கேட்டரிங் குயின் தஸ்லிமா



திருநங்கைகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல் சமூகத்தால் பல்வேறு பட்டப்பெயர்கள் மூலம் அநாகரிகமான சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுவது மிகச் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘அரவாணி’ என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. அதன்பின் தற்போது திருநங்கை என்கிற பதத்தால் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் டிரான்ஸ்ஜென்டர் (Transgender)  என்றும் இப்போதுதான் நாகரிகமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

சமூகத்தாலும், நண்பர்களாலும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி, குடும்பத்தினராலும், உறவினர்களாலும் வீட்டை விட்டு புறம் தள்ளப்படும் இவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாய் ஆதரவற்ற நிலையில் பல இன்னல்களுக்கு நடுவே அவதியுற்றாலும் வாய்ப்புக் கிடைத்தால் இந்த சமூகத்தில் நிறைய மாற்றங்களை செய்ய முடியும் என்பதற்கு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் தஸ்லிமாவின் கதையே சாட்சி. தஸ்லிமாவை சந்தித்தபோது உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“என் பெற்றோர் வைத்த பெயர் முகமது. தொழில் நகரமான திருப்பூர் என் சொந்த ஊர். நான்கு அண்ணன், நான்கு அக்கா, இரண்டு தம்பி, தங்கை என 11 பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தேன். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை எங்களுடையது. குழந்தைகள் வீட்டில் செல்லமாகவே வளர்க்கப்பட்டோம். என் 12ம் வயதில் நான் ஆண் அல்ல பெண் என உணர்ந்தேன். அப்போது அரபிக் கல்லூரியில் தமிழ்வழிக் கல்வியில் படித்துக் கொண்டிருந்தேன். மறைவான இடத்திற்கு சென்று வீட்டுக்குத் தெரியாமல் பெண்கள் போல ஒப்பனை செய்துகொள்ளத் தொடங்கினேன். சில நேரம் வீட்டில் பாவாடை தாவணி போட்டு பெண் வேடமிட்டு ஆடுவதை என் வீட்டார் வேடிக்கையாக நினைத்தார்களே தவிர, என் உணர்வுகள் அவர்களுக்குத் தெரியவில்லை. என் நிலையை தொடர்ந்து மறைக்க இயலவில்லை.

குழந்தைகளை அடித்து வளர்க்காத என் அப்பாவிடம் நான் எப்படிச் சொல்வேன். ஒரு கட்டத்தில் என்னையும் மீறி அது வெடித்து வெளிப்பட்டது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். என் வீட்டுக்கு என் நிலை முழுவதுமாகத் தெரிய வந்தது. அக்கம்பக்கத்தினர் என்னை பட்டப்பெயர் கொண்டு அழைக்கத் துவங்கினர். வீட்டில் அடி உதை விழும். உறவுக்காரர்களான மாமா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணன் எல்லாம் என் நிலை புரியாமல் என்னை மாறி மாறி அடித்து துவம்சம் செய்தனர். ‘பேய் பிடிச்சுருக்கு’ என மந்திரிப்பது, கயிற்றால் கட்டுவது, மாடு கட்டும் கயிற்றால் அடிப்பது என தினமும் சித்ரவதையில் நாட்கள் கடந்தன. அடிக்காத என் அப்பாவும் என்னை அடிக்கத் துவங்கினார். எனக்குள் நான் பெண்ணாக உணர்வதை அவர்களால் சுத்தமாக உணர முடியவில்லை. என்னைப்போல் ஒரு சமூகமே இப்படி பாதிப்படைந்திருப்பதும் அவர்களுக்கு தெரியவில்லை.

“எங்களை இப்படி கேவலப்படுத்துவதற்குப் பதிலாக எங்காவது போய் செத்துதொலை. எங்க உயிரை வாங்காதே’ என்ற வார்த்தைகளை என்னைப் பெற்றவர்களே சொல்லத் துவங்கினர். என் 13 வயதில் என் அம்மா என்னைச் சாகச் சொன்னார். என்னால் என் அக்காவிற்கு திருமணம் தடைபட்டது. நண்பர்கள் கிண்டலால் அண்ணன் என்னை கிரிக்கெட் பேட்டால் அடித்தான்.

