மரங்களில் குடியிருந்த பறவைகள் இனி எங்கே போகும்?



மன இருள் அகற்றும் ஞானஒளி - 11

வர்தா புயல் துணி துவைப்பதுபோல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளை பெரும்பாடு படுத்திவிட்டது. சூறைக்காற்றின் வேகம் தாங்காமல் மூத்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்துவிட்டன. பவர்கட். கும்மிருட்டு வீட்டில் அமர்ந்தபடி கரெண்ட் எப்போது வருமோ என ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தேன். அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் ரம்யஸ்ரீ ‘‘அப்பா கரண்ட் சீக்கிரம் வரும் கவலைப்படாதீங்க’’ என்று ஆறுதல் சொன்னாள்.

கூடவே, ‘ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்துவிட்டனவே. அவற்றில் குடியிருந்த பறவைகள் இனி எங்கு செல்லும்? பொதுவாக மரங்கள்தானே அவற்றின் இருப்பிடம்?’ என்று மனசு உடைந்து கம்மிய குரலில் அவள் கேட்டபோது ஒரு கணம் ஆடிப்போனேன். அடுத்தவேளை சாப்பாட்டிற்கும் அடுத்த கட்டமான வேலைகளுக்கும் தயாராகும் மனநிலையில்தான் பெரும்பாலோர் இருக்கிறோம்.

மரங்கள் இனி இல்லை என்றால் அந்த இனிய சப்தங்களை, ஓசை நயங்களை, தேன் இசைகளை கொடுக்கிற பட்சிக் கூட்டங்களான குருவிகள் காக்கைகள் மற்றும் பல உயிரினங்களின் நிலைமை என்ன? அவை எங்கே செல்லும் என்று என்னிடம் தொடர்ந்து விரிவாகக் கேட்டாள்.

‘சரி, இந்த மரம் இல்லாவிட்டால் அடுத்த மரத்திற்கு போகலாம் என்றால் அந்த மரமும் வேரோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடக்கிறதே, என்னப்பா வழி?’ என்று கேட்டவளுக்கு சரியான பதில் சொல்ல முடியாமல், ‘இப்படிப்பட்ட உணர்வை உனக்கு இறைவன் வழங்கியிருக்கிறானே இதுவே உயர்ந்த நிலை’ என்றேன். அடுத்தவர் துயர் பற்றி நினைப்பதும் அதற்கு கைமாறாக ஏதாவது செய்வதும் உண்மையான இறைதேடலின் ஒரு பகுதிதானே! இறைவனுடைய படைப்பில் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கிறது.

எல்லாவற்றையும் உருவாக்கி வளர்த்து, வளர்த்து பின் அழிப்பதெல்லாம் அவன் செயல்தானே! இறை உணர்வு என்பது இதயம் ஈரமாவதில்தான் தொடங்குகிறது. அறிவின் தேடலைவிட இதயத்தால் இரங்குகிற கருணை உள்ளத்தைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பரவசப்பட்டு பாடியிருப்பாரோ மகாகவி பாரதியார்? எந்தச் சூழ்நிலையிலும் இறைவன் நம்மை கைவிட மாட்டான் என்று உறுதிகுலையாத நம்பிக்கை நமக்கு வரவேண்டும் திடபக்திக்கும் அஞ்சாத நிலைக்கும், திருவாசகம் படைத்த மாணிக்கவாசகர் வாழ்விலே ஒரு அற்புத நிகழ்ச்சி.

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனுக்கு முதலமைச்சராக இருக்கிறார் மாணிக்கவாசகர். மன்னன்தன் படையில் சேர்த்துக்கொள்ள குதிரைகளை வாங்கி வருமாறு அவரைப் பணிக்கிறான். இவரும் புறப்படுகிறார். ஆனால் இவர் சிந்தையெல்லாம் சிவன்தானே குடிகொண்டு இருக்கிறார்! நாட்கள் சென்றன. குதிரைகள் வந்தபாடில்லை. மன்னன் ஆணைப்படி சேவகன் வந்து வாசகரிடம் விசாரிக்கிறான். அவனிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வருமென்று போய்ச் சொல் என்று சூளுரைக்கிறார் மணிவாசகர்.

ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. குதிரை வாங்கவேண்டிய பணத்தில் சிவபெருமானுக்கு அற்புதமான ஆலயத்தை கட்டமைக்கிறார். சுற்றத்தார்கள், ‘குதிரைகள் வாங்கவில்லையே மன்னவனின் கோபத்திற்கு ஆளானால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். மணிவாசகரின் அற்புதமான பதிலாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது:

இறக்கினும் இன்றே இறக்குக என்றும்
இருக்கினும் இருக்குக வேந்தன்
ஒறுக்கினும் ஒறுக்க உவகையும் உடனே
ஊட்டினும் ஊட்டுக வானில்
சிறக்கினும் சிறக்க கொடிய தீ நரகஞ்
சேரினுஞ் சேருக சிவனை
மறக்கிலம் பண்டை பழவினை விளைந்தால்
மாற்றுவார் யாரென மறுத்தார்.

