாறி மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள். இறைவன் தன்னுடைய விருப்பத்தைப் பூமியில் எப்படிப்  பரவலாக வைத்தான்? நீ சிந்தும் துளித் தண்ணீர், எறும்பு குளிக்கும் படித்துறையாகி விடுகிறது.

கழுதைக்கும் உணவாகட்டும் என்றுதான் காகிதத்தைக் கண்டுபிடிக்கும் அறிவை மனிதனுக்குக் கொடுத்தான். விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே! ‘நெல்’ என்று ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால், ‘சோறு’ என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்ேடாம். ‘இறைக்கின்ற கேணி ஊறும்’ என்று ஏன் கூறுகிறார்கள்? ‘கொடுக்கின்ற இடத்திலேதான் இறைவன் அருள் சுரக்கும்’ என்பதால்.

தேங்கிய நீர் தேங்கியே கிடந்துவிட்டால், நோய்களுக்கு அது காரணமாகிறது. தேங்கிய செல்வமும் தேங்கியே கிடந்துவிட்டால் பாவங்களுக்கு அது காரணமாகி விடுகிறது. இல்லாமை கொடுமையல்ல; இயலாமை குற்றமல்ல; விரும்பாமையே பாபமாகும். மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்துவிட்டால் ‘சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது? ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்திலிருந்து வாழ்ந்துகொண்டிருப்பதுபோலவும் இன்னும் ஆயிரம் ஆண்டு காலத்துக்கு வாழப்போவது போலவும் திட்டமிட்டே பொருட்களைப் பதுக்கி வைக்கிறான்.

குருட்டுப் பிச்சைக்காரனின் சட்டியில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு இருபது பைசா சில்லரை எடுப்பவனும் இருக்கிறான். செய்ய விரும்பாமையும் திருட்டுத்தனமுமே சமூகத்தைப் பாழ்படுத்துகின்றன. பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர், எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார். கணவனும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே!

மனக்கதவு அடைத்துக் கொண்டது; அதனால் வாசற்கதவும் அடைபட்டு விட்டது! கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப் போகிறதா என்றால் இல்லை. அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலேதான் அவரையும் எரிக்கப் போகிறார்கள். வெறும் பிரமை, மயக்கம், சகலமுமே நிலையாகி விட்டதுபோல் தனக்குள்ளே ஒரு தோற்றம்! இத்தகைய மூடர்களுக்காகவே இந்துமதம் நிலையாமையைப் போதித்தது. திரும்பத் திரும்ப, ‘நீ சாகப் போகிறாய், சாகப் போகிறாய்’ என்று சொல்வதன் மர்மம் இதுதான்.

நிலையாமையை எண்ணி விரும்பாமையைக் கைவிடு. உன்னைப்பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும்போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது. எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும். குறைந்தபட்சம் பரங்கியும் பூசணியுமாவது விளையும். நீ குறைந்தபட்சம் விரும்பி அதைச் செய்தால், அதுவே உன்னைப் பெரிய தோட்டக்காரனாக்கி விடும்.

மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும், திருஷ்டி படும் என்றும் இந்துக்கள் ஏன் சொல்கிறார்கள்? ‘பிறருக்குப் பகிர்ந்து உண்ணாமை பாபம்’ என்று அப்படிச் சொல்கிறார்கள். சரியோ தவறோ, செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும், செய்ய விரும்பாதவனுக்குச் செல்வத்தையும் வழங்கியிருக்கிறான் இறைவன். கடலிலே நீரை வைத்து அதைக் குடிக்க முடியாமல் ஆக்கியவனல்லவா அவன்! இதற்குக் காரணம் உண்டு.

ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் லீலை அது. அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாகத் தெரிகிறது. செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்துபோகிறது. அவனுடைய மரணமும் அப்படியே! செய்ய விரும்பி முடியாதவனுடைய நிலை முடிவில் நிம்மதியடைகிறது. காரணம், அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும். இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாகச் செத்ததும் இல்லை; அவன் சந்ததி அந்தச் செல்வத்தை அனுபவித்ததும் இல்லை. ஏன் பலருக்குச் சந்ததியே இல்லை!

ரத்தங்களின் யுத்தம்!