தொடர்ந்து அடி, உதை, திட்டுதான். நான் தூங்கிவிட்டேன் என நினைத்து அப்பா, அம்மாவிடம் என்னை ஒரு சமயம் கொல்லக்கூட சொன்னார். கொஞ்ச நாட்கள் எங்காவது விடுதியில் விடலாம் என முடிவு செய்து, என்னை அனாதை எனச் சொல்லி, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்து விட்டனர். 16 வயது வரை அங்கு இருந்தேன். அங்கும் எனக்கு தொந்தரவுகள் தொடர்ந்தன. ‘இந்தப் பையன் சரியில்லை’ என வீட்டிற்கு புகார் போனது. என்னை கூட்டிவந்து வீட்டிலிருந்தவர்கள் மாறி மாறி அடித்தனர். ஒரு கட்டத்தில் அடி பொறுக்க முடியாமல், பேப்பரில் வந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து கையில் இருந்த 10 ரூபாயுடன் கோவா செல்ல கிளம்பினேன்.

எனக்கு மட்டும்தான் இந்த நிலை. எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறது என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வெளி உலகத்திற்கு வந்தபிறகுதான் என்னை மாதிரி பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சமூகம் இருப்பது எனக்குத் தெரிய வந்தது.  என்னை மாதிரி பாதிப்படைந்த மாற்றுப்பாலினத்தவர் பலர் ஒன்றாக இருந்தனர். எனக்கு புதிய உலகம் அறிமுகமானது. அவர்களோடு இணைந்தேன். என்னை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகத்திற்கு வெளியே திருநங்கைகளிடம் பொதுமக்கள் ஆசீர்வாதம் பெறும் பழக்கம் இருக்கிறது.  நாங்கள் ஆந்திரா எல்லையை தாண்டியதுமே, தேடிவந்து எங்களுக்கு சோறு, ரொட்டி, தண்ணீர் எல்லாம் கொடுத்தார்கள். பணத்தை கையில் கொடுத்து ஆசீர்வாதம் செய்யச் சொன்னார்கள். திருநங்கைகளிடம் பொதுமக்கள் ஆசீர்வாதம் பெறுவதைப் பார்த்து வியந்தேன். மும்பையில் எனக்கு அடைக்கலம் தந்த என் திருநங்கை சகோதரிகள் மூலமாக பாலின அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.

சாப்பாட்டிற்காக கைதட்டி பிச்சை எடுத்தேன். எல்லோருக்கும் சோறு போட்ட குடும்பம் எங்கள் குடும்பம். பிச்சை எடுப்பதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. அங்கிருந்து கிளம்பினேன். மஞ்சள்காமாலையால் உடல்நலம் அதிகம் பாதிப்படைந்து, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கு என்னை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. முன்பின் தெரியாத ஒரு முதிய பெண்மணி மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சள்காமாலை நோய்க்கு மருந்து கிடைப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்று என் நோயை சரிப்படுத்தினேன். 

உடல்நலம் சரியானதும் மீண்டும் உணவுக்காக கடை கடையாக கை தட்டினேன். யாரும் எங்களுக்கு எந்த வேலையும் தரத் தயாராக இல்லை. அப்போதுதான் கோயம்புத்தூரில் சமூக வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அஞ்சலி மேடம் எனக்கு அறிமுகமானார். என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு மறுவாழ்வு தரும் அவர், என் நிலையை கேட்டறிந்தார். பாரதியார் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் என்னை பிபிஎம் படிக்க வைத்தார். எனக்கு நன்றாக சமைக்க வரும் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டவர் என்னை கேட்டரிங் தொழில் செய்ய அறிவுறுத்தினார்.

122 வகை பிரியாணிகள் செய்வதில் திறன்படைத்த நான், பிரியாணி தயாரிப்பதில் மிகவும் ஸ்பெஷலிஸ்ட். என் திறமையை இந்த உலகத்திற்கு அவர்தான் வெளிக் கொண்டு வந்தார். என்னைப் போன்ற குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட திருநங்கை தோழமைகளை இணைத்து, கேட்டரிங்க சர்வீஸ் தொடங்கினேன். திருமணம், மற்ற நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், தொண்டு நிறுவனங்களுக்குத் தேவையான உணவை தயார் செய்து வழங்கி கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தை நடத்த முழு ஆதரவு தந்தார். எங்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தார்.

