இது குடும்பமல்ல.. கூட்டம்!



46 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டுக்குடும்பம், விவசாயத்தில் விளையாடும் டெக்னாலஜி என்று, ‘ராஜவம்சம்’ என்கிற தன் முதல் படத்திலேயே அதிரடியாக களம் இறங்குகிறார் கதிர்வேலு. இயக்குனர் சுந்தர்.சியின் பள்ளியில் இருந்து வந்திருக்கும் புதிய மாணவரான இவர், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு ரிலாக்சாக இருந்தார். அவரிடம் பேசினோம்.

“உங்க முதல் படத்துலேயே நட்சத்திரக் கேரக்டர்களின் எண்ணிக்கை அரை சதத்தைத் தொட்டிருக்கே?”

“இவ்வளவு பேரையும் எப்படி ஒருங்கிணைப்பு செய்தீர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்கின்றனர். நான் பாடம் கற்றுக்கொண்ட பள்ளிக்கூடம் அப்படி. சுந்தர்.சி இயக்கிய எல்லாப் படங்களிலும் மிகப் பெரிய நட்சத்திரக்கூட்டம் இருக்கும். அவரிடம் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம்தான், நட்சத்திரங்களை எப்படிக் கையாள்வது? யாரிடம் எப்படி நடந்துகொள்வது என்று எனக்கு கற்றுக்கொடுத்தது.

 அனைத்து நட்சத்திரங்களும் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், இந்தக் கதையை துணிச்சலுடன் இயக்க ஆரம்பித்தேன். என்றாலும், ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், ஒருங்கிணைத்தபிறகு எல்லோரும் ஒரே குடும்பமாக மாறி, ஒவ்வொருவரும் இதை
தங்கள் சொந்தப் படமாக நினைத்து உழைத்தனர். அதேநேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷன் இல்லாமல் ஜாலியாகவும் பணியாற்றினர். அடுத்து, இப்படத்தின் ஹீரோ சசிகுமாருக்காகவே பலர் கதை கேட்காமல் ஒப்புக்கொண்டு நடிக்க வந்தனர்.”

“சசிகுமார் படமென்றாலே இப்படித்தான் இருக்குமென்று ஓர் எண்ணம் ரசிகர்களுக்கு ரிலீஸுக்கு முன்பாகவே வந்துவிடுகிறதே?”“ஆமாம். அதை நான் பாசிட்டிவ்வாகத்தான் பார்க்கிறேன். சசிகுமார், சராசரித் தமிழனை சினிமாவில் பிரதிபலிக்கும் நட்சத்திரம். மற்ற படங்களில் சசிகுமாருக்கு என்று ஒரு குடும்பம் இருக்கும். இதில் அவருக்கு கூட்டுக்குடும்பம் இருக்கிறது. அப்பா, அம்மா, மற்றும் ஐந்து அண்ணன்கள், ஐந்து அண்ணிகள், ஏழு தாய்மாமன்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் என்று, மொத்தம் இருபத்தேழு பேர் கொண்ட மிகப் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை அவர்.”
“இதிலே சசிகுமாரின் லுக், முந்தைய படங்களைவிட கொஞ்சம் வித்தியாசமா இருக்கே?”

“முந்தைய படங்களில் பெரும்பாலும் அவர் கிராமத்தில் வாழ்பவராக இருந்தார். இதில் ஐடி கம்பெனியில் டீம் லீடராக வருகிறார். கொஞ்சம் ஸ்டைலிஷாகக் காட்டியிருக்கிறோம். சண்டைக் காட்சிகளில் முரட்டுத்தனம் இருக்காது. சசிகுமாருடன் ஐடி கம்பெனியில் பணியாற்றும் நிக்கி கல்ராணி, திடீரென்று சசிகுமாரை காதலிப்பார்.

அவர்களுடைய திருமணம் கிராமத்தில் நடக்கும். நகரத்தைச் சேர்ந்த பெண்ணான அவர், கிராமத்து சம்பிரதாயங்களை எப்படி ஏற்றுக்கொள்கிறார்? முடியாத நிலையில் சசிகுமார் எப்படி அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பது போல் இருவருக்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால், டூயட் கிடையாது. முத்தக்காட்சி கிடையாது. கட்டிப்புடி வைத்தியம் கிடையாது. அவ்வளவு ஏன், ‘ஐ லவ் யூ’ என்றுகூட சொல்ல மாட்டார். ஆனால், அவர்களுடைய காதல் மிகவும் இயல்பாக இருக்கும்.”“படம் எதை வலியுறுத்துது?”

“அருகிவரும் கூட்டுக் குடும்ப முறையின் அவசியத்தை வலியுறுத்துது. தற்போது நாம் இழந்து கொண்டு இருக்கும் அற்புதம் இது. தனித்துவிடப்பட்ட மனிதர்களாலும், கட்டுப்பாடற்ற சுதந்திரத்தாலும்தான் குற்றங்களும், மனநோயாளிகளும், தற்கொலை களும் பெருகி வருகிறது. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

கூட்டுக்குடும்பத்தில் ஒரு பெண் பதினைந்து நிமிடத்துக்கு மேல் செல்போனை நோண்டிக்கொண்டு இருந்தால், உடனே அதை ஐந்து பேராவது கண்டித்து புத்திமதி சொல்வார்கள். ஆனால், அதே பெண் தனியாக வாழ்ந்தாள் என்றால், அதைக் கேட்க ஆள் இல்லாமல் இருபத்து நான்கு மணி நேரமும் செல்போனையே நோண்டிக்கொண்டு இருப்பாள்.

இதுதான் பல்வேறு பிரச்னைகளின் தொடக்கத்துக்கு ஆரம்பப்புள்ளி யாக அமையும். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காகத்தான் ஒரு ஆண் ஓடியாடி சம்பாதிக்கிறான். அந்த ஓட்டத்தில் பணத்தை மட்டும் சம்பாதித்துவிட்டு, தன் குடும்பத்தை அவன் இழந்துவிடுகிறான். மீண்டும் கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற விஷயத்தை இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது.”

“குடும்பம் மட்டும்தான் கோர் மெசேஜா?”

“இல்லை. இரண்டாவது விஷயமும் இருக்கு. அது, டெக்னாலஜி. இன்றைய நவீன டெக்னாலஜியின் காரணமாக இயற்கை அழிந்து வருகிறது, விவசாயம் பாதிப்படைகிறது என்று புலம்புகிறோம். ஆனால், இந்த டெக்னாலஜியை கையில் வைத்துக்கொண்டுதான் மேற்கத்திய நாடுகள் விவசாயத்தையும், இயற்கையையும் பாதுகாக்கிறது. அதை ஏன் நாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் இப்படம் பேசுகிறது. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் அனைவரையும் இவ்விஷயங்கள் சிந்திக்க வைக்கும்; தங்கள் கிராமத்து உறவுகளைத் தேடிச் செல்லவைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.”

- மீரான்