‘பரசுராமன் பரசுராமன்...’ என்று மூன்று முறை அழைக்கிறார் நீதிமன்றத்தின் டவாலி. அடுத்தாற்போல், ‘பரசுராமன் மகன் ரங்க ராஜன்’ என்று மூன்று முறை அழைக்கிறார். மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி. நீதிமன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக்கொள்கிறது. பாச அணுக்களால் ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி? ஆம், சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

தந்தையும் மகனும் மோதிக்கொள்வதும், அண்ணனும் தம்பியும் மோதிக் கொள்வதும் விபரீதமான நிகழ்ச்சிகளே. ஆயினும் எப்படியோ இவை நடந்துவிடுகின்றன. அன்பையும் பாசத்தையும் வலியுறுத்தும் இந்துமதம் தவிர்க்க முடியாத சில விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டுகிறது. உறவு ரத்தம் பகையாக மாறுவதே விதியின் வலிமை என்கிறது. என்னுடைய ரத்தம் மிகவும் மென்மையானது. உறவினருக்குச் சிறிது துன்பம் என்றாலும்கூட, என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டால்கூட பகை உணர்ச்சி எனக்கு வருவதில்லை. சில இடங்களில் உறவினர்கள் மோதிக்கொள்ளும் வேகத்தைப் பார்க்கும்போது எனக்குத் திகைப்பு ஏற்படும். ஐந்து ரூபாய் வித்தியாசத்துக்காக அப்பனும் மகனும் அடிதடியில்கூட இறங்கி விடுகிறார்கள். தகப்பனார் இறந்து கிடக்கிறார். அவரது ஐந்து பிள்ளைகளும் பிணத்தின் பக்கமே போகவில்லை; பெட்டகத்தை உடைத்துப் பணத்தைப் பங்குபோடத் துவங்குகின்றனர்.

அடிதடி அரிவாள் தூக்கும் வரையில் முன்னேறுகிறது. அவர்களது மனைவிமார்கள், உடனே இரண்டாவது போர்க்களத்தைத் துவங்குகிறார்கள். பிணம் இரண்டு நாட்கள் கிடந்து நாற்றம் எடுக்கிறது. இரவு பகலாகப் பங்காளிகள் சமாதானம் செய்கிறார்கள். கடைசியில், மூத்த பிள்ளை கொள்ளி வைப் பதற்குக்கூட,  பணம் கேட்கிறான். இறந்துபோனவனுக்காக ஒரு பிள்ளைகூட அழவில்லை. அவன் சம்பாதித்த சொத்தும், கொண்டுவந்த மருமக்களும் தந்தை மகன் என்ற புனிதமான உறவை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டன. - என் உறவினர் ஒருவர் வீட்டில் நான் கண்ட காட்சி இது.

ஒரு தந்தை நன்றாகச் சம்பாதித்தார். தனது நான்கு பெண்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். தனது இரண்டு பிள்ளைகளுக்கும் அழகான பங்களாக்களைக் கட்டிக் கொடுத்தார். பெரிய இடத்தில் பெண் எடுத்தார். பிறகு, தமக்கென்று கொஞ்சம் செல்வத்தை ஒதுக்கிக்கொண்டு, ஒரு கோயில் விடுதியில் கடைசிக் காலத்தைக் கழித்தார். மரணத் தருவாயில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கே மரணமடைந்தார். அவரது சடலத்தைத் தங்கள் வீட்டில் போட்டுத் தூக்க ஒரு பிள்ளையும் ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்களல்லவா குழந்தைகள்! என் வீட்டில் வேலைக்காரன் இறந்துபோனாலும், அந்தச் சடலத்தைக்கூட அலங்கரித்து என் வீட்டிலிருந்தே தான் தூக்கி அனுப்புவேன். அவனோ தந்தை; வீடும் அவன் கட்டிக்கொடுத்த வீடு; பெற்ற பிள்ளைகள் பிணத்துக்குக்கூட இடம் தரவில்லை. ‘நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது’ என்பார்கள். காரணம் பல ரிஷிகள் மனைவியராலும், பிள்ளைகளாலும் ஆனார்கள் என்பதால். ரத்தம் தண்ணீரைவிட கனமானது என்பார்கள்.

என்னுடைய கணக்கில் அது புஷ்பத்தைவிட மென்மையானது. என் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லையென்று கேள்விப்பட்டால் என் உடம்பிலிருக்கும் ரத்தம் முழுவதும் தலைக்கு ஏறுகிறது. ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. ஆனால், சிலரது ரத்தம் இரும்பைவிடக் கனமாக இருக்கிறது. இரும்பைப்போல் அது துருப்பிடித்துப் போகிறது. உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும் உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.

மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சமஅளவில் தேடித்தரும் உறவு. மனைவி உறவு. அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும், அதைத்தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது. ஆனால், பிறப்பிலும், உடன்பிறப்பிலும், மனித அறிவுக்கு வேலையே இல்லை. அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது.

பின் ஏனங்கே பகை வந்து, பாசம் சாகிறது? அதைத் தெளிவாகக் கண்டுகொள்ள வேண்டு மென்றால் மீண்டும் நாம் ‘பகவத்கீதை’க்குள்ளேதான் நுழைய வேண்டும். பாரதப்போரில் உறவுகள் ஒன்றையொன்று எதிர்க்க வேண்டி வந்தது. இத்தனைக்கும் சிற்றப்பன், பெரியப்பன் பிள்ளைகள்தான். உடன்பிறந்த அண்ணன் தம்பிகள்கூட அல்ல! அதிலும் அர்ச்சுனன் மயங்கி விழுகிறான் - பாவம் அவன் என்னைப்போல. பார்த்தனின் சாரதி பரந்தாமன் அவனைத் தூக்கி நிறுத்துகிறான்.

தவிர்க்க முடியாத அந்த யுத்தத்திற்கான நியாயங்களைக் கூறுகிறான். ஒருவன் மனம் முழுக்கக் கல்லாகிவிட்ட பிறகு அவனைப்பற்றிய உறவு முறைகளை மறந்துவிட வேண்டும் என்கிறான். ஒரு சகோதரனின் கழுத்தை இன்னொரு சகோதரன் அறுக்க முயன்றால், அதைத் தடுப்பதற்கு அவன் கையையாவது வெட்ட வேண்டி வருகிறதே! விருப்பத்திற்கு விரோதமான இந்த வினைக்கு விதியைத்தவிர, வேறு எந்தக் காரணத்தைக் கூறமுடியும்? இது ‘தற்காப்பு’ என்ற தலைப்பில் அடங்கும்.

இருவருமே ஒருவர் கழுத்தை ஒருவர் அறுக்கத் துணிந்துவிட்டால், அந்தக் கேள்விக்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும். பிறப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, அதன் நோக்கத்திற்கு ஒரு சட்டத்தையும், அந்தச் சட்டத்திற்குச் சில செக்‌ஷன்களையும், இறைவன் விதித்திருக்கிறான். பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு செக்‌ஷனை வழங்கியிருக்கிறான். சில பிறப்புகள் பந்த பாசத்தினால் உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன் நிர்ணயித்திருக்கிறான்.

அதை அவன் நிர்ணயித்ததால்தான், அவனே கண்ணன் வடிவில் அதற்கு நியாயத்தைக் கற்பிக்கிறான். ‘‘அர்ச்சுனா, கொலை செய்வது பாவம் என்றா நீ மயங்குகிறாய்? இல்லை, அப்படித்தான் நீ என்ன கொலையே செய்யாதவனா? ஏற்கெனவே பல போர்களில் பலரைக் கொன்றவன் நீ. இங்கே ஏன் மயங்குகிறாய்? எதிரே நிற்பவர்கள் யாரென்று பார்த்ததும் உனக்கு மயக்கம் வருகிறது இல்லையா?’’ - என்று கேட்கிறான். பாவம் அர்ச்சுனன்!

சிருஷ்டிகர்த்தா, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஒரே மாதிரியான குணத்தைக் கொடுக்கவில்லை. ஒரு ரத்தத்தை மலராகவும், ஒரு ரத்தத்தை இரும்பாகவும் படைத்தான். இரும்பு எழுந்து நின்றாலும்கூட மலர் துவண்டு விழுகிறது. வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களையுமே, சில குடும்பங்களில் இப்படி க்ராஸ் போட்டு வைத்திருக்கிறான் இறைவன். அந்த க்ராஸ் இறைவனாலேயே விழுந்தது என்று கண்டுவிட்டுக் கொடுக்கும்படி புஷ்பங்களை வேண்டிக் கொள்கிறது இந்துமதம்.

இரண்டு கைகளையும் தட்டினால்தானே சத்தம் வருமென்று, மென்மையான கையை அது அப்புறப்படுத்துகிறது. ‘வன்செயலில் ஈடுபடும் கை தன் கருமத்தின் பலனை அனுபவிக்கும், என்று போதிக்கிறது. பின் ஏன் பரமாத்மா அர்ச்சுனனை மட்டும் கொலை புரியத் தூண்டினான்? ஒரு காடு அழிந்தால்தான் ஒரு வயல் உருவாகும் என்ற நிலை அங்கேயிருந்தது. நான் வைத்த மரங்கள், நான் வளர்த்த மரங்கள் என்று பார்த்துப் பார்த்து மயங்குவதில் பயனில்லை.