நான் கேட்டரிங் சேவை துவங்கியபோது, ஒருவரும் உணவு சாப்பிட என் கடைக்கு வரவில்லை. தண்ணீர் குடிக்கக்கூட தயங்கினர். தினமும் சமைத்த உணவு வீணானது. சமைத்த உணவு வகைகளை தினமும் தொண்டு நிறுவனங்களுக்கு சென்று கொடுத்தோம். அஞ்சலி மேடம் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி, இரண்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் பிடித்துக் கொடுத்தார். என்னை 500 பேருக்கு உணவு தயார் செய்யச் சொன்னார். சப்பாத்தி, நாண், ரொட்டி, வெஜிடபிள் பிரியாணி, ரைத்தா, தயிர் சேமியா, பால் கொழுக்கட்டை என வெரைட்டியாக தயார் செய்து அவர் ஆலோசனைப்படி, நான் அந்த திருமண நிகழ்ச்சிக்குப் போகாமல் மிகப் பெரிய டெம்போவில் சமைத்த உணவுகளை ஏற்றி அனுப்பி வைத்தேன்.

என் சமையலை சாப்பிட்டவர்கள் ஆகா, ஓகோ என புகழ்ந்து, இந்த பிரியாணியையும், உணவுகளையும் தயாரித்த கேட்டரிங் சர்வீஸை பாராட்ட வேண்டும் எனச் சொன்னதும், உடனே அவரின் காரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். நான் மிகவும் எளிமையாக ஆனால் தூய்மையாக உடை உடுத்தி காரில் வந்து இறங்கினேன். எல்லோரும் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தனர். அப்போது அஞ்சலி மேடம், அறுசுவையோடும், ருசியோடும், மணத்தோடும் சமைத்தவர்கள் இவர்கள்தான் என எங்களை அறிமுகப்படுத்தினார்.

“ஒருவரின் தோற்றத்தையும், பாலினத்தையும் வைத்து யாரையும் பார்க்காதீர்கள். அவர்களை குறைத்து எடை போடாதீர்கள். அவர்களின் உழைப்பை மதிக்கப் பழகுங்கள்” என அனைவர் முன்னிலையிலும் கூறினார். எனது சமையல் புகழடைந்தது. எனது கேட்டரிங் சர்வீஸ் தொடர்பு கோயம்புத்தூரில் இருந்து கேரளா வரை பரவியது. திருநங்கை ஒருத்தர் பிரமாதமாக உணவு சமைக்கிறார் என நிறைய ஆர்டர்கள் என்னைத் தேடி வந்தன. நிறையத் திருமண ஆர்டர்கள் கிடைத்தன. ஆர்டர்கள் நிறைய வரவர என்னால் சமாளிக்க முடியவில்லை.

6 பேர் சேர்ந்து செய்த எங்கள் கேட்டரிங் சர்வீஸ் அறுபது, எழுபது என விரிவானது. அஞ்சலி மேடத்தின் அறிவுறுத்தல்படி, கேட்டரிங்கை கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு வரை 16 யூனிட்களாக திருநங்கைகளுக்கு பிரித்துக் கொடுத்தோம். ஒவ்வொரு யூனிட்டிலும் 7 முதல் 12 பேர் இருப்பர். தேவைப்பட்டால் அவர்கள் இடத்திற்கே சென்றும் சமைத்துக் கொடுப்போம். ஒரு நாளைக்கு எனக்கு மட்டும் 10 ஆயிரம் வருமானம் வந்தது.

‘நமக்குன்னு வைத்துக்கொள்வதல்ல வாழ்க்கை. உன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்தால் அதுதான் வாழ்க்கை. தேவைப்படுவோருக்கு உதவிக்கொண்டே இரு’ என்றார் அஞ்சலி மேடம். அவர் எனக்கு உதவி செய்த மாதிரி நானும் என்னை மாதிரி வாழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. பணம் சம்பாதித்துக்கொண்டே இருப்பதில் எனக்கு ஆசை இல்லை. கேட்டரிங் சர்வீஸில் சம்பாதித்ததை வைத்து சேஞ்ச் பவுண்டேஷன் என ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தேன். கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையை எனது டிரஸ்ட் மூலம் எடுத்து, கல்லூரி மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தோம், கழிவறைகளை சுத்தப்படுத்தினோம்.

