அசுரகுரு ஜெகன்டைட்டில்ஸ் டாக்-156

நான் பக்கா சென்னைவாசி. எனக்கு சினிமா பின்னணி எதுவுமில்லை. வாழ்க்கையில் எனக்கு பல குருநாதர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் கூறும் நல் உலகம் என்னைத் தெரிந்து வைத்துள்ளது என்றால் அதற்குக் காரணம் சினிமா. அப்படி நான் சினிமாவில் ஜெயிக்க காரணம் இரண்டு குருமார்கள்.
முதன் முதலில் நான் அரிதாரம் பூசியது நாடகத்துக்காக. அப்போது நான் சந்தித்த குரு ராஜீவ் கிருஷ்ணன்.

 2000த்துலேதான் நான் கலைத்துறைக்கு வந்தேன். ஆரம்பத்தில் நாடகம்தான் என்னுடைய களம். அப்போது ஆரம்பித்த நாடகப் பயணம் இன்றளவும் தொடர்கிறது. ராஜீவ் கிருஷ்ணன்தான் நடிகனாக எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். அப்போது நான் விளம்பரத்துறையில் வேலை பார்த்தேன். வேலை முடிந்ததும் மாலை நாடகத்துக்கான ரிகர்சல் நடக்கும். அப்படி ரிகர்சல் முடிந்ததும் ஊர் ஊராக நாடகம் போடுவோம்.
நான் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து மாதிரி. ஒருமுறை விளம்பரப் படத்தில் நடித்தேன். அந்த விளம்பரம் மூலம் சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் படங்கள் சில பண்ணினேன். எனக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் கே.வி.ஆனந்த் சார் இயக்கிய ‘அயன்’. அப்போது நான் ஒரு தனியார் நிறுவன வேலையில் இருந்தேன். தொடர்ந்து சினிமாவில் இருப்பேனா என்று தெரியாத நிலையில் சுமார் இரண்டு மாதம் லீவு எடுத்துக்கொண்டு நடித்தேன். இவ்வளவுக்கும் அது ஏவி.எம்.நிறுவனத்தின் தயாரிப்பு. சூர்யா சார் படம் என்று பெரிய படமாக இருந்தது. எனக்கு அதெல்லாம் தோன்றவில்லை. என் மனதில் இருந்ததெல்லாம் கே.வி.ஆனந்த் சார் என்னை நம்பி ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதை சரியாகப் பண்ண வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

அந்தப் படம் வெளியானதும் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஆனால் ஒன்பது மாதம் எந்தப் பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ‘பையா’ பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். ‘கோ’ படத்தில் இருந்து மேஜிக் நடந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு சினிமாதான் என்னுடைய எதிர்காலம் என்ற முடிவோடு வேலையை விட்டுவிட்டேன்.

சினிமாவில் நான் கற்றது என்னவென்றால் நாடகம் வேறு, சினிமா வேறு என்பதுதான். நாடகத்தில் நடிக்க சில பல வசதிகள் இருக்கும். ஆனால் சினிமாவில் அதெல்லாம் இருக்காது. நாடகம் நடிக்கும்போது சில மாதங்கள் ரிகர்சல் எடுப்போம். வசனம் மனப்பாடமாகத் தெரியும். அதன்பிறகே மேடை ஏறுவோம்.

 சினிமா அப்படி அல்ல. திடீர்னு கூப்பிடுவாங்க. கதை, நம்முடைய ரோல்  என என்பது ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரியும்.
சினிமாவில் என்னுடைய குரு கே.வி.ஆனந்த் சார். அதாவது கிளாப் போர்டுடன் வேலை கற்றுக் கொண்ட சிஷ்யன் இல்லை. ஏகலைவனாக எல்லாத்தையும் தூரத்தில் நின்று அவரிடம் சினிமா கற்றுக்கொண்டேன். ‘கனா கண்டேன்’ படத்தில் மட்டும்தான் நான் அவருடன் இல்லை. அதே மாதிரி ‘மாற்றான்’, ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சாருடன் நான் வேலை செய்துள்ளேன். மற்றபடி அவருடன் ‘அயன்’ படத்திலிருந்து டிராவல் பண்ணுகிறேன்.

