கடலூரிலிருந்து ஒரு தேசிங்கு ராஜா!



மல்லுவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களாக இருந்தாலும், அங்குள்ளவர்கள் கோலிவுட்டில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் அப்பா மம்மூட்டியைத் தொடர்ந்து மகன் துல்கரும் தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ‘ஓக்கே கண்மணி’ படத்தில் தன்னுடைய என்ட்ரியை ஆரம்பித்தவர், இப்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் வந்து நின்றுள்ளார்.

யாருமே எதிர்பாராத வேளையில் வெளியாகி ஹிட்டடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. படத்துக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பால் மகிழ்ச்சியிலிருந்த தேசிங்குவிடம் பேசினோம்.


“உங்க பேரே கம்பீரமா இருக்கே?”

“ராஜா தேசிங்கு ஆண்ட செஞ்சிதான் பிறந்த ஊர். மண் மீதுள்ள பாசத்தாலும் தேசிங்கு ராஜா மீதுள்ள மரியாதையாலும் எனக்கு இந்தப் பெயரை பெற்றோர் வைத்தார்களாம். நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா அரசு ஊழியர். அம்மா ஹோம் மேக்கர். எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா இருக்கிறார்கள்.”

“சினிமாவுக்கு எப்படி?”

“பிறந்தது செஞ்சியாக இருந்தாலும் வளர்ந்தது கடலூரில். சினிமாவுக்கு பரிச்சயமில்லாத ஊர். கடலூர்காரர்கள் சினிமாவில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே நான் ரஜினி சார் ரசிகன். ஸ்கூல் படிக்கும் போதே பள்ளி நாடகங்களில் ஆர்வம் காட்டுவேன். ஒருகட்டத்தில் என்னுடைய எதிர்காலம் சினிமா என்று முடிவானாலும் நடிக்கப் போகிறேனா, டைரக்‌ஷன் பண்ணப்போகிறேனா என்று தெரியாமல் இருந்தேன். ‘டைட்டானிக்’ படம் பார்த்ததும் டைரக்டராகணும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சினிமாவுக்கு ரிலேட்டடாக இருக்கும் என்று விஸ்காம் படிக்க நினைத்தேன். வீட்டில் ஜாப் கியாரண்டிக்கு ஏத்த மாதிரி பி.எஸ்ஸி. சயின்ஸ் கோர்ஸ்ல சேர்த்துவிட்டார்கள். கட்டாய திருமணம் போன்றதுதான் என்னுடைய படிப்பு. படிக்கும் போது ஷார்ட் பிலிம், எடிட்டிங் என்று சினிமா சார்ந்த வேலைகளில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு உடன் பிறந்தவர்கள் எனக்காக வீட்டில் பேசினார்கள். அதன்படி என் லட்சியத்தை நோக்கி சென்னை வந்தேன். நண்பர்கள் சினிமா முயற்சிக்கு உதவியாக இருந்தார்கள்.”

“உங்களுடைய முதல் படத்தை பாதியிலே விட்டு விட்டீர்களாமே?”

“பாதியில் என்று சொல்ல முடியாது. அந்தப் படத்தை ஆரம்பத்திலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ‘தேசாந்திரி’ என்ற அந்தப் படம்தான் என்னுடைய முதல் படமாக வர வேண்டியது. ஒரு ஐ.டி.ஊழியர் புல்லட்டில் லே, லடாக் என்று மலைப் பிரதேசங்களை சுற்றி வருவதுதான் கதை. கலைப் படமாக வர வேண்டிய அந்தப் படம் ஒரு படைப்பாளியின் பார்வையில் நல்ல படமாக இருந்திருக்கும். ஆனால் தயாரிப்பாளரின் பார்வையில் அது தவறான படமாக இருந்திருக்கும்.