அவற்றைவிடப் பயனுள்ள தானியங்களுக்காக அவற்றை அழிப்பது முறையே. அங்கே நியாயம் தேவையைப் பொறுத்தது. அப்படி இன்றியமையாத தேவை வரும்போது ரத்தங்களுக்குள் யுத்தம் வரலாம்; நீதிமன்றத்து டவாலியும் மூன்று முறை கூப்பிடலாம். ஆனால், மிகமிக இன்றியமையாத கட்டங்களைத்தவிர மற்ற நேரங்களில், மென்மையான உறவுகள் விட்டுக்கொடுத்துப் போவதையே இந்துமதம் வலியுறுத்துகிறது.

தகப்பன்தான் இறந்துபோய்விட்டானே, தம்பிக்கு என்ன ஆட்சியென்று ராமன் சிங்காதனத்தில் போய் உட்கார்ந்திருந்தால் யார் கேட்டிருக்கப் போகிறார்கள்? கைகேயியின் கைகளில் விலங்கு மாட்டி, பரதனையே பாதுகாப்பாகக் காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதுவும் ஒரு கதையாகத்தான் இருந்திருக்கும்! அப்படி ஆகியிருந்தால், ஸ்ரீராமன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக ஆகியிருக்க மாட்டார்; அயோத்தி இன்னொரு பங்ளாதேஷ் ஆகியிருக்கும்.

ராமன் பரதனுக்கு விட்டுக்கொடுக்க, பரதன் ராமனுக்கு விட்டுக்கொடுக்க - விட்டுக் கொடுப்பதிலேயே ஒரு நாகரிக சம்பிரதாயத்தை உருவாக்கியது ராமாயணம். ஒரு நாற்காலி இருக்குமிடத்தில் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தால், ஒருவரைப் பார்த்து ஒருவர் ‘நீங்கள் உட்காருங்கள்’ என்று சொல்வது நாகரிகமா?

ஒருவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுத்தான் போய் உட்காருவது நாகரிகமா? விட்டுக் கொடுப்பது தவறில்லை; அது யுத்தத்தைக் தடுக்கிறது; ரத்தத்தைக் காப்பாற்றுகிறது. இதில் நாம் இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒன்றுதான் - ‘‘இறைவா. இனிமேலாவது தொட்டுக் கெடுக்கும் உறவுகளைத் தராதே; விட்டுக்கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு!’’

(தொடரும்)

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600017.


ஏதோ பிற்காலத்தில் என்ன நேரிடுமோ, ஐக்கிய பாவம் எவ்வாறு இருக்குமோ என்றெல்லாம் இப்போது சிந்திப்பானேன்? ‘‘நான் இருக்கிறேன்’’ என்பது எல்லோர்க்கும் ஒப்பாம். எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், உண்மையான ஆர்வமுடையோர் முதலில் இந்த ‘நான்’ என்பதை என்னவென்று காணட்டும்.

ஆன்ம ஒளியால் விளங்கும் அற்பமதி, அந்த ஆன்மாவின் தன்மை இன்னதென்று தீர்மானிக்கப் புகுவது துரஹங்காரம் (தகாத துணிவு) அல்லவா? புத்தி ஆன்மாவைச் சென்றடையாமல் ஆன்ம-அனுபூதி நிலையின் தன்மையை உணர முடியாது.

ஜீவன் ஒருவனாக இருந்தும், பிராணன், மனம், இந்திரியங்கள் என எத்தனை சக்தி விசேஷங்கள் அவனிடம் இருக்கின்றன! அவ்வாறேதான் ஒன்றாம் பரம்பொருளின் பற்பல சக்தி விசேஷங்களைப் பல தேவதைகளாக வேதசாத்திரங்கள் கூறுகின்றன.

ஆன்மாவை நீங்கள் உடலோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளலாம் என்றால், பக்தன் அவ்வான்மாவை அருணாசலத்துடன் சம்பந்தப்படுத்தலாகாதா என்ன?

நம் நிஜ ஸ்வரூபத்தை நன்கு உணர்ந்தால் நாமே பிரளயத்திலும் அழியாதவர் ஆவோம் எனில், ஈச்வராதியரைப் பற்றிச் ெசால்லவும் வேண்டுமா?

பரம் என்றால் எதையும் சார்ந்திராதது, சார்புகளுக்கு அப்பாற்பட்டது, அதாவது பரிபூரணமானது.