கமலி ஆகிறார் கயல் ஆனந்தி!



தமிழ் சினிமாவில் இப்போது நாயகிகளை மையமாக வைத்து கதை எழுதும் சீசன். அந்த வரிசையில் ‘கயல்’ ஆனந்தி டைட்டில் ரோலில் நடிக்கும் படம் ‘கமலி from நடுக்காவேரி’. புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி னிவாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது... ‘‘காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். அப்படி நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும் கல்லூரி படிப்பவர்களுக்கு சவாலாக இருக்கும்.

அப்படி... இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் என்னுடைய நாயகி கமலி. அவள் இந்த இரண்டையும் அடைந்தாளா என்பதை யதார்த்தமாக சொல்லியுள்ளேன்.

இது ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதையாக இருக்கும். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் வந்துள்ளது’’ என்றார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி  வாங்கியுள்ளதாம்.

- ரா