விவசாயி ஆகிறார் விஞ்ஞானி!



ஒரு காலம் இருந்தது. ஹீரோக்கள் தங்களுடைய நூறாவது படத்தை யார் முதலில் எட்டுவது என்று போட்டி போடுவார்கள். இப்போதெல்லாம் படங்களின் எண்ணிக்கையைவிட, சம்பளம் எத்தனை கோடி என்கிற எண்ணிக்கைதான் முக்கியமாகப் போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் இளம் ஹீரோ ஒருவர் கால் செஞ்சுரி அடிப்பது என்பதே சாதனைதான். அந்த மைல்கல்லை எட்டிப் பிடிக்கிறார் ஜெயம் ரவி.

இப்போது அவர் நடித்துள்ள ‘பூமி’, அவருக்கு இருபத்தைந்தாவது படமாகும். ஏற்கனவே அவரை ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களில் இயக்கிய லக்‌ஷ்மனுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். ரொமான்ஸ், ஆக்‌ஷன் என்று பயணித்த லக்‌ஷ்மன், இம்முறை சமூகப் பொறுப்புடன் விவசாயத்தைக் கையில் எடுத்துள்ளார். லக்‌ஷ்மனிடம் பேசினோம்.

“திடீரென்று உங்களுக்கு ‘பூமி’யின் மீது அக்கறை ஏற்பட்டது எப்படி?”

“திடீர் அக்கறை எல்லாம் இல்லை. பல வருடங்களாக மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயம்தான். ஆனால், ஸ்கிரிப்ட் ஒர்க் தொடங்குவதற்கு முன், ஒரு வருடம் வரை இதுகுறித்து தெரிந்துகொள்ள நிறைய இடங்களுக்குப் பயணித்தேன். விவசாயம் சார்பான பல புத்தங்களைப் படித்தேன். நேரடியாக விவசாயிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களுடன் வாழ்ந்தேன். அதற்குப் பிறகே இந்தக் கதையை எழுதினேன்.”

“ஜெயம் ரவியை மனதில் வைத்துதான் ‘பூமி’ கதையை உருவாக்கினீர்களா?”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இந்தக் கதையில் எந்த ஹீரோவும் நடிக்கலாம். ஆனால், ஜெயம் ரவி எனக்கு கம்ஃபர்ட்டபிளான ஹீரோ. மற்றவர்களிடம் போய் கதை சொல்லி, நான் யார் என்பதையும் சொல்லி, என் முந்தைய படங்களை ரெபஃரன்ஸ் காட்டி, அதற்குப் பிறகு இணைந்து பணிபுரிவது பற்றி பேச வேண்டியிருக்கும்.

ஆனால், ஜெயம் ரவி அப்படியில்லை. ‘வாங்க பிரதர், படம் பண்ணலாம்’ என்று தோள்மீது கைபோட்டு, அவரே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். இந்தப் படத்தில் சில காட்சிகளை அவரே இயக்கினார். ஒரு அசிஸ்ெடண்ட் டைரக்டரைப் போல் பரபரப்பாக வேலை பார்த்தார். இன்னும் சில வருடங்களில் அவரை ஒரு முழுமையான இயக்குநராகப் பார்க்கலாம். கைவசம் நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறார்.”
“இது ஜெயம் ரவி நடிக்கும் இருபத்தைந்தாவது படம் என்ற ரிஸ்க்கை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?”

“ஜெயம் ரவி குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். கேமியோவெல்லாம் செய்திருக்கிறார். அதையெல்லாம் சேர்த்தால் மேலும் எண்ணிக்கையில் பதினைந்து, இருபது கூடும். எனினும் அஃபிஷியலாக இந்தப் படத்தை தன்னுடைய இருபத்தைந்தாவது படமாக அறிவிக்கிறார் என்றால், ‘பூமி’ மீது அவர் கொண்டிருக்கும் அபரிதமான நம்பிக்கைதான் காரணம்.

உண்மையிலேயே இது அவருக்கு ரொம்ப முக்கியமான படம்தான். ஆனால், அவர் அதைப்பற்றி ஈசியாக எடுத்துக்கொண்டு, மற்ற படங்களில் எப்படி இயல்பாகப் பணியாற்றுவாரோ அதுபோல் பணியாற்றுகிறார். ஆனால், தன் சொந்தப் படத்தைப் போல் கடுமையாக உழைக்கிறார். இதனால், எனக்குத்தான் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஹீரோவின் மைல் ஸ்டோன் படத்தை நன்றாகக் கொடுக்க வேண்டுமே என்ற பதற்றம் எனக்குள் நீடித்து இருக்கிறது. எனவே, படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறேன்.”“விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடு என்று, நிறைய கதைகள் வந்துவிட்டது. இந்த ‘பூமி’யில் அப்படி என்ன ஸ்பெஷல்?”

