ராமனுக்கு சபரி இலந்தைப் பழம் கொடுத்தது ஏன்?நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் எவ்வளவு விரைவாக நடந்து முடிய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வோம். பலரின் சிபாரிசுகளுக்கு முயற்சி செய்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முயற்சி பலனளிக்காவிடில் சலிப்பு கொள்வது, முயற்சியைக் கைவிடுவது போன்ற எதிர்மறை செயல்களைத்தான் செய்வோம். இன்னும் சிலர் இறைவனையே நிந்திக்கவும் செய்வர்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து ‘காலக்கெடு’வைப் பற்றி துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த ‘ராம’ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஜபித்த சபரி’ என்னும் பெண்மணி போற்றுதலுக்குரியவள். எட்டு வயது சிறுமி சபரிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. வேடுவளான காட்டுவாசி சபரியின் தந்தை மற்றும் காட்டுவாசிகள் புடை சூழ சபரியின் வீட்டில் விருந்து அமர்க்களப்படுகிறது.

விருந்துக்காக கொண்டுவரப்பட்ட ஆயிரம் ஆடுகளைக் கண்டு அதிர்ந்து போனாள் சபரி. அந்த சின்னஞ்சிறு சிறுமியின் உள்ளத்தில் கருணை ஊற்றெடுத்தது. ஆடுகளை வெட்டி விருந்துண்ண வேண்டாம் என மன்றாடினாள். ஆனால், சிறுமியின் குரல் எவர் காதிலும் விழவில்லை. ஆடுகள் வெட்டப்படுவதை காண விரும்பாத அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். கால்போன போக்கில் நாராயண மந்திரத்தை உச்சரித்தபடியே நடந்தவள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மதங்க மஹரிஷியின் ஆஸ்ரமத்தை வந்தடைந்தாள்.

வந்தவள் களைப்பு மிகுதியால் ஆஸ்ரமத்தின் நுழைவாயில் அருகில் உறங்கிப் போனாள். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்துவிடும் சபரி மறுநாள் விரைவில் எழுந்து முன்தினம் கண்ட கங்கைக் கரைக்குச் சென்றாள். கங்கை செல்லும் வழி நெடுகிலும் கல்லும் முள்ளும் இருக்கக் கண்டு அவையனைத்தையும் அப்புறப்படுத்தி, பின் நீராடச் சென்றாள்.

கங்கைக்கரைக்கு வரும் வழி நெடுகிலும் மிகவும் சுத்தமாக இருப்பதைக் கண்ட மதங்க மஹரிஷி, தன் சீடர்களிடம் விசாரித்தார். ஒரு சிறுமி முன் இரவில் ஆஸ்ரமம் வந்து, வாசல் அருகில் உறங்கியதையும், பின் கங்கை செல்லும் வழியை சுத்தப்படுத்தியதையும் தற்போது கங்கையில் குளித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கங்கைக் கரையை அடைந்த மஹரிஷி, சிறுமி சபரி குளித்துவிட்டு நாராயண மந்திரத்தை ஜபித்தபடி நின்று கொண்டிருந்ததை கவனித்தார். அச்சிறுமியை கண்ட மாத்திரத்தில், பின்னால் நடக்கப் போவதை அவர் தீர்க்கதரிசனமாக அறிந்தார். ஸ்ரீமன் நாராயணன் அடுத்து எடுக்கப் போகும் ஸ்ரீராம அவதாரத்தில், இச்சிறுமியின் வயது முதிர்ந்த காலத்தில் தானே வந்து தரிசனம் அளிக்கப் போவதைக் கண்டார். அச்சிறுமியின் பாக்யத்தை எண்ணி மெய் சிலிர்த்தார். கரையேறிய சபரியை மஹரிஷி அழைத்தார். ‘மகளே... நீ யாரம்மா...?’

‘ஆச்சார்ய ரிஷி முனிவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள். நான் காட்டுவாசி வேடுவனின் மகள். என் பெயர் சபரி. தீண்டத்தகாதவளான நான் உங்கள் ஆஸ்ரமம் என்று அறியாது களைப்பு மிகுதியால் உறங்கி விட்டேன். என்னை தாங்கள் மன்னித்தருள வேண்டுகிறேன்’ என்றாள் சபரி.

‘குழந்தாய்! நாங்கள் செய்த பாக்யத்தால் நீ இந்த ஆஸ்ரமத்திற்கு வந்துள்ளாய். நீ இனி இந்த ஆஸ்ரமத்திலேயே தங்கலாம்! பகவான் ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரிக்க உள்ளார். அந்த ஸ்ரீராமன் உன்னைத் தேடி இவ்வாஸ்ரமத்திற்கு வந்து தரிசனம் தருவார். ஸ்ரீராம தரிசனம் கிடைக்கப் பெறும்வரை நீ ‘ஸ்ரீராம’ என்று ராமநாமத்தை ஜபித்து வருவாயாக..!’’ என்று உளங்கனிந்து சொன்னார்.

