கிரிக்கெட் படம் எடுக்கிறார் போஸ் வெங்கட்!‘கன்னிமாடம்’ வெற்றிக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்துக்கு ரெடியாகியுள்ளார் இயக்குநர் போஸ் வெங்கட். பெயரிடப்படாத இந்தப் படத்தை மூவ் ஆன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகனாக ‘உறியடி’ விஜயகுமார் நடிக்கிறார்.
அப்பா வேடத்தில் பசுபதி நடிக்கிறார். ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.  ஒளிப்பதிவு இனியன் ஜே ஹாரிஸ். இசை ஹரி சாய். தயாரிப்பு பி.மகேந்திரன், பி.பாலகுமார்.

கொரோனா நோய் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் லொக்கேஷன் பார்க்க புறப்பட்ட இயக்குநர் போஸ் வெங்கட்டிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.
“என் முதல் படமான ‘கன்னிமாடம்’ படத்தில் என்னுடைய நிஜ வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை படமாக்கியிருந்தேன்.

இப்போ எடுக்கப் போற படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்த கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் நடக்கிறது. கிரிக்கெட் எனக்கு பரிச்சயமான விளையாட்டு என்பதால் இந்தப் படத்தை யதார்த்தமாக சொல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்று கணிப்புகள் சொல்கிறது. அந்த கணிப்புகளைப் புறந்தள்ளி, நீர், ஊர், போர் இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு சொல்லும் படமாக இருக்கும். படத்தில் அப்பா- மகன் சென்டிமென்ட் இருந்தாலும் இந்தப் படத்தை காமெடி படமாக வகைப்படுத்தலாம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். காரைக்குடியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.டைரக்‌ஷன், நடிப்பு எனக்கு இரு கண்கள் மாதிரி என்பதால் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். ‘டாணாக்காரன்’ படத்தில் முக்கியமான வேடம் பண்ணியிருக்கிறேன். அதன்பிறகு எந்தப் படத்தையும் கமிட் பண்ணவில்லை.

‘கன்னிமாடம்’ ஹிட்டுக்குப் பிறகு கோலிவுட் இயக்குநர்கள் பார்வை என்மீது அதிகமாக வீழ்ந்துள்ளது. முன்னணி இயக்குநர்கள் விரைவில் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொல்லியுள்ளார்கள். இயக்குநர் மிஷ்கின் ‘கன்னிமாடம்’ படத்தை வெகுவாகப் பாராட்டியதோடு அடுத்த படத்தில் சேர்ந்து வேலை செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

- எஸ்