சுவற்றை வண்ணம் தீட்டி, படங்கள் வரைந்தோம். மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் கம்பெனிகளிடம் பேசி பணமாக இல்லாமல், அவர்கள் பெயரை அவர்களது அன்பளிப்பில் பதிவு செய்து, பொருட்களாக வழங்க வைத்தோம். பழைய படுக்கைகளை எடுத்துவிட்டு 300 புதிய படுக்கைகளை அவர்கள் மூலம் பெற்று நிரப்பினோம். கதவு, ஜன்னல்களை அவர்கள் மூலம் சரி செய்தோம். திரைச் சீலைகளை அவர்களிடத்தில் பெற்றுத் தந்தோம். மருத்துவமனை சீரடைந்தது.

ஆதரவற்றோர், தெருக்களில் வியாதியால் கிடப்போர், முதியோரை மருத்துவமனைக்கு கொண்டுவந்து, ஆடை மாற்றுவது, டையபர் போடுவது, தேவையான உணவு, மருந்து தருவது, எதிர்பாராமல் அவர்கள் இறந்து விட்டால் நல்லடக்கம் செய்வது என எல்லாவற்றிலும் என் பங்கிருக்கும். என் சேவையைப் பார்த்து, எனக்கு நிறைய பாராட்டுகளும், தொடர்ந்து விருதுகளும் கிடைத்தன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் அம்பாசிடராக என்னை தேர்வு செய்து விருது வழங்கினர். எல்லோருக்கும் தெரிந்த முகமாக மாறினேன். இதுவரை முப்பது நாற்பது விருதுகளை பெற்றுள்ளேன். பள்ளிப் பருவத்தில் அழுது அழுது வாழ்க்கையைத் தொலைத்தேன்.

அதனால் அதை மறைக்க எல்லோரையும் சிரிக்க வைக்கத் தொடங்கினேன். மனிதர்களை  சீரியஸாக்குவது, டென்சன் செய்வதெல்லாம் எனக்கு வராது. மேடைகளில் நகைச்சுவையாக எனது கருத்துக்களை சொல்வேன். அதையும் புன்னகையோடு பதிவு செய்வேன். என் சொந்த உழைப்பில் தினம் 30 ரூபாய் எடுத்து வைப்பேன். ஒரு வருடத்தில் அதில் சேரும் பத்தாயிரம் ரூபாயை, என் அம்மா, அப்பா ஞாபகமாக ஒவ்வொரு புத்தாண்டு முதல் தேதியில் உதவி தேவைப்படும் யாருக்காவது அன்பளிப்பாகத் தருவேன். கவிதை எழுதுவது எனக்குப் பிடித்தமான முக்கியப் பொழுதுபோக்கு.

இவ்வளவுக்குப் பின்னும் என் வீட்டில் என்னை தேடவில்லை. செத்தவர்களை யாராவது திரும்பப் பார்ப்பார்களா? இவ்வளவு சிறப்பை நான் அடைந்த பிறகும் என்னை என் குடும்பம் ஏற்க மறுத்தது. அவர்களைப் பொறுத்தவரை நான் செத்துப்போனவள். இல்லை இல்லை செத்துப்போனவன். ஆனால் நான் ஒரு பெண். கம்பீரமாக வெற்றி பெற்ற பெண்.

- மகேஸ்வரி

பெண்ணில் இருந்து ஆணாக உடற்கூறு மாற்றம் கொள்ளும் வேளையில், மனக்கூறும் அதேபோல ஆணாக மாற வேண்டும். பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு இப்படியான மாற்றம் நிகழ்ந்துவிடும். ஆனால், இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? ஒரு சில ஆண் குழந்தைகளுக்கு மட்டும் மனரீதியான மாற்றம் நிகழாமல், உடல் மட்டுமே மாற்றம் அடைந்துவிடுவது உண்டு. முறையான மாற்றம் இன்றிப் பிறக்கும் குழந்தை, உடலால் ஆணாகவும் மனதால் பெண்ணாகவுமே பிறக்கிறது. உலகம் இவர்களின் தோற்றத்தை வைத்து ஆணாகப் பார்க்க, இந்தக் குழந்தைகளோ, தங்களைப் பெண்ணாகவே உணர்வார்கள். இவர்களே... திருநங்கைகள். இதன் நேர் எதிர்த் தன்மையோடு பிறக்கும் குழந்தைகள்... திருநம்பிகள்.
நன்றி: டாக்டர் ஷாலினி