‘‘ஆச்சார்ய குருவே, மிக்க நன்றி. தங்கள் கட்டளைப்படி நடப்பேன்! என்னை ஆசிர்வதியுங்கள்.’’ ‘‘மங்களமுண்டாகட்டும் குழந்தாய்!’’ என்று அவளை ஆசிர்வதித்தார் மஹரிஷி. அதுமுதல் சிறுமி சபரி ராமநாமத்தை இடைவிடாது ஜபித்து வந்தாள். சபரியைக் காணாது அவள் தந்தை அவளைத் தேடி ஆஸ்ரமத்திற்கே வந்துவிட்டார். தன் மகள் அங்கிருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தார். சபரியின் இஷ்டப்படியே ஆடுகள் அனைத்தையும் விடுவித்து விட்டதாகவும், வீடு திரும்பும்படியும் கேட்டுக்கொண்டார்.

மதங்க மஹரிஷி, சபரியின் பெருமையை அவள் தந்தைக்கு உணர்த்தி, அவள் ஆஸ்ரமத்திலேயே இருக்கட்டும் என்று கூற, அவள் தந்தை ஆச்சரியப்பட்டு சபரியை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். சபரிக்கு மிகவும் பிடித்த பழம் இலந்தைப்பழமாகும். ஆஸ்ரமத்திலிருந்து வெகு தொலைவில் இலந்தை மரக்காடுகள் இருந்தன. தினந்தோறும் அங்கு சென்று கூடை நிறைய பழங்களைக் கொண்டுவந்து தானும் உண்டு ரிஷிகுமாரர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வாள்.

காட்டிலுள்ள இலந்தை மரங்களில் மிக ருசியான பழக் கொட்டைகளை தேர்வு செய்து, மதங்கரிஷி ஆஸ்ரமத்தை சுற்றி அக்கொட்டைகளை விதைத்தாள். சபரியின் வருகைக்குப் பிறகு ஆஸ்ரமமே ஒளி பெற்றது. காலம் உருண்டோடியது. மதங்கரிஷி சமாதி எய்தினார். எட்டு வயது சிறுமி, என்பதைக் கடந்து முதியவளாகி விட்டாள் சபரி. இன்னமும் ராம நாமத்தை விடாது உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள் ஒரு ரிஷிமுனி சபரியிடம், ‘அன்னையே, தாங்கள் அனுதினமும் ஜபிக்கும் ஸ்ரீராமன் சூர்ய குலத்தில் அவதரித்து, பால பருவத்தில் விஸ்வாமித்திர ரிஷியுடன் சென்று, அவருக்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்து, பின்னர், சிவதனுஸை இரண்டு துண்டுகளாக்கி, ஜனக மஹாராஜாவின் புத்ரி சீதையை மணந்து, பட்டாபிஷேக வைபவத்திற்கு முன்பு சிறிய தாயாரின் உத்தரவை ஏற்று வனம் சென்றார்.

வனத்தில் அரக்கன் ராவணன், சீதாதேவியை கவர்ந்து சென்று விட்டான். சீதையைத்தேடி தென்முகமாக வந்து கொண்டிருக்கும் ஸ்ரீராமன், தற்சமயம் நம் ஆஸ்ரமத்துக்கு அருகாமையில் உள்ள வனத்தில் இருப்பதாக அறிகிறோம். நம் ஆச்சாரியார் கூறியபடி ஸ்ரீராமன் நம் ஆஸ்ரமம் தேடிவரும் வேளை நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது,’’ என்று கூறி நெகிழ்ந்தார்.

சபரியின் கண்களில் கண்ணீர். ஸ்ரீமன் நாராயணனை மஹாலக்ஷ்மியோடு சேவிக்க கற்றுக் கொடுத்திருந்தார் அவளுடைய தந்தை. ஆனால், ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ராமன் வரும்போது சீதாதேவி இல்லாமலா அவரை சேவிப்பது, என்று வேதனையடைந்து தன் குருவை பிரார்த்தித்தாள். ஆஸ்ரமத்து வாசலில் இலந்தை மரங்களில் பழங்கள் ஏராளமாக இருந்தன. அவையும் ஸ்ரீ ராமனின் வருகைக்கு காத்திருக்கிறதோ?

