வால்டர்



காக்கி கம்பீரம்!

கும்பகோணத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் அரசியல் தலைவர் பவா செல்லத்துரை. அவருடைய வளர்ப்பான சமுத்திரக்கனி, பவா செல்லத்துரைக்கு இடையூறாக இருக்கிறார்.
சமுத்திரக்கனி உயிருடன் இருந்தால் தன்னால் அரசியல் பண்ண முடியாது என்ற முடிவுக்கு வரும் பவா செல்லதுரை போலி என்கவுண்டர் மூலம் சமுத்திரக்கனியை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார். அதை கச்சிதமாக செய்து முடிக்கிறார் போலீஸ் ஆபீஸர் சிபி சத்யராஜ்.

அந்தச் சமயத்தில் நகரில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன. காணாமல் போன குழந்தைகள் மறுபடியும் கிடைக்கும்போது இறந்து போகின்றன. குழந்தைகளின் மரணத்தில் மர்மம் இருப்பதை மோப்பம் பிடிக்கும் சிபி சத்யராஜ் அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அவருடைய முயற்சிக்கு தடைகள் வருகின்றன. அதையும் மீறி கறுப்பு ஆடுகளின் முகத்திரையை அவர் எப்படி கிழித்தெறிகிறார் என்பது மீதிக் கதை.

சிபி சத்யராஜைப் பாராட்டு வதாக இருந்தால் அவருடைய ஃப்ரெஷ் லுக்கிற்காகவே பாராட்டலாம். போலீஸ் ஆபீஸருக்குரிய ஹேர் ஸ்டைல், மிடுக்கான நடை என்று ஸ்டைலீஷாகவும் அழகாகவும் இருக்கிறார்.

காக்கி உடை கூடுதல் கம்பீரத்தைக் கொடுக்கிறது. குழந்தைக்கு முதலுதவி கொடுப்பதாகட்டும், காதலியிடம் குழைவதாகட்டும், எதிரிகளை பந்தாடுவதாகட்டும் அனைத்து ஏரியாக்களிலும் தெறிக்க விடுகிறார். நாயகி ஷெரின் காஞ்ச்வாலா அழகாக இருக்கிறார். பஸ்ஸில் பயணம் செய்து பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து போகிறார்.

இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் நட்டியின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறது. அவரைப் போலவே நடிப்பும் உயர் ரகம். சில இடங்களில் ஆக்ரோஷமாகப் பேசி ஸ்கோர் பண்ணுகிறார். சில இடங்களில் கண்களில் உக்கிரத்தைக் கக்கி நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்.

சமுத்திரக்கனிக்கு வேலை குறைவு என்றாலும் பிரமாதமான நடிப்பால் கவனிக்க வைத்துவிடுகிறார். பவாசெல்லத்துரைக்கு முக்கிய வேடம். அதை அவரும் நன்றாக பயன்படுத்தியுள்ளார். அபிஷேக், ரித்விகா, சனம் ஷெட்டி, யாமினி சுந்தர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராசாமதியின் ஒளிப்பதிவு சிறப்பு. கும்பகோணம் நகரத்தை கழுகுப் பார்வையில் காண்பித்தவிதம் அருமை. தர்மபிரகாஷின் இசையில் ‘மூச்சே அனலென ஆச்சே’, ‘யாரைத் தேடி நெஞ்சமே’ ஆகிய பாடல்கள்  இனிமை. பின்னணி இசையும் கதைக்கேற்ப இருக்கிறது.

இயக்குநர் யு.அன்பு தன்னை வித்தியாசப்படுத்திக் காண்பிக்க புதிதாக ஒரு கதையைப் பிடித்திருக்கிறார். புதுவகை ரத்தம் என்று ஒரு பெயரைச் சொல்லி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் இந்த வால்டர்... போலீஸ் துறைக்கு கம்பீரத்தைச் சேர்க்கிறார்.