சந்தானத்துடன் டிக்கிலோனா செய்யும் காஞ்ச்வாலா!



‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் ஷிரின் காஞ்ச்வாலா. ‘வால்டர்’ படத்திலும் ரசிகர்களை பரவலாக கவர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“உங்க பின்னணி?”
‘‘பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லோமே மும்பையில். அப்பா பிசினஸ்மேன். அம்மாதான் எனக்கு பெரிய சப்போர்ட். அண்ணன், தம்பி இருக்காங்க. நான், படிப்பு முடிச்சதும்  மூணு வருஷம் ஏர்ஹோஸ்ட்டஸா பணியாற்றினேன். அப்புறம், மாடலிங் பண்ணினேன். அப்ப ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து செல்போன்ல விளையாட்டா போட்டோ எடுப்போம். அதை என் ஃப்ரெண்ட்ஸ் சோஷியல் மீடியாவுல போட்டாங்க.

பிறகு, போட்டோ ஷூட் எடுத்தோம். எல்லாமே வைரலாச்சு. அதைப் பார்த்திட்டு சினிமா இயக்குநர்கள் தேடி வந்தாங்க. கன்னட இயக்குநர் நாகேஷ் நரதாசி சார் படமான ‘விராஜ்’ல கமிட் ஆனேன். அப்புறம், தமிழ்ல சிவகார்த்திகேயன் தயாரிப்புலே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பட வாய்ப்பு அமைஞ்சது. அதுலே டிவி ரிப்போர்ட்டர் கேரக்டர். ஹீரோ ரியோவுடன் நடிச்சது நல்ல அனுபவம். நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தொடர்ந்து அன்பு சார் இயக்குத்துல ‘வால்டர்’ல நடிச்சேன்.’’

“வால்டர் படத்துக்கு வரவேற்பு எப்படி?”

“செமயா கிடைச்சிருக்கு. என்னோட பெஸ்ட்டா ‘வால்டர்’ படத்தை நினைக்கிறேன். சிபிராஜ் போலீஸாகவும், நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒர்க் பண்ணுற பொண்ணாகவும் நடிச்சிருந்தோம். ஒரு போலீஸ் அதிகாரிக்கும், ஐடி பொண்ணுக்கும் நடக்குற காதல்னு ரொம்பவே வித்தியாசமான களம்.

இதுல, ஒளிப்பதிவாளர் நட்டி, இயக்குநர் சமுத்திரகனின்னு நிறைய அனுபவம் உள்ளவங்க கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் புதுமுகம்னு ட்ரீட் பண்ண மாட்டாங்க. அவங்க கூட நடிச்சதுல நிறைய கத்துக்க முடிஞ்சது. மியூசிக் டைரக்டர் தர்ம பிரகாஷ் இசையில பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது. ‘யாரை தேடிய நெஞ்சமே’ பாடலை சித்ரா மேடம் பாடியிருக்காங்க. எனக்கு அடிக்கடி நினைவில் வந்திட்டு இருக்குற பாடல் அது’’

“அடுத்து?”
“இப்ப சந்தானத்துடன் ‘டிக்கிலோனா’ படத்துல நடிச்சிட்டு இருக்கேன். அடுத்து, விமலுடன் ‘மஞ்சள் குடை’ படத்துலே நடிக்க இருக்கேன். இவை தவிர, இன்னும் ரெண்டு மூணு படங்கள் கைவசமிருக்கு. சினிமாவுலே நிறைய சம்பாதிக்கணும்னு நினைச்செல்லாம் வரல. பெயர் சொல்ற மாதிரி சில நல்ல படங்கள்ல நடிச்சாலே போதும். அவ்வளவுதான். ஹீரோயின் ஒரியண்டடா படம் செய்யணும்னு ஆசைப்படுறேன்.”“சினிமாவுலே யார் யாரைப் பிடிக்கும்?”

“கரினாகபூரை ரொம்பவே பிடிக்கும். அப்புறம் சாஹித் கபூர், சல்மான்கான் ஆகியார் எனக்கு ஃபேவரைட். இங்கே கேட்டீங்கன்னா நயன்தாரான்னா எனக்கு உசுரு...”“படத்துலே மட்டுமில்லாமே நேரிலும் பளிச்சுன்னு இருக்கீங்களே?”

“அதுக்குக் காரணம் இந்த ஜிமிக்கி கம்மல். இதை அணியறதுக்கு ரொம்பவும் விரும்புவேன். வளையல், நெக் அயிட்டம் பெருசா விருப்பமில்லை. ஹேர் ரிங் பிடிக்கும். டிரெஸ்சுன்னு எடுத்துக்கிட்டா புடவைதான். ஃபங்ஷன், மீட்டிங்கெல்லாம் சாரி கட்டிக்கிட்டுதான் போவேன். டாப்ஸ், ஜீன்ஸும் பிடிக்கும். ஆள் பாதி, ஆடை பாதி சார்.”

- ஆர்.சந்திரசேகர்