அடக்கமாயிருத்தலும் ஒரு நாகரிகமே!



குறளின் குரல் - 51

அடக்கத்தை மிக உயர்ந்த பண்பாகப் போற்றுபவர்கள் நாம். எவ்வளவு உயர்ந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அடக்கத்தோடு இருந்தால்தான் பெருமை பெறுவார்கள். அடக்கமற்றவர்களைப் பண்பாடற்றவர்கள் என நம் மரபு புறக்கணிக்கிறது. அடக்கமுடைமை என்ற உயர்ந்த குணத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் வள்ளுவப் பெருந்தகை அந்தத் தலைப்பிலேயே ஒரு தனி அதிகாரம் படைத்திருக்கிறார். (அதிகாரம் 13.)

அடக்கம் என்ற போற்றத்தக்க குணத்திற்கு உதாரணமாக வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞர் யார்? வேறு யார், வள்ளுவரே தான்! மதச் சார்பற்று ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களைப் படைத்து நீதிநெறிகளைப் போதிக்கும் வள்ளுவர், ஓர் இடத்தில் கூட தன்னைப்பற்றி கர்வமாக ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமானதல்லவா? வள்ளுவரின் அடக்கத்திற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

`அடக்கம் அமரருள் உய்க்கும்அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்!’
 
அடக்கம் என்ற உயர் பண்பு ஒருவரை வானளவு உயர்த்தும். தேவர்களில் ஒருவராகவே கூட மாற்றும். ஆனால் அடங்காமை என்ற குணக்கேடு இருக்கிறதே, அது அவனை இருளில் தள்ளி விடும்.

`காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.’

அடக்கம் என்ற உயர் பண்பினைத் தன்னிடமுள்ள உயர்ந்த பொருளாக எண்ணி எல்லோரும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அடக்கம் என்ற அந்தப் பண்பைத் தவிர உயிருக்கு நன்மை தருவது வேறு எதுவுமில்லை.
 
`செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.’
 
அறியத் தக்கவற்றை அறிந்து ஒருவன் முறையாக அடக்கத்தோடு வாழ்ந்தால், அந்த அடக்கம் அவனுக்கு மிகுந்த சிறப்பைத் தரும்.
 
`நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.’

தன் நிலையிலிருந்து மாறாமல் அடக்கத்தோடு வாழ்பவனின் தோற்றம் மலையை விடவும் உயர்ந்ததாகப் போற்றப்படும்.

`எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து! ’
 
பணிவுடன் வாழ்தல் என்பது எல்லோருக்கும் நன்மையைத் தரும் ஒன்றுதான். ஆனால். செல்வர்களுக்கோ அது மேலும் செல்வம் பெற்றதைப் போன்ற உயர்வைத் தரும். நம் பாரத தேசத்துத் துறவியரிலேயே புத்த பெருமான் முற்றிலும் வித்தியாசமானவர். உண்மைத் துறவியருக்குச் செல்வம் இருப்பதும் ஒன்றுதான். இல்லாததும் ஒன்றுதான். பொருட்செல்வத்தைப் பொருட்படுத்தாமல் அருட்செல்வத்தைத் தேடுபவர்கள் அல்லவா ஆன்மிகவாதிகள்? செல்வத்தை நாடாதவர்க்குச் செல்வத்தால் என்ன பயன்?
 
துறவியரான மகான் ஸ்ரீராகவேந்திரர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் தம் பூர்வாசிரம வாழ்வில் கடும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தவர்கள். வறுமையின் விளிம்பிலே வாழ்ந்தவர்கள். ஆனால், புத்த பெருமான் அப்படிப் பட்டவர் அல்லர். மாபெரும் செல்வந்தராக வாழ்ந்தவர் அவர். காரணம் அவர் அரச மரபைச் சார்ந்தவர். துறவியாக ஆகாதிருந்தால் அரசராக நாட்டை ஆளக்கூடிய அந்தஸ்தில் இருந்தவர்.
 
அப்படிப்பட்ட அவர் `பசி, மூப்பு, சாக்காடு` ஆகிய மூன்று விஷயங்களை நேரில் கண்டு சிந்தனை வயப்பட்டார். வாழ்வின் நிலையாமையை உணர்ந்தார். துன்பத்திற்குக் காரணம் என்ன என்ற உண்மையைக் கண்டுணர வேண்டித் தவத்தில் ஈடுபட்டார். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற பேருண்மையைக் கண்டறிந்தார். உலகம் போற்றும் புத்த பெருமானாக மலர்ந்தார். போதி மரத்தடியில் தவம் செய்து தாம் கண்டறிந்த ஞானத்தை உலகிற்கு போதித்தார் அவர்.
 
