இவர் பத்தாம்பசலி அல்ல



கி.சாவித்திரி அம்மாள்

முற்போக்குச் சிந்தனைகளோடு இருந்தவர். சிறந்த எழுத்தாளர். அந்தக் காலத்து பெரிய செல்வந்தரின் மகள்தான் எனினும் எளிமையாக வாழ்ந்தவர். மனிதர்களை புரிந்து கொண்டு இனிமையாக பழகியவர். இன்னும் நிறைய இருக்கின்றன இவர் குறித்து பேச. தன் பாட்டி எழுத்தாளர் கி.சாவித்திரி அம்மாளின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நீதிபதி பிரபாஸ்ரீதேவன்.

‘‘எழுத்தாளர் சாவித்திரி அம்மாள் எங்கள் பாட்டி. பாட்டி என்றால் என் தந்தையின் அத்தை. 1898 மே மாதம் பிறந்தவர். ஆசிரமம் என்று ஒரு வீடு, ஒரு கூட்டுக்குடும்பம். மனைவியை இளம் வயதில் இழந்த தன் சகோதரனின் (கி.பாலசுப்ரமணிய அய்யர்) மக்களுக்குத் தாயாக கி.சாவித்திரி அம்மாள் தன் கணவருடன் ஆசிரமத்தில் இருந்து விட்டார். சாவித்திரி அம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. கணவரும் அறுபது தாண்டவில்லை.

வீட்டில் சமைக்க, வீட்டு வேலைகள் செய்ய ஆட்கள் இருந்தார்கள். இருந்தாலும் பாட்டிதான் காய்கறி நறுக்கித் தருவார். ஒன்று போல அழகாக நறுக்குவார். பேரப்பிள்ளைகள் யார் யார் எப்படி? அவர்களுக்கு என்ன பிடிக்கும் என அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். அம்மா, சித்தி எல்லாருக்கும் தலை சீவி விடுவது என அவரவர்க்குத் தேவையானதை பார்த்து பார்த்துச் செய்வார். மற்ற நேரங்களில் படிப்பார், எழுதுவார். மாலை நேரங்களில் லேடீஸ் கிளப்பிற்குச் செல்வார். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். படிப்பது என்றால் சாதாரணமான வாசிப்பு கிடையாது. நிறைய வாசிப்பார். ஆனந்த விகடன் தொடங்கி ஆங்கிலத்தின் பெஸ்ட் செல்லர் வரை வாசிப்பார்.

அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் நன்கு தெரியும். எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே அவர்தான். பாட்டி எங்களுக்கு தினமும் கதைகள் சொல்லுவார். நாங்கள் படித்ததை சுவைக்க அவர் கற்றுக் கொடுப்பார். கதை என்றால் புராணம், இதிகாசம் மட்டும் அல்ல. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ முதல் தமிழ்வாணனின் ‘மணிமொழி நீ என்னை மறந்துவிடு’ வரை ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் துவங்கி அசுதா கிறிஸ்டியின் மர்ம நாவல்கள் வரை.

பாட்டியைப் பொறுத்தவரை அவர் படிக்கும் கதையின் களம் அனைத்தும் உண்மை; அந்தப் பாத்திரங்கள் உயிருள்ளவர்கள்; அந்த சம்பவங்கள் உண்மை. அந்த அளவிற்கு கதையில் ஒன்றி விடுவார். பண்டித நடேச சாஸ்திரி எழுதிய ‘திக்கற்ற இரு குழந்தைகள்’ கதை கேட்டு நாங்கள் உருகினோம். வேதநாயகம் பிள்ளை உருவாக்கிய ஞானாம்பாளின் சிறப்பை விளக்குவார். அவருக்கு ஜெயகாந்தன் கதைகள் பிடிக்கும். ‘அக்னிப்பிரவேசம்’ கதை ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றைச் சொன்னதாக அவர் நினைக்கவில்லை. அந்தக் கதை முதலில் பிரசுரமான நேரம், அதற்கு எத்தனையோ எதிர்மறையான கடுமையான விமர்சனங்கள்.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணை இன்றும் சமூகத்திலும் நீதிமன்றத்திலும் குற்றவாளியாகவே பார்க்கிறார்கள். ஆனால் 1898ல் பிறந்த சாவித்திரி அம்மாள் ஜெயகாந்தன் எடுத்து வைத்த நியாயத்தை ஆமோதித்தார். அது மட்டுமல்ல, ‘பாரிசுக்குப் போ’ கதையையும் அவர் ரசித்தார். கத்திமேல் நடக்கும் விஷயத்தை அதில் ஜெயகாந்தன் கையாண்டிருப்பார். சாரங்கன் இங்கு வேர் பதிக்க இயலாமல் பாரிசுக்குத் திரும்பும் நிர்பந்தத்தை நம் சமூகம் விதிப்பதைக் கண்டு பாட்டி சற்றே வருந்தினார் என்றுகூட சொல்லலாம். முற்போக்கு என்றும் பெண்ணியம் என்றும் பேசாமல் அவர் பார்வைக்கு என்ன விரிவு இருந்தது என்று இன்று நான் வியக்கிறேன்.
 