மறுநாள் வழக்கம்போல கங்கையில் குளிக்கச் சென்றாள். குளித்து கரை ஏறியதும் ரிஷிகுமாரர் ஒருவர் ஓடிவந்து ஸ்ரீராமன் ஆஸ்ரமம் வந்துள்ளதாகவும், சபரிக்காக காத்திருப்பதாகவும் கூறினார். முதியவளான சபரியின் நடையில் வேகம் கூடியது. சபரி ஆஸ்ரமத்துள் நுழையும்போதே, ஸ்ரீராமபிரான் ஓடிவந்து, அவளைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு அமரச் செய்தான். ஆஸ்ரமத்து வாயிலில் பழுத்து தொங்கிய இலந்தை பழங்களை இரண்டு கைகளாலும் அள்ளி வந்த சபரி, அதை அப்படியே ஸ்ரீராமன் கையில் கொடுத்து அவனை வலம் வந்தாள்.

ஸ்ரீராமனின் காலடியில் விழுந்து சேவித்தாள். ‘‘பிரபோ, என் குருவின் வாக்கு இன்று பூர்த்தியானது. அவர் எனக்கு உபதேசித்த ராம நாமத்தால் உன் தரிசனம் கிட்டியது. ஸ்ரீராமா, உன்னை தனியாக சேவிக்க என் மனம் இடந்தரவில்லை. என் தந்தை ‘மஹாலக்ஷ்மியோடுதான் ஸ்ரீமன் நாராயணனை சேவிக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் குரு சொன்னபடி, ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய ஸ்ரீராமா, சீதாதேவி இன்றி நான் எப்படி சேவிப்பது என்று குழம்பினேன்.

என் குருநாதர் எனக்கு அறிவுறுத்தியபடி ‘பத்ரி’ என்றால் இலந்தை. இலந்தைப் பழமோ மகாலட்சுமி ஸ்வரூபம். ஆகவேதான் உன் கையில் இலந்தைப் பழத்தைக் கொடுத்து சீதாதேவியோடு என் ராமனை நான் சேவிக்கிறேன். என் தந்தையின் விருப்பமும் என் குருநாதரின் ஆசியும் உன்னை மகிழ்வோடு சேவிக்க பிராப்தமாயிற்று. ஸ்ரீராமா, சீதையைப் பிரிந்துவிட்டோமே என்று துயர் கொள்ள வேண்டாம்.

இங்கிருந்து சற்றே தொலைவில் வானரப் படைகளின் மஹாராஜாவான சுக்ரீவன் இருக்கிறார். அவருடைய உதவியோடு சீதை உங்களிடம் திரும்ப வருவாள். சீதை உன் அருகில் இருக்க பட்டாபிஷேகம் சிறப்பாய் நடக்கும். இது உறுதி’ என்று கூறினாள். புன்னகையோடு அவளுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமன் சபரியிடமிருந்து விடைபெற்றான். ஸ்ரீராமனைக் கண்ட மகிழ்ச்சியில் இன்னமும் உத்வேகத்தோடு ராம நாமத்தை ஜபிக்க ஆரம்பித்தாள் சபரி.

சபரி, ஸ்ரீராமனிடம் தனக்கு ‘முக்தி’ கொடு என்று கேட்கவில்லை. ஏனெனில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி இறைவனைத் தொழுவது மட்டுமே நம் கடமை என்று அவள் தந்தை உபதேசித்திருக்கிறார். ஸ்ரீராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. ஏனெனில் அவளிடம் இருக்கும் ‘ராம நாமமே’ எதையும் பெற்றுத் தந்துவிடும் என்று அறிவார்.

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 96 கோடி முறை ராம நாமத்தைக் கூறி, ஸ்ரீராமனின் தரிசனத்தை ஒரு கணம் காணப்பெற்றார். சபரி, ஸ்ரீராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதசேம் பெற்று ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே ராமநாமத்திற்காக அர்ப்பணித்தாள் என்றால் அது மிகையல்ல.

- கே. அம்புஜவல்லி, நவி மும்பை

யார் இறந்தாலென்ன? யார் ஒழிந்தாலென்ன? நாம் இறந்து நாம் ஒழிந்திருக்க வேண்டும். அவ்வாறு (அகந்தையொழிந்து) ஆன்மாவோடு ஒன்றிவிட வேண்டும். அதுவே பரிபூரண அன்பு நிலை.

எப்போதும் நிரந்தரமாய் உள்ளதே சத்தியம். அதற்கு வடிவம் இல்லை. பெயர் இல்லை. நாமரூபங்கள் அனைத்திற்கும் அதிஷ்டானம் (ஆதார அம்சம்) அது.

நாம ரூபங்கள் கொண்ட உலகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது; மரித்துப் போகிறது. ஆகவே. அவ்வுலகம் உண்மையல்ல எனப்படுகிறது. அந்தப் பெயர்களையும், வடிவங்களையும் ஆன்மாவுடன் இணைத்து வரையறை செய்வது உண்மையல்ல, கற்பனையே ஆகும்.

தூய உணர்வைத்தானே நாடுகிறோம்? அது எங்கே வெளியிலா இருக்கிறது? நமக்குள்ளேதானே அதை நாட வேண்டும்? அதனாலேயே, ‘உள்ளே பார்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.