தாராள பிரபு



தானத்துலே தாராளம்!

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம். அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் ‘தாராள பிரபு’. மிகவும்  சீரியஸான இந்த விஷயத்தை நகைச்சுவையாய் சொல்லியிருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

நாயகன் ஹரிஷ் கல்யாண் கால்பந்து வீரர். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அப்போது மருத்துவர் விவேக் அவருடைய கனவை கலைக்கும் விதமாக பண ஆசையை உண்டாக்கி விந்து தானம் அளிக்க கட்டாயப்படுத்துகிறார்.

அரைகுறை மனதோடு ஹரிஷ் சம்மதிக்கிறார். அந்த சமயத்தில் நாயகி தன்யா ஹோப்போடு காதல் மலர்கிறது. காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடியும்போது ஹரிஷ் - தன்யா ஜோடி ஒரு பிரச்சனையை சந்திக்கிறது. அது என்ன பிரச்சனை? அதிலிருந்து ஹரிஷ் எப்படி வெளியே வருகிறார் என்பதை நகைச்சுவையாக சொல்வதுதான் ‘தாராள பிரபு’.

நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன் இருக்கிறார். விவேக் விடாமல் அவரைத் துரத்தும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகள், மற்றும் மனைவியிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தடுமாறும் காட்சிகளில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி தன்யா ஹோப் அழகுப் பதுமையாக வருகிறார். அவருடைய கேரக்டர் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கிறதோ அதே போல் நடிப்பும் ஸ்ட்ராங். கணவனிடம் கொஞ்சல், கெஞ்சல் காட்சிகளில் மென்மையைக் கடைப்பிடிக்கும் அவர், கணவரின் பித்தலாட்டத்தைக் கண்டு வெடிக்கும் காட்சிகளில் நடிப்பு ராட்சசியாக தெறிக்கவிடுகிறார்.

இந்தப் படத்தின் இரண்டாவது ஹீரோவாக விவேக்கை சொல்லலாம். ரசிகர்களைச் சிரிக்க வைத்த  இப்படியொரு விவேக்கைப் பார்த்து எத்தனை நாளாயிற்று... நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு சிறப்பான வேடம். கண்ணதாசன் என்று பெயரைச் சொல்லும் போதும் சரி, விந்து தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் போதும் சரி பின்னியெடுக்கிறார். அம்மாவாக வரும் அனுபமா குமார், பாட்டியாக வரும் சச்சு ஆகியோர் தங்கள் வேலையை ரசித்து செய்திருக்கிறார்கள். விவேக் உதவியாளராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியின் அப்பாவித்தமான நடிப்பு சிரிப்புக்கு கியாரண்டி.

அனிருத், ஷான்ரோல்டன், விவேக் மெர்வின், இன்னோ கென்கா, மேட்லி ஆகியோர் தலா ஒரு பாடல் கொடுத்திருக்கிறார்கள். செல்வகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. இந்திப்படத்தின் ரீ மேக் என்று சொல்ல முடியாதளவுக்கு நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.படத்தில் சில குறைகள் இருந்தாலும் தாராளமாக சிரிக்க வைக்கிறார்கள் என்பதால் ஓக்கே சொல்லலாம்.