ஏனெனில் அது வருமானத்துக்கான படமாக இருந்திருக்காது என்று எனக்கே தோன்றியது. அதுமட்டுமில்லை. சினிமாவில் என்னுடைய வழிகாட்டியான இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் சாரிடம் அதன் டிரைலரை காண்பித்தேன். அவர் விஷுவல்ஸ் பார்த்துவிட்டு இதில் உன்னுடைய உழைப்பு தெரிகிறது. இந்த முயற்சி ஒரு படைப்பாளியாக உனக்கு மன நிறைவு தரலாம். ஆனால் ஆடியன்ஸுக்கு இந்த உழைப்புக்கு பின்னால் இருக்கும் வலி தெரியாது. அப்படி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று சினிமாவைப் பற்றிய சில உண்மைகளைப் புரிய வைத்தார். சுமார் ஐந்து வருட உழைப்பு அது.

மில்டன் சார் சொன்னால் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்து அந்த முயற்சியைத் தூக்கி வைத்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தை த்ரில்லர் படமாக எடுக்க கதை தயார் செய்து வைத்திருந்தேன். பண்ண ஆரம்பிக்கும்போது அந்த சாயலில் ஒரு ஹாலிவுட் படம் வந்தது. தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க அந்தப் படத்தை இயக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.”
“சினிமாவை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?”

“சினிமா பார்த்துதான் சினிமா கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் குறும்படங்கள் நிறைய பண்ணினேன்.  அதில் சினிமா கொஞ்சம் புரிந்தது. ‘நில் கவனி செல்’, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ போன்ற குறும்படங்கள் எனக்கு வரவேற்பை பெற்றுக்கொடுத்ததோடு சிறந்த இயக்குநருக்கான தங்க மெடலையும் வாங்கிக் கொடுத்தது.

மில்டன் சாரிடம் கதைவிவாதங்களில் கலந்துகொண்ட அனுபவம் நிறைய இருக்கிறது. அவரிடம் போன பிறகுதான் எனக்குள் கிரியேட்டிவிட்டி வளர்ந்தது. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன். சென்னை வந்த புதுசுல ‘நீ வேணும்டா செல்லம்’ என்ற படத்தில் வேலை செய்துள்ளேன். மற்றபடி சொல்லுமளவுக்கு யாரிடமும் சினிமா பயிலவில்லை. அதுதான் என் தாமதத்துக்கும், தனித்துவத்துக்கும் காரணமாக நினைக்கிறேன்.”

“துல்கரை எப்படி பிடிச்சீங்க?”

“தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் சாரிடம் துல்கர் கால்ஷீட் இருந்தது. அவர்தான் என்னை துல்கரிடம் அனுப்பி வைத்தார். கொச்சின் சென்று இரண்டு மணி நேரம் விரிவாக கதை சொன்னேன். கதை சொல்லி முடிக்கும் வரை துல்கரிடமிருந்து எந்தவித ரியாக்‌ஷனும் வரவில்லை. கடைசியாக டாட்டூ காட்சி சொல்லும்போதுதான் மெலிதாக சிரித்தார். புறப்படும் சமயத்தில் ‘பதில் அப்புறம் சொல்றேன்’ என்றார். அவருடைய ரியாக்‌ஷன், கதை பிடிக்கவில்லையோ என்று எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது. நல்ல வேளை... அடுத்த நாள் அவரிடமிருந்து கால் வந்தது. ‘நாம் சேர்ந்து பண்ணலாம்’ என்றார்.”

“துல்கர் எப்படி?”

“இந்த பதிலை சொல்வதால் மற்ற நடிகர்கள் எப்படி நினைப்பார்கள் என்று தெரியவில்லை. துல்கர் சக நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுப்பார். சில சீன்களில் ரக்‌ஷன் ஸ்கோர் பண்ணுவது மாதிரி இருக்கும். அதை அனுமதித்தார். இந்த மாதிரி எத்தனை நடிகர்கள் அனுமதிப்பார்கள் என்று தெரியவில்லை. துல்கரிடம் இன் செக்யூர் ஃபீல் இருக்காது. அவர் காட்சிகள் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கும்.