துறவியான பின்னர் தம் பழைய செல்வந்த நிலை பற்றிய எண்ணமே இல்லாமல், இல்லந்தோறும் சென்று பிச்சையெடுத்து அதில் கிடைத்த உணவை அவர் உண்டார் என்பதே அவரது உண்மைத் துறவு நிலையின் அளவுகோல். மாபெரும் செல்வந்தராக இருக்கும் பேறு இருந்தும் அதனைத் துறந்து மிகுந்த அடக்கத்தோடு வாழ்ந்ததால் அல்லவா அவர் துறவரசராகப் பெரும்புகழ் பெற்றார்?

பட்டினத்தாரைத் தொடர்ந்து சென்றான் மன்னன் பத்திரிகிரி. ஒருகணத்தில் மன எழுச்சி பெற்று, தன் நாட்டை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அனைத்துச் செல்வத்தையும் துறந்து தம் குருவின் பின்னே அடக்கத்தோடு சீடனாய் நடந்தானே? அவனது அடக்கம் அல்லவோ அவனுக்கு பட்டினத்தாருக்கும் முன்பாக முக்தியைப் பெற்றுத் தந்தது? அடக்கம் என்பது செல்வந்தர்களுக்கு மேலும் ஒரு செல்வம் போன்றது என்ற வள்ளுவர் வாக்கு உண்மைதானே?
 
இன்றும் சில செல்வந்தர்கள் கொடை வள்ளல்களாகத் திகழ்வதோடு மிகுந்த அடக்கத்தோடு தென்படுவதையும் பார்க்கிறோம். அதன் காரணமாகவே அவர்கள் மக்கள் செல்வாக்கோடு விளங்குவதையும் காண்கிறோம். செல்வந்தர்களுக்கு அடக்கம் என்ற குணம் ஓர் அழகிய ஆபரணம்போல் மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.

`கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.’

சினத்தை அடக்கிக் கல்வி கற்று எவனொருவன் அடக்கத்தோடு வாழ்கிறானோ அவனையே அறம் தேடிவரும். அடக்கம் பலவகைப்பட்டது. நாவடக்கம், புலனடக்கம் போன்றவை அவற்றில் சில. நாவடக்கம் மனித வாழ்வில் ஒருவன் உயர்வதற்கு மிகவும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. வாய்க்குள் பற்களாகிய முப்பத்திரண்டு படை வீரர்களின் பாதுகாப்போடு குடியிருக்கும் நாக்கு தன் அடக்கத்தை விட்டுவிட்டால் விபரீதங்கள் விளையும்.

`யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.’
 
எதைக் காக்கவில்லையென்றாலும் நாவைக் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறார், வள்ளுவர். அப்படிக் காக்காவிட்டால் சொல்லால் குற்றம் ஏற்பட்டு அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் ஆழ நேரும்.

`ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.’
 
நாவைக் காக்கவில்லை என்றால் நாவிலிருந்து தீச்சொல் புறப்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு தீய சொல்லால் ஏற்படும் தீமையானது முன்புள்ள அத்தனை நன்மைகளையும் ஒரே கணத்தில் தீயதாக மாற்றி விடும்.

`தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.’
 
நெருப்பினால் ஏற்பட்ட புண்ணானது உள்ளேயும் புறத்தேயும் ஒருசேர ஆறி விடும். ஆனால், நாவினால் சுட்டு அதனால் ஏற்படும் மனப் புண்ணானது ஒருபோதும் ஆறாது. நாவிலிருந்து எழுந்த சொற்களால் பாதிக்கப்பட்டவனின் உள்ளத்தில் என்றென்றும் வடுவாய் அந்தப் புண் நிலைத்து இடம்பெற்றுவிடும். நாவை அடக்கினால் மட்டும் போதாது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் அடக்க வேண்டியது அவசியம். அவை தறிகெட்டுத் தவறான வழியில் அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

`ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து! ’
 
தன் உறுப்புக்களை ஓட்டுக்குள் அடக்கும் ஆமையைப்போல ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வானானால் அது ஏழு பிறவிகளிலும் அவனுக்கு நன்மை தரும். முற்றாத கதிர்தான் நிமிர்ந்து நிற்கும். முற்றிய நெற்கதிர்கள் தலைசாய்ந்து வணங்கும். அறிவு வளர வளரப் பணிவு வரவேண்டும். குறைகுடங்கள் கூத்தாடும். ஆனால், நீர் நிரம்பிய நிறைகுடங்கள் தளும்புவதில்லை. மனமுதிர்ச்சி உள்ள பெரியோர்கள் அடக்கத்தோடுதான் திகழ்வார்கள்.