‘என்ன வந்தாலும் அது சிவன் செயல். நாம் எதற்கு கவலைப்பட வேண்டும்? எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்ளப் போகிறான்.!’ரொம்பவும் அதீத நிலை இது. ஆண்டவன் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி. இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய பக்தி மேலீட்டால் ஈசனோடு இரண்டறக் கலந்தவர், திருக்காளத்தி கண்ணப்பனைக் குறிப்பிட்டு, ‘கண்ணப்பனுக்கு ஒப்பதோர் பக்தி உண்டா?’ என்று கேட்டு மெய்சிலிர்க்கிறார்.

என்ன ஒரு அடக்கம்! இந்த அடக்கமானது ஆண்டு அடங்கிய பெருமக்களுக்குத்தான் இயல்பாக வரும். எல்லோருக்கும் வந்துவிடாது. அடக்கம் என்பது இங்கே பலருக்கும் அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் வருகிறது என்பார் வலம்புரிஜான். இயற்கைப் பேரழிவு நம் வாழ்வாதரங்களையே முடக்கிப்போட்டு விடுகிறது. அதனால்தான் சுனாமியாக இருந்தாலும் கடும்புயலாக இருந்தாலும் அதைப் பேரிடர் என்கிறோம். இடர் என்றால் துன்பம்.

பேரிடர் என்றால் சொல்லில் அடங்காத பெருந்துன்பம். இங்குதான் புத்தர் நம் மனக்கண்முன் வருகிறார். முதன் முதலில் உயிர்க்கொலைப் பற்றி பேசியவர் புத்தர்தான். திருவள்ளுவரும் அறங்களில் சிறந்தது கொல்லாமை என்று கூறுகிறார். மாறாக உயிர்களைப் பேணுதல் வேண்டும். உயிர்க்கொலை பாவச் செயலாகும். அதுவும் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் மனிதநேயத்தோடு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். ஆழ்ந்த பக்திகூட ஒருவகை அன்பின் வடிவம்தான்.  

வைணவத்தில் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்துவிடு. உன்னுடையது என்று எதுவும் இல்லை. நான், எனது என்பதற்கே இங்கு வேலை இல்லை. உலகம் நிலைத்திருக்கும் ஆனால் உலகத்தில் உள்ள எதுவும் நிலைத்து இருப்பது இல்லை. நிலையாமையை உணர்ந்தவனே பேரறிவாளன். சரணாகதி தத்துவப் பாசுரமாக திருமங்கையாழ்வார்,

‘‘தானுடைக் குரம்பை பிரியும்போது உந்தன்
சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனடைக் கமலத் திருவினுக்கரசே
திரைகொள் மாநெடும் கடல் கிடந்தாய்.’’
- என்று பாடுகிறார்.

இறைவனின் திருவடியே பற்றுக்கோடு என்று அடைக்கலம் புகுந்து தன்னை காத்துக்கொள்ளும் கடமை தன்னிடம் இல்லை. அது இறைவனைச் சார்ந்தது என்கிற திடமான கருத்தை முன் வைக்கிறார். தொண்டரடிப் பொடி ஆழ்வார்,

‘‘ஊரில்லேன்; காணியில்லை உறவு
மற்று ஒருவரில்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன்
பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே
கதறுகின்றேன்
யார் உளர் களைகண் அம்மா.
அரங்கமா நகருளாளே.’’
-என்று நெகிழ்ந்து உருகுகிறார்.

உன்னைவிட்டால் எனக்கு நாதி இல்லை நீதான் எனக்கு புகலிடம் என்று திடமாக நம்புகிறார்.

-ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

அகந்தையை மறுத்து அதை நிர்மூலம் செய்து சுட்டெரித்தால் நீ பந்தத்திலிருந்து விடுபடுவாய். அகந்தையை ஏற்றுக் கொண்டால் அது உனக்குத் தளைகளை ஏற்படுத்தி அவற்றை மீறும் வீண் முயற்சிகளை உண்டாக்கும்.

மேடைப் பிரசங்கங்களாலும், உலகாயத உதவிகளாலும் வெளிமுக முயற்சிகளாலும் சாிதக்க முடியாத பேருதவியை மகான்கள் தமது கம்பீரமான மௌன நிலையில் இடையறாது செய்து கொண்டேயிருக்கிறார்கள்.