பாட்டி ஒன்பது கஜம் புடவை தான் அணிந்திருப்பார். ஆனால் பூப்பந்தாட்டம் விளையாடுவார். ப்ரிட்ஜ் கேம் விளையாடு வார். வீணை வாசிப்பார். வானொலி நிகழ்ச்சியில் வீணை வாசித்திருக்கிறார். பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று அவர் வாழ்ந்த விதம் கூறும். அந்தக்கால கட்டுப்பாடும் அந்த மூன்று நாட்களும் என்பது பற்றி நிறைய எழுதலாம். அதுபோன்ற நேரத்தில் எங்களுக்குப் பிடித்த நாடகமோ நாட்டிய நிகழ்ச்சியோ இருந்தால் ரகசியமாக எங்களிடம் ‘இப்பொழுது யாரிடமும் சொல்ல வேண்டாம், பிறகு சொல்லிக்கலாம்’ என்பார்.

சமூக விதிகள் ஏதோ ஒரு காலக்களனில் உருவாகின்றன. ஆனால், மென்மையான மனித உணர்ச்சிகளை அவ்விதிகளுக்கு பலியாக்கக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ? அந்தக் கால பெண்மணியாக இருந்தாலும் பாட்டிக்கு ஜோசியத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. பாட்டி எப்போதும் மெரூன் கலரில் புடவையும் வெள்ளை நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருப்பார். நிரம்ப வசதி படைத்தவர் என்றாலும், அவரிடம் படாடோபம் கிடையாது. அவரிடம் மொத்தமே நான்கு புடவைகள்தான் இருக்கும். ஒன்று உடுத்திக்கொண்டிருப்பது, ஒன்று தோய்த்து துணிக்கொடியில் இருக்கும்.

ஒன்று ஈரம் காய்ந்தது, அதே துணிக்கொடியில் மடித்துத் தொங்கும். ஒன்று உள்ளே வைத்திருப்பார். அவ்வளவே. இதில் ஒன்று கிழிந்து போய்விட்டால் அப்பொழுதுதான் இன்னொன்று வாங்கிவரச் சொல்வார். அம்மாவோ, சித்தியோ சென்று வாங்கி வருவார்கள். வெளியிடங்களுக்குப் போனாலும் அதே புடவை தான். ஆனால் நேர்த்தியாக இருக்கும். அவரது எளிமை வணிகமயமான, விளம்பரமயமான இன்றைய உலகில் முட்டாள்தனமாகத் தோன்றும். ஆனால் அவர் எளிமையாக இருக்க விரும்பினார் என்பதற்கு இதுதான் சான்று.
 
பாட்டி நிறைய மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். அவரிடம் எதிலும் ஒரு கச்சிதமும் முழுமையாய் இருக்கும். வெள்ளிமணி போல ஆங்கிலம் பேசியவர் என்ற புகழுக்குரிய னிவாச சாஸ்திரியார், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சமஸ்கிருதக் கல்லூரியில் ராமாயணத்தை பேருரையாகச் சொல்லி வந்தார். அது நிறைவு பெற்றதும் ஒரு நூலாக வெளிவந்தது. இதைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற பேச்சு எழும்பியதும் இந்தப் பணியை சாவித்திரி அம்மாள்தான் செய்ய வேண்டும் என்று அவரே முனைவர் வே.ராகவனிடம் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்வார். கி.வா.ஜ.வும் இவரது மொழிபெயர்ப்பைப் பாராட்டி இருக்கிறார். பாட்டி சிறுகதைகள் நிறைய எழுதி இருக்கிறார். கலைமகள், கல்கி போன்றவற்றில் அவரது கதைகள் வெளியாகி இருக்கின்றன. சாவித்திரி அம்மாளின் சகோதரிகள் சுப்புலட்சுமி மற்றும் சரசுவதியும் கூட கதை எழுதுவார்கள் என்பதால் சில சமயம் தன் சகோதரி சுப்புலட்சுமியுடன் இணைந்தும் கதை எழுதி இருக்கிறார்.