மம்மூட்டி மகனாக இருந்தாலும் தலைக்கனம் இல்லாதவர். அவருடைய சொந்த முயற்சியால்தான் அவர் புகழ் அடைந்துள்ளார். அப்பாவின் நிழல் படமாதலால்தான் அவர் இந்த இடத்துக்கு வந்துள்ளார். தனிப்பட்ட விதத்தில் சக நடிகர்கள் மீது கேர் எடுத்துக்கொள்வார். ரக்‌ஷனை தன் தம்பியாகவே பார்த்துக்கொண்டார்.

சினிமா மீது பேஷன் உள்ளவர். சினிமா கிராஃப்ட் அறிந்தவர் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் படம் பண்ணுகிறார். இவை அனைத்திலும் தமிழில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறார்.”

“கெளதம் வாசுதேவ் மேனனை இயக்கும்போது பதட்டம் இருந்ததா?”

“கதை எழுதும்போது கெளதம் சார் இடத்தில் எஸ்.ஜே.சூர்யா இருந்தார். ஆனால் அவர் ‘இறைவி’க்குப் பிறகு ஹீரோவாக பண்ண ஆரம்பித்ததால் தவிர்த்துவிட்டார். அர்ஜுன், மாதவன், மைக் மோகன், விஜய் சேதுபதி ஆகியோரிடமும் கதை சொன்னேன். ஆனால் என் மைண்ட்ல கெளதம் சார் பண்ணினால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. அப்போது அவர் நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பதில் கிடைக்க தாமதமானது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகுதான் சம்மதம் சொன்னார்.

கெளதம் சாரை இயக்கும்போது பயம் சுத்தமா இல்லை. அனுபவத்தில் மூத்தவராக இருந்தாலும் தோள்மீது கைபோட்டு பேசுவார். முதல் நாளே எனக்குள் இருந்த தயக்கத்தை உடைத்துவிட்டார். படப்பிடிப்புக்கு ஒரு நடிகராகத்தான் செட்டுக்கு வருவார். என்னுடைய டீம்  மெம்பர்ஸ் பண்ணும் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து பாராட்டுவார். நாங்கள் ‘மைக்’ யூஸ் பண்ணமாட்டோம். எங்களுடைய ஒர்க்கிங் ஸ்டைல் அவருக்கு பிடித்திருந்தது. எங்க செட் பார்க்கும் போது காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் டூர் வந்த மாதிரி இருக்கும்.

மொத்தத்தில் கெளதம் சார், சின்ன பசங்களை பெரியவங்க வழி நடத்திச் செல்வது போல் என்னை வழி நடத்தினார். அவர் படத்துக்குள் வந்ததும் படத்துக்கான வேல்யூ அதிகமானது.”

“மில்டன் சார் என்ன சொன்னார்?”

“சாருக்கு ரொம்ப சந்தோஷம். ஆரவாரம் முடிந்ததும் நேரில் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார். இயக்குநர்கள் சசிகுமார், சற்குணம், ‘நெருப்புடா’ அசோக், சுசீந்திரன், ‘கடம்பன்’ ராகவன், ‘ராட்சசன்’ராம்குமார், ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார், அனிருத், லிவிங்ஸ்டன், சிவகார்த்திகேயன், ரேகா என்று ஏராளமான பிரமுகர்கள் பாராட்டினார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு பழக்கமில்லாதவர்கள். எப்படியோ என் ஃபோன் நம்பர் வாங்கி பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது. இண்டஸ்ட்ரிக்கு பிடித்த படமாக இருந்தால் இப்படி பாராட்டுவார்கள் என்று முதன் முறையாக அறிந்துகொண்டேன்.”

“உங்க ஃபேமிலியில் என்ன சொன்னார்கள்?”

