மர்மமாய் மறைந்த நட்சத்திரம்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-64

1998ம் ஆண்டு ‘தாயின் மணிக்கொடி' படம் வெளிவந்தபோது அதில் நடித்திருந்த நிவேதா ெஜயினை கவனிக்காதவர்கள் இருக்க முடியாது. “யாருப்பா இந்த பொண்ணு இம்புட்டு சுறுசுறுப்பாக இருக்கு” என்று சொன்னார்கள். படத்தின் விமர்சனங்களிலும் நிவேதிதாவின் நடிப்பு குறிப்பிடப்பட்டது. ‘தாயின் மணிக்கொடி'யில் தபுதான் ஹீரோயின். நிவேதா ஜெயின் இரண்டாவது ஹீரோயின்தான்.

அதனால் அடுத்த படத்தில் நிவேதிதாவை ஹீரோயினாக பார்க்கலாம் என்ற ஆவல்தான் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் படம் வெளிவந்த அதே ஆண்டில் அவர் இறந்த செய்திதான் பெங்களூரில் இருந்து வந்தது. அவர் இறந்தபோது அவருக்கு வயது பத்தொன்பதுதான் என்பது இன்னும் கொடூரமான செய்தி.

நிவேதிதா பலமான குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தந்தை ராஜேந்திர ஜெயின் ராணுவ அதிகாரி, அம்மா கவுரி பிரியா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பூர்வீகம் வடக்கத்தி என்றாலும் நிவேதிதா வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில்தான். பதினைந்து வயதில் ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்றதுதான் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. படிப்பில் கவனம் செலுத்திய நிவேதிதா மீடியா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பலனாக 1996ம் ஆண்டு ‘சிவரஞ்சனி’ என்ற கன்னடப் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஷிவ சைன்யா, நீ முடித மல்லிஜே படங்களில் நடித்த நிலையில்தான் ‘தாயின் மணிக்கொடி' மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு பல்லானி தாரி, சுதரதாரா படங்களில் நடித்த நிலையில்தான் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

அவர் இறந்தது குறித்த மர்மம் இன்னும் விலகவே இல்லை. சரியான வாய்ப்புகள் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். ஒரு படப்பிடிப்பில் நடந்த விரும்பத்ததாக சம்பவம் அவர் மனதை பாதித்ததால் மாடியில் இருந்து குதித்தார் என்றார்கள். மொட்டை மாடியில் கேட் வாக் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார் என்றார்கள். அதிகமாக மது அருந்தியதால் தடுமாறி விழுந்தார் என்றார்கள். அவரது தாயே மகளைப் பிடித்துத் தள்ளினார் என்றார்கள்.

நிவேதிதா எப்படி இறந்தார் என்கிற மர்மம் ஒருபுறம் இருந்தாலும், 2 ஆண்டுகளில் 7 படங்களில் நடித்த நிவேதிதாவை கொன்றது சினிமாவா? மனிதர்களா என்கிற கேள்வி மட்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்