பிட்ச் பெர்ஃபெக்ட் 3



இரண்டு பெண்கள் சேர்ந்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. கில்லி மாதிரி எட்டுக்கும் மேலான பெண்கள் என்றால் கேட்கவா வேண்டும்? யுனிவெர்சல் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிட்ச் பெர்ஃபெக்ட் சீரீஸின் மூன்றாம் பாகம் ’பிட்ச் பெர்ஃபெக்ட் 3’. ‘பெண்கள்,  இசை’ இவை இரண்டுதான் படமே. பெண்கள் சார்ந்த படம் என்றாலே அட்வைஸ், பெண் சுதந்திரம், பெண்களுக்கு நடக்கும் அநீதி என கொடி பிடிக்கும் படங்களுக்கு இடையில் நட்பு, இசை என கலகல காமெடி கதைக்களத்தில் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்ட பெண்கள் பட சீரீஸ்.

தி பர்டென் பெல்லாஸ்  பள்ளி முதல் கல்லூரி வரை யாராலும் ஜெயிக்க முடியாத பெண்கள் இசைக் குழு. பெக்கா மிட்செல், பப்ளி எமி, க்ளோ பியல், ஆப்ரே போசன், எமிலி ஜங்க், லில்லி ஒனாகுரோமா, சிந்தியா ரோஸ், ஃப்ளோரன்சியா, ஜெஸிகா ஸ்மித், ஆஷ்லே ஜோன்ஸ் உட்பட மொத்தம் பத்து பெண்கள்.  எவ்வித கருவிகளும் இல்லாமல் குரல்களிலேயே இசையமைத்துப் பாடக்கூடியவர்கள் நிறைந்தது பெல்லாஸ் இசைக்குழு. கல்லூரியில் படிக்கையிலேயே உலக சாம்பியன்ஷிப், அடுத்து  அவரவர் வாழ்க்கை, வேலை என ஒவ்வொரு வரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரியின் புதிய பெல்லாஸ் குழு இந்த சீனியர் குழுவை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க இவர்களும் வாவ்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு குரூப் பாடல் என சென்றால் அங்கே புது கும்பல் இவர்களை பார்வையாளர்களாக மட்டுமே அழைத்திருக்கிறது. மேலும் ‘நீங்களெல்லாம் நல்ல வேலையில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? பிறகு ஏன் பாட்டு?’ எனக் கேட்கிறது ஜூனியர் குழு. ஆனால் உண்மையோ யாருக்குமே தாங்கள் செய்யும் வேலையில் விருப்பம் இல்லை. ஒவ்வொருவரும் உண்மை நிலையை புலம்பி தங்களால் பாட முடியவில்லையே என வருந்துகிறார்கள்.

ஆப்ரே போசனின் அப்பா ராணுவ அதிகாரியாக இருக்கிறார். அவர்கள் முகாமில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக பாடலாமே என ஐடியா கொடுக்க , கூட்டமாக கிளம்புகிறார்கள். அங்கேயோ ஏற்கனவே இவர்களை மிஞ்சும் பாடகர்கள், இசைக்கருவிகள் சகிதமாக இவர்களுக்கு பல்ப் கொடுக்கிறார்கள். எனினும் விடா முயற்சியுடன் இவர்கள் திறமையைக் காட்டி ஒவ்வொரு கேம்பாக முன்னேறிச் செல்கிறார்கள். இரவு விருந்தில் பெக்கா விளையாட்டாக கம்போஸிங்கில் அமர்ந்து பாடல் உருவாக்க, அதைக் கேட்ட பிரபல டிஜே அவரை மட்டும் பாட அழைக்கிறார்.

ஆனால் ‘என் பெல்லாஸ் குடும்பம் இல்லாமல் என்னால் வர முடியாது’ எனக் கூறி வெளியேறி விடுகிறார் பெக்கா. இதற்கிடையில் மொத்த பெல்லாஸ் குழுவும் எமியின் கிரிமினல் அப்பாவால் கடத்தப்படுகிறார்கள். ஆக் ஷன் சகிதமாக தப்பிக்கிறது பெல்லாஸ் குழு. ‘அரிய வாய்ப்பு விட்டு விடாதே’  என பெக்காவையும் தனியாகப் பாட ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள் பெல்லாஸ்.

வேண்டாவெறுப்பாக மேடையேறும் பெக்கா பாடிக்கொண்டே தன் பெல்லாஸ் குழுவையும் மேடையேற்றி குழுப்பாடலாகவே மாற்றுகிறார். எங்களுக்கு குடும்பம், வேலை என தனித்தனியாக இருப்பினும் இந்த பெல்லாஸ் குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது என மற்ற குழுக்களுக்கும் பாடம் புகட்டி எண்ட் கார்டு போடுகிறது ‘பிட்ச் பெர்ஃபெக்ட் 3’.

படம் ஆரம்பம் முதல் இசை மற்றும் பெண்கள் கலாட்டாவாகச் செல்கிறது. ஹேண்ட்சம் ஆண்களைக் கண்டதும் உடல் மொழிகளை மாற்றி ஜொள்ளு விடுவதும், மாறி மாறி பாடிக்கொண்டே ஸ்டைலாக ஆடுவதும், ஆக் ஷனில் துவம்சம் செய்வதுமாக அதிரடி காட்டுகிறார்கள் கேர்ள்ஸ். பெண் சார்ந்த எந்த பிரச்னைகளுமே இல்லாமல் வெகு சாதாரண பெண்களின் நட்பு, ஒற்றுமையை பேசி முடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்யும் அதகளங்கள் படத்திற்கு இன்னொரு ஸ்பெஷலாக நம்மை சீட்டில் அமர வைத்துவிடும். தோழிகள் ஒன்றாக இணைந்து தவறாமல் பார்க்க வேண்டிய
படம்.

- ஷாலினி நியூட்டன்