 ‘அனேகன்’, ‘கவண்’ படங்கள் துவங்கும்போது என்னிடம்தான் முதலில் ஷேர் பண்ணியிருக்கிறார். அந்தளவுக்கு அவருக்கு நம்பிக்கைக்குரிய சிஷ்யனாக இருந்துள்ளேன். அவர் மூலம் எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.கே.வி.ஆனந்த் சார் வேலை வாங்கும் விதம் வித்தியாசமானது. பாரதிராஜா சார் நடித்து காண்பித்து நடிப்பு வாங்கிவிடுவார் என்று சொல்வதுண்டு. ஆனால் கே.வி.ஆனந்த் சார் நடித்துக் காண்பிக்கமாட்டார். ஆனால் நடிகர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும், தனக்கு என்ன வேண்டும் என்ற வித்தை அறிந்தவர். அதை புரிந்து நடித்தால் மிகச் சிறந்த நடிகனாக உருவெடுக்க முடியும்.

‘அயன்’ படத்தில் ‘சிட்டி’ கேரக்டர் சாகும்போது ரசிகர்களுக்கு அனுதாபம் வரணும் என்று சொல்வார். டிஸ்கஷனில் இருந்த மற்றவர்கள், அனுதாபம் வந்தால் நல்லா இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் கே.வி.ஆனந்த் சாரின் கணிப்புதான் ஜெயித்தது. அதுதான் அவரின் ஸ்பெஷல். அப்படித்தான் அவர் எதிர்பார்த்ததைச் செய்தேன் என்று நினைக்கிறேன். அந்தப் படம் இந்தியா முழுவதும் டப்பாகி வெளியானது. அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை வட இந்தியாவில் எத்தனையோ ரசிகர்கள் பாராட்டினார்கள். சமீபத்தில் ‘காப்பான்’ பட ஆடியோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்.

சமீபத்தில் வாலி எழுதிய ‘வாலிப வாலி’, ஏவி.எம்.சரவணன் சார் எழுதிய ‘சினிமாவும் நானும்’, பாலகுமாரன் எழுதிய ‘நானும் சினிமாவும்’, பாக்யராஜ் எழுதிய ‘சினிமா பத்தி பேசலாம் வாங்க’ போன்ற புத்தகங்களை வாசித்தேன்.அந்த புத்தகங்களை படிக்கும் போது அந்தக் கால நடிகர்கள் தங்கள் இயக்குநர்களை எந்தளவுக்கு குருவாக பாவித்தார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இப்போது குரு-சிஷ்யன் என்ற கலாச்சாரம் அழிந்துவிட்டது.

கமல் சார் தன்னை உருவாக்கிய பாலசந்தர் சாரை இயக்குநராகப் பார்க்கவில்லை. குருவாகப் பார்த்தார். அவருடைய குருபக்தியைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இறந்தபோது பாலசந்தர் சார் குடும்பம் சிலை வைக்கவில்லை. கமல் சார்தான் சிலை வைத்தார்.

கமல் சார்- பாலசந்தர் சார் இருவரும் எத்தனையோ படங்கள் இணைந்து வேலை செய்துள்ளார்கள்.  இருவருக்குமிடையே கோபம் இல்லை என்று சொல்ல முடியுமா. ‘மன்மத லீலை’ படத்தில் கமல் சார் பிரமாதமாக நடித்திருந்தாலும் அவருடைய நடிப்பு பில் திருப்தியடையாத பாலசந்தர் சார் ‘இது நாகேஷூக்காக உருவாக்கியது’ என்று சலிப்படைந்ததாகச் சொல்வார்கள்.

கமல் சார் எப்படி நடிப்பார் என்று உலகத்துக்கே தெரியும். அப்போது கமல் சாருக்கு கோபம் வருகிறது என்றால் அது கெட்ட கோபம் அல்ல. அந்த கோபம் நாகேஷ் எனும் மகா கலைஞன் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்திய கோபம்.

கே.வி.ஆனந்த் சார் எனக்கு ‘காப்பான்’ படத்தில் நடிக்க சான்ஸ் கொடுக்கவில்லை. நான் நினைத்திருந்தால் அவரிடம் சண்டை போட்டிருக்கலாம். அப்படிப் செய்யவில்லை. காரணம், அவரை நான் இயக்குநராகப் பார்க்கவில்லை. குருவாகப் பார்க்கிறேன். குருவுக்கு தெரியும் சிஷ்யனுக்கு எப்போது வேலை கொடுக்க வேண்டும் என்று.  

நான் சினிமாவில் ஜெயிக்க காரணம் குருநாதர்கள். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. எங்கள் பரம்பரையிலே நான் மட்டும்தான் நடிகன். அதற்கு காரணம் குருக்கள்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)