அவர் எப்படி எழுதுவார் என்று நான் கூறித்தான் ஆகவேண்டும். மேசையில் எழுதுகோல் வைத்து குனிந்து பார்த்துக்கொண்டே இருப்பார். சிறிது நேரம் சென்றதும் எழுதத் துவங்குவார். பிறகு அடித்தல், திருத்தல் ஒன்றும் கிடையாது, துல்லியமான நதி போல வாசகங்கள் காகிதத்தில் இறங்கும். அதை முடித்ததும் மறுபடியும் யோசனை, மறுபடியும் எழுதுவது என்று இதுபோலவே போகும். பகலில் தூங்கமாட்டார். வாசிப்பு, எழுத்து தான். இரவில் எழுத மாட்டார்.

பாட்டிக்கு கதைகள், நாடகங்கள் என்றால் உயிர். அவரைப் பார்க்க அன்றைய பெண் எழுத்தாளர்கள் பலர் வருவார்கள். அநுத்தமா, லக்ஷ்மி, குமுதினி, வசுமதி ராமஸ்வாமி முதல் பிரேமா நந்தகுமார் வரை வந்து பேசிவிட்டுப் போவார்கள். எங்கள் சிறிய பாட்டனாரான கி.சந்திரசேகரனைப் பார்க்க வரும் எழுத்தாளர்கள் ஆர்.வி., கல்கி, சாமா போன்றவர்களும் பாட்டியுடன் பேச உள்ளே வருவார்கள். குழந்தைகளுக்கு சுதந்திரமும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அந்த நடுநிலை நூலை அவர் அசையாமல் பிடித்தார். இன்றுதான் குழந்தைகளின் உளவியல் நிபுணர்கள் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

என் தாயாரிடம், ‘எல்லாரும்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். பிரபா படித்து கலெக்டராகட்டும். திருமணம் பற்றி பிறகு யோசிக்கலாம்’ என்று 19ம் நூற்றாண்டில் பிறந்த பெண் கூறினார் என்றால் வியப்பாக இல்லை? 1958ல் அவரிடமிருந்த சொத்தில் பெரும்பகுதியை ஒரு பள்ளிக்கூடம் துவங்க தானமாகக் கொடுத்தார். அதுதான் மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி. மேலும் மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கூடத்திற்கும், லேடி சிவஸ்வாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் அவர் பெரும் தொகையை தானமாகக் கொடுத்தார். எளிமை, கல்வியறிவு, யாரையும் சாராத சுதந்திரம், சுயநம்பிக்கை, இலக்கிய ஆர்வம், ஈகை குணம், விரிவான பார்வை, முற்போக்கான எண்ணம் இன்னும் என்ன என்னவோ சொல்லலாம் பாட்டியைப் பற்றி...

பாரதி முதல் சுஜாதா வரை என்ற எழுத்தாளர்கள் பற்றிய புத்தகத்தில் பாட்டி குறித்தும் எழுதி இருக்கிறார்கள் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒரு விஷயம். இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான சாவித்திரி அம்மாள் 1992ம் ஆண்டு இந்த மண்ணை விட்டு மறைந்தார்.”

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்
ஓவியம்: ஷ்யாம் சங்கர்


பிரேமா நந்தகுமார் (எழுத்தாளர் குமுதினியின் மருமகள்)‘‘1958ம் ஆண்டு நான் எழுதி இருந்த பாரதியாரைப் பற்றிய புத்தகத்தைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக என் அப்பா எழுத்தாளர் சாவித்திரி அம்மாளின் சகோதரர் பாலசுப்ரமணிய ஐயரை பார்க்க என்னை அழைத்துப் போனார். அப்போதுதான் முதன் முதலில் சாவித்திரி அம்மாளை சந்தித்தேன். சாவித்திரி அம்மாள் என்னிடம் ரொம்ப பிரியமாக பேசினார்.

அதன் பிறகு சென்னை வந்தால் அவரைச் சந்திப்பேன். எப்பொழுதும் அன்பாக பேசுவார். கடிதப் போக்குவரத்தும் இருந்தது. அவரது கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அற்புதமான மொழிபெயர்ப்பாளர். F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. மிகவும் அருமையாக மொழிபெயர்த்திருந்தார். அவரது தோழியான எழுத்தாளர் குமுதினியின் மகனை நான் மணந்து கொண்டதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சியும் கூட.

அவர் இறந்த பிறகு சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் நடைபெற்ற சாவித்திரி அம்மாளின் சிலை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தார்கள். சாவித்திரி அம்மாளின் சகோதரரின் மகன் மாதவன் என்னை சாவித்திரி அம்மாளின் சிலையை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.

சென்ற இதழில் ‘நீரோடு செல்கின்ற ஓடம்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் பதிப்பாளர் அருணன் ‘எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் கணவர்’ என்று தவறுதலாக பிரசுரமாகி வந்துவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.
 - ஆசிரியர்