உண்மையில் சொல்லப் போனால் அடக்கம்தான் அறிவு முதிர்ச்சியின் அடையாளம். பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி நிலைத்த புகழ்கொண்ட கம்ப நாட்டாழ்வார், அவரது இலக்கிய மேதைமைக்காக இன்றளவும் உலக இலக்கியப் பேரறிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப் படுகிறார். அழியாப் பெருமை பெற்ற அவரது தமிழ்க் காவியத்தைப் பாராட்டாதார் இல்லை. மாற்றுச் சிந்தனை கொண்ட நாத்திக அறிஞர்களும், ஆன்மிகவாதியான கம்பனின் பாட்டுப் பெருமையை மதித்துப் போற்றியிருக்கிறார்கள்.
 
ஆனால் அந்த மாமேதை கம்பன், தன்னை மிக மிக எளியவனாகச் சித்திரித்துக் கொள்கிறான். ராமாயணம் என்ற பாற்கடலை ஒரு பூனை குடிக்க நினைப்பதைப் போல், ஆசைகாரணமாகவே தான் தமிழில் ராமாயணம் எழுத முற்படுவதாகக் கூறுகிறான் அவன்.

`ஓசைபெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசில் கொற்றத்து ராமன் கதைஅரோ! ’
 
சென்ற நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள் பலர் தங்களைப் பற்றி எழுதிக் கொள்ளும்போது நாயேன் என்றும் அடியேன் என்றும் எழுதிக் கொள்வார்கள். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தன்னைத் தொண்டர் அடிப்பொடி என்றே அழைத்துக் கொண்டார். இறைச் சக்தியின் அரசாட்சியில் மானிடர் எத்தனை மகத்தானவராக இருந்தாலும் எளியவர்களே என்கிற ஆழ்ந்த எண்ணம் அவர்களிடம் இருந்தது. என்றேனும் ஒருநாள் கட்டாயம் இறக்கப் போகிற மனிதன் ஆணவம் கொள்வதில் எந்தப் பொருளுமில்லை என அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

கர்வம் என்ற உணர்வு அடிப்படையிலேயே அவர்கள் மனப்போக்கில் சற்றேனும் இல்லாதிருந்தது. கம்பனின் வாழ்க்கை வரலாற்றைக் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற தலைப்பில் நாடகமாக்கியவர் பிரபல சிறுகதை எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் மரணப் படுக்கையில் இருந்த நேரம். சில நாட்களில் அவர் காலமாகிவிடுவார் என்பதை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போது தம் உற்ற நண்பர் அழகிரிசாமியைச் சந்திக்கச் சென்றார் எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி.
 
தன்னைக் கண்களில் கண்ணீர் மல்கப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நா.பா.வையே சற்றுநேரம் உற்று நோக்கிய அழகிரிசாமி, மெல்ல தன் தலையணையின் கீழிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். அதை நா.பா. கையில் கொடுத்தார். பிறகு நா.பா.விடம் சொன்னார்: `நான் என்னென்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்ற பட்டியலை இந்தக் காகிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

நான் காலமான பிறகு இந்த நூல்களின் ஆசிரியர் காலமானார் என்றுமட்டும் பத்திரிகைகளில் குறிப்பு வந்தால் போதும். மற்றபடி என்னை வானளாவப் புகழ்ந்து பத்திரிகைகளில் அஞ்சலிக் குறிப்பு வருவதை நான் விரும்பவில்லை! அப்படியெல்லாம் மிகைப் புகழ்ச்சி வெளிவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்!’ இறந்த பிறகுகூட தன்னைப் பற்றி அளவுக்கு மீறிய புகழ்ச்சிகள் சொல்லப்படுவதை விரும்பாத அழகிரிசாமி எங்கே? மேடைமேடையாகத் தங்களைப் பற்றித் தாங்களே கர்வமாகப் பேசிக்கொள்ளும் இன்றைய சில எழுத்தாளர்கள் எங்கே?்

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்


இறைவன் மிக மிகக் கருணையுடன் நமது பூர்வோத்தரங்களை நம்மிடமிருந்து மறைத்துள் ளான். இப்போது உதிக்கும் நினைப்புகளே பற்பல துன்பங்களை விளைவிக்கின்றன. சென்றகால, வருங்கால விஷயங்களும்கூடச் சேர்ந்தால் துன்பம் சகிக்கவொணாததாகிவிடும்.

சாவைப் பற்றி விசாரிப்பதேன்? தினந்தோறும் தூக்கத்தில் என்ன நேர்கிறது என்று பார்க்கலாமே? உறங்கும்போது நமது அனுபவம் யாது?

இரு விழிப்பு நிலைகளுக்கிடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது சாவு. இரண்டும் தற்காலிகமே.

‘நான்’ என்னும் நினைப்பின் எழுச்சியே பிறப்பு; அதன் ஒடுக்கமே இறப்பு.