“நான் இன்னும் முரட்டு சிங்கிளாகத்தான் இருக்கிறேன். என்னுடைய இந்த வெற்றிக்கு என் குடும்பமும், நண்பர்களும் கொடுத்த ஆதரவுதான் காரணம். அவர்கள்தான் எந்த இடத்திலும் என்னை மனச் சோர்வு அடையாமல் பார்த்துக் கொண்டார்கள். அதனால் மைண்ட் ஃப்ரெஷ்ஷாக இருந்தது.
தாமதத்தை நினைத்து டென்ஷன் ஆகவில்லை. ஒருமுறை மிகப் பெரிய சோர்வு வந்தது. நான் சினிமாவுக்கு சரியான ஆள் கிடையாதோ என்று நினைத்ததுண்டு. பிறகு என்னை நானே சமாதானம் பண்ணி மீண்டும் முழுமுனைப்புடன் வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்த வேகம் தொடர்கிறது.”
“படத்தில் திருடுவது எப்படி என்று காண்பித்தது சமூகப் பொறுப்பின்மையை காண்பிக்கிறதே?”

“சமூகப் பொறுப்பு வேண்டாமா என்று பத்திரிகைகளில் எழுதினார்கள். சினிமா மூலம் சில விஷயங்களைச் சொல்வது சில காலம் வரை இருந்தது. இப்போது சினிமா மூலம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆடியன்ஸ் அப்டேட்டில் இருக்கிறார்கள். நாம் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மக்களிடையே சினிமா ஏற்படுத்தும் தாக்கம் குறைந்துவிட்டது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மகிழ வைத்தால் போதும். இப்போதுள்ள மக்களுக்கு எல்லாமே தெரியும். சில இயக்குநர்கள் சமூகப் பொறுப்புடன் பண்ணுகிறார்கள். அது அவர்கள் ஸ்டைலாக இருக்கலாம்.
கார் சீன் ஏற்கனவே நிஜத்தில் நடந்தது.  துப்பாக்கி செய்வது எப்படி என்று கூட யு டியூப்பில் சொல்லித் தருகிறார்கள். நான் சொல்லித்தான் தெரிய வேண்டிய விஷயமில்லை அது. படத்தில் நான் பெரியளவில் டீடைல் பண்ணவுமில்லை. கார் சீன் காட்சியை இனிமேல் தவறு நடக்காதவாறு விழிப்புணர்வாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சேவாக்கால் நிறுத்தி நிதானமாக ஆட முடியாது. ராகுலால் அடித்து ஆட முடியாது. அப்படி எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சினிமாவில் ஷங்கர் சார், ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல் என்று எல்லோருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. எனக்கு இது வருகிறது. ஆனால் என்னுடைய அடுத்த படத்தில் இதே மாதிரி திருடர்களாக இருக்கமாட்டார்கள். அதே சமயம் கருத்துப் படமாகவும் இருக்காது.”
“படத்திலே வருவது மாதிரி பசங்களுடன் சேர்ந்து கொட்டம் அடித்ததுண்டா?”

“நான் ரொம்ப சமத்து. என்னுடைய கேரக்டருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இருக்காது. அக்கம்பக்கத்தினரும் சரி, ஸ்கூலிலும் சரி என் மீது கம்ப்ளைண்ட் கொடுத்ததில்லை. பசங்களுடன் சேர்ந்து நைட் ஷோ கூட போனதில்லை. டூர் போனாலும் அட்வென்ச்சர் டிராவல்தான் பிடிக்கும்.”  
“அடுத்து?”

“உடனடியாக மினி டூர் போலாம்னு இருக்கிறேன். வந்த பிறகு அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன். அடுத்த படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும்.”

“புது இயக்குநர்களிடம் கதை கேட்கும் ஆர்வம் ஹீரோக்களிடம் எப்படியுள்ளது?”
“புது இயக்குநர்கள் என்றில்லை. ஓர் இயக்குநரிடம் சூப்பர் கதை இருந்தால் அவர்கள் கதை கேட்க ஆயத்தமாக இருக்கிறார்கள். துல்கரிடம் நான் சொல்லும்போது எனக்கு எந்த அடையாளமும் இல்லை. கதைதான் என்னை அவர் முன் உட்காரவைத்தது.”

-சுரேஷ்ராஜா