அசுரகுருகொள்ளையோ கொள்ளை!

சின்ன வயதிலேயே பெற்றோரை இழக்கும் விக்ரம் பிரபு, நண்பன் ஜெகனுடன் தங்குகிறார். அதிபுத்திசாலியான விக்ரம் பிரபுவின் தொழில் திருட்டு. ஜெகன் போலீஸ்.
நண்பன் சட்ட விரோத செயலில் ஈடுபட்டாலும் அதற்கு உடந்தையாக இருக்கிறார் ஜெகன். அதன்படி ஓடும் ரயிலிருந்து பல கோடி, ஓடுகிற காரிலிருந்து சில கோடி, சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகச்  சுருட்டுகிறார் விக்ரம்பிரபு.

கொள்ளைக்கான நோக்கம் என்ன? நண்பன் செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்தும் ஜெகன் உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? கொள்ளையடித்த பணத்தை விக்ரம் பிரபு என்ன செய்தார்? காவல் துறை இதைக் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதே இந்த ‘அசுரகுரு’.

கொள்ளையடிப்பது, காதல் செய்வது, சண்டை போடுவது என்று எந்த ஏரியாவைத் தொட்டாலும் அதை ஜஸ்ட் லைக் தட் எனுமளவுக்கு கச்சிதமாகச் செய்கிறார் விக்ரம்பிரபு. திருடுவதற்கும், சண்டைபோடுவதற்கும் பயப்படாதவர் காதலி கைவிட்டுவிட்டுப் போய்விடுவாரோ? என்று கலங்கி நிற்கும் காட்சியில் அன்னை இல்லத்துக்கு பெருமை சேர்க்கிறார்.

நாயகி மகிமாவுக்கு அதிரடியான வேடம். நாயகிக்கு ஸ்பேஸ் உள்ள படம் என்பதால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். புல்லட் ஓட்டுவது, சிகரெட் பிடிப்பது என்று ‘எனக்கே எனக்கா’ என்பது போன்று சில காட்சிகள் வரும் இடத்தில் பட்டையைக் கிளப்புகிறார். மகிமா பிடிப்பது புகையாக இருந்தாலும் அது பகையாகத் தெரியவில்லை.

விக்ரம்பிரபுவின் நண்பராக வரும் ஜெகன் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். போலீஸாக வரும் குமரவேல், சுப்புராஜ், நாகிநீடு ஆகியோரும் சிறப்பு. டீக்கடைக்காரராக வரும் யோகிபாபு நன்றாகவே சிரிக்க வைக்கிறார். துப்பறியும் நிறுவன உரிமையாளராக வரும் ஜே.எஸ்.பி. சதீஷ் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது. அவருடைய முடிவு அனுதாபத்தை அள்ளுகிறது. நாயகன் கொள்ளையடிப்பதற்கான நோக்கத்தை  இன்னும் கூட வலுவாக காண்பித்திருக்கலாம். விக்ரம்பிரபு மகிமா நம்பியாரிடம்  சிகரெட்டை விட்டுவிடு என்று கேட்கும் காட்சி கவிதை.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் சந்துபொந்து இடங்களிலும் கேமரா கோணங்களால் சாகசம் புரிந்துள்ளார். கணேஷ்ராகவேந்திராவின் இசையும் சைமன் கே.கிங்கின் பின்னணி இசையும் நன்று. பணத்தாள்களால் செய்யப்பட்ட அறை, கலை இயக்குநர் சரவணனுக்கு பெயர் வாங்கிக்
கொடுக்கிறது.

இயக்குநர் ராஜ்தீப் விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகள், அளவான கேரக்டர்ஸ் என்று நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் விக்ரம்பிரபு அசுரத்தனமாகப் பாய்ந்திருக்கிறார்.