“இது விவசாயம் தொடர்பான படம் என்பதை டைட்டிலே் சொல்லிவிடும். ஆனால், இதற்குமுன் வெளியான படங்களில், ‘விவசாயம் அழிந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகள், மக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்’ என்று சொல்லப்படடது. ஆனால், ‘பூமி’ படத்தில் யாரையும் நான் குறை சொல்லவில்லை. இன்றைய நிலை இப்படி இருக்கிறது, இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று பாசிட்டிவ்வாக பேசும் படம் இது..”
“விவசாயத்தைப் பற்றி பேசும்போது, அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சித்துதானே ஆக வேண்டும்?”

“ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு எப்போது ஓட்டு போட ஆரம்பித்தோமோ, அப்போதே அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதியை இழந்துவிட்டோம். எல்லாவற்றும் லஞ்சம் கொடுத்துப் பழகி, இப்போது அதுவே வாழ்க்கைமுறை என்று மாறிவிட்ட பிறகு, மற்றவர்களின் ஊழலைப் பற்றி பேச நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மாற்றம் என்பது முதலில் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். இதைப்பற்றி ஆணித்தரமாகப் பேச இருக்கிறது படம்.”

“அப்படி என்றால், இந்தப் படத்தின் கதை என்ன?”

“இஸ்ரோவில் இருந்து வானத்தைப் பார்த்துக் ெகாண்டிருந்த ஒரு இளம் விஞ்ஞானி, திடீரென்று தன் பார்வையை பூமியை நோக்கித் திருப்புகிறான். அதை வளப்படுத்தவும், செழிப்பாக்கவும் சில முயற்சிகளை மேற்கொள்கிறான். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரும் எதிர்ப்புகளைச் சமாளித்து, தான் நினைத்ததை எப்படி செய்து முடிக்கிறான் என்பது கதை. ஆனால், திரையில் அதை நாங்கள் சொல்லியிருக்கும் விதம் பக்கா கமர்ஷியல் ரகமாக இருக்கும். சமூக மாற்றத்துக்குரிய ஆழமான ஒரு விஷயத்தைப் பற்றி இப்படம் பேசினாலும், அழகான, அதேவேளையில் செம ஜாலியான படமாக உருவாகியுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றும் இளம் விஞ்ஞானி வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.”

“சரி, விவசாயத்துக்கு அப்படி என்னதான் பிரச்னை என்று சொல்கிறீர்கள்?”

“டி.வி, ஏசி, கார் போன்றவை மனிதனுக்கு மிகவும் அத்தியாவசிய பொருள் இல்லை. ஆனால், மூன்று வேளை சாப்பாடு மிக மிக அத்தியாவசியம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்கு முக்கியத்துவம் இல்லை. அதைக் கொடுக்கும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பது இல்லை. டென்மார்க் நாட்டில் மாடுகளும், புல்வெளிகளும்தான் நிறைந்திருக்கிறது.

இதை மட்டும் வைத்துக்கொண்டு, தன் மக்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக வழங்குகிறது அந்த நாடு. ஆனால், விவசாயத்தையே முதுகெலும்பாக வைத்திருக்கும் நாம், விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருக்கிறோம். 120 கோடி மக்கள் மூன்றுவேளை உண்ணும் உணவின் அளவை கற்பனை செய்து பாருங்கள்.

இதுவரை பிரச்னை இல்லை. ஆனால், விரைவில் மிகப் பெரிய பிரச்னையை சந்திக்கப்போகிறோம். வெங்காயம் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டாலோ அல்லது தக்காளி விலை 50 ரூபாயைத் தாண்டிவிட்டாலோ பதறித் துடிக்கிறோம். ஆனால், விலை குறைந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். இதுதான் இங்கு மிகப் பெரிய பிரச்னை.”

“மண்சார்ந்த கதையைச் சொல்லும்போது, வடக்கத்திப் பெண் நித்தி அகர்வாலை ஹீரோயினாக்கியது ஏன்?”

“அந்த உறுத்தல் எனக்கும் உண்டு. ஆனால், வடநாட்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்று சொன்னால்தான் இங்குள்ள படங்களுக்கு கமர்ஷியல் வேல்யூ கிடைக்கிறது என்பது கசப்பான உண்மை. என்றாலும், நித்தி அகர்வாலை நம் மண்ணின் முகமாக மாற்றியிருக்கிறோம். கதையைத் துருத்திக்கொண்டு தனியாகத் ெதரிய மாட்டார்.

இயல்பான கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். தமிழன் என்ற உணர்வும், பற்றும் இருந்தாலும், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் தயாரிப்பாளருக்காக சின்னச்சின்ன சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்ப் பெண்கள்தான் அழகானவர்கள். ஆனால், அவர்கள் அதிகளவில் சினிமாவில் நடிக்க வருவதில்லை. சினிமாவைப் பற்றி ஏற்பட்டுள்ள தவறான கண்ணோட்டம் இன்னும் கூட பெற்றோர்களுக்கு மாறவில்லை. அதையும் மீறி நடிக்க வருபவர்களை, ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவது இல்லை. விரைவில் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன்.”

- மீரான்