உமிழ்ந்துவிடு பாப்பா



‘பாதகஞ் செய்பவரைக் கண்டால்  நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’... பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. குறிப்பாக பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்ட பாட்டு. சமூகத்தில் பெண்களும் பெண் குழந்தைகளுமே பெரும்பாலும் கடத்தல், வன்கொடுமை, பாலியல் தொந்தரவு போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், எதிராளியிடமிருந்து தப்பிச் செல்லவும் சென்னையைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி அபர்ணா ஒரு கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இதற்காக அவருக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற மாணவி அபர்ணா சந்திரசேகரிடம் பேசினேன்... ‘‘சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். செகண்டரி ஸ்கூலில் 4ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா சந்திரசேகர், அம்மா மங்களம். அப்பா சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தில் வேலை பார்த்தபோது அங்குள்ள பள்ளியில் சேர்த்தார்கள். எனக்கு அங்குள்ள மொழி தெரியாததால் என்னுடன் படிப்பவர்கள் கேலி கிண்டல் செய்வதுடன் அடிக்கவும் செய்வார்கள்.

அதன்பிறகு எனது அப்பா கேரளாவுக்கு மாற்றலாகிப் போனதால் அங்குள்ள பள்ளியில் சேர்த்தனர். அங்கும் அதே நிலைதான். மொழி தெரியாததால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் ஆசிரியர்கள் திட்டுவதுடன் அடிக்கவும் செய்வார்கள். என்னோடு படிப்பவர்கள் மட்டுமல்லாது பள்ளியில் படிக்கும் மாணவர்களும் என்னுடைய பயந்த சுபாவத்தைக் கண்டு ராக்கிங் செய்வார்கள். எனக்கு கோபமாக வரும். ஆனால், நான் சிறு பிள்ளை என்பதால் அவர்களை திருப்பி அடிக்க முடியாதே... மனதுக்குள் பயப்படுவேன்.  வீட்டில் வந்து அந்த கோபத்தை எல்லாம் பேப்பரில் எழுதி வைப்பேன்’’ என்று தனது சோகத்தைப் பகிர்ந்தவர், அதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையும் சொன்னார்.

‘‘அப்போதுதான் அவர்கள் நம்மைத் திட்டும்போதும், அடிக்கும்போதும் கையில் கட்டியிருக்கும் கடிகாரத்திலிருந்து ஒரு ஸ்பிரே தெளித்து அவர்கள் மயக்கமடைந்தால் அந்த இடத்திலிருந்து நாம் தப்பித்துவிடலாமே என பேப்பரில் எழுதி வைத்திருந்தேன். இதனைப் பார்த்த எனது பெற்றோர் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளைக்கு அதனை அனுப்பி வைத்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது யோசனைக்காக ஒரு புராஜெக்ட்டும் செய்தேன்.

அதனால், டிசம்பர் 22ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் எனக்கு விருது கொடுத்தார்கள். இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கான பேடன்டும் கொடுத்துள்ளார்கள். இந்த விருதை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்’’ என்றவர், அந்தக் கைக்கடிகாரத்தின் பலனையும் அவரது மொழியிலேயே சொன்னார். ‘‘எனது புதிய கண்டுபிடிப்பின் பெயர் Watch with button for pungent spray on bullies - அதாவது, எதிராளிகள் மீது துர்நாற்ற மயக்கம் தெளிக்கும் கைக்கடிகாரம். நமக்குத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொள்ளும்போது நம்மை அறியாமல் இதயம் படபடக்கும், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும்.

அதன் காரணமாக இந்தக் கைக்கடிகாரத்தில் உள்ள சென்சார் கருவி கைக்கடிகாரத்திலிருந்து எதிராளியின் முகத்தில் துர்நாற்றத்தை ஸ்பிரே போன்று தெளிக்கும். அப்போது அவர் மயங்கிவிடுவார். நாம் அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்துவிடலாம்’’ என்றவர், தன் எதிர்காலத் திட்டத்தையும் கூறினார். ‘‘வருங்காலத்தில் இந்தக் கைக்கடிகாரம் பெரும்பாலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கையில் இருக்க வேண்டும். அதற்காக ஒரு நிறுவனம் தொடங்கி இந்த கைக்கடிகாரங்களை தயாரிக்க வேண்டும். விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்